செடிகள் வீழ்வதும், செழிப்பதும் ஏன்?

.

அருகருகே இருந்த இரண்டு வீடுகளில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவரும், ஒய்வு பெற்ற முதியவர் ஒருவரும் வசித்து வந்தனர்.
இருவருமே ஒரே மாதிரியான செடிக் கன்றுகளை வாங்கி தங்களின் வீட்டின் அருகே நட்டு வைத்திருந்தனர்.
சாப்ட்வேர் இளைஞர் அந்தச் செடிக்கு தண்ணீர், உரம் என்று தினம் தினம் வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்த முதியவரோ தினமும் சிறிதளவு நீரும், உரமும் மட்டுமே தன் செடிகளுக்கு கொடுத்து வந்தார்.
இளைஞரின் செடிகள் செழிப்பாக, பசுமையாக வளர்ந்து வந்தன.
முதியவரின் செடிகள், சாதாரண தோற்றத்துடன் ஆனால் நல்ல விதமாக வளர்ந்து வந்தன.
ஒரு நாள் இரவு, அங்கே பயங்கரக் காற்றுடன், மழை பொழிந்தது...
மறுநாள் காலையில் இருவருமே தங்களின் செடிகளின் நிலையைப் பார்க்க வந்தனர்.
ஆச்சர்யப்படும் விதமாக, இளைஞரின் செடிகள் மண்ணில் இருந்து பிடுங்கப்பட்டுக் கிடந்தன...
ஆனால் முதியவரின் செடிகள் எந்த சேதமும் இல்லாமல் இருந்தன.
அந்த இளைஞருக்கு ஒன்றும் புரியவில்லை!
முதியவரிடம்,
“நான் விழுந்து விழுந்து கவனித்த செடிகள் இப்படி ஆகி இருக்கு... நீங்க ஏனோ தானோன்னு கவனித்த செடிகள் நல்லா இருக்கே!” என்று அங்கலாய்த்தான்.
முதியவர்,
“தம்பி, நீ உன்னோட செடிகளுக்கு நிறைய செய்த... தேவைக்கு அதிகமாவே செய்த... அதனால் அந்த செடிங்க எதையும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போச்சு... அதனால் அதோட வேர் உள்ளே போகாம இருந்திருக்கு.
நான் என் செடிகளுக்கு, அதுக்குத் தேவையான அளவு மட்டும் தண்ணியும், உரமும் கொடுத்தேன்...
அதுக்கு மேல இருக்க தேவைக்கு வேரு மண்ணுக்கு உள்ளே போய்த் தேட வேண்டிய அவசியம் இருந்தது...
உன்னோட செடிகளோட வேரு எல்லாம் மேலோட்டமா இருந்ததால, மழையையும் காத்தையும் தாக்கு பிடிச்சு நிற்க முடியாம விழுந்திருச்சு...
என் செடிகளோட வேர் எல்லாம் பூமியில நல்லா பதிஞ்சு இருந்ததால இயற்கையோட சீற்றத்தையும் தாங்கி நிற்க முடிஞ்சது...” என்றார்.
முதியவரின் பதில் அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே ஒரு நல்ல வாழ்க்கைப் பாடம்.
அவர் சொன்ன கருத்து அந்தச் செடிகளுக்கு மட்டுமல்ல, நம் குழந்தைகளை நாம் வளர்க்கும் முறைக்கும் கூடப் பொருந்தும்!
சிந்தித்துப் பாருங்கள்..!!

Nantri uyirthuli nethaji

No comments: