தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

கந்தசஷ்டிச் சிந்தனை

 .   


                     

      மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. அவுஸ்திரேலியா

 (  4 ம் நாள் )

திருப்புகழ் பாடச் வைத்தவன் முருகன் !

திருப்புகழ் பாடச் வைத்தவன் முருகன்
திருந்திட அருணகிரியைச் செய்தவன் முருகன்
திருப்புகழ் பாடினால் திருந்திடும் நாக்கு
திருப்புகழ் பாடுவோம் சிறந்திடும் வாழ்வு           


மாம்பழம் முருகனை மாற்றியே விட்டது
மாம்பழம் அவனே சுவையும் அவனே
கதையினக் கேட்டுக் கலங்கிட வேண்டாம்
எல்லாம் இறையின் தத்துவம் ஆகும்

கணபதி கந்தனின் சோதரன் ஆவார்
கந்தனின் காதலில் கணபதி உதவினார்
கதையினைக் கதையாய் கேட்டிட வேண்டும்
விமர்சனம் செய்வது வீண்விளை வாகும் !



                    ( 5 ம் நாள் )

அரனின் மைந்தன் ஆலயம் இருப்பார் !

        மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. அவுஸ்திரேலியா



கந்த புராணம் கலாசாரம் ஆனது
நொந்திடு மனத்துக்கு ஒளடதம் ஆனது
ஆலயந் தோறும் கந்தனின் புராணம்
படிப்பது என்பது பக்தியின் நிலையே

ஆறு நாட்களும் ஆறு முகனை
சோறு தண்ணி தவிர்தே நிற்பார்
வீர வேலன் வெற்றித் திருமகன் 
பாதம் பணிந்து நோற்பார் விரதம் 

இளையோர் முதியோர் யாவரும் இணைவார்
சளையா திருந்து விரதம் பிடிப்பார்
ஆறு நாளையும் பேறாய் எண்ணி
அரனின் மைந்தன் ஆலயம் இருப்பார் !



                      ( 6 ம் நாள் )

அப்பன் முருகன் அருளுவான் எமக்கு !

        மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. அவுஸ்திரேலியா


ஒருமுகம் எங்களை உருகிட வைக்கும்
மறுமுகம் எங்களை மயங்கிடச் செய்யும்
அறுமுகம் இணைந்து ஆனந்தம் கொடுக்கும்
அப்பன் முருகன் அருளுவான் எமக்கு

வேலன் என்றால் வினைகள் ஓடும்
காலனும் அருகே வந்திட மாட்டான்
ஆலமாய் இருக்கும் அனைத்தையும் போக்குவான்
அழகன் முருகன் அடியினைப் பரவுவோம்

கனியும் அவனே சுவையும் அவனே
காயும் அவனே மலரும் அவனே
அனைத்தும் ஆகி இருப்பவன் முருகன்
அவனை நினைத்தால் ஆனந்தம் பெருகும்  !

JUDE SUGI யின் "கண்ணம்மா" ஈழத்து தமிழ்த் திரைப் படத்தின் பாடல் வெளியீடு

 .

JUDE SuGI யின் "கண்ணம்மா" ஈழத்து தமிழ்த் திரைப் படத்தின் பாடல் வெளியீடு

24.10.2025 அன்று இடம்பெற்றுள்ளது. பிரஷாந்த் கிருஷ்ணபிள்ளையின் அருமையான இசையிலும், றொபின் றொனால்டு அவர்களின் வரிகளிலும் அமைந்த பாடல்கள் யூட் சுஜியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம். அனைவரும் அறிந்த ஈழத்தின் மூத்த நடிகர் மகேந்திர சிங்கம் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ள திரைப்படம். மிக விரைவில்  வெள்ளித்திரையில் காணலாம்.  கலைஞர்களை தமிழ்முரசுஅவுஸ்திரேலியா (http://www.tamilmurasuaustralia.com) வாழ்த்துகிறது. கீழே உள்ள YOUTUBE இல் பாடல்களை கேட்டு மகிழுங்கள். 




குருவிக்கூட்டை திரும்பிப் பார்த்தல் - நாவல் விமர்சனம் - கே.எஸ்.சுதாகர்

 .

