கொரோணா நீ போய்விடு - செனா பாஸ்கரன்

.


 கண்விழித்துப் பார்த்தபோது 
யன்னலை தாண்டிய ஒளிக்கதிர்கள் 
என்னை தழுவிக் கொண்டது 
தூர எறிந்த பார்வையில்  
நீலவானம் அழகு காட்டியது 
எத்தனை காலங்களுக்குப் பின் 
நிர்மலமான வானம் 
ஓ கொரோணா நீ உயிர் கொல்லி  என்கிறார்கள் 
என்னையும் ஒரு நாள் 
நீ பறித்துச்  செல்லக்கூடும் 
இருந்தாலும் உன்னை மதிக்கிறேன் 
மாசு மாசு என்று அங்கலாய்த்தவர்கள் 
ஓசோனில் ஓட்டை என்றவர்கள் 
குளோபல் வோமிங் என்றவர்கள் 
அத்தனை பேரையும் 
வாயடைக்க வைத்து விட்டாய் 
உன்னால் வந்த Lock Down 
பல காலங்களுக்குப் பின் 
பால்வீதியை (Milky Way)
மக்கள்  கண்ணால் பார்த்தார்கள் 
பரவசம் கொண்டார்கள் 
எந்திரமாய் ஓடும் நாங்கள் 
ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம் 
பெற்றோர்களும் பிள்ளைகளும் 
ஒன்றாக இருந்து பேசிச் சிரிக்கிறோம் 
சின்னவள் என்று பார்த்த என் மகள் 
ஈசான மூலை சனிபகவான் பற்றி 
அமேசன் காடுகள் பற்றி 
ஆபிரகாம் லிங்கன் பற்றி 
ஈழத்து அரசியலை கூட 
அகழ்ந்தெடுத்து பேசுகிறாள்  


இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம்--------------பாகம் 5 பரமபுத்திரன்


எக்காலும்  ஓருயிரை   ஏற்றமாய்  ஏந்தியதாய்
இப்புவியில் வரலாற்றுச்  சேதிகள்  ஏதுமில்லை
முக்காலும் தெரிந்து  முகிழ்த்த  முனிவர்களும்
கதையாக மட்டுமே வாழ்கின்றார்  இங்கே
ஊருக்கே உழைத்திட்ட பெரியவர்கள் மற்றும்
பாருக்கே சுமையான  தரமற்றோர்  கூட
ஞாலத்தில் உடல்விட்டு போயேதான் ஆனார்   
இழிசெயலாம் உயிரழிப்பை  இச்சையுடன்  ஏற்று  
கச்சிதமாய் முடிக்கின்ற கயவர்களும் இங்குண்டு   
வழிகாட்டி மனிதனை வாழ்விக்கப்  பிறப்பெடுத்த   
பரிசுத்த  புவித்தோன்றல்  பரலோக பெருமானை
பாவியிவன் என்றிகழ்ந்து பாதகனாய் கதைகூட்டி  
குற்றங்கள்  பலசுமத்தி பழிகாரன் எனக்கூறி
சவுக்காலே அடிபோட்டு முள்கிரீடம் தனைமாட்டி 
பாரமான சிலுவையினை தோளினால்  இழுக்கும்படி     
வீதிவழி  அலையவிட்டு  மூன்றுமுறை வீழவிட்டு  
சிலுவையிலே அறைந்துபின் உயிரை பறித்ததுவாய்  
விவிலியம் சொல்கிறது பெரும்செய்தி எங்களுக்கு
மக்களுக்கு நன்மைசெய்த இன்னும்பல நல்லவர்கள்
துக்கம்தனை போக்கவென்று துணைநின்ற பெரியவர்கள்
விடுதலைக்கு வித்திட்ட வீரம்மிக்க பொதுநலத்தோர்

மருந்து கண்டுபிடிக்கப்படுவது இருக்கட்டும்;| கொரோனாவை நாமே வெற்றி கொள்ளலாம்!
உலகத்தையே கொரோனா முடக்கிப் போட்டிருக்கலாம். ஆனால், ஒரு நேர்மறை தகவலையும் நாம் மறுப்பதற்கு இல்லை. ஆம், கொரோனா வெல்லக் கூடிய ஒரு வைரஸ்தான்.
சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்து உலகம் முழுதும் பரவிக் கொண்டுள்ள ஒருவித வைரஸ் இந்த கொரோனா. இதன் நோய் பாதிப்பை விட இது ஏற்படுத்திய பீதி மற்றும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம்.

சுயநலத்தை துறந்திட்டால் துன்மபதைத் துடைத்திடலாம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. ...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

             உயிரினங்கள் வரிசையிலே உயர்ந்தவிடம் மனிதனுக்கே 
             அறிவென்னும் பொக்கிஷத்தை அவனேதான் பெற்றுள்ளான் 
             புவியிருக்கும் உயிரினங்கள் உணவெண்ணி உயிர்வாழ
             அறிவுநிறை மனிதன்மட்டும் ஆக்குகின்றான் அகிலமதில்  !

            காட்டையே வாழ்வாக்கி வாழ்ந்தவந்த மனிதவினம்
            காட்டைவிட்டு வெளிவந்து கலாசாரம் கண்டனனே 
            மொழியென்றான் இனமென்றான் சாதியென்றான் மதமென்றான் 
            அழிவுள்ள பலவற்றை ஆக்கிடவும் விரும்பிநின்றான்  ! 

