இயல் விருது பெறும் எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். செ .பாஸ்கரன்

 .

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் 2022. இந்த விருதுகள் வருடம் தோறும் இலக்கியவாதிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு சிறந்த விருதாகும். இந்த விருது கோவிட் நோய்த்தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டில் வழங்கப்படவில்லை. அதனால் 2022ஆம் ஆண்டு இந்த இயல் விருது இருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர், படைப்பாளி, ஆசிரியர் இப்படி பல முகங்களை கொண்ட அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரிலே வாழுகின்ற திரு முருகபூபதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அடுத்ததாக பாவண்ணன் என்று அழைக்கப்படுகின்ற பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களை தமிழ்முரசு அவுஸ்திரேலியா வாழ்த்துகின்றது.

எமது அன்புக்குரிய மூத்த எழுத்தாளரும், இனிய நண்பரும், எழுத்தாளர்களை எப்போதுமே ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஒருவருமான திரு முருகபூபதி பல படைப்புகளை தந்தவர், சமூக சேவையாளர்.

திரு லட்சுமணன் முருகபூபதி அவர்களுக்கு இந்த இயல் விருதுகள் 2022 கிடைத்தது உண்மையிலேயே மகிழ்ச்சி அடையக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் இலங்கையிலே பிறந்த ஊடகவியலாளர்,பத்திரிகையாளர்,எழுத்தாளர் திரு முருகபூபதி அவர்கள் இன்றும் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டு தொடர்ச்சியாக வாரம் தோறும் பல பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளும் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நேர்மையான எழுத்தாளர்.

தினமுரசுஅவுஸ்ரேலியா என்ற இணையதள பத்திரிகையிலே வாரம்தோறும் அவருடைய எழுத்துக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றது. இயல்பாகவே எல்லோரையுமே ஆதரிக்கும் ஒரு மூத்த எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இணையதள பத்திரிகையாக பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் முரசு ஆஸ்திரேலியாவிற்கு ஆரம்ப காலங்களிலேயே ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உள்ளுர் பத்திரிகைகள் வளரவேண்டும் என்று ஊக்குவித்த ஒரு எழுத்தாளர்.

பொய்மான் அவுஸ்திரேலிய தமிழ் திரைப்படம் நேர்காணல்

 .

அவுஸ்திரேலியாவில் தைமாதம் 20ம் திகதி திரைக்கு வர இருக்கும் பொய்மான் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நெறியாளருமான டாக்டர் ஜே ஜெயமோகன் அவர்களுடனான ஒரு கலந்துரையாடல் - செ .பாஸ்கரன் 



ஆதவனும் வந்தான் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ... அவுஸ்திரேலியா


ஆதவனும் வந்தான் அவனி


எலாம்  நல் வெளிச்சம்
பூதலத்து இருள் அகன்று
புவி ஒளியில் மிதந்தது 

தேனுண்ண வண் டெல்லாம்

தேடி மலர் அமர்ந்தது
தித்திக்க தேன் பருகி
திசை யறியா நின்றது

மது ஈந்த மாமலர்கள்

மகிழ் வெய்தி நின்றன
வண்டெல்லாம் இசை பாடி
மயக் குற்றுக் கிடந்தன

வண்ணப் பறவை யெல்லாம்

வான் பரப்பில் வந்தன
மண் பார்த்து மகிழ்வாக
வந் தங்கே சேர்ந்தன

மல்லிகை வாச மதை
வளி சுமந்து வந்தது
வானத்து விண் மீன்கள்
மறைந் திருந்து முகர்ந்தன 


கோழி அது குரலாலே

கொண்ட துயில் கலைந்தது
குறை களையும் மருந்தாக
கோவில் மணி ஒலித்தது

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 47 கடந்து வந்த பாதையை மறப்போமேயானால், செல்லும் பாதையும் இருளடைந்தே காணப்படும் ! முருகபூபதி


அவுஸ்திரேலியாவில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதி தொடக்கிவைத்து நான் உரையாற்றும்போது,  சொன்ன கருத்துக்களை இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன்.

