தலிபான் பயங்கரவாதிகளின் கொலைவெறித் தாண்டவத்துக்குப் பிறகு, பெஷாவர் நகர ராணுவப் பள்ளிக்கூடமே ரத்தத்தை உறையவைக்கும்படி காட்சி தருகிறது. பள்ளிக் கட்டிடங்களின் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் துப்பாக்கிகளிலிருந்து சீறிப் பாய்ந்த குண்டுகள் ஏற்படுத்திய வடுக்களும், மாணவர்களின் உடல்களிலிருந்து பீறிட்டு அடித்த ரத்தமும், உடலிலிருந்து பிய்ந்த தசைகளின் துணுக்குகளும், சிதறிய பைகளும், புத்தகங்களும், கருவிகளுமாகக் காட்சிதருகின்றன.
பள்ளிக்கூடத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தலிபான்கள் எல்லாக் கட்டிடங்களுக்கும் சென்று கண்ணில் பட்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டுக்கொன்றிருக் கிறார்கள். பின் வாசல் வழியாகத் தப்பி ஓடிய பலரும், இறந்தவர் களுக்கு நடுவில் உயிரற்ற சடலம் போலப் படுத்துக்கொண்டு நடித்த சிலரும்தான் உயிர் தப்பியிருக்கிறார்கள்.
இனி, அடுத்தது என்ன?
“நீங்கள் சொல்லி அனுப்பியபடி பள்ளிக்கூடத்தில் இருந்த எல்லா மாணவர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டோம். இனி, அடுத்து என்ன செய்ய வேண்டும்?” என்று பயங்கரவாதிகளின் தலைவன் அபுசார், இந்தப் படுகொலைகளுக்குப் பிறகு பள்ளிக்கூடத்திலிருந்து எங்கோ இருந்த யாரிடமோ கேட்டிருக்கிறார்.