.
‘பீட்சா’ படத்திற்குப் பிறகு நிச்சயமாக செம திரில்லர் என்று இந்தப் படத்தைச் சொல்லலாம்..! குறும்பட இயக்குநர்களின் வெற்றி ஆரவாரத்தில் அடுத்த தலைப்பு இந்தப் படம்தான். இயக்கிய ரமேஷ் ஏற்கெனவே சில குறும்படங்களை எடுத்து அதற்காக விருதுகளைப் பெற்றிருப்பவர். இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துகள் ரமேஷ்..
‘தெகிடி’க்கு இலக்கணத் தமிழில் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. ஆளாளுக்கு ஒன்றை சொல்கிறார்கள். ‘பகடை’, ‘தாயம் உருட்டுதல்’, ‘பரமபதம்’ போன்ற விளையாட்டுக்களுக்கு தெகிடி என்றுதான் பெயராம். இங்கே தமிழுக்கு அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட இலக்கணப் புலிகள் யாருமில்லாததால் அவரவர்க்கு எது சரியென்று படுகிறதோ.. அதையே நினைத்துக் கொள்ளுங்கள்..! எனக்கு ‘பகடை’யே சரியென தோன்றுகிறது..!
எம்.ஏ. கிரிமினலாஜி முடித்துவிட்டு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் ஹீரோ வெற்றி. அவருக்கு சிலரை பாலோ செய்யும் வேலை தரப்படுகிறது. அடுத்தடுத்து கொடுத்த வேலைகளைக் கச்சிதமாகச் செய்கிறார். ஹீரோயினை யார் என்று தெரியாமலேயே பார்த்தவுடன் காதல் கொண்டுவிடுகிறார். அதே நேரம் ஹீரோயினையும் ஃபாலோ செய்ய வேண்டிய பணியும் கிடைக்கிறது. ஹீரோ இதற்கு முன்பு பாலோ செய்த 3 பேர் திடீரென்று மரணமடைய.. இதில் ஏதோ சூது இருப்பதாக வெற்றிக்கு சந்தேகம் வருகிறது. அந்தச் சந்தேகத்தைத் தேடி அவர் போக.. அதுவொரு பெரிய சதி வலை என்று தெரிகிறது.. இதற்கு மேல் சொன்னால் படம் பார்க்கும் உங்களுக்குச் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ‘பீட்சா’ போலவே கிளைமாக்ஸ் சஸ்பென்ஸ்தான் படமே என்பதால் இதற்கு மேல் வேண்டாம்.. தியேட்டருக்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள்..
படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள் படம் மெதுவாக நகரத் துவங்குவதும்.. ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருக்கும் பய உணர்வு.. உண்மையைச் சொல்லாமல் தவிக்கும் உணர்வு போன்றவையெல்லாம் சில நேரங்களில் படத்தின் தொய்வுக்குக் காரணமாக இருந்தாலும் படத்தின் பிற்பாதியில் ஹைவேஸில் பறக்கும் ஆடி கார் போல திரைக்கதை வேகமெடுத்துச் செல்கிறது..
“கரெக்ட்டா அப்ஸர்வேஷன் பண்ற..?” என்று ஆரம்பித்து டிடெக்டிவ் ஏஜென்ஸியை ரெகமெண்ட் செய்யும் புரொபஸர். அலட்டலே இல்லாமல் அழகாக செய்யப் போகும் வேலையைப் பிரித்துக் கொடுக்கும் டிடெக்டிவ் ஆபீஸர்கள்.. ஹீரோயின் தனி மரம் என்பதை சில காட்சிகளில் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது.. சந்தேகத்துடன் பார்த்துவிட்டு பின்பு ஹீரோ சொல்லும் பொய்யை நம்புவது.. சட்டென எழும் அந்தக் காதலைத்தான் நம்ப முடியலையே தவிர.. காதல் ஊடல்கள்.. காட்சிகள்.. ‘வாப்பா’.. ‘போப்பா’.. என்ற பேச்சுகள் ரசனை.
மரணங்களுக்குக் காரணம் எதுவாக இருக்கும் என்ற ஆவலை நாலா பக்கமும் இழுத்துவிட்டுச் செல்லும் திரைக்கதை.. அதற்கான முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் இடம் மிக சுவாரஸ்யம்.
இப்படியெல்லாம் ஒரு இன்ஸ்பெக்டர் சென்னைல கிடைப்பாரான்னு எதிர்பார்க்க வைச்சிருக்கு ஜெயபிரகாஷின் கேரக்டர். ஒரு கொலையை அணுகும்விதம்.. அதற்கான எவிடென்ஸை எங்கேயிருந்து பிடிப்பது.. அக்யூஸ்ட்டுகளை எப்படி ஹேண்டில் செய்வது.. கிடைத்த துப்புக்களை சர்ச் செய்வது.. பின்னாடியே விரட்டுவது என்று பல கேஸ் டயரிகளை இந்த ஒரே படத்தில் புரட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
ஹீரோவின் அப்ஸர்வேஷனே இடைவேளைக்கு பின்பு காட்சிகளை அடுத்தடுத்து நகர்த்திச் செல்வது அருமையான உத்தி.. ஹீரோ அசோக் செல்வனின் அலட்டலில்லாத நடிப்பு இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம்.. வேறு ஹீரோவை போட்டிருந்தால் அவருக்காக நான்கைந்து காட்சிகளை வைக்க வேண்டியிருந்திருக்கும். தப்பித்துவிட்டார் இயக்குநர்.. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்படி அவர் நடிப்பு ஓகேதான் என்றாலும், சில காட்சிகளில் நமக்கே பொறுமையிழந்து போக வேண்டிய சூழல்.. தனியார் டிடெக்டிவ்வா இருப்பவன்.. இந்த அளவுக்கு கேர்லெஸ்ஸாக நிகழ்வை அணுகுவாரா என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது..!
அசோக்செல்வனிடம் குறை காண வாய்ப்பில்லை. இது போலவேதான் ஜனனி ஐயரிடமும். பொண்ணுக்கு வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குதாம்.. ரொம்ப வருத்தப்பட்டுச்சு.. ஆனா கிடைச்ச வாய்ப்புகளை விட்ராதம்மா என்றுதான் அட்வைஸ் செய்தேன்.. அந்தக் கண்களை வைத்து இன்னும் கொஞ்சம் காவியமே படைத்திருக்கலாம். படத்தின் தன்மை கெட்டுவிடும் என்பதால் பாடல் காட்சிகளிக்கூட கொஞ்சம் அடக்கமாகவே எடுத்திருக்கிறார் இயக்குநர்.
படத்திற்கு கொஞ்சம் ஸ்பீட் பிரேக்கராக இருந்தது பாடல் காட்சிகள்தான். அவைகளை மொத்தமாக வெட்டியிருந்தால்கூட படம் நன்றாகவே இருந்திருக்கும். பின்னணி இசைதான் பிற்பாதியில் ஆட் கொண்டிருக்கிறது.. இது படம் பார்க்கும்போது தெரியவில்லை. வெளியில் வந்த பின்புதான் தெரிகிறது.. இசையமைப்பாளரான அந்தச் சின்னத் தம்பிக்கு எனது வாழ்த்துகள்..!
இந்தப் படத்தின் கதை சொல்லும் ஒரு மிகப் பெரிய ஊழலை வெளிப்படையாக இங்கே பேச முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டாரே என்கிற சின்ன கோபம் தவிர, இந்த இயக்குநர் மீது வேறெதுவும் இல்லை.. இந்தப் படம் மட்டும் சஸ்பென்ஸ், திரில்லர் வகையில் இல்லாமல் சதாரணமான கமர்ஷியல் படங்களாக வந்திருந்தால் இந்த விமர்சனப் பதிவு 10 பக்கங்களை தாண்டியிருக்கும். அத்தனை விஷயங்கள் இருக்கின்றன இந்தக் கதையில்.. ஆனால் முடியலையே..?
காதல் இல்லாமலும் படம் எடுக்க முடியாததால் ஜனனி ஐயருடனான காதலை வளர்த்துவிட்டு பின்பு பாலோ செய்யப் போவதாக மாற்றியிருக்கிறார்கள். காதலே இல்லாமலும் இதனை எடுத்திருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும்..
தயாரிப்பாளர் சி.வி.குமார் அவருடைய கதை தேர்வில் மிக உறுதியாகவே இருக்கிறார்.. படத்துக்குப் படம் வித்தியாசமாக இருக்க வேண்டும். அதிக நேரமும் எடுக்கக் கூடாது.. குறைவான பட்ஜெட்டாகவும் இருக்க வேண்டும்.. விற்பனைக்கு எளிதாகவும் இருக்க வேண்டும் என்ற அவருடைய வியாபாரத் தந்திரம் இன்றைய புதிய தயாரிப்பாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..
அடுத்த பாகம் வந்தாலும் வரலாம் என்பது போல முடித்திருப்பதுதான் இது போன்ற திரில்லர் படங்களின் வழக்கம். இதிலும் அப்படியே..! ஆனால் பலரும் முன்பே கவனிக்கத் தவறியை ஒன்றை கிளைமாக்ஸில் லைட் போட்ட பின்பும் காட்டுகிறாரே இயக்குநர்.. எந்த அளவுக்கு நம்மை ஏமாற்றியிருக்கிறார் பாருங்கள்..! வெல்டன் இயக்குநர்..
அவசியம் பார்க்க வேண்டிய படம் தெகிடி.. மிஸ் பண்ணீராதீங்க..!
nantri truetamilan.com