மீராவுடன் கிருஷ்ணா
மனைவிகளின் தகாத உறவுகள், கணவர்களின் சந்தேக புத்தியை மையமாகக் கொண்டு வந்திருக்கும் இன்னொரு படம் மீராவுடன் கிருஷ்ணா.
கொஞ்சம் நாடகத்தனம், கொஞ்சம் அமெச்சூர்த்தனம் இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம் ரக படங்களில் இதுவும் ஒன்று.
தாய் சொல்லை தட்டாத பிள்ளையான கிருஷ்ணா, அம்மாவின்
வற்புறுத்தலால் மீராவை திருமணம் செய்கிறார்.
மீரா ஒரு டாக்டர். கிருஷ்ணா சுமாராக இருந்தாலும், அநாதைப் பிணங்களை தானே முன்வந்து பொறுப்பேற்று அடக்கம் செய்யும் அவரது நல்ல மனதைப் பார்த்து திருமணம் செய்து கொள்கிறார்.
சந்தோஷமாக தாம்பத்யம் தொடங்கும் நேரத்தில், கிருஷ்ணாவுக்கு ஒரு மர்ம ஆசாமியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. மீராவைப் பற்றி அந்த நபர் தவறாகச் சொல்ல சந்தேகப் பேய் பிடித்துக் கொள்கிறது கிருஷ்ணாவை.
அது பெரிய சண்டையாக மாறுகிறது. ஆனால் அம்மா மீதுள்ள அதீத அன்பால், எதையும் வெளியில் சொல்லாமல் மூடி மறைக்கிறான் கிருஷ்ணா.
அந்த நேரம் பார்த்து மீரா கர்ப்பமாக அந்தக் குழந்தைக்கு தந்தை யார் என்று மனைவியை நேரடியாகவே கேட்கிறான். சண்டை முற்றுகிறது. குழந்தையை அழிக்கவும் திட்டமிடுகிறான்.
இதனால் வெறுத்துப் போன மீரா, தாய் வீட்டுக்குப் புறப்படுகிறாள். அப்போதுதான் தன் சந்தேகங்களுக்கான காரணங்களைச் சொல்கிறான் கிருஷ்ணா. அந்த ப்ளாஷ்பேக் அழுத்தமானது. இறுதியில் கிருஷ்ணாவின் சந்தேகம் தீர்ந்ததா... என்பதை ஒரு முறை தியேட்டரில் பார்த்துவிடுங்கள்.
சினிமாவில் யாரிடமும் உதவியாளராகக் கூட இல்லாமல், தன் முயற்சியில் தனக்குத் தெரிந்த சினிமாவை எடுத்த கிருஷ்ணாவுக்கு முதலில் வரவேற்புகள். வாழ்த்துகள்.
முதல் காட்சியே வித்தியாசமாகத்தான் ஆரம்பிக்கிறது. ஹீரோ தனக்குத் தானே பேசிக் கொள்ளும் காட்சிகளைப் பார்க்கும்போது, திரும்பவும் சைக்கோ கதையா என்ற கேள்வி எழுந்தாலும், அதை அப்படியே காமெடியாக மாற்றிவிடுவதால் தப்பிக்கிறோம்.
படத்தின் இயக்குநரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். பரவாயில்லை ஆங்காங்கே கொஞ்சம் மிகை நடிப்பு இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இப்போதுள்ள நடிகர்களுக்கு கொஞ்சமும் குறையாத திறமை அவரிடம் இருக்கிறது.
நாயகியாக வரும் ஸ்வேதா இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார். குறிப்பாக சந்தேக புத்தியால் பேயாட்டம் போடும் கணவனை அதட்டி, கட்டுப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.
ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த 'தமிழ் அண்ணன்' (எம்ஆர்ஏ விஜய்) கதை மனதைப் பிசைகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி தமிழ் அண்ணன்கள், அவர்களின் சிஷ்யப் பிள்ளைகள் சகிதம் வலம் வருவதைப் யாரும் பார்த்திருக்க முடியும். அந்த 'க்ளீன் அண்ணன்' கடைசியில் இடுப்பு வேட்டி அவிழ்வதுகூட தெரியாத அளவு மனநிலை பிறழ்ந்து, ஒரு அநாதையாய் செத்துக் கிடக்கும் காட்சி மனதை என்னமோ செய்கிறது.
பிரதான காமெடியன் என்று யாருமில்லா விட்டாலும், அந்தக் குறை
தெரியாத அளவு பார்த்துக் கொள்கிறார் ஜிகினா ஜித்தன். நண்பனுக்கு துரோகம் செய்த மனைவியை அம்பலப்படுத்துவதும், அவர்களை பின்னர் சேர்த்து வைப்பதும் இயல்பான காட்சிகள்.
சில காட்சிகளில் ஒருவித தொழில் முறையின்மை தெரிகிறது. முதல்படம் என்ற வகையில் அது புரிந்து கொள்ளக் கூடியதே. திரும்பத் திரும்ப ஒரேமாதிரியான காட்சிகள் வருவது, அந்த மர்மக் குரல் யாரென்று கூட கண்டுபிடிக்க முயற்சிக்காமல், அதை மட்டும் வைத்தே மனைவியை சந்தேகப்படுவது போன்ற குறைகளை சரிசெய்திருக்கலாம்.
அந்த வேலைக்காரி பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் நாசூக்காக கையாண்டிருக்கலாம். இடைவேளைக்குப் பிறகு பல காட்சிகள் வெகுநேரம் நீள்கின்றன. பார்வையாளர்களை சலிப்படைய வைக்கிறது.
நல்லவேளை படத்தில் இரண்டு பாடல்கள்தான். அவற்றில் சந்தனம் சேறாகுமா.. என்ற ராஜேந்தர் டைப் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை கூட ஓகேதான்(செந்தில் பிரசாத்).
படத்தின் ஒளிப்பதிவாளர் எம்ஆர்ஏ விஜய். தயாரிப்பாளரும் கூட(தமிழ் அண்ணனாக வருபவரும் இவரே).
குறைகள் இருந்தாலும், எந்தக் காட்சியிலும் நெளிய வைக்காமல் நேர்த்தியாக கதை சொல்லத் தெரிந்திருக்கிறது கிருஷ்ணாவுக்கு. அந்தவகையில், அவரை வரவேற்போம்.
நடிகர்கள்: ஏ கிருஷ்ணா, ஸ்வேதா, ராதா, மனோபாலை, ஜிகினா ஜித்தன், எம்ஆர்ஏ விஜய்.
இசை: கே கே செந்தில் பிரசாத்.
எழுத்து இயக்கம்: ஏ கிருஷ்ணா.
தயாரிப்பு: எம்ஆர்ஏ விஜய்.
நன்றி விடுப்பு
ஒரு கல் ஒரு கண்ணாடி
'ர
த்தம் பார்க்காம ஓயறதில்ல' என்ற வெறியோடு திரியும் கோடம்பாக்கத்தின் பிளேடு பக்கிரிகள் சிலர், கொஞ்ச நாளைக்கு ஓ.கே ஓகே டைரக்டர் ராஜேஷிடம் 'அப்ரசண்டாக' சேர்ந்தால் அடுத்த ஜென்மத்துக்காவது பர்மனன்ட் ஜாப் உறுதி. தம்மாத்துண்டு கதையை வைத்துக் கொண்டு எம்மாம் பெரிய ஷோ நடத்துராங்கப்பா...!
இந்த சிரிகிரி அசெம்பிளியில் ஸ்பெஷல் மார்க் எடுத்து பாஸ் பண்ணியிருக்கிறார் 'வருங்கால தமிழகம்' என்று உடன்பிறப்புகளால் கொஞ்சப்படும் உதயநிதி. ஒரு படத்துக்கு ரெண்டு தடவ டப்பிங் பேசுன ஒரே ஆர்ட்டிஸ்ட் நானாதான் இருப்பேன் என்று ஒப்புக் கொள்கிற தைரியமும், சுய பரிசோதனையும் எந்த ஆர்ட்டிஸ்டுக்கு இருக்கு? அதுக்காகவே ஒரு ஸ்பெஷல் நமஸ்காரமண்ணே!
மைலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் அடிக்கடி சந்திக்கிற பாடி லாங்குவேஜுடன் சந்தானம். அவருக்கு பக்கபலமாக உதயநிதி. ரெண்டு பேருக்கும் கிடைக்கிற காதலிகளும், அவர்கள் இவர்களை படுத்தி எடுப்பதுதான் முழு படமும். விட்டால் புளிக்க புளிக்க ஊத்தப்பம் போடுகிற கதைதான். ஆனால் அந்த ஊத்தப்பத்தின் மீது டைரக்டர் தெளிக்கிற மசாலா ஐட்டங்கள் இருக்கிறதே, அதுதானய்யா ருசி.
டிராபிக் சின்னலில் ஹன்சிகாவை பார்த்த முதல் பார்வையிலேயே பேஸ்த் ஆகித் திரியும் உதயநிதி, விரட்டி விரட்டி காதலிக்கிறார் அவரை. ஹன்சிகாவோ எல்லா பெண்களையும் போல எதுக்கு அவன் கூடல்லாம் சேர்ற? என்று சந்தானத்தை கட் பண்ண சொல்ல, அதே கதைதான் சந்தானத்தின் விஷயத்திலும். அங்கேயும் ஒரு மொக்கை பிகர் சந்தானத்திற்கும் உதயநிதிக்கும் நடுவே பேஸ்மென்ட் எழுப்பி பில்டிங் கட்டுகிறது.
எல்லாத்தையும் மீறி எப்படி சேர்ந்தது ஜோடிகள்? கொஞ்சமும் யோசிக்காமல் லாஜிக்கை மடித்து 'டஸ்ட் பின்'னில் எரிந்துவிட்டு போனால், மூணு மணிநேரம் சுகமோ சுகம்.
நடிப்பு விஷயத்திலும் டான்ஸ் விஷயத்திலும் தான் எப்படி என்பதை சம்பந்தப்பட்ட ஹீரோவே ஒப்புக் கொண்ட பின், நொள்ளை நொட்டை என்று அலசிப் பிழிவானேன்? ஆனால் உதயநிதி ஒப்புக் கொண்ட மாதிரி அவ்வளவு மழுங்கல் இல்லை அவர். உறுத்தாமலிருக்கிறார் ஒவ்வொரு பிரேமிலும். நம்ம வீட்டு பிள்ளை என்ற உணர்வையும் கொடுக்கிறது அவரது அழகான புன்னகை. இடியட் ஆஃப் த நான்சென்ஸ் ஆஃப் த என்று விடாமல் முழங்கும் அவரது சப்பை இங்கிலீஷ், வில்லேஜ் மாணவர்களின் விக்ஸ் மிட்டாய்.
உதயநிதிக்கு ஒரு விண்ணப்பம். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னை மண்டையில இறக்க ஆயிரம் பேர் இருக்காங்க கோடம்பாக்கத்தில். நவரச நாயகன் கார்த்திக் விட்ட இடத்தை பிடிக்க நீங்க தோதா இருப்பீங்கன்னு மனசு சொல்லுது. டிராக் மாறாம ட்ரை பண்ணுங்க தலைவா, ப்ளீஸ்!
உதயநிதி ஒண்ணாம் நம்பர் ஹீரோ என்றால், பக்கத்தில் விழுகிற ஒவ்வொரு சைபரும் அதன் மதிப்பும் சந்தானமன்றி வேறில்லை. இவர் வாயிருக்கிற இடத்தில் வாஸ்து பகவானின் லெக்சுரி பிளாட்டும் இருக்கிறது போலும். அதை திறக்கும்போதெல்லாம் வெடித்து சிதறுகிறது தியேட்டர்.
'டிபன் தின்ங்கிறவன் ஒருத்தன். டிப்ஸ் வைக்கறது இன்னொருத்தனா' என்று போகிற போக்கில் போட்டுத்தள்ளுகிற சக்தி இவருக்கு மட்டுமே 'வாய்'த்த கலை. அதுமட்டுமல்ல, தன் வழக்கமான பாடி லாங்குவேஜை இந்த படத்தில் கைவிட்டுவிட்டு புது ஸ்டைலை பின்பற்றியிருக்கிறார். உமா பத்மநாபனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது பேசுகிறாரே, அதற்காகவே இன்னும் ஏழெட்டு முறை பார்க்கலாம் இந்த படத்தை.
சந்தானத்தின் அந்த ஜாங்கிரி யாரோ? சரியான குள்ளப் பிசாசு...
ஒரு காட்சியில் ஹன்சிகாவை இஷ்டத்திற்கு விமர்சிக்கிறார் ஒரு நவீன பிரதாப்போத்தன். நல்லவேளை, தமிழ் தெரிந்திருந்தால் அந்த காட்சியில் பொண்ணு நடிச்சுருக்குமோ என்னவோ? போத்தனின் பேச்செல்லாம் வேஸ்ட் என்பதை போல, இந்த மைதா மாவை பார்க்கிற போதெல்லாம் ரொட்டியாகிறது நம் மனசு.
சரண்யா-அழகம்பெருமாள் பகுதி ஒப்புக்கொள்ள முடியாத கற்பனை என்றாலும், சரண்யாவின் நடிப்பை ரசிக்க அருமையான வாய்ப்பு. நல்லவேளை, தன் ரிசல்ட்டை பார்க்காமல் விட்டாரே என்ற நிம்மதியையும் துடிப்பையும் இவரை விட சரியாக எவரால் செய்திருக்க முடியும்?
ஹாரிசின் பாடல்கள் அவரது முந்தைய பாடல்களின் காப்பி என்றாலும், வேணாம் மச்சான் காதலு மட்டும் சந்து பொந்தெல்லாம் பட்டைய கிளப்பும். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு என்பதாலேயே இன்னும் கொஞ்சம் மின்னுகிறார்கள் எல்லாரும். தினேஷின் நடன அசைவுகள் அப்படியே ரிப்பீட். (ஸ்டைலை மாத்துங்க வாத்தியாரே)
ஒரு கல்லு, ஓராயிரம் லொள்ளு!
நன்றி தினக்குரல்