இலங்கை போன்ற மூன்றாம்
உலக நாடுகளில் நிரந்தர தொழிலோ, வருவாயோ இல்லாமல் வாழ்ந்துகொண்டு எழுத்துப்பணியிலும், கலைத்துறையிலும் தொடர்ந்தும் அயர்ச்சியின்றி ஈடுபடுவது கடினம்.
ஆனால், அந்த கடினமான பாதையை
கடந்து வந்திருக்கும் படைப்பிலக்கியவாதி, நாடகக்கலைஞர், ஊடகவியலாளர், தொழிற்சங்க செயற்பாட்டாளர் அந்தனிஜீவா அவர்கள் 1960 களில் எழுத்துலகில் பிரவேசித்தவர்.
ஆறுதசாப்த காலத்திற்கும்
மேலாக குறிப்பிட்ட துறைகளில்
ஈடுபட்டுவந்திருக்கும் அந்தனி ஜீவா, எமது கலை, இலக்கிய உலகில் கலகக்காரனாகவும் விளங்கியவர்.
எனினும் இவருக்கு நிரந்தர
எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்பது எனது அவதானம். ஆயினும் இலங்கை கலை, இலக்கிய மற்றும் தமிழ் ஊடகத்துறையில்
அந்தனி ஜீவா தவிர்க்கமுடியாத ஆளுமையாக திகழ்கிறார்.
மலையக எழுத்துக்களை படைத்தவர்களைப்
பற்றியும் மலையக தொழிற்சங்கங்களின் வரலாறு பற்றியும்
எழுதிய மூத்த படைப்பாளி இவர்.
“ படைப்பின் இலட்சியம்
சமுதாயத்தின் தேவையாக இருக்க வேண்டும். அதில் மண்ணின் மணம் இருக்க வேண்டும். கலைஞன்
மானுடம் படைக்கும் ஆத்மாவின் ராகமாகத் திகழ வேண்டும். “ எனச்சொல்லி வந்திருக்கும் அந்தனிஜீவா, தனது நாடகங்கள்
மற்றும் கலை, இலக்கியப்பிரதிகளின் ஊடாக சமூகத்திற்காகவும் பேசினார். சமூகத்தையும் பேசவைத்தார்.
தொடக்கத்தில் சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர்,
மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி ஆகியனவற்றில் எழுதிவந்திருக்கும் அந்தனிஜீவா, பின்னாளில் சிரித்திரன்,
மல்லிகை, ஞானம், ஜீவநதி முதலான இதழ்களிலும்
தனது படைப்புகளை வரவாக்கியவர்.
மலையக இலக்கிய வரலாற்றை ஆய்வுசெய்யத்
தயாராகும் பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கு அந்தனி
ஜீவாவின் பல நூல்கள் உசாத்துணையாகத் திகழும்.
இதழியலில் டிப்ளோமா பெற்றிருக்கும்
அந்தனிஜீவா, கொழுந்து, குன்றின் குரல், ஜனசக்தி
, செஞ்சக்தி ( மக்கள் விடுதலை முன்னணியின் பத்திரிகை ) இதழ்களின் ஆசிரியராகவும் இயங்கியிருப்பவர்.
பாரதப்பிரதமர் இந்திரா காந்தி
முதல், இலங்கை மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகள் கோ. நடேசய்யர் மற்றும் சி. வி.
வேலுப்பிள்ளை உட்பட பல ஆளுமைகளின் வரலாற்றை கதைபோன்று பதிவு செய்து ஆவணப்படுத்தியவர்
அந்தனி ஜீவா.
கொழும்பில் மேடை நாடகங்கள்
1970 களில் மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருந்தன.
அந்தனிஜீவாவின் பல நாடகங்கள்
கொழும்பிலும், மலையகத்திலும் மேடையேற்றப்பட்டுள்ளன.
அவரது அக்கினிப்பூக்கள் நாடகம்
மேடையேற்றப்பட்டபோது அச்சமயம் எதிர்க்கட்சித்
தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
1978 இல் இலங்கைக்கு வருகை தந்திருந்த தமிழ்நாடு கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைவர் தோழர் எம். கல்யாணசுந்தரம் அவர்கள், அந்தனிஜீவாவின் எழுத்தாற்றலையும், நாடகத்துறையிலிருந்த ஈடுபாட்டையும் அவதானித்துவிட்டு,
அந்த ஆண்டில் தமிழ்நாடு திருப்பூரில் நடந்த
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.