எப்பொழுதும் கேலியும் கிண்டலுமாக
பேசியும் எழுதியும் வந்தவரான தமிழக எழுத்தாளரும், துக்ளக் ஆசிரியரும், நாடக – சினிமா நடிகருமான சோ . ராமசாமி, முன்னர்
எழுதிய நாடகம் ஒன்று கல்கி இதழில் தொடர்ந்து வெளியானது.
அதில் வரும் இரண்டு பாத்திரங்கள்
சென்னை மெரீனா பீச்சுக்கு செல்வார்கள். அங்கிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் சிலையை காண்பித்து ஒருவர்,
மற்றவரிடம், “இது யாருடைய சிலை? “ எனக்
கேட்பார்.
அதற்கு மற்றவர், “ இந்தியாவின் ஏழ்மைக் கோலத்தை வெளிநாட்டிலிருந்து
இங்கே வருபவர்களுக்கு காண்பிக்கின்ற அடையாளச் சின்னம் . “ என்பார்.
சமகாலத்தில் இலங்கையில்
ஆங்காங்கே எழும் புத்தர் சிலைகளை பார்த்து வருகின்றோம்.
பல வருடங்களுக்கு முன்னர்
திருகோணமலை நகரில் ஒரு புத்தர் சிலை நாற்சந்தியில் வைக்கப்பட்டது. அதனை கண்டித்து அன்றைய தமிழ்த்தலைவர்கள் சட்ட நடவடிக்கையும்
எடுத்தனர். அச்சிலை முறையான அனுமதியுடன் அங்கே நிறுவப்படவில்லை என்று அப்போது பேசப்பட்டது.
அச்சிலைக்கு ஏதும் நேர்ந்துவிடும்
என்பதற்காக பொலிஸார், அச்சிலையைச் சுற்றி கம்பி வேலியும் அமைத்து, காவலும் காத்தனர்.
பின்னர் இந்த விவகாரம் காற்றோடு
கலந்து சென்றுவிட்டது.
புத்தர் தனக்கு அரசும்
வேண்டாம், மணிமுடியும் வேண்டாம், குடும்பமும் வேண்டாம் எனச்சொல்லிக்கொண்டு வனம் சென்று
தவம் புரிந்து நிர்வாணம் எய்தியவர்.
அத்தகைய ஒரு புனிதரை வைத்து
இலங்கையில் அரசியல் நடக்கிறது. சமூகத்திற்கு
மகோன்னதமான சேவைகளை செய்தவர்களுக்கும், மொழிக்கும் கலை, இலக்கியத்திற்கும்
பண்பாட்டுக்கும் அறிவியலுக்கும் மகத்தான சேவைகளை செய்தவர்களுக்காகவும் சமூகம் காலத்திற்குக் காலம் சிலைகளை
நடமாடும் பிரதேசங்களில் நிலை நிறுத்திவருகிறார்கள்.
கத்தோலிக்கர்கள் செறிந்து
வாழும் பிரதேசங்களில் யேசுநாதருக்கும் தேவமாதாவுக்கும் வீதியோரங்களில் சிலைகளை காணலாம். அத்தகைய சிலைகள் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் இருக்கும்.
சைவர்கள் செறிந்து வாழும்
பிரதேசங்களில் வீதியோரங்களில் பிள்ளையார் சிலைகளை காணலாம். அரசமரம், வேப்பமர நிழல்களில்
அவர் மௌனமாக அமர்ந்திருப்பார். அவரை வழிப்பிள்ளையார்
என்பார்கள். அவருக்கு தேங்காய் அடித்து வழிபட்டுச்சென்றால்,
செல்லும் காரியம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது.
இவைதவிர, இலங்கையில் பழைய பாராளுமன்ற வளாகத்திலும் சில அரசியல்
தலைவர்களின் சிலைகளை காணலாம். காலிமுகத்திடலில்
பண்டாரநாயக்காவுக்கு மாத்திரம் இரண்டு சிலைகள் இருக்கின்றன.
ஒன்று முன்னைய பாராளுமன்ற
முன்றலில், மற்றது சோவியத் அரசு வழங்கியது காலிமுக வீதியருகில். காலிமுக கோத்தா கோ
கம போராட்டத்தின்போது யாரோ ஒருவர் அச்சிலையில் ஏறி நின்று அதன் கண்களை கறுப்புத்துணியினால்
மூடிக்கட்டினார்.
அரசியல் தலைவர்களின் சிலைகளை வருடம்
ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் கழுவி சுத்தம் செய்வர். அப்போது அச்சிலைகளின் தலையின் படிந்திருக்கும் பறவைகளின் எச்சம் கழுவித்
துடைக்கப்படும்.
ஆனால், புத்தருக்கு இந்த
தண்ணீர் குளிப்பு நடப்பதற்கு சாத்தியமில்லை. அவர்
பறவைகளின் எச்சம்விழாத வகையில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள்ளோ
அல்லது புதிதாக அமைக்கப்பட்ட விகாரைக்குள்ளோ இருப்பார்.
பிரமாண்டமான புத்தர் சிலைகள்
பறவைகளின் சரணாலயமாகிவிடும். அவர் பறவைகள்
உட்பட உயிரினங்கள் அனைத்தையும் நேசித்து, அன்பு
மார்க்கத்தை போதித்தவர்.
ஆனால், அவரது மார்க்கத்தை
பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஆட்சியாளர்களின் பூரண அனுமதியுடனும் ஆசிர்வாதத்துடனும்
நாடெங்கும் புத்தர் சிலைகள் எழுந்துகொண்டிருக்கின்றன.
பல வருடங்களுக்கு முன்னர்,
கொழும்பு துறைமுகத்தை நோக்கி வரும் வெளிநாட்டு கப்பல்களின் மாலுமிகள் தூர நோக்கு கண்ணாடி
( Telescope ) ஊடாக கொழும்பின் கரையை பார்த்தபோது, அவர்களுக்குத் தெரிந்தது கொச்சிக்கடை அந்தோனியார்
தேவாலயத்தின் கோபுரம்தான்.