மரணஅறிவித்தல்

 


திருமதி பரமேஸ்வரி கந்தையா

யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் அத்தியடி மற்றும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி கந்தையா அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று சிட்னியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான செல்லையாபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும் காலஞ்சென்றவர்களான பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தனலட்சுமி, காலஞ்சென்ற கமலாம்பிகை, கமலாசினி, மாசிலாமணி, காலஞ்சென்ற புஷ்பராஜலிங்கம், புண்ணியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலகிருஷ்ணன், கலாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும், சபாநாதன், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியும், தனுஷா, வினேய், தர்ஷிகா, குணால், பிரேன், யாழினி, வறேன், எமா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஆர்யா, அர்ஜுன், ஆதித்தியா, அரவிந் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02/03/2021 செவ்வாய்க்கிழமை  காலை 10.15 மணி முதல் 10.45 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக  Rookwood Cemetery, East Chapel இல் வைக்கப்பட்டு பின்னர் இறுதிக் கிரியைகளும் தகனக் கிரியைகளும் நடைபெறும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கட்கு க சபாநாதன் Tel: 0408 432 680

 


சிட்னி துர்க்கை அம்மன் ஆலய மாசி மக வருடாந்த திருவிழா |

தேர்த்திருவிழா 26.02.2021

தீர்த்தோற்சவம் 27.02.2021

கொடியிறக்கம் 27.02.2021

பூங்காவன உற்சவம் 28.02.2021


தேர்த்திருவிழா 26.02.2021

தேர்த்திருவிழா 26.02.2021 அன்று துர்க்கை அம்மன் திருவருளோடு விமரிசையாக நடைபெற்றது 

படப்பிடிப்பு  நிரஞ்சன் நிரோஷன் 


மல்லிகை ஜீவாவின் ( 1927 – 2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் - அங்கம் - 05 அமைதிப்படை ( ? ) காலத்தில் அகதிக்கோலத்தில் ஜீவா ! கண்ணதாசன் வீட்டில் நிழலும் நிஜமும் ! ! முருகபூபதிமல்லிகை ஜீவாவின் 60 வயது மணிவிழா 1987 ஆம் ஆண்டு வந்தது.  அக்காலப்பகுதியில் அவரது அந்த பிறந்த தினக்கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல சோவியத்தின் தலைநகரம் மாஸ்கோவிலும் நடந்தது.

ஜீவா அங்கே சென்றபோது லுமும்பா பல்கலைக்கழக மாணவர்கள் அவரை அழைத்து கேக்வெட்டி அவரது பிறந்ததினத்தை கொண்டாடினார்கள்.

               அவர் தாயகம் திரும்பியவேளையில்  இலங்கையில் அமைதி ( ? ) காக்க வந்த இந்தியப்படைகள் நிலைகொண்டிருந்தன.  அக்காலப்பகுதியில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து செய்திகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்தில் புலிகளும் இந்தியப்படைகளும் மோதத்தொடங்கியதால் மக்கள் வீடு வாசல்களை விட்டு அகதிகளாக வெளியேறி நல்லூர் கந்தசாமி கோயிலைச்சுற்றி கிடைத்த இடங்களில் தஞ்சமடைந்தார்கள்.

ஜீவாவும் தனது குடும்பத்தினருடன் நல்லூரில்


அகதிக்கோலத்தில் இருந்தார்.

அவருடைய  நண்பரும் மல்லிகையின்  முகப்பு அட்டையில்  இடம்பெற்ற பல புகைப்படங்களை எடுத்தவரும் யாழ். பேபி போட்டோ என்ற ஸ்ரூடியோவை எளிமையாக நடத்திக்கொண்டிருந்தவருமான இராசரட்ணமும் அந்தப்பக்கமாக வந்துள்ளார்.

தோளில் ஒரு துண்டுசகிதம் எதிர்ப்பட்ட ஜீவாவைக்கண்டதும், இராசரட்ணம் திகைத்தார்.  தான் தஞ்சமடைந்திருந்த ஒரு வீட்டின் விறாந்தாவுக்கு ஜீவாவை அழைத்துச்சென்றார்.

 “ எமது அகதிவாழ்வை நினைவுபடுத்துவதற்கு ஒரு படம் எடுப்போம்   “ என்று ஜீவாவை நிற்கச்சொல்லிவிட்டு, கெமராவை சரிசெய்தார்.

