வையமெலாம் வணங்கும்படி வாழ்ந்துவிட்டார் காந்திமகான் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


சத்தியத்தை கையெடுத்தார்

சமத்துவத்தின் வழிநடந்தார்
சித்தமெலாம் சமூகத்தை
தினமெண்ணி அவரிருந்தார்
உத்தமராய் வாழுதற்கு
உழைத்திட்டார் காந்திமகான்
உலகமெலாம் மகாத்மாவாய்
உயர்ந்திட்டார் காந்திமகான்  !

ஈரமுடை நெஞ்சுடையார்
வீரமுடன் நடைபோட்டார்
தூரநோக்குப் பார்வையுடன்
தொடக்கிட்டார் பணியனைத்தும்
கோரமுகம் கிழித்தெறிந்தார்
கொதித்தவரை குளிர்வித்தார்
பாரதத்தாய் மனமகிழும்
பாதையிலே யவர்சென்றாரே !

பட்டமவர்  பெற்றிருந்தார்
பதவிகளை யவர்வெறுத்தார்
கிட்டவரும் ஆசைகளை
வெட்டியே யவரெறிந்தார்
கொட்டமுடன் வந்தவரை
குழந்தையென  மாற்றினார்
குவலயமே போற்றுதற்கு
குறியானார் காந்திமகான் !

ஈழா 75 திரு.ஈழலிங்கம் அவர்களின் பாராட்டு நிகழ்வு 01.10.2021

 .

01.10.2021` வெள்ளிக்கிழமை இரவு தமிழ்முரசு அவுஸ்திரேலியா , அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவோடு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சமூகத்தொண்டன் திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்களின் 75 வது அகவை பாராட்டு நிகழ்வை ஈழா 75 என்று  zoom  இணையவழி நிகழ்வாக எடுத்து வந்தது .

சிறப்புப் பேச்சாளர்களாக இலங்கையில் இருந்து  பேராசிரியர் அ .சண்முகதாஸ் வாழ்நாள் பேராசிரியர்  யாழ் பல்கலைக் கழகம் கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அறநெறித் தொண்டர் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் ,திரு ராமகிருஷ்ணன்  செயலாளர் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலனசபை  ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இதைத்தவிர இலங்கையில் இருந்தும் அவுஸ்திரேலியாவிலிருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல பிரமுகர்கள்,  நண்பர்கள், சமூகத்தொண்டர்கள் கலந்து வாழ்த்தியும் உரையாற்றியும் இருந்தார்கள். இரண்டரை மணிநேரம் இந்த நிகழ்வு சிறப்பாக அமைந்தது. 

பலர் உரையாற்றும்போது ஈழா  தனிமனிதன் அல்ல ஒரு சமூகத்துக்கான மனிதன் என குறிப்பிட்டு  கூறியிருந்தார்கள். 

https://youtu.be/gyHiYfVSVoU


ஈழத்தின் பிரபல எழுத்தாளர் ஜுனைதா ஷெரிப் அவர்கள் காலமானார்

 ஈழத்தின் பிரபல எழுத்தாளர் ஜுனைதா ஷெரிப் அவர்கள் காலமானார் என்ற செய்தி வந்திருக்கிறது.

அன்னாருக்கு அஞ்சலிகள் 🙏


அவரோடு எடுத்திருந்த பேட்டியின் பகிர்வு 
பாரதி தரிசனம் – அங்கம் 04 அவுஸ்திரேலியாவில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அக்கினிக்குஞ்சு இதழ் ! அக்கினிக்குஞ்சு : உறைபொருளும் மறைபொருளும் ! ! முருகபூபதி


“ இனிய தமிழ் அன்ப, புலம்பெயர்ந்து உலகின்  பல நடுகளிலும் பரந்து வாழும் தமிழர் மத்தியிலே, இன்று கலை – இலக்கிய இதழ்கள் பல வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலே பல ஃபோட்டோ காப்பி எந்திரத்தின் உதவியுடன் வெளிவருகின்றன. அவை அனைத்தும் வட்டார நோக்குகளையும் – இலக்குகளையும் தாங்கி வெளிவருகின்றன.

இருப்பினும், அவை அனைத்துமே தமிழ் நேசிப்பின் வெளிப்பாடு. எனவே உவகைக்குரியன. பத்தோடு பதினொன்றாக   அக்கினிக்குஞ்சுவை நாம் வெளியிடவில்லை என்பதை முதலாவது இதழே இனங்காட்டும் என்று நம்புகிறோம்.

