“ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் “ என்ற
சிந்தனை எனக்கு, நான் இலக்கிய உலகில் பிரவேசித்த பின்னரே தோன்றியது.
1970 களில் மல்லிகை ஆசிரியரால் நான் ஈழத்து இலக்கிய உலகிற்கு
அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் எனக்கு நண்பர்கள் உருவானார்கள்.
அவ்வாறு 1975 இல் எனக்கு அறிமுகமானவர்தான் தற்போது கனடாவில் வதியும் சிந்தனைப்பூக்கள்
பத்மநாதன்.
தமிழ், கலை இலக்கியப்பரப்பில்
பல பத்மநாதன்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் என்பவரைப்பற்றிச்
சொன்னால், இவர்தான் கனடாவில் வாழ்ந்தவாறு சிந்தனைப்பூக்கள்
என்ற தலைப்பில் தொடர்ந்தும் எழுதிவரும் எழுத்தாளர் என்பது தெரியவரும்.
யாழ்ப்பாணத்திலிருந்து
மல்லிகை இதழ் வெளியாகிக்கொண்டிருந்த
காலப்பகுதியில், ஒவ்வொரு மாதமும் மல்லிகை அச்சாகியதும், அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா, எனக்கு ஒரு அஞ்சலட்டை அனுப்புவார்.
“ மல்லிகை பிரதிகள் கொழும்பு பழைய சோனகத்தெருவில்
அமைந்துள்ள விற்பனை – விநியோக நிலையத்திற்கு லொறியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சென்று
பெற்றுக்கொண்டு, கொழும்பிலும், நீர்கொழும்பிலும் விநியோகிக்கவும் . “ என்ற தகவல் அந்த அஞ்சலட்டையில் எழுதப்பட்டிருக்கும்.
கொழும்பு சென்று மல்லிகை
பிரதிகளை பெற்றுக்கொண்டு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அமைந்திருந்த ராஜேஸ்வரி பவன், ஆனந்த பவன், லக்ஷ்மி
பவன், மற்றும் வெள்ளவத்தையிலிருக்கும் சில புத்தக கடைகளுக்கும் விநியோகிப்பேன்.
ஜீவா சில நாட்களில் ரயில்
ஏறி கொழும்புக்கு வந்துவிடுவார்.
இங்கு ஜீவா தங்குவதற்கென
சில இடங்கள் இருக்கும். ஜீவாவை பார்க்கச்சென்ற
சந்தர்ப்பங்களில் எனக்கு அறிமுகமானவர்கள்தான் தம்பையா அண்ணர், செல்வம் மற்றும் மணியண்ணன்,
மேமன் கவி உட்பட பலர். இவர்களில் தம்பையா அண்ணர், பின்னாளில் ஜீவாவின் சம்பந்தியானார்.
இவர்களில் செல்வம் அண்ணரின்
சகோதரர்தான் பத்மநாதன்.
பகுத்தறிவுச்சிந்தனையுடன்
பத்மநாதன் அக்காலப்பகுதியில் என்னோடு பல விடயங்களை பேசியிருக்கிறார்.
நான் இவரை முதல் முதலில்
சந்தித்த காலப்பகுதியில், இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில்
டிப்ளோமா பயிற்சி நெறிக்கு வந்திருந்தார்.
பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு,
இன்றும் பல துயரச் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கும் சமகாலத்தில், அன்று ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்னர் என்னோடு பகுத்தறிவுச் சிந்தனைகளை பகிர்ந்துகொண்ட இனிய நண்பர் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் பற்றி இந்த
முதல் சந்திப்பு தொடரில் சொல்ல முன்வந்துள்ளேன்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு
1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வருவதற்கு முன்பே இவர் 1985 இல் கனடாவுக்குச் சென்றுவிட்டார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர்,
இவரை 2007 ஆம் ஆண்டு இறுதியில் கனடா சென்றிருந்தவேளையில் ஸ்காபரோவில் சந்தித்தேன். அதன்பின்னர்,
கொவிட் பெருந்தொற்று வழங்கிய வரப்பிரசாதத்தினால், அடிக்கடி மெய்நிகர் நிகழ்ச்சிகளில்
பார்த்துப் பேசிவந்தேன்.