அப்பொழுது அவரது ஆறுவயது பாலகி மோகனா,  “நானும் நானும்  “ என்று துள்ளிக்குதித்தாள். அவள் ஜீவாவுக்கு மிகவும் பிரியமான செல்லக்குழந்தை.

 “ வாம்மா… வா..  “ எனக்கொஞ்சியவாறு  அவளை ஜீவா தூக்கிக்கொண்டார்.

ஒளிப்படக்கலைஞர் இராசரட்ணம் தனது கெமராவை இயக்கினார்.

அந்தக்காட்சியை அருகிலிருந்து பார்த்த ஜீவாவின் மகன் திலீபன் உடனே  “ ஆறும் அறுபதும்  “ என்றான்.

அந்தப்படம்தான், மல்லிகை ஜீவா மணிவிழாக்குழுவினரால் 1988 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட  மல்லிகை ஜீவா தொகுப்பு நூலின் முப்பில் இடம்பெற்றது.

இந்த நூலை எமது மூத்த எழுத்தாளர்கள் தெணியானும் – டாக்டர் நந்தி சிவஞானசுந்தரமும் தொகுத்திருந்தனர்.

அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 ) ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ! முருகபூபதி


சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் !

இதனை வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..?

அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது.

அந்தநாள் எத்தகையது என்பதை தா. பாண்டியனின் வாக்குமூலத்திலிருந்தே இங்கே தருகின்றேன். அந்த வாக்குமூலத்தை அவர் தமது 69 வயதில்தான் பதிவுசெய்துள்ளார்.

 “ பிறந்த நாளைப் பலர் மறக்காமல் கொண்டாடிவருகிறார்கள்.


நான் என் பிறந்த நாளை,  நான் கடந்துவிட்ட 69 ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் கொண்டாட நேரிட்டது. பிறந்தநாளையே நினைக்காதிருந்த எனக்கு அதை 1992 இல் கொண்டாடவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் என் மனைவி , குழந்தைகளிடமிருந்து வந்தது.

1991 மே, 21 ம் நாளன்று சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக வந்த ரஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அன்று அந்த இடத்தில் அவர் அருகில் இருந்தவன் நான். மூன்றடி தூரத்திற்குள் நின்று இருந்த நானும், குண்டுகள் பட்டுக் காயமடைந்தேன். வெடித்த வேகத்தில் தூக்கி எறியப்பட்டேன். இறந்துபோனதாகவே அறிவிக்கப்பட்டேன். சில பத்திரிகைகளில் இறந்தோர் பட்டியலில் என் பெயரும் இருந்தது. அன்று இரவு முழுவதும் என் குடும்பத்தார்க்கும் நான் கொல்லப்பட்ட ஒருவன்தான். ஏனெனில் அதுதான் அவர்களுக்கு தரப்பட்ட செய்தி.

இருந்தும் உயிர்தப்பி வாழ்கிறேன்… எப்படித் தப்பினேன்..? என்பதை இன்றும் என்னால் தெளிவாகக் கூற முடியவில்லை. ஏனெனில், எனக்கு வலதுபுறம் இருந்தவரும் கொல்லப்பட்டார்… இடதுபுறம் நின்றவரும் வீழ்ந்தார். எனக்குப்பின்னிருந்த ஏழெட்டுப்பேர் ரத்த வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டுக்கிடந்ததையும் கண்டேன். என்னைச்சுற்றிலும் குண்டு விபத்துக்குப்பலியாகி மடிந்தவர்கள் பதினெட்டுப்பேர். ராஜீவ்காந்தியுடன் பத்தொன்பது பேர். ஒரு நொடியில், ஒரே இடத்தில் களப்பலியாயினர்.

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 30 இயல்புகள்தான் ஒருவரின் அடிப்படை அழகு ! வானொலி கலையகத்திற்கு என்னை அறிமுகப்படுத்திய கே. எஸ். சிவகுமாரன் !! முருகபூபதி


வீரகேசரியில் 1977 இல் ஒப்புநோக்காளர் பணி


கிடைத்தபின்னரும், கொழும்பில் தொடர்ந்தும்  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினதும் வேலைகளை மேற்கொண்டவாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவற்றின்  தலைமை அலுவலகங்களுக்கும் சென்று அங்கு தரப்பட்ட  பணிகளை செய்துகொடுத்தேன்.

சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்,  கொழும்பு -07 இல் சேர் ஏர்ணஸ் டீ. சில்வா மாவத்தையில்  அமைந்திருந்த சோவியத்தகவல் பிரிவில் பணியாற்றினார்.

இங்கிருந்துதான் சோவியத் நாடு மற்றும் சோசலிஸம்


தத்துவமும் நடைமுறையும்
முதலான இதழ்கள் செம்மைப்படுத்தப்பட்டன. அத்துடன் தினமும்  செய்திக்குறிப்பேடும் ( News Letter )  இங்கிருந்து வெளியானது.

அந்தத்  தகவல் பிரிவு அமைந்த இல்லம் லலிதா ராஜபக்‌ஷவுக்கு சொந்தமானது. அவரது இல்லம் அதே காணியில் அருகில் அமைந்திருந்தது.

அவர் கலை ஆர்வம் மிக்கவர். அத்துடன் சில சிங்களத்திரைப்படங்களும் தயாரித்தவர்.  சோவியத் தகவல் பிரிவை சோவியத் மொழியில் நவஸ்தி என்றும் அழைப்பர்.

அந்த இல்லத்தை, நீங்கள் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கத்தில் வெளியான மார்டின் விக்கிரமசிங்காவின் கம்பெரலிய திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில் பார்க்கலாம்.

லலிதா ராஜபக்‌ஷ வசித்த இல்லமும் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன.

அருகில்தான் யாழ்ப்பாணம் எம்.பி. யாகவிருந்த சி. எக்ஸ். மார்டினின் பெரிய மாடிவீடும் அமைந்திருந்தது. எனினும் அவ்விடத்திற்குச்செல்லும் சந்தர்ப்பங்களில் அவரை பார்க்கவில்லை.

27 - 02 - 2021 சனிக்கிழமை நடந்தேறிய மாசி மக புனித தீர்த்தத் திருவிழா!

 பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

 

               

றீயன்ஸ் பார்க்’கில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயிலில் 27 - 02 - 2021 புதன்கிழமையன்று மாசி மகம் புனித தீர்த்தத் திருவிழா அம்மனின் திருவருளினால் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது. ‘கொறோனா’கட்டுப்பாட்டுகளுக்கு  மத்தியிலும் அவற்றிற்கு அமையப் பல நூற்றுக் கணக்கான அடியார்கள் தீர்த்தத் திருவிழாவிலே கலந்தமை அம்மன் அருள் எல்லோரையும் ஈர்க்கின்றதென்பது எளிதிற் புலனாகின்றது.

 

மாசி மகத்தின் மகிமை

 

  மகம் நட்சத்திரம் என்பது துர்க்கைக்கு உரிய சிறந்த நட்சத்திரமாகக் கருதப்படுவதால் மாசி மகம் உலகிலுள்ள எல்லா அம்மன்கோயில்களிலும் முக்கியமாகத் துர்க்கையம்மன் கோயில்களிலும் விசேட தீர்த்தத் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

சிட்னி – “றீயனஸ் பார்க்”கில் எழுந்தருளியிருக்கும் சிறீ துர்க்கை அம்மன் கோயில் மகோற்சவம் இந்த மாதம் 27ஆம் திகதி  சனிக்;கிழமை மிகவுஞ் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தமை அம்மனின் திருவருட் செயலே!. அடியார்களைத் துர்க்கை அம்மன் எவ்வளவு தூரம் ஈர்த்துள்ளாள் என்பதை கோயிலில் நிரம்பிவழியும் பக்தர் கூட்டம் எடுத்துக்காட்டியது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சிப் பிரவாகம்!   

மாசிமகத் தீர்த்தத்தன்று காலையிலிருந்து கோயில் என்றுமில்லாத அளவிற்குக் களைகட்டத் தொடங்கியிருந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த செயற்கைத் தண்ணீர்த் தொட்டி புனித தீர்த்தத்திற்குத் தயார் நிலையில் காணப்பட்டது. அம்மனின் அருளாற்றலைப் பிரதிபலிக்கும் மெல்லிசைப் பாடல்கள் காற்றோடு கலந்துவந்து செவிக்கின்பம் அளித்துக்கொண்டிருந்தது. 

பேராசான் பேராசிரியர் கலாநிதி சிவஶ்ரீ கா. கைலாசநாதக் குருக்கள் அவர்களைப்பற்றி நிகழ்த்திய நினைவுரை


பிரம்மஸ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மண்ணைவிட்டு ஆளுமைகள் மறைந்தாலும் அவர்களின் மாண்புகள் என்றுமே மறைவதில்லை. எண்ணி எண்ணிப் பார்க்கும் அளவுக்கு அவர்கள் மண்ணிலே என்னாளும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் . அப்படி வாழ்ந்தவர்களைத் தான் " வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் " என்று வையகம் ஏற்றிப் போற்றி என்றும் நினைவில் நிறுத்தி

வைத்திருக்கிறது எனலாம். அப்படி இருக்கும் ஈழத்து ஆளுமையாக விளங்குவர்தான் நினைவில் நிறைந்திருக்கும் பேராசான் பேராசிரியர் கலாநிதி சிவஶ்ரீ கா. கைலாசநாதக் குருக்கள் ஆவர்.

 குங்குமம் பொட்டு , கொட்டப்பாக்களவு குடுமி , முகத்தில் சாந்தம் , வெள்ளுடை வேந்தர் இப்படிச் சொன்னால் இப்படி நினைத்தால் கண்முன்னே வந்து நிற்பார் பேராசான் குருக்கள் அவர்கள்.

  அமைதியான ஆனால் ஆழமான அழகான ஆங்கிலம் அழகு கொஞ்சும் அன்னைத்தமிழ் அஷ்ஷரம் மாறாத சமஸ்கிருதம் குருக்கள் அவர்களுக்கே உரித்தானதாகும்.

வணக்கமும் வாழ்த்தும்……..!!

             


பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்பிரபஞ்சத்தையும் உயிர்களையும் படைத்தளித்த முழுமுதற்கடவுளாம் சிவபெருமானையும் உங்கள் குலதெய்வங்களையம்  வணங்கும்போது…..

 

மெய்யெல்லாம் விதிர்விதிர்க்க நெஞ்சம்தான் கசிந்துருக

கைதானுன்  தலைவைத்துக் கண்களில்நீர் ததும்பிடவே

பொய்தவிர்த்துப் புலனடக்கி பெய்வளையாள் கரந்தசிவன்

மெய்யான கடவுளவர் விரைகழல்கள் வணங்கிடுவீர்!

 

கலைகளைக் கற்பித்த குருவை வணங்கும்பொழுது…….

 

கலைகள்பல தெரிவித்துக் கடிந்துரைத்துப் பலகாலம்

கருணையொடு  கற்கவைத்த கனம்மிகுநற் குருவைநீர்

நிலையுணர்ந்து கைகளையும் நெற்றிக்கு நேர்வைத்து

நிறைந்தமனத் துடனேநீர் வணங்கிவரத் தெரிந்திடுவீர்!

 

 

 

‘றீயன்ஸ் பார்க்’கில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு துர்க்கை அம்மன்; திரு ஊஞ்சல்.

 பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

படப்பிடிப்பு  நிரஞ்சன் நிரோஷன் 
 

                                                   காப்பு

 

திங்களொடு  நதியரவம்  அணிந்த  சிவனார்

      திருவிழியால்  உமையவளை நோக்கா நிற்கத்

துங்கமிகு  ஓங்காரம்  களிறாய்ப்  பிடியாய்த்

         தோற்றிடவே அவைகூடி உதித்த அருள்மிகு

ஐங்கரத்து  வாரணத்தை  அகத்தி  ருத்தி

         அழகுதமிழ்த்  திருவூஞ்சல்  துர்க்கை  மீது

பங்கமில்லாப்  பதிகமாய்ப்  பாடமுக்  கண்ணன்

           பாதார  விந்தங்கள்  காப்ப  தாமே.