வட்டார நலன்களை விட்டு, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலே உலகார்ந்த தமிழ் கலை இலக்கியச் சஞ்சிகை ஒன்று வெளிவருதல் வேண்டும் என்கிற ஆசை தமிழ் நேசிப்புச்சுரக்கும் நெஞ்சங்கள் பலவற்றிலே நீண்ட நாள்களாக கனன்றது. இந்த அத்தியந்த ஆசையைப் பூர்த்தி செய்யும் பூபாளமாக  ‘ அக்கினிக்குஞ்சு  ‘ வை வெளியிடுவதில் உண்மையிலேயே பூரிப்பு அடைகின்றோம்.   

இந்த வரிகளுடன் தொடங்கிய  “மனம் விட்டுப்பேசுவோம்  “ என்ற ஆசிரியத்தலையங்கத்துடன் மெல்பனிலிருந்து அக்கினிக்குஞ்சு மாத இதழ் 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளிவந்தது.

அதன் ஆசிரியர்தான், தற்போது அதே பெயரில் இணைய இதழை நடத்திவரும் எழுத்தாளர் யாழ். பாஸ்கர்.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 61 இன்ப அதிர்ச்சியூட்டிய பொன். ராஜகோபால் ! தேர்முட்டியுடன் வீரகேசரியில் நகர்ந்த எனது சிறுகதை இலக்கியம் ! ! முருகபூபதி


இந்த 61 ஆவது அங்கத்தை ஒரு சிறுகதையுடன் ஆரம்பிக்கின்றேன்.

1972 முதல் நான் சிறுகதைகள் எழுதத்  தொடங்கியிருந்தாலும் வீரகேசரியில்  ஒரு சிறுகதையும் வெளிவரவில்லை.  1985 வரையில் சுமார் 13 வருடங்கள் வெளியான எனது அனைத்து சிறுகதைகளும் மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம், மாணிக்கம் முதலான சிற்றிதழ்களில்தான் வெளியாகின.

அவற்றுள் தேர்ந்தெடுத்த பத்து சிறுகதைகளை தொகுத்து சுமையின் பங்காளிகள் நூலையும்  1975 இல் வெளியிட்டு, அதற்கு 1976 இல் தேசிய சாகித்திய விருதும் பெற்றபின்னர்தான், வீரகேசரிக்குள் பணியாற்ற வந்தேன்.

எனக்கு விருது கிடைத்த செய்திதான் வீரகேசரியின் முன்பக்கத்தில் வந்ததே தவிர,  எனது கதைகள் வெளியாகவில்லை.

அந்த மனக்குறை 13 வருடகாலமாக இருந்தது. நீர்கொழும்பு மீனவ மக்களின் பிரதேச மொழியில் தொடர்ந்து கதைகள் எழுதியமையால்,  வாரவெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால், அந்த மொழிவழக்கு வாசகர்களுக்கு புரியாது என்பதனாலோ என்னவோ,   நான் அவரிடம் கொடுத்த கதைகளை நிராகரித்தார். அவர் நிராகரித்த கதைகள் மல்லிகையில் வந்தன.

ஒரு சிறுகதை ( நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன )  நண்பர் வி. என். மதியழகனின் சங்கநாதம் வானொலி நிகழ்ச்சியில் நாடகமாக ஒலிபரப்பாகியது.

வானொலி நேயர்கள் ரசித்த கதையைக்கூட வீரகேசரி ஏற்கவில்லையே என்ற மனக்குறையும் இருந்தது.

எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன் “ என்னும் பன்முக ஆளுமை ! குமுதம், தினமணிக்கதிர், இந்தியா டுடே, புதிய தலைமுறை இதழ்களின் முன்னாள் ஆசிரியர் ! ! முருகபூபதி


“ என் ஜன்னலுக்கு வெளியே நெடிதுயர்ந்து நிற்கும் வேம்பு, கடந்து போகும் காற்றின் சிலிர்ப்பில் பூக்களை உதிர்க்கிறது. வானின்று இறங்கும் நட்சத்திரங்களைப் போல அந்த வெண்பனிப்பூக்கள் காற்றில் சுழன்று சுழன்று தரையிறங்குகின்றன. வாசல் கோலத்தில் சில  வந்தமர்கின்றன. இன்னும் சில, கோலமிடும் முன் தெளிக்கக் கொணர்ந்து, மீந்து , விசிறியயடிக்கப்பட்டு சிறு திட்டாகத் தேங்கியிருக்கும் நீரில் விழுந்து நீந்துகின்றன. ஒரு குழந்தையின் குதூகலத்தோடு ஓடித்தண்ணீரில் விழுந்த அந்தப்பூக்களைக் கூர்ந்து நோக்கக் குனிகின்றேன். என்னைப்போன்ற ஆர்வத்தோடே அந்த வானத்து முகிலும் முகம் பார்க்கக் குனிந்திருக்கவேண்டும். பூக்களுடே அதுவும் ஒரு பூவாய் அதன்  நிழலும் மிதக்கிறது நீரில் “

இந்த வரிகள் ஒரு சிறுதையிலோ, அல்லது நாவலிலோ இடம்பெறவில்லை.  புனைவு சாரா பத்தி எழுத்திலும் அழகியலும் அர்த்தமும் கொண்ட  இந்த வரிகள் வரவில்லை.

ஆனால், வந்திருப்பது புலம் பெயர்ந்தவர்களின் சில கவிதைகளை தேர்வுசெய்து தொகுத்து அதற்கு புவியெங்கும் தமிழ்க்கவிதை எனத்தலைப்பிட்டுள்ள ஒருவரிடமிருந்து.

      அவர்தான்  தமிழ்  கலை, இலக்கிய, இதழியல்  சூழலில் நன்கு அறியப்பட்ட , கவனத்திற்குள்ளான எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமைகொண்ட மாலன்.

கொமன் வெல்த் நாடுகளில் வதியும் இலக்கியவாதிகளை ஒன்றிணைத்து தமிழுக்கும் இலக்கியத்திற்கும் ஏதாவது ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்று நெடுநாட்களாக சிந்தித்து வருபவர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் “ திறனாய்வுச் செம்மல் “ விருது ( 2021) பெற்ற பேராசிரியர் க. பஞ்சாங்கம் விருது பெற்றவரின் ஏற்புரை

மாண்புமிகு துணைவேந்தர் அவர்களே! மேதகு பதிவாளர்


அவர்களே! மற்றுமுள்ள நிர்வாகத் துறைப் பெருமக்களே! மதிப்பிற்குரிய பல்துறை சார்ந்த பேராசிரியர் நண்பர்களே! பெரிதும் போற்றத் தக்க முறையில் இலக்கியத் திறனாய்விற்கு என்றே ஒரு விருதினைத் தருவதற்கென்று பேரா. ந.சுப்புரெட்டியார் கல்வி அறக்கட்டளை நிறுவியுள்ள அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பேருள்ளம் கொண்டவர்களே! மாணவச் செல்வங்களே! கூடியிருக்கும் சான்றோர் பெருமக்களே! உங்கள் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். முதலில் திறனாய்வுச் செம்மல் விருதிற்கு என்னைத் தேர்ந்தெடுத்த துணைவேந்தர்க்கும் தேர்வுக் குழுவில் இருந்த அறிஞர்களுக்கும் எனது அன்பான நன்றியை உரித்தாக்குகிறேன்.

இலக்கியத் திறனாய்விற்கென்று தனியாக ஒரு விருது


வழங்குவது தமிழகத்தில் பெரிதும் அரிது; எனக்குத் தெரிய “மேலும் விருது” என்று தான் நடத்திய சிறுபத்திரிகை பெயரில் பேராசிரியர் சிவசு அவர்கள் ஆண்டுதோறும் ஒரு திறனாய்வாளருக்கு விருது வழங்கி வருகிறார். (ரூ. 25,000) அது போலவே புதுச்சேரியில் என்னுடைய பெயரில் “பஞ்சு பரிசில்” என்று பிரான்சில் வாழும் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் திறனாய்வாளருக்கு விருது வழங்கிக் கொண்டு இருக்கிறார். (ரூ.10000). பல்கலைக்கழக அளவில் “திறனாய்வுச் செம்மல்” என்ற பெயரில் வழங்கப்படுவது இதுவே முதன்முறை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமைப்படத் தக்க ஒன்று என்று இதை நான் கருதுகிறேன்.

