குரு டவீனா வேந்தன் சிஷ்யை உமா மகேஸ்வரி சிவலிங்க குமார் இசை அரங்கேற்றம் க. அமிழ்தன்


  குரு டவீனா வேந்தன் சிஷ்யை உமா மகேஸ்வரியின் இசை


அரங்கேற்றம் 16-09-23 மெல்பேனில் நடந்தேறியது. குருவின் வழிநடத்தல், சிஷ்யையின் திறமை இரண்டுமே மிளிர்வதுதான் அரங்கேற்றம். இளம் கலைஞர் ஒருவரை உருவாக்கி இரசிகர் முன் அரங்கேற்றுகிறார் குரு. சிஷ்யையோ தனது திறமையை, தான் கற்ற கலை மூலம் வெளிப்படுத்தி, இரசிகரின் பாராட்டைப் பெற்று, கற்பித்த குருவிற்கும் தனக்கும் பெருமை சேர்ப்பதாக அன்றைய இசை அமைந்தது.

  மகேஸ்வரி குரு அஞ்சலியாக “குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ


மகேஸ்வரகா” என நிகழ்வை ஆரம்பித்தார். அவர் முதல் உருப்படியான வர்ணமே வீணை குப்பையரின் நவ ராகமாலிகா வர்ணம். டவீனாவிற்கு தன் சிஷ்யையின் மேல் இருந்த நம்பிக்கையை அவர் இந்த வர்ணத்தைத் தெரிவு செய்ததன் மூலம் வெளிப்படுத்தினார். இந்த வர்ணத்தின் முதல் 5 இராகங்களும் பஞ்சரத்தின கிருதியில் அமைந்தவை. நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகம், நாராயண கௌளை, ரீதி கௌளை, காந்தாரம், பௌளை. ஒரு இராகத்தில் இருந்து அடுத்த இராகத்தைத் தொடர்வது மிக லாவண்யமாக கலை அழகு குன்றாது இசைத்தமை அவர் ஒரு திறமையான கலைஞர் என்பதை எடுத்துக் காட்டியது.

  அடுத்த உருப்படியான “வாதாபி கணபதி” என அவர் உச்ச ஸ்தாயில் பாடும்பொழுது இராகத்தின் அழகு மிளிர்ந்தது. பாடலின் பாவம் குன்றாது, தகுந்த உணர்வை வெளிப்படுத்தி பார்வையாளரைத் தன்னுடன் இணைத்தார். நிரவல் சுரம் அற்புதமாக அமைய, “பிரணவ சொரூப வக்ரதுண்ட” நிரவல் கற்பனா சுரங்களுடன் வளைந்தும் நெளிந்தும் குதித்தும் ஓடும் அருவியாகப் பிரவாகித்தது. சிறந்த தேர்ந்த வயலின் வித்துவான் ஸ்ரீசுரேஷ் பாடி ரசித்துப் பல தடவைகள் சபாஷ், சபாஷ் என ரசிக்க, ஆங்காங்கே பார்வையாளர்களும் தம்மை இசையில் இணைத்து சபாஷ், சபாஷ் என ரசித்தனர்.

  தொடர்ந்து ஸ்ரீ பாபநாசம் சிவனின் “மாதயானி” என ஆரம்பிக்கும் வசந்தாவில் அமைந்த சவுக்க காலத்திலான தமிழ் கீர்த்தனை. உமா மகேஸ்வரி பாவம் பொலிய இசைத்தார்.

  கச்சேரியின் முக்கிய உருப்படியாக அமைந்தது, 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் கல்யாண “கிமகிரி சுதா” கல்யாணி இராகத்தின் நளினங்களை எல்லாம் மகேஸ்வரி அனுபவித்து இசைக்க, கச்சேரியில் என்னை மறந்து இசை இன்பத்திலே மூழ்கினேன். இராக ஆலாபனை மேலும் தொடராதா என என்னை ஏங்க வைத்தது. இதுவே உமா மகேஸ்வரியின் திறமைக்கு எடுத்துக்காட்டு. தொடர்ந்து வயலின் வித்துவான் சுரேஷ் பாபு, ராக பாவ சுவையை மேலும் பொழிந்து இது ஒரு கச்சேரி, வெறும் முதல் அரங்கேற்றம் அல்ல, ஒரு தேர்ந்த இசை விருந்து என எம்மை உணர வைத்தார். நாமும் தலை அசைத்து ஆனந்த வெள்ளத்தில் மிதந்தோம். M.S. அம்மாவால் பிரபலப்படுத்தப்பட்ட “சோபிலு சப்த சுர” என்ற தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை இசையில் 7 சுரங்களின் தெய்வீகத் தன்மையை அழகாக உணர வைத்தார் மகேஸ்வரி.