            விஞ்ஞானம் எனுமறிவால் வியக்கபல செய்துநின்றான்
            அஞ்ஞானம் அகல்வதற்கு விஞ்ஞானம் உதவுமென்றான் 
            விண்கொண்டான் மண்கொண்டான் வெற்றிமாலை சூடிநின்றான்
            வியாதியையும் கூடவே விருத்தியாய் ஆக்கிவிட்டான்  !

            ஆராய்சி எனும்பெயரால் அபாயத்தை அரவணைத்தான்
            அணுகுண்டை கண்டறிந்து அழிவுசெய்ய ஆவலுற்றான்
            ஆக்குகின்ற அவனறிவு அகிலத்தைக் காக்காது
            பார்க்குமிடம் எல்லாமே படுகுழியைத் தோண்டியதே  !

           நோய்களுக்கு மருந்துகண்டான் போயகலச் செய்துநின்றான்
           நல்விருந்தாய் மருத்துவத்தை நாடறியக் கொடுத்துநின்றான்
           பேராசை கொண்டிருந்த பேரரசால் ஆராய்ச்சி
           பேரழிவைத் தருவதற்கு பெருவழியை வகுத்ததுவே  ! 

இரும்புத் திரையிடப்பட்ட நாடு வடகொரியா!
ஜனாதிபதி கிம் கதியை அறிந்து கொள்வது சர்வதேசத்துக்கு இலகுவான காரியமல்ல!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் என்ன ஆனார் என்பது உலகெங்கும் இன்று பரபரப்பான செய்தியாகியிருக்கிறது. வடகொரிய ஜனாதிபதியின் தந்தை இறந்த செய்தியையே 2 நாட்கள் கழித்துத்தான் வடகொரிய அரசு அறிவித்திருந்தது. எனவே கிம்மின் உடல்நிலை மோசமாக இருக்கும் செய்தி குறித்து அமெரிக்க உளவுத் துறை அறிய முயற்சித்தாலும் தகவல்கள் கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது.

கடந்த சில நாட்களாக, அதாவது ஏப்ரல் 15-ஆம் திகதி ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் பாட்டனின் பிறந்த நாள் விழாவில் கிம் கலந்து கொள்ளாதது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது. அவர் கடந்த 12-ஆம் திகதி இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாக சியோல் இணையதளம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

எனினும் இதுகுறித்து வடகொரிய தரப்பிலிருந்து சிறு தகவல் கூட கசியவில்லை. இன்று சர்வதேச ஊடகங்களில் கிம்மின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்றுள்ளன. ஆனால் வடகொரிய நாட்டு ஊடகங்களில் விளையாட்டுப் பொருட்கள், மல்பெரி இலைகளைப் பறிப்பது, பொருளாதாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட கிம் தற்போது ஒரு விடுதியில் ஓய்வில் இருந்து வருவதாக வேறு நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. கிம்மின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த கருத்துகளை அறிய அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் - 10 விதியின் வழியில் திசை திரும்பிய வாழ்க்கை


 னது மனசை அழுத்திய சுமை என்ன..? பள்ளிப்படிப்பு முடிந்தது. வேலை தேடவேண்டிய தேவை வந்துவிட்டது. ஆசிரியப்பணி வேலையும் அடுத்த தவணை தொடக்கம் உறுதி. அதிபர் அருளானந்தம் அந்த உறுதிமொழியையும் தந்துவிட்டார். இதற்கும் மேலும் எதனை எதிர்பார்க்கலாம்..?
 “ வேலை வீடு தேடி வந்த பின்பும்  மனதிலே சலனம் ஏன் வருகிறது…?  “
இது நண்பன் சத்தியமூர்த்தியின் வாதம்.
 நான் வேலை தேடும் படலத்தில் ஈடுபடுதற்கு முன்பே, வேலையொன்று எனது வீடு தேடி வந்தது என்னவோ உண்மைதான். ஆனால்…? தொடர்ந்தும் பன்னிரண்டு ஆண்டுகள் நான் படித்த கல்லூரி. துவக்க வகுப்பு முதல், லண்டன் இனரர் சயன்ஸ் வகுப்புவரை எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அங்கேதான் பணிபுரிகின்றனர்.
அரசாங்கப் பாடசாலைகள் போன்று, அரசியல் தலையீட்டாலும் ஆசிரியர் எண்ணப்படியும் இடமாற்றங்கள் நிகழாத கல்லூரி அது. பலர் அங்கே கற்பிக்கத் தொடங்கி, ஆயுட் காலம் முழுவதும் அங்கேயே பணிபுரிந்து ஓய்வுபெற்றதை நான் அறிவேன். ஆதலால், எனது சங்கடத்தை நண்பன் சத்தியமூர்த்திக்கு விளக்கினேன்.
 “ எட  சத்தியமூர்த்தி, இந்த மாசம் வரை என்னைப் படிப்பித்த ஆசிரியர்கள் முன்னே, அவர்களில் ஒருவனாக அடுத்த மாசம் முதல் பணிபுரிந்து சமமாகப் பழகுவது எப்படி..? அது என் மனசுக்கு சங்கடமாக இருக்கிறது  “ என்றேன்.
 “ அம்பி, கூழுக்கும் ஆசை !  மீசைக்கும் ஆசை !  இந்த நிலைதான் உன்னுடைய நிலை. கூழ் குடிக்கத்தான் வேண்டுமென்றால், மீசையை மறந்துவிடு. தானாகத் தேடி வந்த வேலையை விட்டுவிடாதே. அது விவேகமான செயல் அல்ல. இரண்டு வாரம் அங்கே சென்று வேலை செய்ய, நீயும் அவர்களுடன் ஒருவனாகிவிடுவாய். உன் மனச்சங்கடமும் தானாகவே மறையும்.  “  என்றான் நண்பன் சத்தியமூர்த்தி.
அவன் கூறியதில் உண்மை இருக்கிறது என்ற உணர்வு எனக்கு வந்தது. ஆயினும், மனசு ஏதோ ஒருவிதமான தயக்கத்தையும் இடையிடையே அனுபவித்தது. இந்த நிலையில், சத்தியமூர்த்தியின் மைத்துனர் ஆண்டி மாஸ்டரை நாம் இருவரும் சந்தித்தோம்.

