10/01/2018 இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் பதவி, தமிழராகிய கே.சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய இஸ்ரோ தலைவராகிய கிரண் குமாரின் பதவிக் காலம் எதிர்வரும் பதினான்காம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. அவரது பதவியே தற்போது சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ‘கிரையோஜெனிக் என்ஜின்’ துறையில் தேர்ச்சி பெற்றிருக்கும் சிவன், தற்போது திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஒரே விண்ணோடத்தில் 104 செய்மதிகளை அனுப்பி இந்தியா சாதனை புரிந்தது. இந்தச் சாதனையின் பெரும்பங்கு சிவனுடையதே! தொழில்நுட்ப ரீதியாகவும் செய்மதிகளை நிலைநிறுத்துவதிலும் சிவனின் அனுபவம் மற்றும் அறிவு பேருதவி புரிந்ததாக இஸ்ரோவின் உயரதிகாரிகள் பலரும் கூறியிருந்தனர்.
இது தவிர, மீள் பயன்பாட்டுக்கு உட்படுத்தக் கூடிய உந்து வாகனத்தை உருவாக்கும் திட்டத்துக்கு அடிப்படை சிவனின் கருத்துருவாக்கமே!
“என்னை விடச் சிறந்த ஜாம்பவான்கள் பணிபுரிந்த நாற்காலியில் அமரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததையிட்டு மகிழ்கிறேன். இஸ்ரோவை அடுத்த வட்டப் பாதைக்கு (அடுத்த கட்டத்துக்கு) எடுத்துச் செல்வதே எனது குறிக்கோளாக இருக்கும்” என்று கூறியுள்ளார் சிவன்! நன்றி வீரகேசரி