வள்ளலார் என்னும் பெரு வெளிச்சம்


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா


மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும். வையத்துள் வாழ் வாங்கு வாழ வேண்டும்.துன்பமில்லா மல் வாழ வேண்டும். குறை வில்லாது வாழ வேண்டும். வாழும் வாழ்வு நிறைவுடையதாக அமைய வேண்டும் என்னும் நோக்கில்தான் சமயங்களும் அதன் வழி முறைகளும் காலத்துக் காலம் வந்தபடி இருந்து கொண்டே இருப்பதைக் காண்கின்றோம்.இப்படி வருகின்ற சமயங்களில் எது உயர்ந்தது எது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது எது மிக வும் தீவிரமாக வந்திருக்கிறது நடைமுறைக்கு ஒவ்வாதவற்றை எது தாங்கி வந்திருக்கிறது என்னும் நிலை மண்ணிலே பூதாகரமாகவே வியாபித்து நிற்பதையும் காணமுடிகிறது.

  வேதங்களை முதன்மைப் படுத்திய சமயநெறிகள். சித்தாந்தத்தை


முதன்மை படுத்திய சமய நெறிகள்.கட வுளைப் பற்றியே எண்ணாத சமய நெறிகள். அறத்தினையே முழுமையாய் வலியுறுத்தும் சமய நெறி கள்.புராண இதிகாசங்களை நம்பும் சமய நெறிகள். திருமுறைகளை ஆகமத்தை ஆலயத்தை மைய மாகக் கொண்ட சமய நெறி கள். உருவ வழிபாட்டை முதன்மைப் படுத்தாத சமயநெறிகள். வேள்வி யினை விரும்பி நிற்கும் சமய நெறிகள்.இல்லறத்தை ஒதுக்கித் துறவறத்தையே முதனிலைப்படுத்தும் சமய நெறிகள்.உருவ வழி பாட்டினை உரித்தாக்கிக் கொண்ட சமய நெறிகள்.இப்படிப் பல சமய நெறிகள் சமுதாயத்தை சூழ்ந்து இருந்தன என்பதைக் கட்டாயம் கருத்திருத்தல் வேண்டும்.

  சமய நெறிகள் பல தோன்றி  சமுதாயத்தை பல கோணங்கள் ஆக்கி விட்டிருக்கின்றன என்பதையும் மறுத்துரைத்துவிட முடியாது. சம ணம் வந்தது. பெளத்தம்வந்தது. இஸ்லாம் வந்தது. கிறித்தவம் வந் தது.இந்தியாவில் வைதீக நெறியே மேலோங்கி இருந்தது. இந்தியாவுக்கு புதிதாக வந்த சமய நெறிகளா லும். இந்தியாவில் முகிழ்த் தெழுத்த சமய நெறிகளாலும் - வைதீக சமய நெறிகள் சற்று தடுமாற்ற முறு கின்ற நிலை ஏற்பட்டது.ஆனால் வைதீகம் என்பது தன்னிலையில் இறுக்கமாகவே இருந்தது . இருந்தும் வருகிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்.

  இந்தியாவுக்குள் நுழைந்த சமய நெறிகள் பால் பலர் ஈர்க்கப்பட்டார்கள். அந்த சமய நெறிகளின் வழியில் நடந்திடவும் விரும்பிச் சென்றார்கள். வைதீக நெறியில் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று உணரும் ஒரு நிலையும் அப்பொழுது அவசியமாகக் காணப்பட்டது. அந்தவகையில் கெளதம புத்தர் வரு கிறார். மகாவீரார் வருகிறார். தயானந்த சரஸ்வதி வருகிறார். ராஜாராம் மோகன்ராய் வருகிறார். இராம கிருஷ்ண பரமஹம்சரும் வருகிறார்.இவர்களின் சிந்தனைகள் ஒவ்வொன்றுமே வேறு பட்டனவாக இருந் தாலும் , சீர்திருத்தம் என்னும் கருமட்டும் அனைவரது சிந்தனைகளிலும் அமைந்தே இருந்தது என்பதுதான் முக்கியமாகும்.

குவலயம் உன்னைப் போற்றும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


 

பரந்த மனமெழ  வேண்டும்

பார் சிறக்க வேண்டும்
ஊர் சிரிக்க வாழாமல்
ஊர் போற்ற வேண்டும் 

குழந்தை மனம் வேண்டும்

குதூகலம் அதில் வேண்டும்
ஒரு தீங்கு மெண்ணாமல்
உய ரெண்ணம் வரவேண்டும்

ஈவதை இதயத்தில் இருத்து

எடுப்பதைப் பகிர்ந்துமே கொடு
வாழ்வினில் நல்லதை தெரி
வழியினைத் தேர்ந்துமே நட

ஓய்வினை எடுப்பதைத் தவிர்

உழைப்பினை உறுதியாய் பிடி
தாழ்வென நினைப்பதை வெறு
தளர்விலா வாழ்வினில் நில்

தலைவிதி என்பதை மற

உளமதில் உறுதியை விதை
நிலமதில் நிமிர்வுடன் நட
நிம்மதி வந்துனைச் சேரும்

அளவிலா ஆசையைத் துற


அளவுடன் அனைத்தையும் அணை
இளகிடும் குணத்தினை இணை
என்றுமே நல்லொளி தெரியும்

கறையுடை செயல்களைக் களை

குறையுடை செயல்களைத் தவிர்
நிறையுடை செயல்களை நினை
நிலமதில் நல்லதை கொடு

மூத்தவர் சொற்களை மதி

மூர்க்கரின்  தொடர்புகள்  அறு
வார்த்தையில் நல்லதைத் தெரி
வையகம் போற்றிடும் உன்னை

ஒளவை வார்த்தை இருத்து

அருமைக் குறளைப் பாரு
உய்யும் கருத்தைத் தேரு
உயர்வாய் என்றும் உலகில்

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 80 ஐந்து வயதில் பார்த்த குழந்தையை, ஐம்பது ஆண்டுகளின் பின்னர் படைப்பாளியாக சந்தித்த தருணம் ! முருகபூபதி


கடந்த அங்கத்தின் தொடக்கத்தில் எங்கள் நீர்கொழும்பூர் விஜயரத்தினம் இந்து மத்திய  கல்லூரி பற்றி சொல்லியிருந்தேன்.

இக்கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தை 1972 ஆம் ஆண்டில் நாம் உருவாக்கினோம். அக்காலப்பகுதியில்தான் நான் எழுத்துலகிலும் பிரவேசித்தேன்.

எனது முதல் சிறுகதை ( கனவுகள் ஆயிரம் ) மல்லிகையில் வெளியானதும் அப்போதுதான். அதே காலப்பகுதியில் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர் பணியும் எனக்கு கிடைத்திருந்தது.

எமது கல்லூரியின் முன்னேற்றத்திற்காக எமது பழைய மாணவர்


மன்றம் தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்தமையால், அங்கே அடிக்கடி செல்ல நேர்ந்தது.

அச்சமயம் வடபகுதியிலிருந்து வருகை தந்திருந்த சில ஆசிரியைகள்,   அங்கே கடமையாற்றிக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலரின் கணவர்மார் நீர்கொழும்பில் தொழில் நிமித்தம் பணியாற்ற நேர்ந்தது.

அவர்களில் ஒருவர் வேலாயுதபிள்ளை. இவரது துணைவியார்தான் புவனேஸ்வரி ரீச்சர். இவர்கள் இருவருக்கும் எப்போதும் மலர்ந்த முகம்தான்.

இவர்களின் ஐந்து வயது பெண்குழந்தை துருதுரு என்று ஏதாவது சொல்லிக்கொண்டு ஓடி விளையாடும். இவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது சென்றிருக்கின்றேன்.  இவர்கள் எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அ. அமிர்தலிங்கத்திற்கும் உறவினர்கள்.

புவனேஸ்வரி ரீச்சரின் அண்ணன் சண்முகலிங்கம், அக்காலப்பகுதியில் பிரதமராகவும் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சராகவுமிருந்த ரணசிங்க பிரேமதாசவின் செயலாளர்களில் ஒருவர்.  