ஜெர்மனியில் வசிக்கும் கெளசி (சந்திரகெளரி சிவபாலன்) அவர்களின் நாவல் `குருவிக்கூடு’. பொதுவாக நாவல்களைப் படிக்கும்போது முன்னுரை அணிந்துரை என்னுரைகளை இறுதியில்தான் படிப்பேன். இந்த நாவலையும் அப்படித்தான் வாசிக்கத் தொடங்கினேன். வாசிக்கத் தொடங்கிய ஆரம்பப் பக்கங்களிலேயே இது ஒரு கற்பனை நாவல் அல்ல என்பதையும், நாவல் ஆசிரியரும் சிநேகாவும் ஒருவரே என்பதையும் புரிந்து கொண்டேன்.


இலங்கை வாழ்க்கை, ஜெர்மனிய வாழ்க்கை என இந்த நாவலை இரண்டு பாகங்களாகப் பார்க்கலாம். இலங்கையில் இருக்கும் ஏறாவூர், பேராதனை, நீர்கொழும்பு என்ற இடங்களில் இருந்து ஆரம்பித்து, பின்னர் ஜேர்மனியை நோக்கி நாவல் பயணிக்கின்றது.

முதலில் நாவலின் சுருக்கத்தைப் பார்க்கலாம். கந்தசாமி வைரவள்ளி தம்பதிகளின் மகளான பார்வதியை பரமசிவம் மணந்து கொள்கின்றார். அவர்களின் நான்கு பிள்ளைகளான சிவம், சிநேகா, கீரன், சிந்து என்பவர்களைச் சுற்றி கதை ஆரம்பத்தில் பின்னப்பட்டுள்ளது. தாத்தா பாட்டியுடன் வாழ்வதற்கு பலருக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இங்கே சிநேகாவிற்கு பாட்டி வாய்த்துவிடுகின்றது. பாட்டி வைரவள்ளி மட்பாண்டங்கள் செய்தல், கை வைத்தியம், முறிவு வைத்தியம், பிள்ளைப்பெற்று பார்த்தல் போன்றவற்றில் கை தேர்ந்தவளாக இருக்கின்றார்.

சிநேகா பள்ளி வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, உயர்கல்வி பயில்வதற்காக பேராதனைப் பல்கலைக்கழகம் செல்லும்போது, நானும் கூடவே சென்று விடுவது போன்ற உணர்வு மேலிட்டது. நானும் அங்கே நான்கு வருடங்கள் தங்கிப் படித்தவன் என்பதால், ஆசிரியர் கூறும் இடங்கள், காட்சிகள், சம்பவங்கள், கல்வி முறைகள், மொழி, பகிடிவதை எல்லாம் பழக்கப்பட்டவையாகவும் மீளவும் ஞாபகத்திற்கும் வந்தன. சிநேகா விஜேவர்த்தன விடுதியில் தங்கியிருந்து கலைப்பீடத்தில் கல்வி பயில்கின்றார். அந்தக் காலங்களில் சத்யா, தியான், ஈழவாணி, சசித்ரா, சிவராஜேந்திரம்,ஆயிஷா போன்றோர் நண்பர்களாகக் கிடைக்கின்றார்கள். கூடவே பேராசிரியர்கள் பூலோகசிங்கம், தில்லைநாதன், சதாசிவம், அருணாசலம் போன்றவர்களும் கலாநிதி துரை மனோகரன், திருமதி தியாகராஜா போன்றோர் விரிவுரையாளர்கள் ஆகின்றார்கள். உண்மையைச் சொல்வதென்றால் அந்தச் சில அத்தியாயங்களை வாசித்தபோது நானும் அதில் கரைந்துவிட்டேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் இந்த நாவலை வாசிக்கும்போது அவர்கள் இன்னொரு உணர்வு நிலைக்குச் செல்வார்கள் என்பது நிச்சயம். பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர்ந்து பிலிமத்தலாவ என்னுமிடத்தில் ஆசிரியர் பயிற்சி மேற்கொள்கின்றார். தொடர்ந்து வாழைச்சேனையில் முதல் ஆசிரியர் நியமனம், அங்கு பெறும் அனுபவங்கள், சகோதரப் படுகொலைகள். அதனைத் தொடர்ந்து தனது பிறந்த ஊரான ஏறாவூரில் சில மாதங்கள் பணியில் இருந்துவிட்டு, இஸ்லாமியர்களின் தாக்குதலால் நீர்கொழும்புக்குப் புலம் பெயர்கின்றார். நீர்கொழும்பில் விஜயரெத்தினம் தமிழ் மகாவித்தியாலத்தில் படிப்பிக்கும்போது, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பயின்று இரண்டாவது பட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றார்.

