ஞாபகார்த்த பிரார்த்தனைக் கூட்டம் 20.07.2019

.
 திருமதி தேவகி ராதாகிருஷ்ணன் 
பிறப்பு  16.05.1967 - இறப்பு - 01.07.2019


யாழ் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Springfield Lakes, Queensland டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவகி ராதாகிருஷ்ணன் அவர்கள் 01-07-2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் பத்மராணி, காலஞ்சென்ற குணரட்ணம் தம்பதிகளின் பாசம்மிகு மகளும், ராதாகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரிகா, குமரன் அவர்களின் பாசம்மிகு அம்மாவும், ராகுலன் அவர்களின் அன்பு மாமியாரும், அரனின் பாசம்மிகு பேரனும்,

திருக்குமரன், வாசுகி, சுதர்சன், சாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

20-07-2019 சனிக்கிழமை அன்று அன்னாரின் ஞாபகார்த்த கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இடம் : Magnolia Chapel, Macquarie Park Crematorium, Plassey Rd, North Ryde, NSW
நேரம் : 1 pm

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

மயூரிகா +61 417 873 525
குமரன்  +61 474 811 783
திருக்குமரன் +61 408 903 589



ஆனந்தம் அடைவோம் நாளும் ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா

உறவுகள் வாழ்வில் என்றும் உணர்வுடன் கலக்க வேண்டும்                         
அளவிலா அன்பை நாளும் அள்ளியே வழங்க வேண்டும்
தெளிவுடன் என்றும் வாழ வழியினை காட்ட வேண்டும் 
நலமுடன் இருக்க வேண்டில் நாடுவோம் நல்லுறவை என்றும் !

பற்பல உறவை எங்கள் பண்பாட்டில் காணு கின்றோம்
பாட்டியாய் தாத்தா என்று பரம்பரை வளர்ந்தே போகும்
பெரியம்மா சித்தி அத்தை பெரியப்பா மாமா மச்சான் 
அன்புடை அக்கா அண்ணா அருகினில் வந்தே நிற்பார் !

ஆசையாய் கொஞ்சும் அம்மா ஆவலாய் அணைக்கும் அப்பா
கோபமாய் கிள்ளும் மாமி கொஞ்சியே பேசும் மச்சாள்
பாசமாய் பார்க்கும் தங்கை பரிவுடன் அணைக்கும் பாட்டி
நேசமாய் நிறையும் உறவால் நெஞ்சமே நிறையும் வாழ்க்கை !


இத்தனை உறவைக் காட்டும் எங்களின் பண்பாட்டைப் பார்க்க
எத்தனை பெருமை என்று எண்ணி நாம் பார்ப்பதில்லை
தமிழிலே நிறைந்து நிற்கும் அமிழ்தான உறவை நாங்கள்
அகமதில் எண்ணி எண்ணி ஆனந்தம் அடைவோம் நாளும் !




















அஞ்சலிக்குறிப்பு: சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் கடந்த 11 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார் மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள் - முருகபூபதி


