உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை
தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறேன்; எனக்கு வாக்களிக்க வேண்டாம்
தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவது நாமே வெளிநாடுகள் தருமென எவரும் நம்பக்கூடாது
கிழக்கில் இன, மத வேறுபாடின்றி தொல்பொருட்கள் பாதுகாக்கப்படும்
சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸாரால் முற்றுகை
திருகோணமலை கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு
பாராளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05, புதன்கிழமை
நாடு முழுவதும் வாக்களிப்பு ஒத்திகை
வரைபடங்களுடன் 25 வருடங்கள் போராட்டத்தை நடத்தியவன் நான்
அரசுடன் பேச்சு நடத்த TNA தயார்
உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை
Tuesday, June 9, 2020 - 10:54pm
அமெரிக்க தூதரகமும் அறிக்கை


கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னிலை சோசலிசக் கட்சி முக்கியஸ்தர்களான குமார் குணரத்னம், துமிந்த நாகமுவ உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தடையுத்தரவை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் கொள்ளுப்பிட்டி சந்தியில் இன்று (09) ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முயன்றபோது அங்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததுடன் 53 பேரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு, இலங்கையர் உள்ளிட்ட அனைவருக்கும் காணப்படும் உரிமைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அது ஜனநாயக நடைமுறைக்கு அமைவானதெனவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

நன்றி தினகரன்
தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறேன்; எனக்கு வாக்களிக்க வேண்டாம்
Tuesday, June 9, 2020 - 6:51pm
- எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வு; அரசியலில் ஓய்வு பெற முடிவு செய்யவில்லை
- மாத்தறை மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவராக புத்திக பத்திரண
தான் எதிர்வரும் பொதுத் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாகவும், தனக்கான விருப்பு வாக்கை வழங்க வேண்டாம் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவருக்கு, விருப்பு வாக்கு இலக்கங்களுடன் இன்று வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 08 ஆம் இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (09) பிற்பகல் மாத்தறையில் உள்ள அவரது வீட்டில் நடந்த கூட்டமொன்றில் கருத்து வெளியிட்ட, மங்கள சமரவீர மேற்படி தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட அவரது ஆதரவாளர்கள் சிலருக்கு இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,
இன்று (09) முதல் 'எம்.பி. அரசியலில்' இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இருக்கின்ற போதிலும், தனது விருப்பு இலக்கத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் மாத்தறை மாவட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலமானது செயற்றிறனற்றதும், தூர நோக்கற்ற ஆட்சி என்றும், கடந்த ஆறு மாதங்கள் எனும் குறுகிய காலத்தில், அது நன்றாக நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனவாதம் மற்றும் மதவாதத்தை ஏற்படுத்தி, நாட்டை இராணுவமயமாக்கலுக்கு இட்டுச் செல்வதாகவும்,
அதன் மூலம் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்நிலையில், எதிர்க்கட்சி தனது பணி என்ன என்பது தொடர்பில் சரியான முறையில் அறியாமல் செயற்படுவதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின், ஐ.தே.க.வின் அடிப்படைக் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர், கட்சி பிரிவடைந்தமை தொடர்பில் தான் வருத்தமடைவதாக தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் நாடாளுமன்ற அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தான் பணியாற்றியுள்ளதாகவும், இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வாதாரம், சகவாழ்வு, மனிதநேயத்தை, குறைந்தது ஒரு வீதத்தினாலாவது உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டே தான் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்காலப் பகுதியில் மாத்தறையில் மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் ஒரு சில வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக செய்ய முடிந்த போதிலும், இன்னும் பல விடயங்களைச் நாட்டிற்காக செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயினும், இந்நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கின்ற, சமூக அடையாளங்கள், கலாசாரங்களை சகித்துக்கொள்ளும், ஒருவருக்கொருவர் வெறுப்பின்றி இணைபவர்களை ஒன்றிணைத்து, நாட்டில் சரியான வளர்ச்சி நோக்குநிலையை உருவாக்குவதற்கான, ஒரு புதிய அரசியல் அணுகுமுறை தேவைப்படுவதாகவும், அதற்காக இந்நாட்டிலுள்ள மக்கள், தாம் பிறப்பினால் பெற்ற சாதி, மதம், இனம், பாலினம் ஆகிய அடையாளங்கள் அனைத்தையும் தனது தலைக்குள் நிரப்பிக் கொள்ளாத அனைவருக்கும் தான் அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அரசியலிலிருந்து விலகியபோதிலும், தான் அரசியலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்யவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக, தனக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவை வழங்கிய மாத்தறையிலுள்ள தைரியமான மக்களின் ஆசீர்வாதத்தை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவராகவும் மாத்தறை மாவட்ட தலைவராகவும், அக்கட்சியின் வேட்பாளர் புத்திக பத்திரண நியமிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவது நாமே வெளிநாடுகள் தருமென எவரும் நம்பக்கூடாது
Wednesday, June 10, 2020 - 6:00am
ஒற்றுமையாக இருந்தால் பலவற்றை சாதிக்கலாம் என்கிறார் பிரதமர்
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய பாராளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம். அந்தப் பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைவு தயாரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அத் தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். இதுவே அரசியல் தீர்வு தொடர்பான என்னுடையதும் எனது அரசினதும் நிலைப்பாடாக இருக்கின்றது.