பிரதமர் பிரேமதாச,  ஆளுமைமிக்க - செயல்திறனுள்ள செயலாளர்களையே  தம்வசம்  வைத்திருந்தார். அவரிடம் ஐந்து  “லிங்கங்கள்    செயலாளராகவிருந்தனர்.  நாம் அவர்களை  “ பஞ்சலிங்கங்கள்  “ என்போம் ! அதில் ஒருவர் ஆர். பாஸ்கரலிங்கம்.

நிதியமைச்சர் ரொனி டீ. மெல்லுக்கு   “ தண்ணி     காட்டியவர் ! அதெல்லாம் அரசியல். விடுவோம் ,

இங்கு குறிப்பிடும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நீர்கொழும்பில் நான் பார்த்த குழந்தை பூங்கோதையை ஆளுமையுள்ள பெண்ணாக – எழுத்தாளராக – சமூகச்செயற்பாட்டாளராக – தன்னார்வத் தொண்டராக தாயைப்போன்று ஒரு ஆசிரியையாக  லண்டனில் மீண்டும் சந்தித்தேன்.  

இவரை மெய்நிகர் நிகழ்வென்றில்தான்  சில மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடித்தேன். இல்லை… இல்லை… பூங்கோதைதான் என்னைத் தேடிக் கண்டுபிடித்தார் எனச்சொல்லவேண்டும்.

லண்டனில்  நடந்த விம்பம் நிகழ்ச்சிக்கு நவஜோதி ஜோகரட்ணம் என்னை அழைத்துச்சென்றிருந்தார்.

நாம் மண்டபத்திற்குள் பிரவேசிக்கும்போது பூங்கோதை ஒரு நூலைப்பற்றி தனது வாசிப்பு அனுபவத்தை உரையாக நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

உரைமுடிந்ததும் சபைக்கு வந்து என்னை அன்போடு,  “ எப்படி அங்கிள் இருக்கிறீங்க ..?  “ எனக்கேட்டு,  அணைத்துக்கொண்டார். நான் உருகிவிட்டேன். கண்களில் துளிர்த்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

இலங்கைச் செய்திகள்

மர்மமாக மரணித்த சார்ஜெண்ட் ஹனீபா; உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்து

யாழில் சமிந்த வாஸ் கிரிக்கெட் பயிற்சி இன்று ஆரம்பம்

ஒக்டோபர் 11 முதல் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

தலைமன்னார், இராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில்

மலையக மக்களின் 200 வருட பூர்த்தி ‘நாம் -200’ நிகழ்வின் அறிமுக விழாவும் சின்னம் வெளியீடும்

வடமாகாண அபிவிருத்திக்கு முழு ஆதரவையும் வழங்குவேன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி

KKS-நாகபட்டிணம் பயணிகள் கப்பல்சேவை ஜனவரி முதல்



மர்மமாக மரணித்த சார்ஜெண்ட் ஹனீபா; உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்து

- ரிஷாட் பதியுதீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்பு

October 7, 2023 10:18 am

– நீதியை பெற்றுக்கொடுக்குமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை

பொலன்னறுவை, வெலிக்கந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜெண்ட் முஹம்மது மக்பூல் ஹனீபா, பொலிஸ் விடுதியில் இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் முன்வைத்த வேண்டுகோள் தொடர்பில், கவனத்தை செலுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டியுள்ளார்.

உலகச் செய்திகள்

ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்; போரை அறிவித்த இஸ்ரேல்

உக்ரைனின் கிராமம் ஒன்றின் மீது தாக்குதல்; 51 பேர் பலி

சிரியாவில் இராணுவ கல்லூரியில் ட்ரோன் தாக்குதல்: 100 பேர் பலி

சிறையிலுள்ள ஈரானியப் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் சீன ஆதரவுடைய முயிசு வெற்றி

உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க பைடன் உறுதி


ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்; போரை அறிவித்த இஸ்ரேல்

- இஸ்ரேலை நோக்கி 5,000 ரொக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிப்பு

October 7, 2023 8:26 pm 

பலஸ்தீன அமைப்பான ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் போருக்குத் தயாராகி இருப்பதாக அறிவித்துள்ளன.

