தற்கொலை செய்துகொள்வதற்கு
பலரும் பல காரணங்களைச் சொல்வார்கள். காதல்
தோல்வி, அவமானம், விரக்தி, பாலியல் தொல்லை, சொத்திழப்பு, ஏமாற்றம், மனவுளைச்சல் உட்பட எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டிருப்பார்கள்.
ஆனால், தம்மைப்பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள் ஒரு தாயோ தந்தையோ வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகளையும்
ஏமாற்றங்களையும் கடந்து வந்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்து பார்ப்பதில்லை.
யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராண
கலாசாரம் எனத் திருவாய் மலர்ந்தவர் இங்கு வாழ்ந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை. அத்தகைய யாழ். குடாநாடு தற்போது எந்தத் திசையில்
செல்கிறது…? என்பதைப் பார்க்கும்போது சமூக
அக்கறைகொண்ட ஆர்வலர்களுக்கு வேதனைதான் எஞ்சியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் கடந்த
பதினாறு மாத காலத்துள், பதினொரு
சிறார்கள் உட்பட 229 பேர் தற்கொலை
செய்து மடிந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
இவர்கள் என்ன காரணத்தினால்
இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதற்கு அவரவர் குடும்பத்திலிருந்து ஒவ்வொருவர்
ஒவ்வொரு காரணங்களை கூறலாம். கற்பிக்கலாம்.
ஆனால் அவர்கள் இழந்தது
பெறுமதியான மனித உயிர்களை. சீரான வாகனப் போக்குவரத்து
இன்மையாலும், வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாதமையினாலும் கவனக் குறைபாட்டினாலும்
நாளாந்தம் வீதி விபத்துகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் உயிர்ப்பலிகள் தொடருகின்றன.
அத்துடன் இளம் தலைமுறையிடத்தில்
போதைப் பாவனையும் அதிகரித்து வருகிறது. யாழ்.
போதனா மருத்துவமனையில் போதை வஸ்து பாவனையினால்
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பற்றியும் அறிகின்றோம்.
இந்தச் செய்திகளின் பின்னணியில்
தற்போது யாழ். குடாநாட்டில் தற்கொலை மரணங்களும் அதிகரித்திருக்கும் திடுக்கிடும் செய்தி
வெளியாகியிருக்கிறது.
எனினும், யாழ்ப்பாணத்தில் தற்கொலைகளை தடுப்பதற்கான சீர்மிய
தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே இயங்கி வருகின்றன.
அண்மையில் ஒரு படித்த இளம்பெண்
தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதனை அரசியல் கண்ணோட்டத்திலும் பார்த்தார்கள்.
சில நாட்களில் அந்தச்செய்தி
அடங்கிவிட்டது. கொழும்பிலும் ஒரு முன்னாள்
அமைச்சரின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த பெண் எரியுண்டு இறந்தார்.
இச்செய்திகள் சில நாட்களில் அடங்கிவிடும்.
சில மாதங்களுக்குப் பின்னர்
பொலிஸ் திணைக்களம் வெளியிடும் புள்ளி விபரங்கள்
அடங்கிய குறிப்பில்தான் எத்தனை மரணங்கள் தற்கொலையால் சம்பவித்திருக்கின்றன என்பதை
தெரிந்துகொள்கின்றோம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 ஏப்ரில் மாதம் வரையிலான
16 மாத காலப்பகுதியில் யாழ்ப்பாணம் குடாநாட்டில்தான் 229 பேர் தங்கள் உயிர்களை தாங்களே மாய்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று பொலிஸ் தரப்பு
செய்தி வெளியிட்டிருக்கிறது. இவர்களில் பதினொருபேர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள். வாழ்ந்திருக்கவேண்டியவர்கள். சமூகத்தில் தொடர்பாடல்
அருகிவருவதும் இதற்கு அடிப்படைக்காரணமாகியிருக்கிறது. ஆனால், நவீன டிஜிட்டல் யுகத்தில்
சமூக வலைத்தளங்கள் பெருகியிருக்கின்றன. கைத்
தொலைபேசியின் தொடு திரையில் நேரத்தை செலவிடும் மக்கள், பரஸ்பரம் ஆளையாள் பார்த்தோ, தொடர்புகொண்டோ பேசுவது
குறைந்துகொண்டிருக்கிறது.