ஏனென்றால் இலக்கியப் படைப்பு என்பது அது ஒரு பிரதியாக (Text) இருக்கும் வரை ஊமையாகத்தான் கிடக்கிறது; அது குறித்த பல்வேறு கோணத்தில், வகை வகையான கோட்பாட்டு நோக்கில் திறனாய்வாளர்கள் உரையாடும்போதுதான் ஒரு படைப்புப் பேசத் தொடங்குகிறது. எனவே, இலக்கியப் படைப்பிற்கு வாயாக அமைந்து அதை வளர்த்தெடுத்தவர்கள் திறனாய்வாளர்கள்தான். ஒரு பிரதியைக் குறித்துப் பல்வேறு பிரதிகளை உற்பத்தி செய்வது விரிவுபடுத்துபவர்கள் இவர்கள்தான். ஆனால், இலக்கிய வெளியில் அவர்களுக்கான முக்கியத்துவம் இல்லை என்பது எவ்வளவு பெரிய நகைமுரண். மொழிபெயர்ப்பாளருக்கும் இதே கதைதான்.

தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .        


   "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை" இது நாம் யாவரும் அறிந்த இது மொழி அல்லவா!. இந்த ஆன்றோர் வாக்கு ஒரு  தாய்க்கும் அவளின் குழந்தைகளுக்கும் இடையான உறவு காரணமாக எழுந்த மூதோர்  உரை எனக்  கொள்வதா அல்லது அதற்கும் மேலாக ஓர் அகண்ட கருத்தினை குறிக்கிறதா?

  மிகப் புராதன காலத்திலேயே மனித குலத்தில் பெண்களே மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்டனர்.அச் சமூகத்தை சமூக விஞ்ஞான ஆராய்ச்சி நிபுணர்கள் "பெண் ஆதிக்க சமூகம்" என குறிப்பிடுவது வழக்கம்.  மனித சமுதாயத்தின் பிறப்பும் வளர்ச்சியும், பெருக்கமும் பெண்ணில் தான் தங்கியுள்ளது.  ஏன் இன்றைய நிலையை எடுத்துக் கொண்டாலும் பெண் உடலுக்கு வெளியே விஞ்ஞான பூர்வமாக, ஆய்வு கூடத்தில் கருக்கட்ட முடியும் எனும் நிலை ஏற்படுவதற்கு முன்பெல்லாம் கருவுறும் திறன்  கொண்ட  பெண் இல்லாவிடில் புதிய சந்ததியே உருவாக முடியாதல்லவா?.

  இன்று சமூகவியல் அறிஞர்கள் மந்தைகளை வசப்படுத்தி பால் கறப்பதை முதலில் கண்டறிந்தவர் பெண்ணே  என்கின்றனர். காரணம்,  பெற்ற குழந்தைக்கு கொடுக்கும் பால் வற்றியதும் அந்த குழந்தையின் பசியைப் போக்க கண்டறிந்ததே மந்தைகளை வசப்படுத்தி பால் கறந்தமை. அதையடுத்தே மந்தை மேய்க்கும் சமுதாயம் உருவானது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு இட்டு சென்ற பின்னர்,  குடிசைக்கு உள்ளே வாழ்ந்து பெற்ற பிள்ளைகளை பராமரிப்பதும் பசியுற்ற போதும் உணவு கொடுத்து வளர்த்தாள் பெண். அதற்கு மேலும் சந்ததியை பெருக்கும் ஓர் உன்னத உழைப்பில் ஈடுபட்டிருந்தது பெண் இனம். இவ்வாறு வீட்டுக்குள்ளே வாழ தொடங்கியவர்  குடிசையை சுற்றியுள்ள நிலத்தை கல் ஆயுதத்தால் கிண்டி கிணறு நிலத்தை பண்படுத்தி பயிர் விளைச்சலில் இறங்கினாள். இன்று சமூகவியல் ஆய்வாளர்கள் விவசாயம் என்பது பெண்களை முதலில் கண்டறிந்து உணவு பற்றாக்குறையை நீக்கியவர் என்கின்றனர்.       


கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பத்து ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

   கற்பகதருவாம் பனையின் ஓலைகள் எப்படி எழுத்துக்களைச்


சுமந்து பயனளித்து வந்தது என்னும் வரலாற்றைப் பார்த்தோம். ஏட்டுச் சுவடி களாய் மாறி எல்லோர் மனத்திலும் அமர்ந்துவிட்ட பனை ஓலையின் பல பரிமாணங்களையும் பார்ப்பதும் அவசியம் அல்லவா ! பனை ஓலை என்ற வுடன் அதனைச் சாதாரணமாக எடுத்து விடவே கூடாது.அதன் பயன்பாடு என்பது பல நிலைகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதழ்கூந்தல்மடல்மாழைஎன்னும் பெயர்களையும்  பனை ஓலை தாங்கி நிற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