தமிழ் மக்களுக்குத் தீர்வை நாம் தான் வழங்க வேண்டும். வெளிநாடுகள் வந்து தீர்வு தரும் என்று எவரும் நம்பக்கூடாது. ஏனெனில் இது எமது உள்நாட்டுப் பிரச்சினை. நாம் தான் பேசித் தீர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் எம்முடன் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றார்களோ அவ்வளவு விரைவாக தீர்வை நாம் காணமுடியும். ஒற்றுமையாக – ஒன்றிணைந்து இருந்தால்தான் எதனையும் சாதிக்க முடியும். முரண்பாட்டால் எந்தப் பயனும் இல்லை என்றார். நன்றி தினகரன்
கிழக்கில் இன, மத வேறுபாடின்றி தொல்பொருட்கள் பாதுகாக்கப்படும்
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை இன,மத வேறுபாடு இன்றி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவம் குறித்த செயலணியின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிழக்கில் உள்ள தொல்பொருட்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாப்பதற்கு இன,மத மற்றும் ஏனைய பாகுபாடுகள் இன்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளன, அவை பல காரணங்களால் ஆபத்திற்குள்ளாகியுள்ளன. அந்த தொல்பொருட்கள் தேசிய பாரம்பரியத்துடன் தொடர்புடையவை என்பதால் இன,மத வேறுபாடுகள் இன்றி அரசாங்கம் அவற்றை பாதுகாக்க விரும்புகின்றது.இந்த தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்காகவும் மீள உருவாக்குவதற்காகவும் செயலணி அமைத்து சமூகத்தினருடனும் இணைந்து செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காணல், அடையாளம் காணப்பட்ட தளங்கள் மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்து மீட்டெடுப்பதன் மூலம் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான பொருத்தமான திட்டத்தை அடையாளம் கண்டு செயல்படுத்துதல், அத்தகைய தொல்பொருள் இடங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலத்தின் அளவை அடையாளம் காணுதல், அவற்றை முறையாகவும் சட்டபூர்வமாகவும் ஒதுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களின் கலாச்சார மதிப்பைப் பாதுகாத்தல், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இலங்கையின் தனித்துவத்தை மேம்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் அத்தகைய பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் ஆகியன 11 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியின் முக்கிய பணியாகும்.
இந்த கூட்டத்தில் தொல்பொருள் சக்ரவர்த்தி வண. எல்லாவல மேதானந்த தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகானங்களுக்கான பிரதம விகாராதிபதி வண. பணாமுரே திலகவன்ச தேரர், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி. செனரத் பண்டார திசாநாயக்க, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், நில அளவையியலாளர் நாயகம், ஏ எல் எஸ் சீ பெரேரா, பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ, பேராசிரியர் கபில குணவர்த்தன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன், கிழக்கு மாகான காணி ஆணையாளர் எச் ஈ எம் டபிள்யூ ஜி. திசாநாயக்க, தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஸாதிக் ஷிஹான் - நன்றி தினகரன்
சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸாரால் முற்றுகை
Thursday, June 11, 2020 - 6:00am
கிளிநொச்சி கண்ணடவளை-பெரியகுளம் பகுதியில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பாரிய மணல் அகழ்வு நடவடிக்கை முற்றுகையிடப்பட்டது. கிராம சேவையாளரினால் பொலிஸ் நிலையத்தில் மெற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக அப் பகுதிக்கு சென்ற விசேட குழுவினால் குறித்தத பகுதி முற்றுகையிடப்பட்டது. இதன்போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 100 லோட்டுக்கு அதிக மணல் கும்பிகள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கனகராயன் ஆற்றுப் பகுதி மற்றும் அதனை அண்டிய வயற்காணியில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது தொடர்பில் பொது மக்களால் தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
இவ்வாறான நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரனிற்கு பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக கிராமத்திற்கு பொறுப்பாக உள்ள கிராம சேவையாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்தே நேற்று முன்தினம் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு கண்டாவளை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அப் பகுதியில் முறையற்ற வகையிலும் அனுமதியற்ற மணல் அகழ்வு இடம்பெற்று வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அப் பகுதியில் சுற்றாடல் பாதிப்படையும் வகையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை உறுதி செய்யப்பட்டதையடுத்து கள விஜயம் மேற்கொண்டிருந்த பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்று மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பரந்தன் குறூப் நிருபர் - நன்றி தினகரன் திருகோணமலை கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு
ஒன்பது பேர் கைது
திருகோணமலை கங்கைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட போதே நேற்று முன்தினம் (09) இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய டிப்பர் வாகனங்கள் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் தினகரன் நிருபர் - நன்றி தினகரன் பாராளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05, புதன்கிழமை
Wednesday, June 10, 2020 - 2:58pm
நாடு முழுவதும் வாக்களிப்பு ஒத்திகை
Friday, June 12, 2020 - 11:05am
நாடு முழுவதும் மேலும் 16 வாக்களிப்பு ஒத்திகைகளை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் ஒத்திகை, கடந்த 07ஆம் திகதி அம்பலாங்கொடையில் இடம்பெற்றது.