பேரன்புமிக்க எழுத்தாளர்களே – கலைஞர்களே சகோதர சகோதரிகளே, இன்றைய எமது சந்திப்பு எமது புலம்பெயர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.

நாம் முன்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நேரில் கண்டு கலந்துரையாடியிருக்கலாம். ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தறியாமலே கலை, இலக்கிய உணர்வை மாத்திரமே ஆதாரமாகக்கொண்டு தொலைபேசி வாயிலாகவும் மின் அஞ்சல் மற்றும் தபால் மூலமாகவும் உரையாடியிருக்கலாம்.

எம்மத்தியில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.  வித்தியாசமான


பார்வைகளை தத்தமக்கென்றே தனித்துவமாகக் கொண்டிருக்கலாம்.

அதனால்தான் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாம் அனைவரும் இவ்விதம் ஒன்றுகூடல் வேண்டும் என்ற அறைகூவலை விடுத்து அழைத்திருந்தோம்.  நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. அதுதான் கலை, இலக்கியக் குடும்பம். படைப்பிலக்கியவாதிகளையும் கலைஞர்களையும் எம்மால் ஒன்றுகூடச்செய்து கருத்துப்பரிவர்த்தனை செய்ய மாத்திரமே முடியுமே தவிர ஓரணியில் திரட்டும் பணியை நாம் செய்யமாட்டோம்.

படைப்பாளிகளும் கலைஞர்களும் சுதந்திரமானவர்கள். அவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடாமல், நிபந்தனைகள் விதிக்காமல்,  குற்றம் குறைகளைத் தேடிக்கண்டுபிடிக்காமல் மனித நேயத்தை மேம்படுத்தி, ஆயிரம் பூக்கள் மலரும் நந்தவனத்தில் உலாவப்போகும் உணர்வுடன் ஆயிரம் சிந்தனை கொண்டவர்களிடமிருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் எண்ணத்துடனேயே இந்த எழுத்தாளர் விழாவுக்கான பூர்வாங்க வேலைகளை மிகுந்த உற்சாகத்துடன் ஆரம்பித்தோம்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுசன ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், சமுதாயத்தில் -  உலக அரங்கில் மிகவும் வித்தியாசமானவர்கள். கவனத்துக்குள்ளாகுபவர்கள்.  கண்காணிக்கப்படுபவர்கள். கணிக்கப்படுபவர்கள்.

காரணம் இவர்கள் போதகர்கள் அல்ல. பெரும்பாலும் போதகர்கள் சமய நிறுவனங்களையும் அரசியல் நிறுவனங்களையுமே சர்ந்திருப்பர்.

மக்களிடமே வாழ்ந்து, மக்களின் வாழ்வையே தரிசித்து, தாம் உள்வாங்கிக்கொண்ட அனுபவங்களையும், பெற்றுக்கொண்ட தரிசனங்களையும் மீண்டும் தமக்குத் தெரிந்த மொழியில் தமது தனித்துவமான பார்வையுடன் தமக்குத் தோதான சாதனத்தின் வாயிலாக மக்களிடம் பகிர்ந்தளிப்பவர்களும் தேடல் மனப்பான்மையுடன் புதிய புதிய எண்ணங்களை தத்தம் மனதில் விதைத்து விருட்சமாக்கி அதன் நிழலில் மக்களை அரவணைத்து மனித மனங்களை செழுமைப்படுத்தும் பணியிலும் கலாரசனையில் புதிய உத்வேகம் ஊட்டுவதிலும் பெரும் பங்காற்றுபவர்கள் இந்த ஆக்க இலக்கியவாதிகளும் கலைஞர்களும் பத்திரிகையாளர்களும் பொதுசன ஊடகவியலாளர்களும்தான்.

கவிதை - திரு முருகபூபதி ஐயாவுக்கு வாழ்த்துவெண்பா - மெல்போர்ன் அறவேந்தன்

 


திரு.முருகபூபதி அவர்களுக்கு 2022 வருடத்திற்கான இயல்விருது

 


ஆலகாலம் – சிறுகதை கே.எஸ்.சுதாகர்


அதிகாலை கொஞ்சம் புகாரும் குளிரும் இருந்தது. சூரியகுமார் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்துகொண்டான். பிக்கறிங்ஸ் வீதியை நோக்கி விரைந்த அவன், இடது புறம் திரும்பிக் கொண்டான். தூரத்தே சாப்பாட்டுக் கடைக்கு முன்னால் நாலைந்துபேர்கள் நிற்பது தெரிகின்றது. ஏழைகளுக்கான பெட்டிக்கடை தான். பெட்டிக்கடைக்குள் ஒரு நீட்டு மேசையும், தோதாக அதன் இருபுறங்களிலும் வாங்குகளும் இருக்கின்றன. ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான். வழமையான தேங்காய்ப்பூ போட்ட வட்ட வடிவ ரொட்டி. விரலளவு தடிப்பத்தில் உள்ளங்கையால் மூடக்கூடிய அளவு. தொட்டுக்க ஆவி பறக்கும் கடலைக்கறி.

கடைக்குள்ளிருந்து வந்த ஒருவன், சூரியகுமாரின் காதிற்குக் கிட்டக் குனிந்து “பாபத் கறி” வேண்டுமா என்று சிங்களத்தில் கேட்டான். சூரியகுமார் தலையை இடமும் வலதுமாக வெறுப்பாக ஆட்டிவிட்டு, “ஒரு பிளேன் ரீ போதும்,” என்றான். குடல் கறி என்றவுடன் அவனது வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. இது காலை உணவு.

மீண்டும் பத்து நிமிட நடையில், துறைமுகம் வந்து விடும். கப்பல் கட்டுமானப் பணியிடத்தில் பொறியியலாளராக வேலை. வெண்ணிற ஆடைக்குள் புகுந்து கொள்வான். உப்புக் கரிக்கும் காற்றின் சுவையை நுகர்ந்தவாறே வேலைக்குள் மூழ்கிவிடுவான். சிறிய திருத்து வேலைகளுக்காகவும், வர்ணம் அடிப்பதற்காகவும் `டெக்’கிற்குள் பெரிதும் சிறிதுமாக சில கப்பல்கள் நிக்கின்றன. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கப்பலொன்று வெள்ளோட்டத்திற்காகக் காத்து நிற்கின்றது. அதன் இறுதிக்கட்ட சோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதியம் வேலையிடத்தில் இலவச உணவு. தினமும் ஒரே வகைச் சாப்பாடு. இரண்டு சைவக் கறிகளுடன் மீன் அல்லது முட்டையுடன் சோறு. எப்போதாவது இறைச்சித்துண்டும் இருக்கும்.

கொழும்பில் வீடு அல்லது அறை வாடகைக்குக் கிடைப்பது முயற்கொம்பு. அதுவும் தமிழ் இளைஞர்களுக்கு என்றால் சொல்லத் தேவையில்லை. சூரியகுமார், நண்பனின் புண்ணியத்தில் கிடைத்த வீட்டில் இருக்கின்றான். அந்தப் புறாக்கூட்டு வீட்டில் சூரியகுமாருடன் படித்த மூன்று நண்பர்களும் கூடவே இருக்கின்றார்கள்.

வேலை தேடி தலைநகருக்கு வந்துவிட்டால் எதையும் பார்க்க முடியாது. பசி பட்டினியைப்பற்றி யோசிக்கக்கூடாது. அரைவயிறு கால்வயிறு நிரம்ப உண்ணுவதுதான் உடம்புக்கு ஆரோக்கியம் தரும். தங்குமிட வாடகை, உடுப்புகள், சாப்பாட்டுச் செலவு போக வீட்டுக்கும் காசு அனுப்புவான்.

பயிர்களை மேயும் வேலிகள்: பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு எச்சரிக்கை ! அவதானி


அனைத்துலக பெண்கள் தினம்,  மகளிர் விழிப்புணர்வு செயலமர்வு என்றெல்லாம் காலம் காலமாக எங்காவது ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டேயிருக்கிறது.

பெண்கள் சந்திப்பு மாநாடுகளுக்கும் குறைவில்லை. பெண்ணியம், பெண்ணிலை வாதம் என்றெல்லாம் உரத்துப் பேசும் பெண்களுக்கும் குறைவில்லை.

பெண்கள் கலந்துகொள்ளும் அறப்போராட்ட எழுச்சிப்பேரணிகளும்


எங்காவது ஒரு ஊரில் நடந்தவண்ணமிருக்கிறது.

ஆனால்,  நாட்டில் நடக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடாயில்லை.  பத்து வயதுக்கும் குறைவான பெண்கள், குழந்தைகளுக்கு சமம். பருவம் எய்தியிருக்காத அந்தக் குழந்தைளையும் காமுகர்கள் விட்டுவைக்கவில்லை.  சமகாலத்தில்  இலங்கையில் எங்காவது ஒரு பெண் குழந்தை நாளாந்தம் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிக் கொண்டேயிருக்கிறது.

ஆனால், வெளியே செய்திகள் கசிவது குறைவு. காரணம் அக்குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்று பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்.

வடபுலத்தில்  அண்மைக் காலத்தில்  ஊரையும் மக்களையும் காக்கவேண்டிய பொலிஸ்  காவலர்கள் ஒரு பெண்பிள்ளையை தொடர்ந்து பாலியல் ரீதியாக  துஷ்பிரயோகம் செய்திருக்கும் செய்தி அதிர்ச்சியைத் தருகிறது.

கடைக்குச்சென்று பொருட்கள் வாங்க வந்த பெண்பிள்ளையை ஒரு முதியவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முனைந்திருக்கிறார்.  அந்தப்பிள்ளையின் அவலக்குரல்கேட்டு வீதியில் சென்றவர்கள் ஓடிச்சென்று காப்பாற்றியிருக்கின்றனர்.

காதலிப்பதாகக் கூறி, அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு நில்லாமல், அந்தக் காட்சியை வீடியோவில் பதிவு செய்து தங்கள் ஈனத்தனத்தையும் தொடரும் கயவர்களின் நடமாட்டமும் பெருகியிருக்கிறது.

இச்செய்திகளையெல்லாம் தினம் தினம் பத்திரிகை ஊடகங்களில்தான் பார்த்து தெரிந்துகொள்கின்றோம். வீட்டுக்குள் முடங்கியிருந்து தென்னிந்திய தொலைக்காட்சி நாடகங்களில் தங்கள் நேரத்தையும் பொழுதையும் செலவிடும் பெற்றோர்கள் குறிப்பாக குடும்பத் தலைவிகள்,  வெளியே என்னவெல்லாம் நடக்கிறது என்பதைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி இருப்பதுபோலத் தெரிகிறது.

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 2 : அழகான பெண்

 


வான் மான் நூஜ்ஜின்
ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான்.

 நந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன.

 வான் மான் நூஜ்ஜின், நந்தனுக்குச் சீனியர், பதினைந்து வருடங்களாக அங்கே குப்பை கொட்டுகின்றான். அவன் ஒரு வேடிக்கைப் பேர்வழியும் கூட.

 ஒருநாள் இப்பிடித்தான் அவனது மொட்டந்தலைக்கு முடி வளர நந்தன் ஒரு மருந்து சொன்னான். ‘பசுவின் கன்றைப் பிடித்து அதன் நாக்கினால் தலை முழுவதையும் நக்க விடு’ என்றான் நந்தன். சொன்னதுதான் தாமதம் தன் மூக்கை அகல விரித்தான். வியட்நாம் பாஷையில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பாவித்து நந்தனைத் திட்டத் தொடங்கிவிட்டான்.