வீடியோஸ்பதியின் புது முயற்சி : ஈழத்து எழுத்தாளர் சிறுகதைகள் ஒலி/ஒளி வடிவில்செங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” - சிறுகதை குரல் பதிவு
குரல் பகிர்வு : சங்கீதா தினேஷ் பாக்யராஜா

வீடியோஸ்பதி காணொளி வலைத் தளமூடாக ஒரு புதிய முயற்சியை முன்மெடுக்க வேண்டி, ஈழத்தின் முது பெரும் எழுத்தாளர்களில் இருந்து சம காலத்தவர் வரை அவர்களது சிறுகதைகளை ஒளி, ஒலி வடிவில் வெளிக் கொணரும் தொடரை ஆரம்பிக்க முனைந்தேன்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 11 - தம்பாளம்/டமாரம்


தம்பாளம்/டமாரம் – தோற்கருவி
அமைப்பு
இரு கருவிகள் இணைந்த தோலிசைக்கருவி தம்பாளம்.அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும். இடுப்பில் கட்டிக்கொண்டோ, கழுத்தில் மாட்டியபடியோ இசைப்பார்கள். இரும்பு சட்டிகளில் தோல் கொண்டு வார்த்து தயாரிக்கப்படும் கருவி இது. சற்று கனத்த இரும்பு தகரத்தில் சட்டி போன்ற உருவம் செய்து, மேலே மாட்டுத்தோல் கொண்டு சட்டியோடு சேர்த்து பின்னப்பட்டுள்ளதுகொடுகொட்டி, குந்தளம் போல் இல்லாமல் இந்த கருவியின் இருமுகமும் ஒரே அளவில் தான் இருக்கின்றது. இக்கருவியை வளைவு இல்லாத நேரான புளியங்குச்சி கொண்டே இசைக்கிறார்கள். தடிமனற்ற புளியங்குச்சியை உடைத்து,தண்ணீரில் நன்கு ஊறவைத்து, பின் நெருப்பில் வாட்டி வளைத்த பிறகே வாசிக்கத் தகுந்ததாகிறது.


வட தமிழகத்தில் டமாரம் என்று அழைக்கப்படும் இக்கருவி இரும்பு
, பித்தளை அல்லது குடைந்த பலா மரத்தில் செய்யப்பட்டுள்ளது. ண்மைக் காலங்களில் பாரம் கருதி சில இடங்களில் மண்ணால் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் இருமுகங்களும் சம அளவிலேயே உள்ளன. சில டமாரங்களில் ஒரு முகம் சற்று சிறியதாக உள்ளது. பசு அல்லது எருமை அல்லது ஆட்டின் தோல் கொண்டு பின்னப்படுகின்றது. அரளிக்குச்சிக் கொண்டு அடிக்கிறார்கள். குருவிக்குச்சி என்னும் குச்சியும் சில இடங்களில் பயன்படுத்துகிறார்கள். சில இடங்களில் நேரான குச்சியாலும் சில இடங்களில்வடிவில் வளைந்த குச்சியாலும் டமாரம் அடிக்கப்படுகிறது.

அஞ்சலிக்குறிப்பு: கலைஞர் ஏ. ரகுநாதன் மறைந்தார் ஈழத்து தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சியின் ஊடாக ஒரு நினைவுப்பகிர்வு - முருகபூபதி