வாக்கெடுப்பின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அடையாளம் காணும் வகையில், 200 இற்கும் மேற்பட்ட வாக்காளர்களுடன் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் வாக்களிப்பு இடம்பெற்றது.
கொழும்பு நகரில் நகர்ப்புற குடியிருப்புகளிலும் தோட்டப் பகுதிகளிலும் 02 தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தல் ஒத்திகைகளை ஒழுங்கமைப்பதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் ஏற்கனவே தேர்தல் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதோடு, தேர்தல்கள் ஒத்திகை நடவடிக்கைக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலக அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
வரைபடங்களுடன் 25 வருடங்கள் போராட்டத்தை நடத்தியவன் நான்
Saturday, June 13, 2020 - 6:00am
கோடீஸ்வரன் எனக்கு பாடம் புகட்ட வருகிறார் - கருணா சீற்றம்
மட்டு. அம்பாறை மாவட்டத்திற்கான எல்லை எனக்கு தெரியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கூறுவது வேடிக்கையான விடயமாகும். ஏனெனில் அவருக்கு வரைபட அறிவு இல்லை. நாங்கள் கடந்த 25 வருட காலம் வரைபடங்களுடன் போராட்ட காலங்களில் நடமாடியவர்கள். கோடீஸ்வரனின் கருத்தை ஒரு அறிவற்ற கருத்தாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான (கருணா அம்மான்) விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் நேற்று முன்திம் (11) மாலை கல்முனை, கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்த கருத்தில், தேர்தல்கள் காலம் வரும்போது பல விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொள்வார்கள். அதனையே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் செய்துள்ளார். மட்டு. அம்பாறை மாவட்டத்திற்கான எல்லை எனக்கு தெரியாது என அவர் கூறுவது வேடிக்கையான விடயம். ஏனெனில் அவருக்கு வரைபட அறிவு இல்லை .கடந்த 25 வருட காலம் வரைபடங்களுடன் நடமாடியவர்கள் நாங்கள் என்பது மக்களுக்கு தெரியும்.எனவே கோடீஸ்வரனின் கருத்தை ஒரு அறிவற்ற கருத்தாகவே நாங்கள் பார்க்கின்றோம்
நாங்கள் இவர் போன்று அநாகரிகமான அரசியலை செய்ய விரும்பவில்லை. அவர்களை குற்றம் சுமத்துவதற்கு கூட விரும்பவில்லை. மக்கள் விழிப்படைந்திருக்கிறார்கள், எங்களது நோக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அம்பாறை மாவட்டம் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் கூடுதலாக வாழ்கின்ற மாவட்டமாகும்.அவர்களது வாழ்க்கை சுமையை குறைக்க நாங்கள் தற்போது களமிறங்கி இருக்கின்றோம்.எனவே நாம் முன் வைத்த காலை ஒருபோதும் பின் வைக்க போவதில்லை நிச்சயமாக வெற்றி பெற்று சேவையாற்றுவோம் என்றார்.
பாறுக் ஷிஹான் - நன்றி தினகரன்
அரசுடன் பேச்சு நடத்த TNA தயார்
Sunday, June 14, 2020 - 9:52am
ஜனாதிபதி, பிரதமர் மீது நம்பிக்கை; அரசுதான் பச்சைக்கொடி காட்ட வேண்டும்
புதிய அரசாங்கத்தில் இது நிச்சயம் சாத்தியமாகும் என்கிறார் சம்பந்தன்
புதிய அரசாங்கத்தில் இது நிச்சயம் சாத்தியமாகும் என்கிறார் சம்பந்தன்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேசத் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறுவது போன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாங்கள் தான். எனவே, எமது மக்களின் அபிலாஷைகளுக்கு மாற்றமாக நாம் ஒருபோதும் செயற்படமாட்டோம். அரசுதான் நாங்கள் நம்பும் வகையில் முதலில் பச்சைக் கொடி காட்ட வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களும் நாமும் அரசை நம்பி அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய நாடாளுமன்றத்தில் பேச்சுகளை ஆரம்பிப்போம். அந்தப் பேச்சுகளின் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைபு தயாரிக்கப்படும். அதை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம் வழங்கியே தீருவோம். எனவே, தமிழ் மக்கள் முதலில் எங்களை நம்ப வேண்டும்’ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
தனது அரசியலில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்தமையையொட்டி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு இரா.சம்பந்தன் நேற்று பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:- அரசியல் தீர்வே தமிழர்களின் பிரதான குறிக்கோள். இதற்காக எத்தனையோ தியாகங்களை நாம் செய்திருக்கின்றோம். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அர்த்தபுஷ்டியான தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். கடந்த அரசில் இதை அடைவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம்.எனவே, புதிய அரசமைப்புக்கான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதே எமது அவாவாக இருக்கின்றது. புதிய நாடாளுமன்றம் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும். அதற்காக அரசுக்கு சகல ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம் என்றார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment