‘ கோதை ‘ நாச்சியார் திருமொழியின் நடன வடிவம் - Dr Chandrika Subramaniyan

.

செல்வி கார்த்திகா  மனோகரன் ‘ கோதை ‘ எனும் கருப் பொருளில் முழு நீள நடன நிகழ்வை மிக வெற்றிகரமாக நடத்தி சிட்னி நடன ரசிகர்களை மகிழ்வித்தார். விழாவினை ஸறத்பீல்ட் மாநகர சபைத் தலைவி கவுன்சிலர் காரண பென்ஸபீன பங்ககேற்று கௌரவித்தார்.  

ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் சிறப்பான பாடல்களைத் தொகுத்து , திருப்பள்ளி எழுச்சி, கோதை கவுத்துவம், மணல் வீடு, விரகம், வாரணம் 1000, கற்பூரம் நாறுமோதில்லானா என்ற வரிசையில் ஏழு பாடல்களுக்கு மிகச்சிறப்பாக நடனமாடி மகிழ்வித்தார்.


கலாபூஷணம் அனுஷா தர்மராஜாவின் மாணவியான கார்த்திகா ரெண்டாயிரத்தி 17 தன்னுடைய அரங்கேற்றத்தை முடித்த பின் அணங்கு ஐவர் என்ற ஒரு நிகழ்வின் மூலம் பல்மைரா திட்டத்துக்காக நிதி சேர்த்து வழங்கியவர்  பல இலக்கிய நிகழ்வுகளிலும் , குறிப்பாக அண்மையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் புலம்பெயர்ந்த இளைய தலைமுறையினர் கலை வளர்ப்பதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் பற்றி ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் வழங்கியவர்.

மொழி ஆர்வத்திலும், கலை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டும் கார்த்திகா அடுத்த தலைமுறையில் புதிய முன்னெடுப்புகளை படைக்கும் ஒரு கலைஞராவார்.


இலக்குமித்தேவி சிரித்திடுவாள் இல்லமனைத்தும் மங்கலமே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 .

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்     மெல்பேண் .... அவுஸ்திரேலியா வாழ்வினில் விரதம் வரமாகும்
மனமது ஒடுங்குதல் நலமாகும்
தேவைகள் மனதில் எழும்போது
தேவியை நினைப்பார் நிலமீது 

தேவியை நினைப்பார் பலவாறு
தினமுமே துதிப்பார் பலபேரும்
சிறப்புடன் எடுப்பார் சிலநாளை
அதனை அகத்தினில் அமர்த்திடுவார்

அப்படி அமைவது இவ்விரதம்
அதுவே அலைமகள் தினமாகும்
மங்களம் கிடைக்க யாவருமே
அலைமகள் விரதம் அனுட்டிப்பார்

மங்கள நாயகி வரலக்சுமி 
வளமினை கொடுப்பாள் வரலக்சுமி
எங்களின் வாழ்வு விடிவுறவே
என்றுமே அவளே துணையாவாள்

தளர்வினைத் தகர்க்கும் தாயாவாள்
உளமதை உறுதி ஆக்கிடுவாள்
நிலமதில் நிம்மதி தந்திடுவாள் 
அளவிலாச் சக்தியும் அவளாவாள்

செல்வம் என்பது சிறப்பாகும்
தெய்வம் தந்தால் அருளாகும்
தெய்வமாம் லக்சுமி பூஜையினை
சிரத்தையாய் செய்குவார் இந்நாளில்

அலைமகள் கலைமகள் மலைமகளாய்
அமைந்தவள் ஆதிசக்தி யாவாள் 
அலைமகள் அருளும் அமைந்திட்டால்
அனைத்துமே வசமாய் ஆகிடுமே

வீட்டினில் பெண்கள் விளக்கேற்றி
மெய்யன்புடனே துதி பாடி
இலக்குமித் தாயை மனமிருத்தி
ஏற்றிடு வார்கள் விரதமதை 

காப்புக் கட்டி நின்றிடுவார்
கையால் குங்கும் தொட்டிடுவார்
மஞ்சள் வைத்து பூஜிப்பார்
மங்கலம் என்றே மகிழ்ந்திடுவார் 

பெண்களே சிறப்பாய் பிடித்திடுவார்
பீடுகள் பெருக வேண்டிடுவார் 
கொண்டவர் நலத்தை மனமிருத்தி
பெண்களே விரதம் நோற்றிடுவார் 