 நூஜ்ஜின் சொல்வான், தங்கள் நாட்டில் ஏதாவது முக்கிய அலுவலாக வீட்டைவிட்டு வெளிக்கிழம்பிப் போகும் போது எதிரே யாராவது கறுப்பின மனிதர் வந்தால், சற்றே கொஞ்சம் ஒதுங்கி நின்று அந்த மனிதர் போன பிற்பாடுதான் தாங்கள் போவோம் என்று. இந்தச் சகுனம் பாக்கிற விடயம் தங்கள் நாட்டிலும் உண்டு என்று நந்தன் சொன்னபோது நூஜ்ஜினுக்கு சங்கடமாகிப் போய்விட்டது. நாங்களும் யாராவது சப்பை மூக்குக்காரர்களை எதிரே கண்டால் ஒழித்துக் கொள்வோம் என்றான் நந்தன்.

 எங்கேயாவது அழகிய பெண்களைக் கண்டுவிட்டால் போதும், நூஜ்ஜின் குஷியாகிவிடுவான். அப்படித்தான் தூரத்தே அடுத்த பகுதியில்---பிறைமரில்---வேலை செய்யும் ஒரு பெண்ணைச் சுட்டிக்காட்டி, ‘வெரி ஃபியூட்டிபுல்’ என்றான் நூஜ்ஜின்.

சிந்துவின் தைப்பொங்கல் வாசிப்புப் பகிர்வு


தலைமை:   மைதிலி தயாநிதி

 

நூல் வாசிப்பு:      ஜெயா & நிலவன் சந்திரன்

 

கருத்துரைப்போர்:   நீதன் சண்,


                                 இனிதா சுப்பிரமணியம்

 

                                 லெ. முருகபூபதி,   


                                கோதை அமுதன்


                                இலங்கதாஸ் பத்மநாதன்


                                ஜலஜா சுவர்ணன்


                                ஒளவை விக்னேஸ்வரன்

 

Please join on Zoom: bit.ly/thaipongal

 

கனடா :ஜனவரி 15,  6:00pm-7:00pm

இலண்டன் :ஜனவரி 15,  11:00pm-12:00am

ஐரோப்பா: ஜனவரி 16,  12:00am-1:00am

அவுஸ்ரேலியா: ஜனவரி 16,   10:00 am-11:00am

 

 

 

இலங்கைச் செய்திகள்

துபாய் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினார் 

குமார் நடேசனுக்கு இந்திய உயர்விருது

முழுமையான அதிகார பரவலாக்கத்துடன் மாகாண சபைகள்

தமிழின நலனுக்காக பாடுபட்ட அமரர் குமார் பொன்னம்பலம்; நினைவுதினம் இன்று

தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில்


துபாய் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினார் 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

விடுமுறைக்காக துபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடு திரும்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கடந்த டிசம்பர் 26ஆம் திகதி தனது மனைவியுடன் துபாய்க்கு தனிப்பட்ட சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் போர் நிறுத்தத்தை நிராகரித்தது உக்ரைன் 

40 ஆண்டு சிறை இருந்த பலஸ்தீன கைதி விடுதலை

யூரோ வலயத்தில் குரோசியா இணைவு

உலகப் பொருளாதாரம் 2022ஐ விடவும் 2023 ஆம் ஆண்டு கடினமாக அமையும்


ரஷ்யாவின் போர் நிறுத்தத்தை நிராகரித்தது உக்ரைன் 


உக்ரைனில் 36 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டபோதும் உக்ரைன் அதனை நிராகரித்துள்ளது.

15/01/2023 தைத்திருநாள் பொங்கல் விழா -பொங்கலோ பொங்கல்!