சிநேகா தனது ஆசிரியத் தொழில் நிமித்தம் வாழ்ந்த இடங்கள் எல்லாம் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நீர்கொழும்பில் இருக்கும் காலங்களிலே ஜெர்மனியில் இருக்கும் அரவிந்தனுடன் திருமணம் என்ற பெரும் திருப்பம் ஏற்படுகின்றது. கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட சிநேகா, வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட அரவிந்தனுடன் இணைந்து கொள்கின்றார். அக்காலப் பகுதியில் சிநேகா தனது தாயையும் இழக்கின்றார். அங்கிருந்து அவருக்கொரு புதிய வாழ்வு ஜேர்மனியில் தொடங்குகின்றது.


திருவருள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


.


தமிழ் சினிமாத் துறையில் முருகப் பெருமானின் தீவிர பக்தனாக அல்ல , முரட்டு பக்தனாக திகழ்ந்தவர் தயாரிப்பாளர் சாண்டோ எம் . எம் . ஏ . சின்னப்பா தேவர். முருகனிடம் சண்டை போட்டு, பிடிவாதம் பிடித்து, வாதாடி காரியம் சாதிப்பது இவரது வாடிக்கை. அப்படிப் பட்ட தேவர் கந்தனின் பெருமைகளை பறை சாற்றும் விதமாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தயாரித்தப் படம் திருவருள்! 

ஏற்கனவே துணைவன், தெய்வம் என்று இரண்டு பக்திப் படங்களை எடுத்து வெற்றி கண்டவர் அதே பார்முலாவை பின் பற்றி திருவருள் படத்தை தயாரித்தார். இதற்காக கதையைத் தேடி அவர் அலையவில்லை . தன்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்களை வைத்தே கதை பண்ணி விட்டார். 

 சாதாரண மில் தொழிலாளியாக இருந்து, ஸ்டண்ட் நடிகராகி, படத் தயாரிப்பாளராகி வெற்றி கண்ட தேவர் மருதமலை முருகன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டு அறப் பணிகளுக்கு அள்ளி அள்ளி வழங்கினார். இந்த விஷயத்தில் அவர் எவர் பேச்சையும் கேட்பதில்லை. அப்படி வாழ்ந்த தேவர் இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் கதையை உருவாக்கி விட்டார். 


சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

26-10-2025 Sun: ஈழத் தமிழர் கழகம் கலைக்கதம்பம் 2025 நிகழ்வு 6.00 PM at Redgum Centre, Wentworthville

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

30-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

இலங்கை செய்திகள்

 .

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்

- சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ

முத்து நகர் விவசாயிகள் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம்

செவ்வந்தியுடன் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை - சமல் ராஜபக்ச
திட்டவட்டம்

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 மாலுமிகள் நாடு திரும்பினர்

மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது

news 01

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்
- சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ 




நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்
என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார்.

பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள
கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும்
பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும்
கருத்து தெரிவிக்கையில்,
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் பதிவு
செய்வது அவசியமாகும்.

அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும்
சமூக அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை ஒதுக்கி வைப்பதால் அவர்கள் மேலும்
பாதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைப் பாலியல் ஆரோக்கியம் குறித்த
விழிப்புணர்வு இல்லாததால் பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி
முறைமையை விரிவாக்குவது அவசியமாகும்.

95 சதவீதமான பாலியல் தொழிலாளர்கள் தற்போது ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான
முறைகளைப் பயன்படுத்தி வருவதால் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களும்
கணிசமாக குறைவடையும் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ
மேலும் தெரிவித்தார்.