மாங்கல்யம் நிலைக்க வேண்டிடுவார்
மனமது சிறக்க வேண்டிடுவார்
வாழ்வெலாம் ஒளிர வேண்டிடுவார்
வரலக்சுமி பாதம் பணிந்திடுவார் 

அம்மன் ஆலயம் அனைத்திலுமே
அபிசேகம் ஓமம் இடம்பெறுமே
அனைத்துப் பெண்களும் ஆலயத்தில்
அம்மனைத் துதிப்பார் காதலுடன்

பூஜை நிறைவில் பெண்களெலாம்
புனித நூலைக் காப்பாக
கைகளில் கட்டி காத்திடுவார்
கணவர் குடும்பம் நலன்காக்க 

வீடுகள் விளக்கால் ஒளியாகும்
வெற்றிகள் வரவு விரைவாகும் 
இலக்குமித் தேவி சிரித்திடுவாள்
இல்லம் அனைத்தும் மங்கலமே 

தரிசனம் - இளைய நிலா பொழிகிறதே - மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி - 02/09/2023 சனிக்கிழமை
பயணியின் பார்வையில் – 01 - கௌதம புத்தர் எங்கும் இருப்பார் - முருகபூபதி

 .


பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பாதுகாப்பு முதலான திரைப்படங்களை இயக்கிய பிரபல இந்திய நெறியாளர் ஏ. பிம்சிங் அவர்கட்கு புத்தர் மீது பேரபிமானம். அதனால், தனது திரைப்படங்களில் புத்தர் சிலையை அடிக்கடி காண்பிப்பார்.

எம்.ஜி. ஆர் . இரட்டை வேடத்தில் நடித்த குடியிருந்தகோயில்                ( 1968 ) இலங்கையில் வெளியானது. இத்திரைப்படத்திலும்  புத்தர் சிலை வருகிறது.  ஒரு எம்.ஜி.ஆர். படுகாயங்களுடன் ஒரு வீட்டினுள்ளே நுழைந்து பெருங்குரல் எடுத்து ஒரு ஷோகேஸில் ஓங்கித் தட்டுவார். அப்போது அதிலிருந்த சிறிய புத்தர் சிலை ஆட்டம் காணும்.

அக்காலப்பகுதியில் அந்தக்காட்சியை நீக்கவேண்டும் என்று இலங்கை திரைப்பட தணிக்கை அதிகாரிகள் சொன்னதாக ஒரு தகவலும் இருக்கிறது.

சமகாலத்தில் புத்தர் இலங்கையில் பேசுபொருளாகிவிட்டார்.  13 ஆவது திருத்தச்சட்டம் பற்றியோ, மகாணங்களுக்கான அதிகாரங்கள் தொடர்பாக தமிழர் தரப்பு பேசத்தொடங்கிவிட்டால்,  அதற்கு எதிரானவர்கள் -  சிங்கள பேரினவாத சக்திகள் வெகுண்டு எழுந்துவிடும்.

மௌனத்தால் தீர்ப்பெழுது - மெய்யன் நடராஜ்

 .

சாணமிட்ட வாசலிலே சங்கமிக்கும் கோலம்
சத்தமின்றி பூக்கவிடும் சங்ககாலப் பெண்ணின்
நாணமதைப் போர்த்திவரும் நாலுகுண மௌனம்
நாணேற்றக் காத்திருக்கும் நாயகனின் சொந்தம்
பாணமிட விழியோடு பதுக்கிவைத்து எய்யும்
பாவையரில் தேங்கியுளப் பழங்கால மௌனம்
தூணதுவாய் நின்றென்றும் துணைசெய்யும் போது
தூரநிலா வந்தருகே தொடர்வாழ்த்துப் பாடுமே
*
தானமென இதயத்தை தாரைவார்க்கு முன்னே
தாயுனக்குத் தந்துவைத்த தற்காப்புக் கலையாய்
ஊனத்தைக் கண்டறிந்து உருப்படியாய் உன்னை
ஒருவனுக்கு ஒப்படைக்க உதவுவதே மௌனம்
ஏனத்தைக் கைவைத்து ஏதுமற்று வாடும்
எளியவர்கள் பாத்திரத்தில் இடும்மௌனம் தானம்
மீனழுத நிலையொத்த மிடியுடையர் வாழ
மீதமுள்ள மௌனத்தை மெருகேற்று வாயே!
*
ஈனத்தை விளைவிக்க ஏற்புடைய மௌனம்
எதிராளி எய்கின்ற ஈட்டியெனக் கொள்ளு
மானத்தை விலைபேசி மறைவாக விற்க
மான்விழியில் தேன்பாய்ச்சும் மௌனமொரு முள்ளு
வானத்தை அழகாக்கி வைக்கின்ற மௌனம்
வாழ்த்துவதாய் காட்டுகின்ற வசீகரத்தை அள்ளு
தேனள்ளித் தெளிப்பதுவாய் தேவையொடு நீயும்
தெரிந்தெடுத்த மௌனத்தால் தீர்ப்பெழுதித் தள்ளு !