பொண்ணுக்கு தங்க மனசு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 சிவாஜியின் பல வெற்றிப் படங்களை இயக்கி புகழ் பெற்ற பி


மாதவன் தனது அருண் பிரசாத் மூவிஸ் சார்பில் 1973ல் படம் ஒன்றை தயாரித்தார். தான் ஏற்கெனவே சிவாஜி நடிப்பில் இயக்கிய ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம் பெற்று பிரபலமான அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு என்ற பாடலின் ஆரம்ப வரியை எடுத்து புதுப் படத்துக்கு பொண்ணுக்கு தங்க மனசு என்று அவர் பெயரிட்டார். அப்படி பெயரிட்ட படத்தை தானே டைரக்ட் பண்ணாமல் தன்னிடம் நீண்ட காலம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய தேவராஜ், மோகன் என்ற இருவருக்கும் அந்த வாய்ப்பை வழங்கினார் அவர். மாதவனுக்கு தங்க மனசு!


தேவராஜின் தந்தை சோமசுந்தரம் மனிதன் என்ற பிரபல மேடை

நாடகத்தின் கதாசிரியர். மோகன் நடிகர் முத்துராமனின் மைத்துனர், கார்த்திக்கின் மாமன் ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து படத்தை இயக்கினார்கள். மிக குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரானது.

சாந்தி, கீதா இருவரும் கல்லுரியில் பயிலும் நெருங்கிய நண்பிகள். கீதா தான் ஒரு பணக்காரப் பெண் என்ற அகந்தையில் வாழ்பவள். கீதாவோ ஏழையாக இருந்த போதும் தன்மானம் கொண்டவள். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவள். நண்பிகளான இருவருடைய குணாம்சம் காரணமாக இருவரிடையே பிளவு ஏற்றப்பட்டு அது சவாலாகவும் உருவெடுக்கிறது.

ராமு, சங்கர் இருவரும் கல்லூரியில் பயிலும் நெருங்கிய நண்பர்கள். ஏழை ராமுவுக்கு உதவும் நல்லெண்ணத்துடன் தன் வீட்டிலேயே அவன் தங்கி படிக்க வழி செய்கிறான் சங்கர். ஆனால் வீட்டில் நகைகள் காணாமல் போகவே ராமு மீது அநியாயமாக பழி விழுகிறது. ராமு, சங்கர் இருவரும் பிரிகிறார்கள். கால வெள்ளத்தில் ராமு சாந்தியை மணந்து கலெக்டர் அலுவலகத்தில் பியனாக பணியாற்றுகிறான். சங்கர் கீதாவை மணந்து அதே அலுவலகத்துக்கு கலெக்டராக வருகிறான். நண்பர்கள் நட்பை புதுப்பித்துக் கொள்ள , நண்பிகள் கீரியும், பாம்புமாக மோதுகிறார்கள். இவர்கள் பகை தணிந்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஹீரோ ராமுவாக சிவகுமார் நடித்தார். சங்கராக புதுமுக நடிகராக விஜயகுமார் மாதவனால் அறிமுகப்படுத்தப் பட்டார். மாதவனுக்கு தங்க மனசு! சாந்தியாக ஜெயசித்ராவும், கீதாவாக புதுமுகம் விதுபாலாவும் நடித்தார்கள். இருவரும் துடிப்புடன் நடித்து படத்தை விறுவிறுப்பாக்கினார்கள். சிவகுமார் , விஜயகுமார் இருவரும் அடக்கமாக நடித்து பேரெடுத்தார்கள். விஜயகுமாருக்கு வேறு எவரோ டப்பிங் குரல் கொடுத்தது இப்போது தான் தெரிகிறது.

Kannur Squad (மலையாளம்) 🎬 திரைப்பார்வை - கானா பிரபா

 

 “கல்யாணத் தேனிலா  காய்ச்சாத பால் நிலா”  பாடல் பின்னணியில் இசைக்க படம் தொடங்குகிறது.

 இளையராஜா இசை இல்லாமல் வேற்று இந்திய மொழித் திரைப்படம் ஓடும் திரையரங்கத்தின் வாசப்படி மிதிக்க மாட்டேன் (ஒரு சில விதிவிலக்கு உண்டு) என்று நினைத்து உட்கார்ந்திருந்தால் ராஜாவோடே தொடங்குவது ஒரு இன்ப அதிர்ச்சி.
அதுவும் மம்முட்டி கம்பெனி என்று தயாரிப்பு வேறு மம்முட்டியே தான்.  