 


                                        நூல்

 

சிற்பரநற்  சிவஞானத்  தூண்கள்  நாட்டிச்

         செம்மைமிகு  நாதவிந்து  விட்டம்  பூட்டிப்

பொற்புமிகு  ஆயகலை  வடங்கள்  கூட்டிப்

         பொருவரிய  ஆறங்கம்  பலகை  மாட்டி

அற்புதமாய்  அமைந்ததமிழ்  ஊஞ்சல்  வைகி

       அடியவர்கள்  மெய்யுருகி  வடந்தொட் டாட்டக்

கற்பகமே  றீயன்ஸ்பார்க்  பதியில்  வாழும்

         காரணியே  சிறீதுர்க்கா  ஆடீர்  ஊஞ்சல்.

திருக்குறள் காட்டும் சமூக நல்லிணக்கம் [ 28-02-2021 வள்ளுவர் தினமாகும் ]


மகாதேவஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்  மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் .... அவுஸ்திரேலியா                                                                  

  

வள்ளுவத்தின் சிறப்பு

        தமிழிலே தோன்றிய பலநூல்கள் சமூக நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துக்களைப் பலவாறு எடுத்துக்காட்டி இருக்கின்றன.அவைகள் கூறும் கருத்துக்கள் முழுமையானதாகவோ எக்காலத்துக்கும் ஏற்றனவாகவோ இருகின்றனவா என்று பார்க்கின்ற பொழுதான் திருக்குறளை நாம் கூர்ந்து பார்க்க வேண்டியுள்ளது.சமூக நல்லிணக்கம்  சம்பந்தமான கருத்துக்களைப் பகர்ந்து நின்ற நூல்களுக்கு மத்தியில் திருக்குறள் பெறுகின்ற இடம் முக்கியத்துவம் மிக்கது எனலாம்.   திருக்குறள் - தான் தோன்றிய காலம் முதல் இன்றளவும் தனித்துவம் மிக்கதாகவே விளங்குகிறது என்பதை எவருமே ஒத்துக் கொள்ளுவார்கள்அந்த அளவுக்கு அதன் அமைப்பும் , அதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன. மானிடம் செழிக்க, மனித உள்ளங்கள் செழிக்க , உலகமே செழிக்க , மிக உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகவே திருக்குறள் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

   பகவத்கீதைதிருக்குரான்பைபிள் என்பவற்றிலும் சமூக நல்லிணக்கத்துக்கு  ஏற்ற கருத்துக்கள் இடம்பெற்றாலும் அவைகள் மதம் சார்ந்து நிற்கின்றன என்னும் நிலையும் காணப்படுகிறது. ஆனால் திருக்குறள் எந்தவிதச் சமயச்சார்பும் கலவாத சமுதாயச் சிந்தனையும் நல்லிணக்கச் சிந்தனையும் மிகுந்த நூலாக இருக்கிறது. கூறப்படும் சிந்தனைகளும்  நல்லிணக்கத்தை  ற்படுத்த கூடியதாகவும் யாராலும் கூறப்படாதனவாகவும்புரட்சிகரமானதாகவும்புதுமையான தாகவும்இருக்கின்றன என்பதும் முக்கியமாகும்.

" வளர் காதல் இன்பம் " குறு நாவல் - வாசகனின் பார்வை !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா       
மெல்பேண் ... அவுஸ்திரேலியா

  


அவுஸ்திரேலியாவில் சிறுகதை, குறுநாவலில், முத்திரை பதித்தவர்தான் பொறியியல் பட்டதாரியான கே.எஸ். சுதாகர் அவர்கள். ஒருவரியை எழுதினாலும் ஓராயிரம் வரிகளை எழுதினாலும் வாசிப்பவர் மனதில் பதியும் வண்ணம் எழுதுகின்ற எழுத்து ஆழுமை மிக்கவர்தான் சுதாகர் அவர்கள். அவர்களின் கைவண்ணத்தில் " வளர் காதல் இன்பம் "


என்னும் குறு நாவல் நூலுருப்பெற்று தற்போது சென்னையில் இடம் பெறும் புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது.

  ஈழத்தவர் , குறிப்பாக பொறியியலாளராக இருக்கின்றவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தமிழையும், எழுதுவதையும் , விடாமல் தொடருகிறார் என்னும் பொழுது அவரைக் கட்டாயம் பாராட்டி வாழ்த்தியே ஆகவேண்டும்.

  " வளர் காதல் இன்பம் " குறு நாவல் முழுக்க முழுக்க அவுஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் கதையாய் வளர்கிறது.கதையின் கருவில் கற்பனை என்பதைவிட - சுதாகர் அவர்களின் நட்பு வட்டாரத்தில் நடந்த சம்பவம் போலும் ஒரு தோற்றமே தென்படுகிறது எனலாம்.இந்தக் குறுநாவலை குறுநாவல் என்று பெயர் சூட்டி இருந்தாலும் இது வளரும் நிலையினைப் பார்க்கும் பொழுது ஒரு முழுநாவலின் வடிவமாய் தெரிகிறது என்றும் எண்ண வைக்கிறது.

 சுதாகரின் எழுத்து விறு விறுப்பாகப் பல இடங்களில் அமைந்தாலும் சண்டையும் , அதன் பின் ஏற்படும் சமாதானமும் திரும்பத்திரும்ப வருவது வாசிப்பவர்களுக்குச் சற்று அலுப்பை ஏற்படுத்தி விடலாமோ என்று கருதக் கூடியதாக இருக்கிறது.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 51 – திருவாரூர் பாரி நாதசுரம் – சரவண பிரபு ராமமூர்த்திதிருவாரூர் தியாகராசரை முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து பூலோகம் கொண்டு வந்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை. அவ்வேளையில் தேவலோகத்திலிருந்து பூலோகம் வந்த தியாகராசரின் பத்து அங்கங்களில் ரத்தின சிம்மாசனம், மாயா விதாணம், பொற்கவரி முதலானவற்றில் ஒன்று தான் இந்த பாரி நாதஸ்வரம் என்கிறார் திருவாரூர் கோவிலின் பரம்பரை பாரி நாதசுர இசைக்கலைஞர் திரு பழனியப்பன் அவர்கள். தியாகராசரை கொண்டு வந்து திருவாரூர் கோவிலில் வைத்து வழிபாடுகள் நிகழ்த்திய முசுகுந்த மன்னன் அவருக்கு 18 இசைக்கருவிகள் முழங்க பூசைகள் செய்ய ஏற்பாடு செய்தார். 18 இசைக்கருவிகளில் தலையாயது இந்த பாரி நாதசுரம். இந்த நாதசுரம் தான் எல்லா நாதசுரத்திற்கும் மூலம் என்கிறார்கள் இசை வல்லுனர்கள். திருவாரூர் பாரியில் இருந்து திமிரி தோன்றியது. இது கும்பகோனம் திமிரி என்றும் வழங்கும்.

 

”திருவாரூர் பாரி” தியாகராசருக்கு மட்டுமே இசைக்கப்பட்டது. மற்ற இடங்களில் திமிரி தான் பரவலாக புழங்கி வந்த நாதசுரம். இந்த திமிரியின் அளவை அதிகரித்து அதிகரித்து உருவாக்கப்பட்டதுதான் தற்காலத்தில்


அனைவரும் பயன்படுத்தும் பாரி நாதசுரம். திரு டி.என். ராஜரத்தினம் பிள்ளையும் திரு ரெங்கநாதன் ஆசாரி என்பவரும் சேர்ந்து தயாரித்தது பிற்கால பாரி நாதசுரம். இது ஒரு மத்திம சுருதி நாயனம் ஆகும். இந்த நாதஸ்வரம் புழக்கத்திற்கு வந்து சுமார் 100 வருடங்கள் ஆகிவிட்டன. தற்காலத்தில் உலகெங்கும் பயன்படும் பாரி நாதசுவரம் திருவாரூர் கோவிலுக்குரிய ”பாரி” நாதசுரத்தில் இருந்து முற்றாக வேறுபட்டது. திருவாரூர் பாரி திமிரியை விட சற்று பெரியது.  தற்கால பாரியை விட பாதியளவு உள்ளது. இது ஒண்ணரை சுதி உள்ளது. திருவாரூர் பாரியை இசைப்பது மிகவும் சிரமம். மற்ற நாதசுரத்தை விட நான்கு மடங்கு தம் பிடித்து மூச்சை செலுத்தினால் தான் இதிலிருந்து இசை வெளிவரும்.