Nantri https://eluthu.com/

69-வது தேசிய திரைப்பட விருது

 .2021-ம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கான 69-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு விழா டெல்லியில்  நடைபெற்றது. 


சிறந்த திரைப்படம் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் (இந்தி)     திரைப்படத்துக்கு       அறிவிக்கப்பட்டுள்ளது                                                                         

விவேக் அக்னிஹோத்தரி இயக்கத்தில் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த1989-1990களில் காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது குறித்தும், அங்கு நடந்த படுகொலைகள் குறித்தும் பேசும் விதத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியால் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'.

சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜூனுக்கு ‘புஷ்பா’ திரைப்படத்துக்காக அறிவிக்கப்பட்டது. 

 சிறந்த நடிகைக்கான விருது ‘மிமி’ படத்துக்காக கீர்த்தி சனோனுக்கும்  ஆலியா பட் டிற்கும் "கங்குபாய் காத்தியவாடி"    படத்துக்காக    அறிவிக்கப்பட்டுள்ளது. அதே படத்துக்காக பங்கஜ் திரிபாதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழில் சிறப்பு விருதுக்கான பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல, சிறந்த மாநில மொழிப் பிரிவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதுக்கு ‘கடைசி விவசாயி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பி.லெனின் இயக்கிய சிறந்த கல்வி திரைப்படமாக ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கருவறை’ என்ற ஆவணப் படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம்: ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் (இந்தி)
சிறந்த தமிழ் திரைப்படம்: கடைசி விவசாயி
சிறந்த பிரபலமான திரைப்படம்: ஆர்ஆர்ஆர்
சிறந்த இயக்குநர்: நிகில் மஹாஜன் (தி ஹோலி வாட்டர் - மாராத்தி)
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படம் (National integration: தி காஷ்மீர் ஃபைல்ஸ்

ஏழ்மை (கவிதை) உஷா ஜவாகர் ஸாம்பியாவிலிருந்து....தலையிலே பழக்கூடை

இடுப்பிலே அழும் குழந்தை

நடுவீதியிலே உழைப்பு

நாளும் பெண்ணிவள் பிழைப்பு


நாளை பெண்ணிவள்

மகவு பாடசாலை - செல்வாளோ 

கல்வி கற்பாளோ

வாழ்வில் உயர்வாளோ


தாயின் ஏழ்மையை

தரணியில் போக்கிடுவாளோ

நாளை காலம்

பதில் சொல்லும்!

கங்கா கௌரி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

மிகுந்த பொருட்செலவில் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை தயாரித்து புகழ் பெற்ற பி ஆர் பந்துலு , ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் , 1973ல் தயாரித்து , இயக்கி வெளியிட்ட படம் கங்கா கௌரி. கன்னடத்தில் ராஜ்குமார், பாரதி நடிப்பில் கருப்பு வெள்ளை படமாக தயாரித்த படத்தை அதே பேரில் தமிழில் வண்ணப் படமாக உருவாக்கி இருந்தார் அவர். தமிழ் ரசிகர்கள் மீது அவர் வைத்திருந்த அதீத நம்பிக்கையே இதற்கு காரணம் எனலாம்!

படத்தைப் பொறுத்த வரை முதலில் கவர்வது அதன் பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளும், தந்திர காட்சிகளும்தான். அரங்க அமைப்புக்கு பிரபலமான , ஆனால் தமிழில் சில படங்களில் மட்டும் பணியாற்றிய வாலி இந்த படத்தில் அரங்க நிர்மாணத்தை அருமையாக அமைத்திருந்தார். அவரை பாராட்டியே ஆக வேண்டும். அடுத்து தந்திர காட்சிகளை அமைத்த வி ஜி நாயர் ஒளித் திறன் மெச்சத்த தக்கது. இவர்கள் இருவரும் படத்தின் தரத்தை உயர்த்தியிருந்தார்கள்.

புராணக் கதைகளில் இருந்து சில கதைகளை தேர்வு செய்து படமாக்கினார் பந்துலு. கைலாயத்தில் சக்திக்கும், கங்கைக்கும் இடையே யார் சிவனுக்கு மிக வேண்டியவள் என்ற தர்க்கம் ஏற்பட்டு அது விபரீதம் ஆக அவர்கள் இருவரும் பூவுலகில் சென்று பிறந்து , காலம் கனியும் போது மீண்டும் சிவனை அடையும் படி சிவனால் உத்தரவிடப்படுகிறார்கள். அதற்கு அமைய பூலோகத்தில் புரோகிதர் குடும்பத்தில் கௌரியும், மீனவ குடும்பத்தில் கங்கையும் பிறந்து வளர்கிறார்கள். திருமண காலம் நெருங்கும் போது ஈசன் மானிட உருவில் தோன்றி அவர்கள் இருவரையும் காதலித்து , கரம் பற்றி ஆட் கொள்கிறார்.இந்த கதைக்கு மத்தியில் சிவனுக்கு ஏற்படும் சில இன்னல்களும் இணைக்கப்பட்டுள்ளன. நாரதரின் போதனையால் சனிபகவான் ஈஸ்வரனை போன்று தானும் ஈஸ்வர பட்டம் பெற துடிக்கிறார். ஆனால் அது நிறைவேறாது போகவே சிவன், பார்வதி கல்யாணத்தில் கலகம் விளைவிக்கிறார். அதன் விளைவாக திருமணத்தில் புரோகிதராக செயற்பட்ட பிரம்மாவுக்கும் , சிவனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சபித்துக் கொள்கிறார்கள். அதன் காரணமாக ஐந்து முகங்களைக் கொண்ட பிரம்மா ஒரு முகத்தை இழந்து நான்முகன் ஆகிறார். சிவனோ பிச்சைப் பாத்திரம் ஏந்தி பிச்சண்டி ஆகிறார். சிவனின் இந்த லீலைகளே படமாகும்.

கட்டுரை இப்படியும் நடக்கிறது August 17, 2023

 ஒரு சோதிடர் ஊர் ஊராக சென்று சோதிடம் பார்த்து கையில்
கிடைக்கின்ற பணத்தைப் பெற்றுவந்தார்.

இவ்வாறு ஒவ்வொரு வீடுகளாக ஏறி இறங்கி வந்துகொண்டிருந்தவர் ஒரு வீட்டுக்கு சென்றதும் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண்ணைப் பார்த்ததும், அவர் கர்ப்பமாக
இருப்பதைப் புரிந்துகொண்டார்.
அவருக்கு எந்த நேரத்திலும் குழந்தை கிடைக்கலாம் என்ற நிலை.
அவரைப் பார்த்ததும் தெரிந்தது.
அந்தப் பெண்ணுக்கு கைரேகையைப் பார்த்து சோதிடம் சொல்லத் தொடங்கினார்.
இது உங்களுடைய முதல் பிரசவமா என்று கேட்டார்.
அந்தப் பெண்ணும் அதற்கு ‘ஆம்’ என்று பதில் சொல்ல, ‘உங்கள் கைரேகைப்படி உங்களுக்கு ஆண் பிள்ளைதான் பிறக்கும், தப்பினால் பெண்பிள்ளை’ என்றாராம்.
இந்தக் கதைதான் அந்தச் செய்தியை பார்த்தபோது ஞாபகத்திற்கு வந்தது.
‘சமஷ்டி கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம்.
இந்த நிலைப்பாட்டில் சமரசம் அல்லது விட்டுக்கொடுப்பு செய்துகொள்ளாமல் -அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் விரைவாக நடைமுறைப்படுத்தவும் – நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தவும்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் அனுப்பி வைத்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
13ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாட்டை தமக்கு தெரிவிக்குமாறு ஜனாதிபதி அண்மையில் கோரியிருந்தார்.
இதற்கான காலக்கெடு செவ்வாயன்று முடிவடையவிருந்தது.
இந்த நிலையிலேயே சம்பந்தன் தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஐந்து பக்கங்கள் கொண்ட கடிதத்தை வழங்கி வைத்தார்.
அந்தக் கடிதத்தில் வழக்கம்போல சுதந்திரத்திற்கு பிற்பட்டகால வரலாறுகளை விளக்கியுள்ள அவர், தமிழ் மக்களின் அபிலாசை சமஷ்டிதான் என்றும் அதேவேளை
அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் கேட்டிருக்கிறார்.

தமிழ் எழுத்தாளர் விழா 2023 - சிட்னியில் செப்டெம்பர் 10 ஆம் திகதி

 .      


அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம்  10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  சிட்னியில்   தூங்காபி Toongabbie சமூக மண்டபத்தில்  முற்பகல் 10-00 மணிக்கு ஆரம்பமாகும்.

அவுஸ்திரேலியாவில்  வதியும் எழுத்தாளர்களின்  நூல்களின் கண்காட்சி, , மலையகம் 200 கருத்தரங்கு , வாசிப்பு அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அத்துடன்  எழுத்தாற்றல் மிக்க மணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலக்கியப்படைப்பாளி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப்பங்களிப்பை  பாராட்டும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு  எழுத்தாளர்களையும் கலை, இலக்கிய ஆர்வலர்களையும்  அவுஸ்திரேலியாவில் தமிழையும் ஒரு பாடமாக உயர்தர வகுப்பில் பயிலும் மாணவர்களையும், தமிழ்மொழிப்பாடம் பயிற்றுவிக்கும்  ஆசிரியர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

            அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

          அனுசரணை :  சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றம்  

               Cumberland Council, Wentworth Ville Library,

 


புலம்பெயர் தமிழர்களை கவரும் AIR LANKA

.

நிலவின் மணல்பரப்பின் வெப்பநிலை என்ன?- சந்திரயான்-3 பகிர்ந்த முதல் ஆய்வுக் குறிப்பு

 .

நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை என்னவென்பது குறித்து முதல் பரிசோதனை குறிப்பை அனுப்பியுள்ளது சந்திரயான்-3 விண்கலனின் விக்ரம் லேண்டர்.

இது தொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "விக்ரம் லேண்டரில் உள்ள சேஸ்ட் ChaSTE (Chandra's Surface Thermophysical Experiment) பேலோடின் முதல் ஆய்வுக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. நிலவின் மேல் பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் பணியை சேஸ்ட் செய்கிறது. இது நிலவின் மணல்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட அளவு துளையிட்டு வெப்பத்தை அறிந்துள்ளது.

அதாவது நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலில் இருந்து 10 செ.மீ ஆழத்துக்கு துளையிட்டு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சென்டிமீட்டரில் வெப்ப நிலையை அறியும் வகையில் அதில் 10 வெப்பநிலை உணரிகள் பொருத்தப்பட்டிருந்தன. நிலவின் தென் துருவத்தில் இதுபோன்று மணல்பரப்பின் மீது வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுவது இதுவே முதன்முறை. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரை விமர்சனம்: அடியே -

 .
கனவுகள் உயிர்பெறும் ‘கற்பனை’ உலகம் ஒன்றில் நடக்கும் காதல் கதையின் முடிவு ரியாலிட்டியை நம்பியிருந்தால் அது ‘அடியே’.

பள்ளிக் காலத்திலிருந்து கவுரி கிஷனை காதலிக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ். அவர் தனது காதலை வெளிப்படுத்தும் போதெல்லாம் எதோ ஒரு பிரச்சினை குறுக்கிட்டுவிட, காதல் கரையைக் கடக்காமல் தவிக்கிறது. அப்படி ஒருநாள் கவுரியிடம் காதலை சொல்ல முயலும் ஜி.வி விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கண் விழித்துப் பார்த்தால் வேறு உலகத்தில் இருக்கிறார். அந்த உலகத்தில் கவுரியும், ஜிவியும் தம்பதியர்களாக வாழ்கின்றனர்.

தான் மல்டி யுனிவர்ஸுக்குள் வந்ததை அறியாத அவர், அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை புரிந்துவிடுகிறது. பின்னர் நிஜ உலக ஒருதலைக் காதல் ஒருபுறமும், கற்பனை உலக திருமண வாழ்க்கை மறுபுறமுமாய் விரிய, இறுதியில் கற்பனை உலகம் காலாவதியானால் என்ன நடக்கும் என்பது படத்தின் திரைக்கதை.

‘இரண்டாம் உலகம்’ படத்துக்குப் பிறகு, ‘மல்டி யுனிவர்ஸ்’, ‘ஆல்டர்நேட் ரியாலிட்டி’யை பயன்படுத்தி தமிழில் வெளியாகியிருக்கிறது ஒரு காதல் கதை. கற்பனை உலகில் கனவுகளுக்கு உயிர்கொடுப்பது என்பது உண்மையில் சுவாரஸ்யமான ஐடியா. அதனை தமிழ் சினிமாவை கலாய்க்க பயன்படுத்தியிருப்பது படத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறது.

குறிப்பாக, விஜய்யின் ‘போகன்’ பட காட்சி, இசையமைப்பாளர்களான பயில்வான் ரங்கநாதன், பிரபு தேவா, ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம், தனுஷ் ரசிகராக வரும் ‘கூல்’ சுரேஷ், தெலுங்கு இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன், இந்திய கிரிக்கெட் அணியின் கோச் மணிரத்னம், ‘அலைபாயுதே’ பட லவ் புரபோசல் காட்சியை மறு ஆக்கம் செய்திருந்து... இப்படியான காட்சிகள் ரசிக்க வைப்பதுடன் சிரிப்புக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

‘சார் நான் காலுல வாழ்றவன்’ என கவுதம் வாசுதேவ் மேனனுக்கு வைத்த இன்ட்ரோ மிரட்டல். டூத்பேஸ்டூக்கு ‘பகாடி’ பெயர் வைத்தது, தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டு ‘தமிழ் திணிப்புக்கு’ பிரதமர் விஜயகாந்த் எதிர்ப்பு, ஆர்சிபி கேப்டன் தோனி, ‘கோமாளி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான் நடன இயக்குநர் என ‘ஆல்டர்நேட் ரியாலிட்டி’யை அட்டகாசமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

ஆனால், இந்த சுவாரஸ்யமான கற்பனை உலகத்திலிருந்து வெளியேறும்போது ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு அயற்சி தொற்றிக்கொள்கிறது படத்தின் பிரச்சினை. டி.ராஜேந்தரின் கால ஒருதலைக் காதல் கதையை மீண்டும் மல்டி யுனிவர்ஸுக்குள்ளும் புகுத்தி எழுதியிருப்பது சலிப்பு. மல்டி யுனிவர்ஸ் ரேஞ்சுக்கான யோசனை இருந்தும் அங்கேயும் காதல் கதை தான் மையமா?

‘96’ பட பாணியில் ஸ்கூல் கதையில் கவுரி கிஷனின் பாடல் காட்சி, வெங்கட்பிரபுவை வைத்துக்கொண்டே ‘மாநாடு’ பட டைம் ட்ராவல் இன்ஸ்பிரேஷன் பார்த்து பழகியவை. மல்டி யுனிவர்ஸில் மற்ற எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், கவுரி கிஷனுக்கு மட்டும் ஏன் இரண்டு உலகிலும் ஒரே பெயர் பயன்படுத்தபடுகிறது என தெரியவில்லை. லாஜிக் பார்க்கக் கூடாது என தவிர்த்தாலும் இந்தக் கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

காதலை சொல்லும் போராட்டம், விரக்தி, புது உலகுக்குள் நுழையும்போது அதிர்ச்சி கலந்த குழப்பம் என நடிப்பில் கவனம் பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால், சில எமோஷனல் காட்சிகளில் இன்னும் கூட மெனக்கெட்டிருக்கலாமோ என தோன்றுகிறது. கவுரி கிஷன் தனது முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பிலும் முன்னேறியிருக்கிறார். காட்சிக்கு தேவையான உணர்வுகளை முகத்தில் கச்சிதமாக கடத்தி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார்.

இவர்களை தவிர்த்து, வெங்கட்பிரபு, ஆர்ஜே விஜய், மதும்மகேஷ், சுவேதா வேணுகோபால் கொடுத்த வேலையை செய்துள்ளனர். கோகுல் பினாயின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு கவர்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை படத்தின் தரத்தை கூட்டுகிறது. யுவன் சங்கர் ராஜா குரலில் வரும் பாடல் ஒன்றும் ரசிக்க வைக்கிறது.

திரும்ப திரும்ப மல்டி யுனியவர்ஸை விளக்க முயற்சித்து அதனை சிக்கலாக்கியிருப்பதும் சுவாரஸ்யமற்ற காதல் காட்சிகளும், தேவையில்லாமல் இழுந்த கடைசிப் பகுதியும் சோர்வு. தவிர்த்து மல்டி யுனிவர்ஸ் ஐடியாவை பயன்படுத்தி தமிழ் சினிமாவை கலாய்த்திருக்கும் யோசனை புதுமையுடன் கலந்து ரசிப்பு.