பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் வரும் படங்கள் என்றாலே தரமானவையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரின் டைரக்சனில் வரும் படம், சால்ட்&பெப்பர் மலையாளப்பட ரீமேக், இசைஞானி, சிநேகா போன்ற சில விஷயங்களும் நம் எதிர்பார்ப்பை எகிற வைக்க, தியேட்டரில் நாம் ஆஜர். (இங்கே ஒருநாள் தாமதமாக ரிலீஸ்!).
ஒரு ஊர்ல..:
பிரகாஷ்ராஜ் ஒரு சாப்பாட்டுப் பிரியர். பெண் பார்க்கப் போனாலும், பஜ்ஜி சொஜ்ஜியை மட்டும் ரசிக்கும் முதிர்கன்னன்(!). டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சிநேகாவும் ஒரு முதிர் கன்னி. அவர்களுக்கிடையே ராங் கால் ஒன்றினால் ஏற்படும் மோதல், நட்பாகி காதலாகிறது. இருவரும் சந்திக்க நினைக்கையில் ஒரு இளம்ஜோடியின் காதல் அவர்களைப் பிரிக்கிறது. இறுதியில் சேர்ந்தார்களா என்பதை சுவைபடக் கூறுவதே ‘உன் சமையல் அறையில்’.
உரிச்சா....:
கதைக்குப் பொருத்தமான தலைப்பு இதைவிட வேறு இருக்க முடியாது. முதல் காட்சியிலேயே பிரகாஷ்ராஜ் கேரக்டர் ‘சாப்பிடுவதற்காகவே வாழும் கேரக்டர்’ என்பதை செம காமெடியாகச் சொல்கிறார்கள். தொடரும் ‘இந்தப் பொறப்பு தான்’ பாடலில் ஆரம்பிக்கிறது நமக்குத் தீனி. பிரகாஷ்ராஜ் பெண் பார்க்கப்போகும் சீனில் ஆரம்பித்து, களை கட்டுகிறது தியேட்டர். சிநேகா தோசை கேட்டு பிரகாஷ்ராஜுக்கு ஹோட்டல் என நினைத்து ராங்-கால் செய்ய, தொடரும் மோதல் நட்பாவது அழகு. அடுத்து வரும் ‘ஜோன்’ஸ் கேக்’ செய்யும் சீகுவென்ஸ் காட்சிகளில் வரலாறுடன் காதலும் இருவருக்குமிடையே பரிமாறப்படுகிறது. ஒரு கேக் ரெசிப்பியில் காதல் உருவாவது அழகான கவிதை. முதல் பாதியில் பிரகாஷ்ராஜ்-சிநேகா காதலை விளக்கும் படம், இண்டெர்வெல்லில் இளம்ஜோடிக்கு ஷிஃப்ட் ஆகிறது.
இரண்டாம்பாதியில் இளம்ஜோடியின் காதல் வளர வளர, மூத்த ஜோடிக்கு ஆப்பாக அமைவது லாஜிக்கலாகவும் ஒத்துக்கொள்ள முடிகிறது. காதல் கோட்டை பீரியடில் ஹீரோவும் ஹீரோயினும் சேர்வார்களா எனும் தவிப்பை ஏற்படுத்தும் பல படங்கள் வந்தன. பின்னர் அவை ஓல்டு ஃபேசனாகி நின்றுவிட்டன. நீண்ட இடைவெளிக்குப் பின் அதே ‘பார்க்காமலே காதல்’ சப்ஜெக், அதே தவிப்பை நமக்குள் ஏற்படுத்துவது தான் படத்தின் சிறப்பம்சம். இரு ஜோடிகளும் ஒரே காரில் தற்செயலாகப் பயணிக்கும் காட்சியில் நமக்கும் டென்சன் ஏறுகிறது.
தமிழில் சாப்பாடை மையப்படுத்தி வேறுபடங்கள் வந்தமாதிரித் தெரியவில்லை. வெறும் காமெடிக்கு மட்டுமே யூஸ் ஆன ‘சாப்பாட்டுப் பிரியன்’ மேட்டரை வைத்து, ஒரு உணர்வுப்பூர்வமான படத்தைப் பார்க்க நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் பாசிடிவ் தான் என்றாலும் விஷூவலாக யோசிக்காமல், நீண்ட வசனம் மூலம் இணைவதாகக் காட்டியிருப்பது சற்றே பழைய உத்தி. ஆனாலும் இருவரும் இணையாமல் போனதற்கு முக்கியக் காரணம், தன் தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மை தான் என்பதை விளக்கும் அந்த வசனங்கள் அருமை.
