இலங்கை
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த காலப்பகுதியில்,
நீர்கொழும்பில் எனது ஆரம்பக்கல்வியை கற்ற பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினை உருவாக்குவதற்கு
பலருடனும் சேர்ந்து இயங்க நேர்ந்தது. அத்துடன்
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்திலும் இணைந்தேன். அதற்கெல்லாம் பின்னணியாக சில அரசியல்
சம்பவங்களும் இருந்தன. அது பற்றி இதே பத்தியில்
பின்னர் சொல்கின்றேன்.
1954 ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி நாளில்
32 குழந்தைகளுக்கு
ஏடு துவக்கி வித்தியாரம் செய்விக்கப்பட்ட பாடசாலை தொடங்கப்பட்டபோது அதன் பெயர் விவேகானந்தா
வித்தியாலயம்.பின்னர் நான் அங்கிருந்து புலமைப்பரிசில்
பெற்று யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரிக்குச்சென்ற 1963 காலப்பகுதியில் அதன்பெயர், ஸ்தாபகர் விஜயரத்தினம்
அவர்களை நினைவுகூரும் வகையில் விஜயரத்தினம் வித்தியாலயமாகியது.
ஸ்ரான்லி கல்லூரியும் கனகரத்தினம்
கல்லூரி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.
இவ்வாறு காலத்துக்குக் காலம் எங்கும்
பெயர்கள் மாறிவந்திருக்கும் கோலங்களையும் அறிவீர்கள். மதம் மாறுபவர்களும் தமது இயற்பெயரை
மாற்றிக்கொள்வார்கள். தென்னிந்திய சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. பல நடிகர், நடிகைகளின்
இயற்பெயர்களும் மாறிவிடும். எனது அம்மாவுக்கு தாத்தாவும் பாட்டியும்
கதிர்மாணிக்கம் என்றுதான் பெயர் வைத்தார்கள்.
ஆனால், அம்மா ஊரில் பபா என்றுதான் அழைக்கப்பட்டார். அறியப்பட்டார். பல தமிழ்க்குடும்பங்களில் இந்த “ பாபா
“ க்கள் அநேகம்!
எனது தாய்மாமனார் சுப்பையா எமது ஆரம்ப பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளரானார். அவருக்கும் குடும்பத்தில் வைக்கப்பட்ட செல்லப்பெயர் பாலா. அவரும் ஊரில் பாலா என்றுதான் அறியப்பட்டார். அழைக்கப்பட்டார். நாம் அவரை பாலா மாமா என்போம். அவர் நீர்கொழும்பு கடற்கரை வீதியில் ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார். கூப்பனுக்கு அரிசி விநியோகிக்கப்பட்ட காலத்தில்
அவரது கடை, கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனத்திலும் பதிவுபெற்றிருந்தது. அவரது
வர்த்தக நிலையம் “பாலா கடை
“ என்றுதான் ஊரில் பிரபலம். மூத்த எழுத்தாளர் வரதர் தொகுத்து வெளியிட்ட வரதரின் பல குறிப்புகள் என்ற
பெரிய ஆவணத்திலும் எமது மாமாவின் பாலாகடை இடம்பெற்றுள்ளது. மாமாதான் எமது அம்மாவின்
குடும்பத்திலும் உறவினர்கள் மத்தியிலும் அக்காலத்தில் அதிகம் படித்தவர்.ஒன்பதாம் வகுப்பு படித்திருந்தாலே
அது அக்காலத்தில் அதிகம் என்ற மனப்போக்கு இருந்திருக்கிறது. அவர் சாமி சாஸ்திரியார்
என்ற பெரியவருடன் இணைந்து முருகானந்த களிப்பு,
கந்த சஷ்டி கவசம் முதலான நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்.
அவருக்கு நாம் கதைப்புத்தகம் படிப்பது
பிடிக்காது. புராணப்படங்களுக்குத்தான் அழைத்துச்செல்வார். அவரது அழைப்பில்தான் ஶ்ரீவள்ளி, பட்டினத்தார், திருவிளையாடல்,
சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமாள் பெருமை ஆகிய புராணப்படங்கள்
பார்த்தோம். அத்தை சினிமாப்படமே பார்க்காதவர். தொலைக்காட்சி வந்தபின்னர்தான் வீட்டிலிருந்து அதில்
படம் பார்த்தார்.
மாமா – அத்தையின் மூத்த பிள்ளைகளும் நானும் மு. வரதராசன், அகிலன்,
ஜெயகாந்தன் , தி. ஜானகிராமன், சுஜாதா ஆகியோரின்
தொடர்கதைகளை நாவல்களையெல்லாம் அவர்களுக்குத்
தெரியாமல்தான் படித்திருக்கின்றோம்.
அக்காலத்தில் காதல் என்பது எமது சமூகத்தில்
கெட்ட வார்த்தை. எவருக்கும் காதல் கடிதமும் எழுதத் தெரியாது. பேச்சுத் திருமணம் என்று
வந்துவிட்டால், மணமக்களின் படங்கள் கூட பரஸ்பரம் மணக்களுக்கு காண்பிக்கப்படமாட்டாது.