தமிழாராய்ச்சிக்கென உலகப்பொது நிறுவனம் அமைத்தவர் அமரர் தனிநாயகம் அடிகளார் எனச்சொல்வோம்.   இன்னலுற்ற தமிழ் சமூகத்திற்காக அயராது பாடுபட்டவர்கள் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எனச்சொன்னால் அது  அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களையே குறிக்கும்.
கடந்த 11   ஆம் திகதி மாலை கொழும்பில் மறைந்தார் என்ற துயரச்செய்தி வந்தது.
இலங்கை வடபுலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக பங்குத்தந்தையாக ஆன்மீக பணிகளை முன்னெடுத்துவந்தவர்.
அதேசமயம், தான் வாழ்ந்த பிரதேசத்து மக்களின் நலன்கள் குறித்து அக்கறையோடு செயற்பட்டவர்.
இலங்கையில் தமிழ் சமூகத்திற்கும்  தமிழர்தம் உரிமைக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின்  வாழ்வாதாரத்திற்கும் சமூக நீதிக்கும் இனங்களின் நல்லிணக்கத்திற்கும் அயராமல் பாடுபட்டவர்களின் வரிசையில் பல கத்தோலிக்க அருட்தந்தைகளை நாம் காணமுடியும்.
தவத்திரு தனிநாயகம், மேரி பஸ்டியன், ஆபரணம் சிங்கராயர், அன்டனி ஜோன் அழகரசன், சந்திரா பெர்ணான்டோ உட்பட பலரை நாம் இனம்காண்பிக்கமுடியும்.
எனினும் இவர்களைப்பற்றி இதுவரையில் முழுமையாக எவரும் ஆவணப்படுத்தவில்லை. தனிநாயகம் அடிகளார் குறித்து பல நூல்களும் ஆவணப்படங்களும் வெளியாகியுள்ளன.
இலங்கையில் மக்கள் சேவையே மகேசன் சேவையென வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர்.
இவர் குருத்துவப்பட்டம் பெற்று 49 ஆண்டுகளாகின்றன. பொன்விழா ஆண்டை நெருங்கும் வேளையில் விடைபெற்றுவிட்டார்.
போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் முல்லைத்தீவு   வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரும் ஒருவர்.
அம்பலவன்பொக்கணை, வலைஞர் மடம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரின் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் புகலிடம் பெற்று வசிக்கின்றனர்.
அவர் நினைத்திருந்தால், அந்த போர் நெருக்குவாரத்திலிருந்து விடுபட்டு, தமது உறவுகள் வாழும் தேசங்களிற்கு வந்து இங்கிருக்கும் தேவாலயங்களில் ஆன்மீகப்பணியை தொடர்ந்திருக்கமுடியும்.
அவர் தமிழர் புகலிட நாடுகளுக்கு வந்தார். ஆனால், நிரந்தரமாக தங்குவதற்கு வரவில்லை. அவர் மெல்பனுக்கு வரும் சந்தர்ப்பங்களில் மக்களை சந்தித்து, தனது பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளையே சேகரித்து எடுத்துச்சென்று வழங்கினார்.
2004 ஆம் ஆண்டு இறுதியில் சுனாமி கடற்கோள் அநர்த்தத்தின்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்கள் ஊடாகவே நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தோம்.
அவர் மெல்பன் வந்த சந்தர்ப்பங்களிலும் சுனாமி வந்த காலத்தில் கொழும்பில் அவர் தங்கியிருந்த குருமனையிலும் சந்தித்து பேசியிருக்கின்றேன். மக்களின் பிரச்சினைகளே அவரது பேசுபொருளாகவிருக்கும்.
அவர்  புனித இறைபணிக்கு அப்பால்  தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கள் குறித்தே சிந்தித்தார்.

பயணியின் பார்வையில் - அங்கம் 14 வடக்கில் பதினைந்து தமிழ் அரசியல் கட்சிகள் !? அதிகாரம் கேட்கும் தமிழ் அரசியல் கட்சிகளும் வாழ்வாதாரம் கேட்கும் பாதிக்கப்பட்ட மக்களும் - முருகபூபதி


இலங்கையில் சில முக்கியமான தேர்தல்கள் விரைவில் வரப்போவதாகவும், தேர்தல் ஆணையாளர் தமது பதவியை விலக்கிக்கொள்ள விரும்புவதாகவும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.

இந்தப்பின்னணியிலிருந்து எனது பயணியின் பார்வையில் தொடரில் - வடக்கிலிருந்து  விடைபெற்ற அந்தத் தருணம் பற்றி சொல்லிக்கொண்டு , கிழக்கிற்கு சென்ற பயணத்தை அடுத்த அங்கத்தில் பதிவுசெய்கின்றேன்.

அன்று யாழ். நல்லூர் நாவலர் மண்டபத்தில் எனது நூல்களின் அறிமுக அரங்கு முடிந்ததும், நண்பர் கருணாகரன் கிளிநொச்சிக்கு அழைத்துச்சென்று தனது இல்லத்தில் தங்கவைத்தார்.

அவரது இல்லத்தை , கலை இலக்கிய சங்கமத்திற்கான தளம் என்றும் சொல்லலாம். அத்துடன் வெளிநாடுகளிலிருந்து வரும் கலை இலக்கியவாதிகளுக்கு   ட்ரான்ஸிட்  சந்திப்பு எனவும் கூறலாம்.
கருணாகரனும் அவரது துணைவியாரும் வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பார்கள். இலங்கையில் எனக்கு மற்றும் ஒரு இல்லம் என்றால், அது கருணாகரனின் அந்த இல்லம்தான் என்றும் உரிமையுடன் சொல்லமுடியும். அவர் இதற்கு முன்னரும் அந்த இல்லத்திலும்  கிளிநொச்சியிலும் எனக்காக சந்திப்புகளை நடத்தியவர். எனக்கு மட்டுமல்ல என்னைப்போன்று வரும்  கலை இலக்கியவாதிகளுக்கும் அவர் அவ்வாறே நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர். அதனால் அவரது இல்லத்திற்கு வரும் கலை இலக்கியவாதிகள் நன்றிகூறக்கடமைப்பட்டவர்கள்!

இம்முறை பயணம் பல அவசரப்பணிகளுடன் நிறைந்திருந்தமையால்,  கிளிநொச்சியில் சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை. மறுநாள் காலை யாழ்ப்பாணத்திலிருந்து எமது கல்வி நிதியத்தின் தொடர்பாடல் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலைய அலுவலர்கள் ஒரு வாகனத்தில்  முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு என்னை அழைத்துச்செல்லவந்தனர்.
அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்து யாழ். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற  நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் அவர்களையும் அழைத்துவந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் வடக்கிற்கான எமது தொடர்பாளர்கள் பற்றி சில வார்த்தைகள் சொல்லத்தான் வேண்டும்.
அவர்கள் அனைவரும் மனிதாபிமானத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இயல்பினர்.
அவர்களிடத்தில் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உதவிகளை உரிய முறையில் பாதிக்கப்பட்டவர்களிடம் சேர்ப்பித்து, பெறுபேறுகளை தெரிவிப்பவர்கள்.
 ஊடகங்களில் அறிக்கை விடுத்து தங்களை முன்னிலைப்படுத்தாதவர்கள்.

முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மாநாடு ஆய்வுக்கட்டுரைகள் இறுதி நாள் 15/07/2019


ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் - இறுதிப் போட்டி


கிண்ணம் யாருக்கு? இங்கிலாந்து - நியூஸிலாந்து இன்று மோதல்!

44 வருடகால கனவை சூப்பர் ஓவரில் நனவாக்கிய இங்கிலாந்து !

அன்று பந்து வீச்சில் கோட்டை விட்ட பென்ஸ்டோக் இன்று துடுப்பாட்டத்தில் மிரட்டினார்

எவ்வாறு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து ; பவுண்டரிகளே தீர்மானித்தன !


கிண்ணம் யாருக்கு? இங்கிலாந்து - நியூஸிலாந்து இன்று மோதல்!
14/07/2019 முதலாவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019 அரையிறுதி ஆட்டங்கள்


இந்தியாவின் வெற்றிக்கு 240 ஓட்டங்கள்

சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து

தடுமாறிய ஆஸி.யை மீட்டெடுத்த ஸ்மித்

27 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து


இந்தியாவின் வெற்றிக்கு 240 ஓட்டங்கள்

10/07/2019 இந்திய அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 239 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைச் செய்திகள்


பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல் ; முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கைது!

விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட பத்திரிகையை விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது !

3 வீடுகளுக்குள் புகுந்த மர்ம கும்பல் அடாவடியில் ஈடுபட்டுவிட்டு தப்பியோட்டம்

யாழ். நகரில் அமைக்கப்பட்ட  5ஜி கம்பங்கள் குறித்து யாழ் முதல்வர் வெளியிட்டுள்ள புதிய தகவல் 

வைத்தியர் ஷாபிக்கு விளக்கமறியல்

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்

கன்னியா பிள்ளையார் ஆலயம் மீண்டும் உடைப்பு

வைத்தியர் ஷாபி விவகாரம்: நீதிமன்றில் நடந்தது என்ன?

திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள்..? : வாவெட்டி மலைக்கு சென்ற பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

 "வைத்தியர் ஷாபி விவகாரம் ;  முறைப்பாடளித்த பெண்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதில் சிக்கல் இல்லை"

யாழில் தனியார் காணியில்  விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் இராணுவத்தினர்

மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் ;  மக்கள் விசனம்

விமல் வீரவன்ச கொக்கிளாய் விகாரை , பழைய செம்மலை நீராவியடிக்கு இரகசிய விஜயம் 

பொது மக்களின் காணிகளை அபகரித்துள்ள வன இலாகா ; மக்கள் விசனம்



பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல் ; முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கைது!

08/07/2019 சிங்களப் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் உப்பாலி தென்­னக்கோன் மற்றும் அவ­ரது மனைவி மீது  தாக்­குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

உலகச் செய்திகள்


சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்

சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு

பப்புவா நியுகினியில் கர்ப்பிணிகள் உட்பட 25 பேர் படுகொலை-உடல்கள் துண்டுதுண்டாக சிதைப்பு

சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு முடிவு - ஹொங்கொங் தலைவர் அறிவிப்பு

ரஷ்­யா­வையும் சீனாவையும் இணைக்கும் 1,250 மைல் நீள நெடுஞ்­சாலை

இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற ஈரானிய படகுகள்- கடும் எச்சரிக்கை விடுத்த போர்க்கப்பல்


சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்

09/07/2019 தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில்  உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையிலுள்ளது என அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. 
ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 

பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் (1969 – 2019) பகுதி 3 – ச. சுந்தரதாஸ்

கன்னிப்பெண்
எம்.ஜி.ஆர் நாடக மன்ற நிர்வாகியாகவும் பின்னர் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யாவின் பெயரில் தனது பட நிறுவனத்தை தொடங்கி எம் ஜி ஆரின் நடிப்பில் தெய்வததாய் நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்ணன் என் காதலன் ஆகிய படங்களைத் தயாரித்தவர்.

1969ம் ஆண்டு வீரப்பனுக்கு எம்.ஜி.ஆரின் கால்ஷீட்
கிட்டவில்லை. எனவே சத்யா பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தை ஆரம்பித்து தயாரித்தப் படம் தான் கன்னிப் பெண்.

பிரபல இளம் நடிகராக திரையில் தோன்றிக் கொண்டிருந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்தான் பட்திற்கு ஹீரோ! இவருடன் வாணிஸ்ரீ லட்சுமி, வெண்ணிற ஆடை நிர்மலா மனோகர் வி.கே.ராமசாமி சிவகுமார் சோ தேங்காள் சீனிவாசன் செந்தாமரை என்று பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர் சண்டைக் காட்சிகளை கொண்ட படங்களில் மட்டும் நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. அத்துடன் கதையம்சம் கொண்ட சமூகக் கதைகளையும் தெரிவு செய்து நடித்துவந்நதார். இதன் காரணமாகவே அவரால் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. இந்த அடிப்படையில்தான் சமூகப் படமாக கன்னிப் பெண் உருவானது.
வளரும் இளம் நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்த சிவகுமாருக்கு இந்தப் படத்தில் நல்ல வேடம் வழங்கப்பட்டிருந்தது. அவருக்கு ஜோடி வெண்ணிற ஆடை நிர்மலா, லட்சுமி வாணிஸ்ரீ நிர்மலா என்று மூன்று நாயகிகள் ஒருங்கே இணைந்து நடித்த படமாக இந்தப்படம் தயாரானது.  

தனது அடுத்தப் படமாக எம்.ஜி.ஆரின் நடிப்பில் ரிக்ஷாக்காரன் படத்தை கலரில் தயாரிக் வீரப்பன் திட்டமிட்டிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் தனது சொந்தப்படமான அடிமைப் பெண்ணில் தீவிரமாக இருந்ததால் கன்னிப்பெண் உருவானாள்.

தமிழ் சினிமா - கொரில்லா திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல தரமான படங்களை கொடுத்தவர் ஜீவா. ஆனால், சமீப வருடமாக இவர் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகின்றார், அவரின் போராட்டத்திற்கு விடையாக அமைந்ததா இந்த கொரில்லா, பார்ப்போம்.
கதைக்களம்
ஜீவா சிறிய சிறிய திருட்டு வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகின்றார். அவருடன் வேலையிழந்த சதீஷ், நடிகராக வேண்டும் என்று இருக்கும் விவேக் ப்ரசன்னா ஆகியோரும் உள்ளனர்.

இவர்கள் வீட்டின் கீழேயே வங்கியில் லோன் கேட்டு அழையும் ஒரு விவசாயிம் உள்ளார். இவர்கள் நால்வருக்குமே தற்போது தேவை பணம்.
இதற்காக எப்படியோ நால்வரும் இணைந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்க செல்கின்றனர். எதிர்ப்பார்த்தப்படியே வங்கியில் கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது இவர்களுடன் வந்த சிம்பன்ஸி அபாய பட்டனை அழுத்த போலிஸார் இவர்களை சுற்றி வளைக்கின்றனர். பிறகு என்ன இவர்கள் மாட்டினார்களா? இல்லை வெற்றிகரமாக பணத்தை வெளியே கொண்டு வந்தார்களா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஜீவா எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்தவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இந்த வகையில் காமெடி கலந்த இந்த மெசெஜ் கதையை தேர்ந்தெடுத்ததில் கொஞ்சம் பாஸ் மார்க் வாங்கியுள்ளார்.
படமாக ஜாலியாக சென்றாலும் அதில் விவசாய கடன் ரத்து குறித்து பேசிய விதம் நன்றாக இருந்தது. அதே நேரத்தில் அட இன்னும் எத்தனை படத்தில் விவசாயிகள் மாட்டிக்கொள்வார்களோ என்ற அச்சமும் வருகிறது.
ஏனெனில் விவசாயிகள் வலியை பேசிய படங்கள் போக, இன்று விவசாயிகள் பற்றி பேசி கைத்தட்டல் வாங்க வேண்டும் போன்ற படக்காட்சிகள் தான் அதிகம் வருகிறது.
இன்றைய ட்ரெண்ட் வசனங்கள் குறிப்பாக தர்மாகோல் வைத்து யோகிபாபு செய்யும் காமெடி, சிஸ்டம் சரியில்லை, நேசமணி என இளைஞர்கள் கலாய்க்கும் அனைத்து விஷயங்களை படத்தில் அங்கங்கு தூவிவிட்டது சூப்பர்.
ஆனால், முகத்தை வைத்து தோற்றத்தை வைத்து, பெண்களை கிண்டல் செய்து வரும் வசனங்கள் சிரிப்பை வர வைத்தாலும் இன்னும் எத்தனை படத்தில் இதையே செய்வீர்கள்? அதை விட இந்த பொட்டேட்டோ மூஞ்சு, பர்கர் மூஞ்சு போன்ற வசனத்தை எப்போ விடுவீர்கள், சிரிப்பு வரவில்லை என்றாலும் தொடர்ந்து இதையேவா வைப்பது.
படத்திற்கு சிம்பன்ஸி எந்த ஒரு இடத்திலும் பெரிதாக பயனில்லை என்றாலும், ஏதோ பட்டன் அழுத்துவதற்கும் கவன ஈர்ப்பிற்கும் பயன்படுகின்றது. அதை எதிர்ப்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றம் தான்.
படத்தின் ஒளிப்பதிவு பல காட்சிகள் பாரீனில் செட் போட்டு இங்கு நடப்பது போல் எடுத்தாலும் நன்றாக மேட்ச் செய்துள்ளனர். பின்னணி இசை கலக்கல்.
க்ளாப்ஸ்
ஜீவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் அசால்ட்டான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.
வங்கிக் நடக்கும் கூத்துக்கள், குறிப்பாக யோகிபாபு காமெடி காட்சிகள்.
பின்னணி இசை
பல்ப்ஸ்
மிக செயற்கைதனமாக இருந்த சில எமோஷ்னல் காட்சிகள் மற்றும் வசனங்கள்.
லாஜிக் எத்தனை கிலோ.
மொத்ததில் லாஜிக் மீறிய ஒரு ஜாலி ரைட் தான் இந்த கொரில்லா


நன்றி   CineUlagam