 

பாரி நாதசுரத்திற்கு வெண்கல மேல் சு மற்றும் கீழ் அனசு பொருத்தப்பட்டிருக்கும். நடுப்பகுதி ஆச்சா மரத்தில் செய்யப்படும். மேல் அனசும் உலோகத்தால் செய்யப்பட்டு நீண்டு இருப்பது இதன் தனித்துவம். இந்த மாதிரி நாதசுரம் வேறு எங்கும் இல்லை. இதை பிரதி எடுக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவியுள்ளன. இதன் செய்முறை திருவாரூர் தியாகராசரின் திருமேனி எப்படி ரகசியமாக மூடிவைக்கப்பட்டுள்ளதோ அதே போல் இதுவும் ரகசியம் என்கிறார் திரு பழனியப்பன் அவர்கள்.

ஸ்வீட் சிக்ஸ்டி 4- குமுதம் - ச சுந்தரதாஸ்

.


தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன். 1960ஆம் ஆண்டுகளில் ஆரம்பப் பகுதிகளில் இவர் கதாநாயகனாக நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. எம்ஜிஆர், சிவாஜிக்கு இணையாக 100 நாள் படங்களை தந்து கொண்டிருந்தார் இவர். அவ்வாறு எஸ் எஸ் ஆர் நடித்து 1961இல் வெளி வந்த படம்தான் குமுதம்.

பிரபல பட நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ் சினால் இப்படம் தயாரிக்கப்பட்டது குடும்ப படங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் கீர்த்தி பெற்றுக்கொண்டிருந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்தில் தன் கைவண்ணத்தை காட்டியிருந்தார். படத்தில் அவருடைய வசனங்கள் ஆழமாக அமைந்திருந்தன.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குமரன் கூலி ஆளான தன் அண்ணனின் வருமானத்தில் படித்து வருகிறான். பணக்கார பெண்ணான சாந்தியுடன் அவனுக்கு  காதல் ஏற்படுகிறது. ஆனால் அவனின் அண்ணன் மகளோ காசிலிங்கத்தை காதலிக்கிறாள். அவளைத் திருமணம் செய்வதென்றால் தன் பார்வையற்ற தங்கையான குமுதத்தை குமரன் மணக்க வேண்டும் என காசி நிபந்தனை விதிக்கிறான்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நெருக்கடிக்குள் இலங்கை

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ந் திகதி ஆரம்பமாகியுள்ளது. இதற்கு இலங்கை சார்பில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்குகிறார். இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகின்றன. எனினும் இலங்கை தொடர்பான விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வருடா வருடம் பேசப்பட்டு வருகின்றது. தற்போதைய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்சிலியைப் பூர்வீகமாகக் கொண்ட மிஷெல் பஷ்லே (Michelle Bachlet), இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் பயணத்தடைகளை  விதிக்க வேண்டுமென்று கூறி கடுமையான அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார். அதனால் இந்த அமர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இலங்கையால் கருதப்படுகின்றது.

இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய - பாக். பிரதமர் இம்ரான் கான் இரு தரப்பு பேச்சு 

உடல் அடக்க அனுமதிக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு

சுகாதார சேவை நியமனங்களுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு

சிறிய உலக முடிவு மலைப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்க தடை

அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்


ஜனாதிபதி கோட்டாபய - பாக். பிரதமர் இம்ரான் கான் இரு தரப்பு பேச்சு 

ஜனாதிபதி கோட்டாபய - பாக். பிரதமர் இம்ரான் கான் இரு தரப்பு பேச்சு-SL President Gotabaya Rajapaksa-Pakistan PM Bilateral Discussions

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடனான இரு தரப்பு பேச்சுவார்த்தை, ஜனாதிபதி அலுவலகத்தில் தற்போது இடம்பெறுகிறது.

உலகச் செய்திகள்

மியன்மாரில் இதுவரை இல்லாத அளவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

மியன்மாரின் அரசியல் பதற்றத்தை தணிக்க அண்டை நாடுகள் முயற்சி

ஊடக சட்டத்தை மாற்ற ஒப்புதல்; ஆஸி. செய்தி தளங்கள் மீதான தடையை தளர்த்துகிறது பேஸ்புக்

உலக கொரோனா தொற்று 111 மில்லியனைத் தொட்டது

டிரம்பின் கிரீன் கார்ட் தடையை திரும்பப் பெற்றார் ஜோ பைடன்


மியன்மாரில் இதுவரை இல்லாத அளவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டதோடு இதுவரை இல்லாத பாரிய ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

தலைநகர் நைபிடோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வன்முறைகளில் உயிரிழப்புகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.