.
உறவு என்ற
வானத்திலே நாம் பறவை ஆகலாம்... முருகபூபதி
எழுத்துலகப்
பிரவேசம் செய்து இருபத்தியைந்து வருடகாலம் நெருங்கிய வேளையில் 1997 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது.
அதுவரையில்
( 1972 – 1997 ) எழுதியவற்றை
திரும்பிப் பார்த்தேன். இரண்டு கதைத் தொகுதிகளும் ( சுமையின் பங்காளிகள் – சமாந்தரங்கள் ) ஒரு பயண
இலக்கியம் ( சமதர்மப்பூங்காவில் ) ஒரு கட்டுரை நூல் ( நெஞ்சில் நிலைத்த
நெஞ்சங்கள் ) ஆகியன மாத்திரமே வெளியிட்டிருந்தேன்.
மற்றும் ஒரு
தொகுதிக்கு தேவைப்பட்ட சிறுகதைகள் இருந்தன. அவை இலங்கை வீரகேசரி , தினகரன், மல்லிகை,
பிரான்ஸ் பாரிஸ் ஈழநாடு, ஓசை , லண்டன் ஈழமுரசு, அவுஸ்திரேலியா மரபு , அக்கினிக்குஞ்சு, கலப்பை
ஆகியனவற்றில் வெளியாகியிருந்தன.
அத்துடன் பிரான்ஸிலிருந்து
வெளியான தமிழன் இதழிலும் பாட்டி சொன்ன கதைகள் என்ற தொடரும் வெளிவந்திருந்தது. இதனையும் மற்றும் ஒரு சிறுகதைத் தொகுதியையும் வெளியிடலாம்
என்ற எண்ணம் மனதில் துளிர்த்தது.
பிரான்ஸிலிருந்து
அப்போது பாரிஸ் ஈழநாடு வெளியிட்டுக்கொண்டிருந்த நண்பர் குகநாதனிடம் எனது விருப்பத்தை
தெரிவித்தேன். அவர் கதைகளை தொகுத்து, சென்னையில்
ஒரு பதிப்பாளருக்கு அனுப்பச்சொன்னார். தொகுதிக்கு இயந்திரங்கள் என்ற தலைப்பினை
வைத்து தபாலில் அந்தப்பொதியை தமிழகத்திற்கு அனுப்பினேன்.
பாட்டி சொன்ன
கதைகள் தொகுப்பினை மல்லிகை பந்தல் வெளியீடாக்கும் எண்ணத்தில் மல்லிகை ஆசிரியர் நண்பர்
டொமினிக் ஜீவாவுக்கு அனுப்பினேன்.
அத்துடன்,
அதுவரையில் வெளியான நான்கு நூல்கள் பற்றியும் இலக்கிய விமர்சகர்கள் இதழ்கள், ஊடகங்களில்
எழுதியிருந்த விமர்சனங்களையும் தொகுத்து, மெல்பன்
மரபு ஆசிரியர் நண்பர் விமல் அரவிந்தனிடம் சேர்ப்பித்து, கணினியில் பதிவேற்றி பக்கம் வடிவமைத்து தருமாறு கோரியிருந்தேன்.
இறுதியில்
குறிப்பிட்ட பாட்டி சொன்ன கதைகள் தொகுப்பும், முருகபூபதியின் படைப்புகள் என்ற விமர்சனத்
தொகுப்பும் அச்சாகி வெளிவந்தன.
தமிழகத்திற்கு
அனுப்பப்பட்ட கதைகள் அச்சாகவில்லை. கதைகளும் தொலைந்துவிட்டது. அதற்காக நான் வருந்தவில்லை.
தனிப்பட்ட
வாழ்க்கையில், பொது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை சந்தித்து, கடந்து வந்து பக்குவப்பட்ட அனுபவத்துடன், “ ஒரு பஸ் போனால் மற்றும் ஒரு பஸ் வரும் “ என்று என்னை நானே தேற்றிக்கொள்ளும் இயல்பும் இன்றளவும் என்னிடம் குடியிருக்கிறது.
அதனால்தான்,
தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வில், எழுத்துலக
வாழ்வில் என்னோடு இணைந்து வந்தவர்கள் முரண்பட்டுக்கொண்டு விட்டுச்சென்றாலும், சற்றுக்கவலையும் ஏமாற்றமும் வந்தாலும், பின்னர்
சுதாரித்துக்கொண்டு எழுந்துவிடுவேன்.
வெற்றிடம்
வந்தால், அவ்விடத்திற்கு நிரப்பும் வேலையை
கச்சிதமாகச் செய்துவிடும் பழக்கத்தை பாடசாலையில் ஆங்கிலப்பாடத்தில் கற்றுக்கொண்டேன்.
அந்தப்பாடத்தை
Fill in the blanks என்பார்கள்.
தமிழிலும் அத்தகைய பாடங்கள் இருந்தன. இடைவெளி நிரப்பும் பாடம் எனக்கு மிகவும்
பிடித்தமானது.