.
மொட்டவிழ்ந்த பனிமலரில் முறுவலிக்கும்
மதுத்துளியை மயக்கத்தோடு
தொட்டருந்தும் அளிமதுர ஒலியெழுப்பும்
அதிகாலை, உதயத்தின்முன்.
எட்டிசையின் மலர்ச்சியையும் இதயத்தில்
சிறைகட்டும் பொங்கலின்று!
மட்டற்ற மகிழ்ச்சியினில் தமிழ்மக்கள்
உளம்பொங்கும் உவகைப்பொங்கல்!
பைந்தொடிதன் தளிர்க்கரத்தால் படைத்திட்ட
எழிற்கோலம் பார்ப்பதற்கு
விந்தையிலை. வீடுகளில் விளங்குகிற
தமிழ்க்கலை!அவ் வெழிலினூற்று!
உந்துகின்ற உவகையினில் புதுப்பானை
தனில்பொங்கும் உழவர்பொங்கல்!
சிந்தையினில் அன்பொடுநற் பண்பொன்றப்
பொங்கிவிடும் இன்பப்பொங்கல்!
பொங்கலின்று பொங்கலென்று பொங்கலினைப்
படைத்துவிட்டுப் பரிதிநோக்கித்
தங்கள்கரம் உயர்த்திஉயிர் தரும்பரிதி
தனைவணங்கி மகிழ்ச்சியோடு
செங்கதிரின் எழுச்சியெனச் செழுங்கவிதை
மலர்ச்சியெனச் செறிந்துஇன்பம்
பொங்கியுளம் பொங்கிவிடப் புதுஉலகம்
பொங்கியெழப் பொங்கல்பொங்க!
கவிஞர் க. கணேசலிங்கம்