   பனையின் ஓலைகளை குருத்தோலை என்கிறோம்.காவோலை என்கி றோம். வற்றோலை என்கிறோம். முந்தல் ஓலை என்கிறோம்.இளம் பனையினை வடலி என்கிறோம். இதன் ஓலைகளை வடலி ஓலைகள் என்றே அழைக்கிறோம்..இவை ஒவ்வொன்றுமே பயனை நல்கிடும் வகை யில்த்தான் அமைந்திருக்கின்றன என்பதையும்  கருத்திருத்தல் நலமே யாகும்.பனை ஓலைக்கு தாளீபலாசம் என்றும் பெயர்  இருக்கி றது.பனை ஓலையினை மடித்துக் காதிலும் அணிந்திருக்கிறார்கள்.காதோலை என்னும்  பெயர் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் ஓலையாக அல்லாமல் தங்கமாயும் பொன்னாகியும் ஆபரணங்களாய் மாறிய நிலையினையே இன்று காண்கின்றோம்  எது எப்படி மாறினாலும் காதோலை என்னும் சொல்லில் மட்டும் மாற்றம் வரவில்லை என்பதுதான் முக்கியமாகும். பனை ஓலை காதில் அணியும் நிலையில் இருந்திருக்கிறது. அதே ஓலை தான் பிற்காலத்தில் நாம் முக்கியமாகப் பயன்படுத்தும் மாங்கல்யம் என்னும் தாலிக்கும் வித்தாகும் என்பதையும் கருத்திருத்தல் அவசிய மேயாகும்.

காளி ஆட்டம் - சம்பவம் (10) கே.எஸ்.சுதாகர்


“இன்று இரவு விசேட பூசை. உங்கள் கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு குடும்பமாக வாருங்கள்.”

வீடு வீடாகக் கதவைத்தட்டி சொல்லிக்கொண்டு வந்தாள் கனகா. அவள், ஒன்பது யுனிட்டுகள் கொண்ட அந்தக் குடிமனையில் புதிதாக வந்தவள். ஏற்கனவே ஏழு தமிழ்க்குடும்பங்கள் அங்கு இருந்தன. இருந்த வெள்ளைக்காரக் குடும்பங்களில், ஒரு குடும்பம் காலி செய்யவே, கனகாவும் பாலாவும் அந்த வீட்டிற்கு வந்தார்கள்.

ஏற்கனவே இருந்தவர்கள் படித்துப் பட்டம் பெற்றவர்கள். பாலா ஒரு மெக்கானிக். அவனையும் மனைவியையும் ஒருவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உதயத்திற்கு முன்னர் வேலைக்குப் புறப்பட்டு, இருள் கவிந்தபின்னர் வீட்டுக்கு வருவான் பாலா. சனிக்கிழமையிலும் போய்விடுவான். கனகாவுக்கு வீட்டில் இருக்கப் போரடிக்கும். ஒவ்வொரு வீடாகத் தரிசனம் கொடுப்பாள். வீட்டில் இருப்பவர்களும் சிலவேளைகளில் கதைப்பார்கள்; பலவேளைகளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.

அவுஸ்திரேலியக் கம்பன் கழக - 'நாநலம்' [09/10/21 - இரவு 8மணி


 நாநலம்

'நானிலம் இன்புறும் சொல்லாடற் களம்!'

நற்றமிழறிவும் நயம்மிகு சொல்வன்மையும் கொண்ட,
பேராசிரியர் வி. அசோக்குமாரன் ஐயாவின் (பாண்டிச்சேரி) அரங்கத் தலைமையில்,
அவுஸ்திரேலியக் கம்பன் வகுப்பு மாணவர் (சிரேஷ்ட பிரிவு) விவாதிக்கவுள்ளனர்.

உங்களுடைய வரவும் வாழ்த்தும் இவ்விளைஞர்களினுடைய விவாதத் திறனை,
மென்மேலும் வளர்க்க உதவும் என்பதில் ஐயமில்லை.
நாநலம் காண நிகழ்நிலையாய் இணைந்து சிறப்பியுங்கள்.🙏

🌞கம்பன் கழகத்தார் அன்பு அழைப்பு🌞
🌷சனிக்கிழமை, 09.10.21[Syd/Mel/Bris @ 8pm | IND/SL @ 2:30pm]
🌷இணையவழி நேரலை முகவரி:
அவுஸ்திரேலியக் கம்பன் கழக YouTube: https://www.youtube.com/c/KambanKazhagam/featured

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - தேன் கிண்ணம் - ச. சுந்தரதாஸ் - பகுதி 14

 .