கேரளா கடந்து நேபாள எல்லை வரை இந்த Kannur Squad காவல்துறை ஓடுவது போலத்தான் இன்றைய தேதியில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் வெற்றிச் சித்திரன் இது. Kannur Squad என்று நிஜமாகவே இயங்கிக் கொண்டிருக்கும் போலீஸ் உளவுப்படை சந்தித்த அனுபவம் ஒன்று தான் கதைப் பின்னணியை அமைக்கவும் உதவியிருக்கிறது.  

ஆரம்பத்தில் Kannur Squad என்றால் யார் என்பதை ஒரு கொலை விசாரணையில் தொடங்கி அடையாளப்படுத்துவது வெகு சிறப்பு.  பின்னர் ஒரு கொடூரக் கொலை அதைத் தொடர்ந்து எழும் மக்கள் போராட்டம், அரசியல் அழுத்தங்களால் மீண்டும் Kannur Squad க்கு வேலை வந்து விடுகிறது.  கொலைக் களத்திலிருந்து ஒரு சில காட்சிகளிலேயே கொலையாளிகளின் பின்புலத்தை அடையாளப்படுத்தி விடுவதால் அதன் பின் அவர்களைத் தேடிப் போகும் நீஈஈண்ட பயணம் தான் முடியும் வரை.  

ஒரு கட்டத்தில் மனு நீதிச் சோழன் என்ற தமிழ் போலீஸ் அதிகாரியாக வரும் கிஷோர் மம்முட்டியிடம் கேட்பது போல என்ன ஊர் ஊரா சுத்துறீங்களா என்று நம் mind voice சத்தமாக் கேட்டது போல் சொல்லியே விட்டார்.  ஆனாலும் இடைவேளைக்குப் பின் மம்முட்டி போகும் ஜீப் போலவே செம விறுவிறுப்பு.  

இன்றைக்கு தொழில் நுட்பம் வளர்த்ததால் அதை வைத்தே துப்புத் துலங்குவது, ஆழமான தேடல் இன்மை போன்றவை இந்த மர்மப்படத்தில் குறையாகவும், குறித்த சம்பவத்தை மையப்படுத்தியே திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் நகர்வது நிறைவாகவும் அமைந்துள்ளது.  

Azees Nedumangad நகைச்சுவையில் பின்னுபவர் இந்தப் படத்தில் குணச்சித்திரமாக மின்னுகிறார். தமிழராக வரும் போலீஸ் மேலதிகாரி கிஷோர் நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார்.  

மம்முட்டியும் சகாக்களுமாக குற்றவாளி வேட்டை நடத்தும் இந்தப் படத்தில் மாமூலாக அந்தக் கூட்டுக்குள் நிகழும் மோதல், அரசியல் அழுத்தம் என்றும், குற்றவாளியைத் தேட செல்போனின் நகர்வுகளை வைத்து அதிகம் மினக்கெட்டிருப்பதும் Kannur Squad மீது கண் பட்டு விடுகிறது. காட்சிகளில் இருக்கும் குரூரத்தைத் தாங்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டேன். தணிக்கைக் குழுவும் அதைத்தான் செய்ததோ?

  ஒரு அனுபவப்பட்ட, வயசான கூத்துக்கலைஞர் ராசா வேடம் போட்டால் எப்படி பாதி வயசைத் தொலைத்து மிடுக்காக இருப்பாரோ அது போலவே மம்முட்டி.   என்னவொரு மிடுக்கன் 😍  மம்முட்டி இது போல இயல்பாக வரும் படங்களைத்தான் கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள் இன்னும்.  அறிமுகக் காட்சியில் ஜீப் பக்கம் அவரின் பாதி முகத்தைக் காட்டவே தியேட்டரில் விசில் மழை.  அந்த இயல்பான நடிப்பிலேயே பாதிக் கிணறு தாண்டி விட்டதால் பின்னால் வந்த அதீத நாயகத்தனமான காட்சிகளில் கூட உறுத்தல் இல்லாமல் ரசிக்க முடிகிறது.  

கானா பிரபா

தோல்வியில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தின் வெற்றியே சந்திரயான் 3!