லங்கையின் மூத்த தமிழ் நாடக, திரைப்படக்கலைஞர் ஏ.ரகுநாதன்   பிரான்ஸில்  மறைந்தார் என்ற  அதிர்ச்சி தரும் செய்தி வந்தது.
சமீபகாலமாக உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்கு புலப்படாத எதிரி, எங்கள் தேசத்தின் கலைஞனையும் புலத்தில் காவுகொண்டுவிட்டது.
இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரிஸ் சென்றபோது,  அங்கிருக்கும் நண்பர் எழுத்தாளர்  ‘ ஓசை ‘ மனோகரனுடன்  ரகுநாதனைப் பார்க்கச்சென்றேன்.
பாரிஸிலும் வைரஸின் தாக்கம் உக்கிரமடைந்தபோது, அங்கிருக்கும் கலை, இலக்கிய நண்பர்களிடம் ரகுநாதன் குறித்தும் விசாரிக்கத்தவறுவதில்லை.
காரணம், அவர் கடந்த சிலவருடங்களாக சிறுநீரக உபாதையினால் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று வந்துகொண்டிருந்தவர்.  கடந்த சில நாட்களாக நான் அடிக்கடி நினைத்துக்கொண்டிருந்த நண்பர் ரகுநாதனும் தற்போது நிரந்தரமாக நினைவுகளாகிவிட்டார் என்பதை கனத்த மனதுடன் உள்வாங்கிக்கொண்டு இந்தப்பதிவை எழுதுகின்றேன்.
அன்றைய தினம் எம்முடன்  மனோகரனின் நண்பர்  ஶ்ரீபாஸ்கரனும் உடன்வந்தார். 
அன்று,  ரகுநாதன் எம்மைக்கண்டதும்  மிகுந்த உற்சாகத்துடன் தான் சம்பந்தப்பட்ட நிர்மலா, தெய்வம் தந்த வீடு முதலான திரைப்படங்களில் ஒலித்த பாடல்களை பாடத்தொடங்கிவிட்டார்.
நண்பர்களைக்கண்டதும் அவர் உற்சாகமுற்றார். அவுஸ்திரேலியா சிட்னியில் கவிஞர் அம்பியின் 90 வயது விழா நடக்கவிருப்பது பற்றிச்சொன்னதும், பல விடயங்களை நனவிடை தோய்ந்தார்.
சிறுநீரக சிகிச்சைக்காக அடிக்கடி அவர் மருத்துவமனை சென்று வருகிறார் என்பதை அப்போதுதான் அறிந்தேன்.  நண்பர்களைக்கண்டதும் அவருக்கு வந்த  உற்சாகத்தை எவ்வாறு வர்ணிப்பது? முதுமையிலும் தனிமையிலும் இருப்பவர்களுக்கு நண்பர்களின் சந்திப்புத்தான் சிறந்த ஊக்கமாத்திரை!
அண்மையில் நான் எழுதிய   உள்ளார்ந்த ஆற்றலுக்கு முதுமை தடையில்லை  என்ற ஆக்கத்திலும் நண்பர் ரகுநாதன் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.  அதனை அவர் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.
 இலங்கையில் தமிழ் சினிமா, நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட ரகுநாதன், புகலிடத்திலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர். வயதும் மூப்பினால் வரும் பிணிகளும் அவரை முடங்கியிருக்கச்செய்தாலும், நினைவாற்றலுடன் பல சம்பவங்களை  அன்றைய தினம் நினைவுகூர்ந்தார்.
அவரது நெருங்கிய நண்பர் கவிஞர் அம்பியின் 90 விழா மலருக்கும் அவர் ஒரு ஆக்கம் எழுதியதும் அவரது துணைவியாரின் துணையினால் என்பதை பின்னர்தான் அறிந்தேன். 
  லைஞர் ரகுநாதனை நான் முதல் முதலில் சந்தித்தது நேற்று நடந்த நிகழ்வுபோன்று இன்னமும் எனது மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது.

மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 33 - முருகபூபதி


கொரோனாவுக்குள் வாழப் பழகிக்கொள்ளவேண்டியதுதான்  விதியென்றால் என்னதான் செய்வது…?
இந்த நான்கு பெண்கள் வாழ்ந்துகொண்டிருந்த வீட்டுக்குள் பிரவேசித்து வாழப் பழகவேண்டியது எனது விதியிலும் எழுதப்பட்டிருக்கவேண்டும். அதுதான் வந்துசேர்ந்துள்ளேன். வந்தவிடத்தில், இந்தப்பெண்களின் அவலத்துடன் அலைமோதிக்கொண்டிருக்கும்போது, இந்த லண்டன்காரரும் வந்து தனது தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதற்கு வழிதேடுகிறார்.
மகளை விட்டுவிட்டு ஓடிப்போன அந்த முகம் தெரியாத சிவகாமசுந்தரியும் பிராயச்சித்தம் தேடுவதற்கு தொடர்புகொள்கிறாள்.
தொடர் ஊரடங்கு உத்தரவினால், வெளியே செல்லமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும்போது, மூச்சு முட்டும் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
காற்றுப்புகாத , வெளிச்சம் அண்டாத அடைபட்ட  மூடிய அறைக்குள் சிக்கிக்கொண்டதுபோன்ற உணர்வு தோன்றியிருக்கும்போது, பிராயச்சித்தங்களுக்கும் பாவ சங்கீர்த்தனங்களுக்கும் வழிதேடுகிறார்கள்.
ஜீவிகா, எந்தக்கவலைகளும் அற்று, முகநூலிலும் கணினியிலும் பொழுதை கழிக்கிறாள். அவள் பணியாற்றும் பத்திரிகை அச்சில் வெளியாகாமல்  வடிவமைக்கப்பட்ட பக்கங்கள் அனைத்தும் கணினியூடாக மின்னஞ்சல் மார்க்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் வெளியாகிறது.  அதனால், அவள் தலைநகரத்திற்கு பயணிக்காமலேயே வீட்டிலிருந்து செய்திகளை, கட்டுரைகளை எழுதி அனுப்பமுடிகிறது.
உறக்கம் தவிர்ந்த மற்றநேரங்களில் அவளது பொழுது கணினியிலும் கைத்தொலைபேசியிலும் கரைகிறது.
சுபாஷினி,  லீவு எடுத்தும்  நுவரேலியாவுக்குச் செல்லமுடியாமல்,  அறையிலிருந்துகொண்டும், வீட்டினுள் நடமாடியவாறும் ஹெட் போனில்  பாட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறாள்.  மஞ்சுளாவையும் உடன் அழைத்துச்சென்று, வங்கியில் வேலைசெய்யும் தனது தம்பிக்கு அறிமுகப்படுத்தி, திருமணப்பேச்சுவார்த்தைக்கு அச்சாரம் போடவிருந்த அவளது திட்டத்தையும் கொரோனா குலைத்துவிட்டது.
ஊரிலிருக்கும் கோயில் கும்பாபிஷேகத்திற்காக லண்டனிலிருந்து செலவுசெய்து புறப்பட்டுவந்திருக்கும் சண்முகநாதனின் யாழ்ப்பாணப்  பயணமும் தடைப்பட்டுவிட்டது.
பாடசாலை விடுமுறையை சொந்த ஊருக்குச்சென்று சித்திரைப்புத்தாண்டுடன் கொண்டாடுவதற்கு விரும்பியிருந்த கற்பகம் ரீச்சருக்கும் இந்த கொரோனா தலையில் விழுந்த பேரிடியாகிவிட்டது.
ஊரடங்கு உத்தரவால், வங்கி வேலைக்குச்செல்லாமல், வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் சினிமா பார்த்து நேரத்தை செலவிட்டு, அபிதா செய்துதரும் தின்பண்டங்களை கொரித்துக்கொண்டிருக்கும்  மஞ்சுளாவின் மனதை, விட்டுவிட்டு ஓடிப்போன தாய் கோல் எடுத்து அரித்துக்கொண்டிருக்கிறாள்.
பிதாவுக்கு  முன்னர் படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. விதிவசத்தால் வந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் வாழ நேரிட்டிருக்கும்வேளையில்,  அவளது நினைவுத் தொடரில் வந்து விழுந்தது, அவள் என்றோ படித்திருந்த கதை.
 இஸ்லாமியக் கலிபாக்களில் ஒருவரான ஹஜ்ரத் அலியைச் சந்தித்த யூத இளைஞன் விதிக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல முடியுமா? என்று கேட்டானாம்.  ஹஜ்ரத் அலி அவனிடம், “உன் வலதுகாலைத் தூக்கு” என்றார். அவனும் தனது வலது காலைத் தூக்கியபடி நின்றான்.
“சரி…..இப்போது உனது  வலது காலைக் கீழிறக்காமலேயே இடது காலையும் தூக்கு” என்றாராம்.

என்றைக்கும் நிலைக்குந் தமிழ் (கவிதை) வித்யாசாகர்!சொல்லில் நயம் பொருளி லெழில்
கண்ணும் காதும் போல; காணவும் கேட்கவும்
இனிப்பு மொழி, கண்டவர் கேட்டவர் போற்றும்
தனித்த மொழி; தமிழ்!

வரலாற்றுக் கொடை வள்ளுவப் பறை
தெல்லுதெளிந்த கிள்ளை நடை
சொல்லும் பாட்டும் சிறக்கும் மொழி
சந்தத் தமிழ்; எங்கள் சுந்தர மொழி; தமிழ்!

சுவீடசிக்ஸ்டி - படிக்காத மேதை - சுந்தரதாஸ்

.

  உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு புகழ் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அத்தகைய படங்களுக்கு வசனம் எழுதுவதில் முத்திரை பதித்தவர் இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன், அத்தகைய படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவர் பீம்சிங், இவர்களுடைய கூட்டில் உருவான படம்தான் 1960இல் வெளிவந்த படிக்காத மேதை.

 ஊரிலே செல்வமும் செல்வாக்கும் மிக்கவராக  வாழ்கிறார் ராவ்பகதூர் சந்திரசேகரம், அவருடைய அறுபதாம் ஆண்டு திருமண விழாவினை விமர்சையாக குடும்பத்தினரும், நண்பர்களும் கொண்டாடுகிறார்கள். ஐந்து பிள்ளைகளுடன் ரங்கன் என்ற வளர்ப்பு மகனையும் அவர் வளர்க்கிறார். படிப்பறிவில்லாத ரங்கன் அப்பாவியாக வீட்டு ஏவலாளியாக திகழ்கின்றான். திடீரென ராவ்பகதூர் வியாபாரத்தில் நட்டம் அடைகிறார் குடும்பம் கடனில் மூழ்கியது, பிள்ளைகள், மருமக்கள் நண்பர்கள் எல்லோரும் ஒதுங்குகிறார்கள். வளர்ப்பு மகனான ரங்கன் மட்டுமே அவர்களுக்காக துடிக்கிறான்.

 இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த குடும்ப சித்திரத்துக்கு ரங்கனாக  வரும்  சிவாஜி மட்டும் கதாநாயகன் அல்ல ராவ்பகதூர் சந்திரசேகரமாக  வரும் எஸ்பி ரங்காராவ் மற்றுமொரு நாயகனாக நடிக்கிறார். அவரும் சிவாஜியும் தோன்றும் காட்சிகளில் இருவரும் போட்டி போட்டு தங்கள் நடிப்பை ரசிகர்களுக்கு வாரி வழங்குகிறார்கள் இவர்களுடன் பி கண்ணாம்பா,  டி எஸ் துரைராஜ்,  முத்துராமன் அசோகன்,  சவுகார் ஜானகி , சுந்தரிபாய் என்று பலர் நடித்திருக்கிறார்கள்.


இலங்கைச் செய்திகள்


பொதுத் தேர்தல் ஜூன் 20, சனிக்கிழமை; வர்த்தமானி வெளியீடு

பாகிஸ்தானில் சிக்கிய மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்

பொலிஸ் நிலையம் நுழைந்து பொலிஸாரை அச்சுறுத்தியவர் கைது

தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் பளை மக்கள்

திருகோணமலை மாவட்டத்தில் எவருக்கும் கொரோனா இல்லை


பொதுத் தேர்தல் ஜூன் 20, சனிக்கிழமை; வர்த்தமானி வெளியீடு
பொதுத் தேர்தல் ஜூன் 20, சனிக்கிழமை; ஆணைக்குழு தீர்மானம்!-EC Decided to Hold General Election on June 20-Mahinda Deshapriya
அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி, சனிக்கிழமை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று (20) பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.
மிக நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்றும் (இல 2172/03) வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்த வேட்பு மனுத் தாக்கலை அடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மிகத் தீர்க்கமான முடிவொன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் திகதி தொடர்பில் உச்சநீதிமன்றை நாடுமாறு ஜனாதிபதியை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்தது
இந்நிலையில், தேர்தல் தினம் தொடர்பில் முடிவொன்றை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருப்பதால் உச்ச நீதிமன்றை நாட வேண்டிய அவசியம் இல்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

உலகச் செய்திகள்


கொரோனா சிகிச்சைக்காக மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐ.நா பாராட்டு

சீன ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்?

கிம்மின் உடல்நல தகவல்; தென்கொரியா மறுப்பு

கிம் ஜாங் உன் நலம் பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து

அமெரிக்காவில் அதிகரித்த மரணங்களுக்கு காரணம் குளோரோகுயின் மாத்திரையா?

அதிக பாதிப்பின்றி கொரோனாவிலிருந்து தப்பிக்கும் ஆபிரிக்கா

அமெரிக்காவில் கொரோனா கோரத் தாண்டவம்

எங்கள் கப்பல்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்


கொரோனா சிகிச்சைக்காக மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐ.நா பாராட்டு
கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்தது.
இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தங்களுக்கு வழங்கவேண்டும் என அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவை கேட்டுக்கொண்டன. இதனால் ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு இருந்து வந்த தடையை இந்திய அரசு நீக்கியது.
இதையடுத்து, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அந்த மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா பெருந்தொற்று நோய் என்பதால் அதை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராடவேண்டும். இந்த விஷயத்தில் ஒவ்வொரு நாடும் தன்னால் இயன்ற உதவிகளை மற்ற நாடுகளுக்கு செய்ய வேண்டும் என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

உதவுங்கள்; உலகம் உய்யட்டும் (மனிதர்கள் படிக்கவேண்டியது) வித்யாசாகர்!


"ந்த உலகம் என்பது நாம் தான்" ஐயா அருட்தந்தை திரு. ஜகத் கஸ்பர் சொன்னது. ஆம்சிந்தித்துப் பாருங்கள் இந்த உலகம் என்பது நாம் தான். இந்த உலகம் நம்மால் தான் இயங்குகிறது. இந்த உலகம் நல்லதோர் நிலையை எய்தி நன்மையை பயக்குவதற்கும்தீய செயல்களால் அழிந்து வேறொரு மக்கள் உருவாவதற்கும் இந்த உலகத்தின் எதிரிகளாகவும் நண்பர்களாகவும் நாமே இருக்கிறோம். 

எது எப்படியோ ஒரு கோடுதனை அழிக்காமல் சிறிதாக்கவேண்டுமெனில் அருகில் ஒரு பெரிய கோடுதனை இடுவதைப்போலநாம் செய்த பல தவறுகளையும் பாவங்களையும் தானே தீர்ந்துவிடும் என்றெண்ணாது அருகே பல பெரிய புண்ணியக்கோடுகளை இடுவோம் எனில் வாழ்க்கை நமக்கு இன்னும் ஆனந்தமாக மாறும். அது எல்லோருக்குமாய் மாற நாம்தான் இன்னும் கொஞ்சம் பெரிய மனங்கொண்டு பல நற்செயல்களை ஆற்ற வேண்டும். 

நாம் செய்த தவறும் பாவங்களும் நாம் தற்போது செய்யும் பல நன்மைகளால் சிறிதாகி சிறிதாகி ஒரு கட்டத்தில் அது நம் நன்மைகளின் முன்னே நிற்க திராணியற்றதாகி சுருங்கி சுருங்கிபோய் நாளை அவைகள் இல்லாதே போவதுபோல் நமது குற்றங்களும் குறைகளும் கூட இனி இல்லாதுபோகட்டும். 

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க செல்பேசி அழைப்பு :


நேற்று காலை சுமார் 11 மணி இருக்கும். செல்லிடபேசி மணி ஒலிக்கவே அதனை எடுத்து "வணக்கம்... ஜெயராஜன்" என்றேன். மறு முனையில் பேசியவர் கடகடவென ஏதோ பாடம் ஒப்புவிப்பவர் போல், "சார் வணக்கம்... நாங்க '...... .....  ஜுவெல்லர்ஸ்' இருந்து பேசுறோங்க.... இப்போ டெய்லி தங்கத்தோட விலை ஏறிக்கிட்டே வருது. உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்... அதே நேரம் அட்சய திருதியையும் வருது. ஆனா கொரோனா வைரஸ் காரணமா எங்களால கடை திறக்க முடியலே. அதனாலே நீங்க அட்சய திருதியை அன்னிக்கு நகை ஏதும் வாங்கற மாதிரி அபிப்பிராயம் இருந்தா, இன்னிக்கு ரேட்லே கோல்ட் புக் பண்ணிக்கலாம்... அந்த ரேட் பேசிஸ்லே அட்சய திருதியை அன்னிக்கு நகை ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்... ஊரடங்கு முடிஞ்சு கடை திறந்த பின்னாடி நேரிலே வந்து நகை டிசைன் பாத்து வாங்கிக்கலாம். அப்போ பணம் கொடுத்தா போதும்" என்று நிறுத்தி சற்று மூச்சு விட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். .


