சரபம்
சமீபகாலமாக த்ரில்லர் படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வருகின்றன. வளர்ந்து வரும் நட்சத்திரங்களையோ, புதுமுக நட்சத்திரங்களையோ வைத்து அம்மாதிரியான படங்களை குறைந்த செலவில் எடுப்பது வழக்கமாகி வருகிறது. இப்படி வெளிவந்த ஒரு சில படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து பலரும் இம்மாதிரியான படங்களை உருவாக்கி வருகிறார்கள். அப்படி வெளிவந்துள்ள படம்தான் இந்த 'சரபம்'. நகைச்சுவை நடிகர் அனுமோகனின் மகன் அருண் மோகன் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
'சரபம்' என்பது புராண காலத்தில் இருந்த விலங்குகளில் ஒன்றாம். பாதி உடல் பறவையாகவும், மீதி உடல் சிங்கமாகவும் இருக்குமாம். அன்பு கொண்ட நெஞ்சத்துடனும், அதே நேரம் ஆக்ரோஷமான உணர்வுடனும் இருப்பதுதான் இந்த மிருகத்தின் தனித் தன்மையாம். அப்படிப் பார்க்கப் போனால் இந்தப் படத்தில் 'சரபம்' ஆக இருப்பது படத்தின் நாயகி 'சலோனி லுத்ரா'தான். இவரைச் சுற்றித்தான் படத்தின் மொத்த கதையும் நகர்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நாயகியை மையப்படுத்தி வந்துள்ள கதை.
தமிழ் சினிமா, அடுத்த கட்டத்திற்குப் பயணிக்கிறது என்கிறார்கள். ஆமாம், இந்தப் படத்தைப் பார்த்தால் அதைக் கண்டிப்பாகப் புரிந்து கொள்ளலாம். படத்தின் நாயகியான சலோனி அறிமுகக் காட்சியிலேயே போதை மருந்தை உட் கொள்கிறார். அதன் பின் அடிக்கடி சிகரெட் பிடிக்கவும் செய்கிறார். அட, தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்குப் பயணிக்கிறது. ஒரு பக்கம் நாயகர்கள் படத்தில் புகை பிடிப்பதை வன்மையாகக் கண்டிக்கும் சமூக அமைப்புகள் இப்படிப்பட்ட காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெறுவதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். வித்தியாசம் என்ற பெயரில் இன்றைய தலைமுறை படைப்பாளிகள் தவறான பாதையில் போவதாகவே நமக்குப்படுகிறது.
ஆர்க்கிடெக்ட் ஆக இருக்கும் நவீன் சந்திரா ஒரு புதிய தீம் பார்க்கை வடிவமைத்து பிரபல பிசினஸ்மேனான நரேனின் கம்பெனிக்காக அது பற்றிய திட்டத்தை சமர்ப்பிக்கிறார். ஆனால், அப்போது நரேன், நவீன் சந்திராவை அவமானப்படுத்தி, அந்த திட்டமே வேண்டாமென்று சொல்லி விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் நவீன், நரேனை எதையாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறார். குடிபோதையில் அவர் வீட்டருகே சென்று எதையாவது செய்யலாம் என்று நினைப்பவர், வீட்டை விட்டு எகிறி குதித்து வரும் நரேனின் மகள் சலோனியைப் பார்த்து விடுகிறார். அவரைப் பின் தொடர்ந்து சென்று பேச்சுக் கொடுத்து அவர் வீட்டை விட்டு ஏன் வெளியேறினார் எனக் கேட்கிறார். அப்பா நரேன் என்றாலே பிடிக்காது என சலோனி காரணத்தைக் கூற, இருவருக்கும் அந்த சமயத்தில் பொதுவான எதிரியாக இருக்கும் நரேனை எதிர்க்க முடிவெடுக்கிறார்கள். அந்த எதிர்ப்பின் வடிவம்தான் கடத்தல் நாடகம். தன்னைக் கடத்தி நாகடமாடுவதின் மூலம் அப்பாவிடமிருந்து பணம் பறிக்கலாம் என சலோனி ஐடியா கொடுக்க, இருவரும் அதை செயல்படுத்துகிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி பணம் கிடைத்ததா, அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.
