.
வெடுக்கு நாறியில் வினையை விதைத்தனர்
அடக்கு முறையினை அவிழ்த்து விட்டனர்
தடுத்து நிறுத்திடச் சைவங் காத்திட
எடுத்து நிறுவிட எவரும் இல்லையோ? 1
கெடுதல் செய்வதே கீழோர் எண்ணமோ?
கொடுமை இவருடன் கூடப் பிறந்ததோ?
அடிமை வாழ்விதன் அவலந் தீருமோ?
விடிவின் கனவதும் வீணாய்ப் போகுமோ? 2
புத்தர் சொன்னதைப் புறத்தில் தள்ளியே
பித்தர் செய்திடும் பிழைகள் பொறுப்பதோ?
சித்தஞ் சிவனிடம் வைத்த அடியரை
நித்தம் அன்பிலா
நீசர் வதைப்பதோ? 3
இறைவன் நினைவினில் இரவு முழுவதும்
மறைகள் ஓதிட மனது உருகிடக்
குறைகள் நீங்கிடக் கூடி னோர்களை
கறைகள் படிந்தவர் கலைக்கக் காண்பதோ? 4
தேர்தல் வந்திடத் திட்டம் இட்டிவர்
சார்தல் இவ்வகைத் தாழ்ந்த செயலென
ஓர்தல் நன்றென உணர்ந்து நாமிதால்
சோர்தல் தவிர்த்தவர் சூழ்ச்சி தகர்ப்பமே! 5
கடவுள் அருளினாற் காலம் மாறிடும்
இடர்கள் அழிந்திடும் இன்னல் தீர்ந்திடும்
தொடருந் தொல்லைகள் தொலைந்து போய்விடும்
திடமாய் நம்பியே தீர்வைக் காண்பமே!! 6
ஓர்தல் – ஆராய்ந்து தெளிதல்