அவரது பேச்சின் வேகத்திலிருந்து,  "இந்த அட்சய திருதியையை  எப்படியும் மக்கள் விட மாட்டார்கள் ..... ஏதேனும் ஒரு நகையை, குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்க காசையாவது வாங்க கட்டாயம் முயற்சி செய்வார்கள்.... அதை எப்படியாவது ஒரு வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.." என்ற தொழில் வெறி தெரிந்தது.இந்த காலகட்டத்தில் வழக்கமாக எல்லோரும் என்ன பதில் கூறியிருக்கக் கூடுமோ அதையே நானும், "சார்... நீங்க சொல்றதெல்லாம் புரியுது.... ஆனா இப்போ ஒன்னும் பெருசா தொழில் இல்லே... வருமானம் சைபர்... மேற்கொண்டு எப்படி வாழறதெங்கறதே  இனிமேதான் திட்டம் போடணும் போல இருக்கு... இந்த நேரத்திலே, அதுவும் தங்கத்தோட விலை அதிகமா இருக்குறப்போ நகை வாங்க எனக்கு ஒன்னும் ஐடியா இல்லே சார்" என்று சொன்னேன். அடுத்த முனையில் பேசியவர் தனது குரலின் சுருதியை சற்றே குறைத்து, "நகை வாங்கலேன்னா கூட பரவாயில்லே... ஒன் கிராம் கோல்டு  காய்ன் வாங்கலாமே சார்...  " என்று மற்றொரு தூண்டில் போட்டார். என்ன பேசி என்னவாகப் போகிறது? கையில் பணப்புழக்கம் இல்லை. மனமும் புழுக்கமாக உள்ளது. எனவே, "இப்போ வேண்டாம் தம்பி... பின்னாடி பாப்போம்..நன்றி" என்று கூறி செல்பேசியை அணைத்துவிட்டேன்.

வரமா சாபமா மயக்கமா கலக்கமா ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .. அவுஸ்திரேலியா


      அலாரம் அடிக்க அதிகாலை அடித்துப் பிடித்து எழும்பிடுவோம்.குளித்தது பாதி குளிக்காதது பாதியாய் அரைகுறையாய் வாயில் போட்டு வெந்ததா வேகாததா என்று பாராமல் உப்போ ,உறைப்போ ,இனிப்போ  , புளிப்போ எந்தச்சுவையையும் உணராமல் எடுத்திடுவோம் ஓட்டம் எல்லோரும் வேலைக்கு. இது நாளாந்தம் வீட்டில் நடக்கும் திருவிழா !  .... அல்ல...... அல்ல கலக்கும் விழா ! 

   அம்மா அப்பா இருவரும் அடித்துப்பிடித்து வேலைக்குப் போவார்கள். பாட்டியோ தாத்தாவோ இருக்கும் பிள்ளைகளை எழுப்பி குளிக்க வைப்பார்கள். சிலவேளை அதுவும் இருக்காது. இருக்கும் சாப்பாட்டை கொடுப்பார்கள். அவர்களும் வேண்டா வெறுப்பாக  மென்று விழுங்குவார்கள். வாசலிலே வண்டியின் சத்தம் ! கேட்டவுடன் விழுந்தடித்து புத்தகங்கள் கொண்ட சுமையைச் சுமந்து வண்டியில்  போகமனமின்றி ஏறியும் விடுவார்கள். மத்தியானம் சாப்பாட்டை பசியோடு சாப்பிட எடுத்தால் அதில் ஒருவித வாடை வரும். பசி ஒருபக்கம் பிடுங்கும். அம்மாவின் நேற்றைய தயாரிப்போ அல்லது முன்னாள் தயாரிப்போ பசிபிடுங்கும் பிள்ளைகளைப் பார்த்தபடி இருக்கும்.குழாய் நீரைக்குடித்து பசியினுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மீண்டும் கணக்கு வாத்தியாரின் கைகளுக்குள் அகப்பட்டு நிற்பார்கள் அவர்கள்.
  எப்போது மணியடிக்கும் ? எப்போது வீடுவரலாம் ? என்னதைச் சாப்பிடலாம் என்னும் எண்ணமே எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கும். வீட்டுக்கு வந்தால் அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. சமையலும் இல்லை. தாத்தா கதிரையில் பத்திரிகை பார்த்தபடி இருப்பார். பாட்டி தொலைக்காட்சியில் நாடகத்தை தன்னைமறந்து ரசித்தபடி இருப்பார். பிள்ளைகளோ பாட்டியின் உப்பு சப்பற்ற சாப்பாட்டை மென்று விழுங்கும் நிலைக்கு ஆளாகிவிடுவர்.
   மாலை ஐந்து மணிக்கு அம்மா வருவார். இரவு ஏழுமணிக்கு அப்பா வருவார்.வேலைக் களைப்பில் யார் யாருக்கு தேனீர் தயாரிப்பது என்பதே சிக்கலாகி விடும் ! பரிதாபப்பட்டு பாட்டி சுவையோ சுவையில்லையோ தேனீர் என்னும் பெயரில் ஒரு பானத்தைக் குடிக்கக் கொடுப்பார். அப்பா மடக்கு மடக்கென்று குடித்துவிடுவார். அம்மா வாயில் விட்டவுடன் அருவருக்க பாட்டியை ஒரு பார்வை பார்ப்பார். பாட்டியோ மீண்டும் நாடகத்துக்குள் புகுந்து விடுவார்.

பெண்களின் காதல் ரகசியம் (கவிதை) வித்யாசாகர்!!