 October 8, 2023 7:34 am 

தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதோடு, கடினமாக உழைத்தால் வெற்றி நம்மைவிட்டு எங்கும் போய்விடாது’ என்று சந்திரயான் 3 திட்டம் வெற்றி குறித்து தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் உரையாற்றிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் குறிப்பிட்டார்.

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் உயர்கல்வித்துறை சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு, – மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியை நேரலையில் காணும் வகையில், 58 இலட்சம் பாடசாலை, கல்லூரி மாணவர்களுக்கு வட்ஸ்-அப் மூலம் இணைப்பு (லிங்க்) அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

அபிவிருத்தியடைந்த மாகாணமாக வடமாகாணம் திகழ வேண்டும்

 October 3, 2023 5:41 am 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணம் வாள்வெட்டு, வீடுகளில் திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அண்மைக் காலமாக அடிக்கடி இடம்பெறக் கூடிய இடமாக உள்ளது. அதேநேரம் கேரளா கஞ்சா உள்ளிட்ட சில வகைப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படும் முக்கிய பிரதேசங்களும் இம்மாகாணத்தில்தான் காணப்படுகின்றன.

இந்த சம்பவங்களால் வடமாகாண மக்கள் மத்தியில் அச்சம் பீதியும் நிலவே செய்கின்றன. வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களால் பலர் காயமடைந்துள்ளனர். சில வாள் வெட்டுக்கள் குரூரமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் சுமார் மூன்று தசாப்த காலம் நிலவிய யுத்தம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றது. இதன் விளைவாக வடமாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த யுத்தம் காரணமாக முழுநாடுமே பாரிய இழப்புக்களைச் சந்தித்தது.

இந்நிலையில் வடமாகாண மக்கள் உட்பட முழு நாட்டு மக்களுமே யுத்தம் முடிவுக்கு வரதா? அச்சம் பீதியில்லாத அமைதி, சமாதான சூழல் எப்போது உருவாகும் என ஏங்கிக் கொண்டிருந்தனர். இவ்வாறான சூழலில் 2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து வட பகுதி மக்கள் உட்பட முழுநாட்டிலும் புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் தோற்றம் பெற்றன. இவ்வாறான அச்சம் பீதிமிக்க சூழல் மீண்டும் ஒரு போதுமே தோற்றம் பெற்று விடக்கூடாது. அமைதி, சமாதானமே நாட்டில் தழைத்தோங்க வேண்டும் என்பதே வடபகுதி உள்ளிட்ட முழு நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பாக இருந்தது.

புரட்டாசி

 October 2, 2023 6:45 am 

புரட்டாசி. இது தமிழ் மாதங்களில் ஒன்று. 6வது மாதமாக இது வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர்.

புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, “மகாளய பட்சம்` என்பர்; “பட்சம்` என்றால், “15 நாட்கள்’ எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, “மகாபரணி’ என்றும், அஷ்டமியை, “மத்யாஷ்டமி’ என்றும், திரயோ தசியை “கஜச்சாயை’ என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.

அற்லஸ் நிருவாகிகள் தெரிவு


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary and Arts Society – ATLAS) வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மெய்நிகரில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், செயலாளர்  டொக்டர் நடேசன் ஆண்டறிக்கையையும் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி நிதியறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

2023 – 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாகிகளும்  தெரிவுசெய்யப்பட்டனர்.

காப்பாளர் : கவிஞர் இ. அம்பிகைபாகர்.

தலைவர்: திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம்.

துணைத்தலைவர்கள் : சட்டத்தரணி ( திருமதி )  மரியம் நளிமுடீன் – திரு. ஐங்கரன் விக்னேஸ்வரா.

செயலாளர்: திரு. லெ. முருகபூபதி

துணைச்செயலாளர்: டொக்டர் நடேசன்.

நிதிச்செயலாளர்: திருமதி சிவமலர் சபேசன்.

துணை நிதிச்செயலாளர் : திருமதி தேவகி கருணாகரன்.

செயற்குழு உறுப்பினர்கள்:

திருமதி சகுந்தலா கணநாதன்.

சட்டத்தரணி – திரு. பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா

கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர்.

திரு. இப்ரகீம் ரஃபீக்.

திருமதி ஆழியாள் மதுபாஷினி ரகுபதி.

திரு. சங்கர சுப்பிரமணியன்.