முன்னணி நகைச்சுவை நடிகர்களாக திகழ்ந்தவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் படங்களில் கதாநாயகனாக நடிக்கவும் துணிவதுண்டு அன்றைய சந்திரபாபு முதல் இன்றைய சந்தானம் வரை இது தொடர்கிறது. அந்த வகையில் நகைச்சுவை நாயகனாக திகழ்ந்த நாகேஷ் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இன்னும் சொல்லப்போனால் நகைச்சுவை நடிகர்களுக்குள்ளேயே அதிக படங்களில் கதாநாயகனாக நடித்த பெருமை நாகேசையே சாரும் .


இந்த வகையில் அவர் கதாநாயகனாக நடித்து 1971 இல் வெளிவந்த படம் தேன்கிண்ணம். அன்றைய விவித பாரதி வானொலி நேயர் விருப்ப நிகழ்ச்சியான தேன்கிண்ணம் நிகழ்ச்சி பிரபலம் பெற்று விளங்கியது. அதனையே படத்துக்கு பெயராக வைத்து அதனை தயாரித்து இயக்கி இருந்தார் சித்திரமஹால் கிருஷ்ணமூர்த்தி. படத்தில் கதாநாயகியாக நாகேஷின் இனையாக பிரபல கவர்ச்சி நடன நடிகை விஜயலலிதா நடித்திருந்தார். தொடர்பில்லாத ஜோடிப் பொருத்தமாக அமைந்த போதும் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.


செல்வந்தரான கனகசபை ஊரில் இளம் பெண்கள் கவர்ச்சியான உடை அணிந்து நடமாடுவதால் ஆண்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கருதுகிறார். இதனை எதிர்க்கும் முகமாக ஆ. பா. ச என்ற இயக்கத்தை அதாவது ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்று தொடங்குகிறார். ஆபாசமாக உடை அணிந்து திரியும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் படி வேலையில்லாத இளைஞனான மோகனுக்கு கூறுகிறார். மோகனோ அவரின் மகள் மாலாவையே காதலிக்க நிலைமை விபரீதமாகிறது.


இலங்கைச் செய்திகள்

 இலங்கை ஜனாதிபதி அழைத்தால் கலந்துரையாட நான் தயார்

இந்திய வௌியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை வருகை

கிராமத்துடனான உரையாடலில்' அங்கஜன் இராமநாதன் எம்பி

சட்ட விரிவுரையாளர் கமலா நாகேந்திரா காலமானார்

TNAக்கு பல கோடிகள் வழங்கப்பட்டது உண்மை


இலங்கை ஜனாதிபதி அழைத்தால் கலந்துரையாட நான் தயார்

நோர்வே MPயாக தெரிவான இலங்கைப் பெண் கம்சாயினி

ஜனாதிபதி அழைப்பு விடுத்தால், தாம் அவருடன் கலந்துரையாட தயாராகவிருப்பதாக நோர்வே தொழில்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கையை பூர்வீகமாக கொண்ட கம்சாயினி குணரத்னம் தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

 முறைகேடு வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை

வடகொரியா புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சி சோதனை

ஈக்வடோர் சிறையில் குற்ற கும்பல்கள் இடையே மோதல்: 116 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் எரிமலைக் குழம்பு கடலில் கலந்ததினால் அச்சம்

தம்மை இறைதூதரென கூறிய பெண்ணுக்கு மரண தண்டனை

இஸ்ரேலிய இராணுவத்தால் 4 பலஸ்தீனர் சுட்டுக்கொலை


முறைகேடு வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை

முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கொலஸ் சர்கோஸிக்கு (66) அந்த நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அருணந்தி சிவம் மற்றும் மறைஞான சம்பந்தர் குருபூசை அழைப்பிதழ்


 


“இலக்கியவெளி” நடத்தும் இணைவழி கருத்தாடல் நிகழ்வு

இலக்கியவெளி சஞ்சிகையின் முதலாவது இதழை  (தி.ஜானகிராமன் சிறப்பிதழ்முன்னிறுத்திய  பார்வை....

 


நாள்:
 சனிக்கிழமை 23-10-2021       

நேரம்:            

 

இந்திய நேரம் -         மாலை 7.00                 

இலங்கை நேரம் - மாலை 7.00                   

கனடா நேரம் -          காலை 9.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 

வழி:  ZOOM, Facebook

           

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

                              

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

 

மேலதிக விபரங்களுக்கு: - அகில்  - 001416-822-6316


அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்