னம் வலிக்குமென்றெல்லாம் அவளுக்கு 
கவலையில்லை, 
பிரிவை பொழுதின் மாறுதலாக எடுத்துக் 
கொள்பவள் அவள், 
சட்டை மாற்றும் போது 
காதலும் மாறிப்போகுமா தெரியவில்லை 
அவளொரு காதல் தெரியாதவள்
என்னை ஏதோ பெரிதென்று எண்ணி 
நேசித்தவள் அருகில் வந்ததும் 
லேசாகிவிட்டேன் நான்; காதல் இப்படித்தான் 
தொடும்வரைதான் மின்சாரம் பாயும் 
தொட்டப்பின் கொன்றோ 
விட்டொவிடுகிறது
என்றெல்லாம் எழுதுவோரைக் கொஞ்சம் 
காது திருகி அழைக்கிறேன் வாருங்கள் 
காதல் சொல் அல்ல 
சொல்லுக்குள் இருக்கும் ஈரம் 
அம்பு எய்தும் ஆட்டின் படமல்ல, 
அதற்குள் இருக்கும் மனம் 
மனமும் உயிரும் புரிபவருக்குத் தான்
காதல் புரிகிறது

படித்தோம் சொல்கின்றோம்: வாசித்துப் பயன் பெறத்தக்க ஆக்கங்களின் வரவுடன்… ஞானம் 2020 ஏப்ரில் மாத இதழ் முருகபூபதி


இலங்கையில் கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஞானம் மாத இதழின் இம்மாதத்திற்குரிய ( 2020 ஏப்ரில் ) பிரதி கிடைக்கப் பெற்றோம்.
உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்குத் தெரியாத எதிரியை முறியடிக்க ஒவ்வொரு தேசமும் போராடிக்கொண்டிருக்கும் சமகாலத்தில், இந்த எதிரியின் தோற்றம் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையுடன், இம்மாதம் 01 ஆம் திகதிவரையில் கிடைக்கப்பெற்ற பாதிப்பு தொடர்பான புள்ளிவிபரங்களுடனும், இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியை சமாளிப்பதற்கு பொதுமக்கள் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கை முறைகளை தேசத்தின் நலன் கருதி மாற்றிக்கொள்ளவேண்டுமென்பதை அறிவுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்  ஆசிரியர் தி. ஞானசேகரன் விரிவானதோர் ஆசிரியத்தலையங்கம் எழுதியுள்ளார்.
ஆசிரியர் தி. ஞானசேகரன் தொழில்முறையில் முன்னர் மருத்துவராக இலங்கையின் மலையகப்பிரதேசங்களில் பணியாற்றியவர் என்பதும்  குறிப்பிடத்தகுந்தது.
முன்னைய காலங்களில் சில வைரஸ் அச்சுறுத்தலை சந்தித்த  சில உலக நாடுகளில் நேர்ந்த  தாக்கங்கள் குறித்தும், அதிலிருந்து அந்நாட்டு மக்கள் மீண்டெழுவதற்கு தேவைப்பட்ட காலப்பகுதி  பற்றியும்  விரிவாக பதிவுசெய்துள்ளார்.
சமூகப்பிரக்ஞையுடன் ஒரு கலை, இலக்கிய இதழாசிரியர் இந்த ஆசிரியத் தலையங்கத்தை எழுதியிருப்பது பாராட்டத்தக்க செயலாகும்.
239 ஆவது இதழாக வெளியாகியிருக்கும் ஞானம் இதழ் , வ.ஐ.ச. ஜெயபாலன், மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, புலோலியூர் வேல் நந்தன், சமரபாகு சீனா உதயகுமார், சித்தி கருணானந்தராஜா, கெக்கிராவ சுலைகா, ஜின்னா ஷரிப்புத்தீன், செல்லத்தம்பி சிறிக்கந்தராசா, ரஷீத் எம். இம்தியாஸ், ஆகியோரின் கவிதைகளுடனும் –
எஸ்.ஐ. நாகூர்கனி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஞானம் பாலச்சந்திரன் ஆகியோரின் சிறுகதைகளுடனும் –
கோத்திரன் – கே. சித்திரவேலாயுதன், க. சண்முகலிங்கம், நாட்டிய கலாநிதி  கார்த்திகா கணேசர், பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோரின் கட்டுரைகளுடனும் –
தமிழ்மணி மானா மக்கீன், பேராசிரியர் துரை மனோகரன் ஆகியோரின் தொடர் பத்தி எழுத்துக்களுடனும் பத்திரிகையாளர் கே. பொன்னுத்துரை எழுதும் சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திக்குறிப்புகளுடனும், வாசகர் கருத்துக்களுடனும் வெளியாகியுள்ளது.
சமகால அச்சுறுத்தலினால் சித்திரை வருடப்பிறப்பையும் வெளியே சென்று கொண்டாட முடியாமல் தவித்திருப்பவர்களின் ஆதங்கத்தை  ஆர்வருவார் சித்திரையை வரவேற்க என்ற தலைப்பில் கவிதையாக வடித்துள்ளார் மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா.
வ.ஐ. ச. ஜெயபாலன்,  சென்னையிலிருந்தவாறு, தானது குடும்பம் வாழும் புகலிடத்தையும் நினைத்தவாறு அருமையான கவிதை எழுதியுள்ளார்.
அதன்வரிகள் வலிக்கின்றன.   
சென்னையின் மாடிவீட்டுத்தோட்டத்தில் முல்லை மலர்ந்தாலும், அமேசன் காட்டுத்தீயையும் மிஞ்சி உலகை வேட்டையாடுதே கொரோனா-
பெசன்ட் நகர் கடற்கரையில் கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல் நண்டுகள் தொற்றும் இரவில் குடிசைகளுள் படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில் வலிய விரல்கள் ஊர்கின்றன -
சாத்தானே அப்பாலே போ – மனிதர்கள் கைவிடப்படுவதில்லை – ஒருபோதும் வெல்லப்படுவதுமில்லை.
தனது புகலிடம் ஒஸ்லோ குறித்தும் சொல்லிச்செல்கின்றார்.