இளையராஜா:
நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜாவின் இசை ராஜாங்கம். நான்கு முத்தான பாடல்கள். இந்தப் பொறப்பு தான் பாடல் ருசிக்க வைக்கிறது என்றால் ஈரமாய் பாடலில் காதல் வழிந்தோடி நம்மை ரசிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவில் ராஜாவின் பல நல்ல பாடல்களையும் காட்சிப்படுத்துவதில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். ஆனால் இதில் அந்த பாடல்களுக்கு இணையாக, காட்சிகளையும் ரசித்து ருசித்து எடுத்திருக்கிறார்கள். பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் இரு அருமையான இளம்ஜோடிப் பாடல்கள் வரும். அதே ஸ்டைலில் அதே இளமையுடன் தெரிந்தோ..தெரியாமலோ பாடல் வருகிறது. நான்காவது பாடலான காற்று வெளியில் இளையராஜாவின் குரல் தான் விசேஷம். பிண்ணனி இசையில் தான் மட்டுமே ராஜா என்று மீண்டும் நிரூபிக்கிறார் இசைஞானி.
பிரகாஷ்ராஜ்:
ஏற்கனவே வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கிறேன் என்று நம்மை ஒருவழி பண்ணியவர். எனவே மறுபடியுமா என்று பயம் வந்தது. சால்ட் அன் பெப்பர் ரீமேக் என்று தெரிந்தபிறகே நிம்மதியாக இருந்தது. ஏற்கனவே நடிப்பில் பின்னுவார், இதில் இயக்குநரும் அவரே. எனவே சின்ன சின்ன எக்ஸ்பிரசனில்கூட ‘ஜீனியஸ்’ என்று உணர்த்துகிறார். வடையை ருசிப்பதாகட்டும், சிநேகாவை மறக்க முடியாமல் தவிப்பதாகட்டும் ‘செல்லம்’ என்று நம்மை கத்த வைக்கின்றார். ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது, அதே ஜீவனை மீண்டும் கொண்டுவருவது பெரும் சவால். அதில் ஒரு இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
சிநேகா:
காலம் சில கோலங்களை சிநேகாவின் பொலிவில் செய்திருந்தாலும், அழகாகவே இருக்கிறார். வயதிற்கு ஏற்ற கேரக்டர் என்பதால் உறுத்தாமல் செட்டாகிறார். பிரகாஷ்ராஜ் போன்ற திறமையான நடிகர்களுக்கு ஈடுகொடுத்து நடிக்க, சிநேகாவை விட்டால் வேறு ஆள் இல்லை. மெச்சூரிட்டியான நடிப்பால், அந்த கேரக்டரின் கஷ்டங்களையும் சந்தோசங்களையும் நமக்குள் கடத்திவிடுகிறார்.
தேஜஸ் – சம்யுக்தா:
இரு சீனியர் நடிகர்களின் நடிப்பிற்கு முன் இவர்களின் பெர்ஃபார்மன்ஸ் சப்பையாகத் தெரிகிறது. இருவரும் தனியே சந்திக்கும் காட்சிகளில் மட்டுமே நம் கவனத்தை ஈர்க்கிறார்கள். தேஜஸ், செல்வராகவன் பட செகண்ட் ஹீரோ கேட்டகிரி என்பதால் தேறுவது கொஞ்சம் கஷ்டம் தான். அம்மணியும் அப்படியே. இருவரும் நடிப்பில் இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும்.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- கதைக்கு எந்தவிதத்திலும் உதவாத ஆதிவாசி போர்சன்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நச்சென்று எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் (விஜி & ஞானவேல்)
- போரடிக்காமல் நகரும் திரைக்கதை
- இளையராஜாவின் பிண்ணனி இசை & பாடல்கள் (பழநிபாரதி)
- பிரகாஷ்ராஜ் & சிநேகாவின் மெச்சூரிட்டியான நடிப்பு
-ப்ரீதாவின் ஒளிப்பதிவு
- குடும்பத்துடன் பார்க்கக்கூடிய மொழி கேட்டகிரிப் படம்
Nantrisengovi.blogspot.com.au/