'பிரம்மன்' படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த நவீன் சந்திராதான் இந்த படத்தின் நாயகன். ஆறடி உயரத்தில் அப்பாவித்தனமான முகத்துடன் விக்ரம் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார். ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரம் என்றால் இப்படி நடித்திருக்கிறார், அப்படி நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். அப்படி எதுவுமில்லாமல் ஒரு சராசரியான படித்த இளைஞன் கதாபாத்திரத்தில் நடிக்க பெரும் மெனக்கெடல் தேவையில்லை. அப்படியே வந்து போனாலே போதும், அதைத்தான் செய்திருக்கிறார் நவீன். அதற்குக் காரணம் இவருடைய கதாபாத்திரத்தின் வடிவமைப்புதான். ஆரம்பத்தில்ல ஹீரோயிசமான கதாபாத்திரம் போல் காட்டிவிட்டு, போகப் போக அவருடைய கதாபாத்திரத்தை 'டம்மி'யாக்கி விட்டார்கள். போதாதற்கு , ஒரு காட்சியில், “நான் சரியான எதிரி கூட மோதலன்னு நினைக்கிறேன்” என நரேன் ஒரு வசனம் பேசி, ஹீரோவின் கதாபாத்திரத்தை அப்படியே காலி செய்து விடுகிறார். திரும்பவும் இவர் வெகுண்டெழுந்து அடுத்த கடத்தலைச் செய்ய, கடைசியில் கிளைமாக்சில் கை கட்டி நின்று வேடிக்கைப் பார்க்கிறார். அப்படி ஒரு முரண்பாடான கதாபாத்திரம் ஹீரோவின் கதாபாத்திரம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் நவீன்...'சிவப்பு' படத்திற்காக காத்திருப்போம்.
போதை மருந்து உட் கொள்ளுதல், சிகரெட் பிடித்தல் ஆகிய காட்சிகளுக்கு நடிக்க சம்மதித்ததால்தான் சலோனி லுதராவை நாயகியாக்கியுள்ளார்கள் போல. சும்மா சொல்லக் கூடாது, அவரும் அந்த தெனாவட்டு, திமிர், அலட்சியம் இவற்றை அப்படியே அட்சர சுத்தமாக செய்திருக்கிறார். படத்தில் சலோனி 'டபுள் ஆக்ஷன்' என்பது எதிர்பாராத திருப்பம் என்றாலும், அதை திருப்பத்திற்கு மேல் திருப்பமாகச் சொல்லி ஒரு கட்டத்தில் குழப்பத்தையே ஏற்படுத்துகிறார்கள். இவர் அப்பாவை எதிர்ப்பதற்கான காரணங்கள் வலுவாகச் சொல்லப்படவில்லை. அப்படி ஒரு போதை பழக்கத்திற்கு ஆளாகவும் என்ன காரணம் என்பது சொல்லப்படாதது அந்த கதாபாத்திரம் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. படமே இவரைச் சுற்றி நகரும் போது, இவருக்குக் கொடுக்க வேண்டிய அறிமுகக் காட்சியை வைக்காமல், ஹீரோவுக்கு ஒரு பில்டப் கொடுத்து அறிமுகக் காட்சியை வைத்திருக்கிறார்கள்.
அப்பாவாகவும், வில்லனாகவும் 'ஆடுகளம்' நரேன். சாதாரணமாகவே இவரது குரல் கரகரவென இருக்கும். இந்தப் படத்தில் இன்னும் கரகரவென 'கம்மி' குரலில் பேச வைத்திருக்கிறார்கள். மிகவும் பாசமான அப்பா போல என நாம் எதிர்பார்த்தால் இவருக்கும் ஒரு ட்விஸ்ட் வைத்து சரியான வில்லன் எனக் காட்டுவது எதிர்பாராத அதிர்ச்சி.
படத்திற்கு இசை பிரிட்டோ மைக்கேல். எங்கே சைலண்ட்டாக விட்டால் படத்தைப் பற்றி ரசிகர்கள் கமெண்ட் அடித்து விடுவார்களோ என இடைவிடாமல் வாசித்துத் தள்ளியிருக்கிறார். அதிலும் கடைசி 20 நிமிடம் துளி கூட இடைவெளியில்லாமல் இசைத்துத் தள்ளி காதைக் கிழித்திருக்கிறார். பின்னணி இசை என்றால் என்ன என்பதை புதியவர்களுக்கு யாராவது புரிய வைத்தால் நன்றாக இருக்கும்.
படத்தின் மையக் கரு ஆள் மாறாட்டம். கதைப்படி சந்திரசேகரின் (நரேன்) இரண்டு மகள்களில் ஒருவரான ஸ்ருதி நல்லவர், சஞ்சனா கெட்டவர். ஆனால் இறந்து போன ஒரு பெண்ணின் கழுத்தில் இருக்கும் 'சரபம்' டாட்டூவை வைத்து இறந்தது ஸ்ருதியா, சஞ்சனாவா என்று அப்பாவுக்கும், காவல் துறைக்கும் எப்படி கண்டுபிடிக்க முடியாமல் போனது ?.
'சரபம்' - ''சர..சர..சறுக்கல்...!!''
நன்றி தினமலர் சினிமா