மரண அறிவித்தல்

.
             திரு.பொன்னையா இராசகுலசூரியர்


22.10.1932 – 29.08.2018

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வத்தளை,
கொழும்பு, Westmead NSW Australia வை  வதிவிடமாகவும் கொண்ட முன்னாள்  இலங்கை மத்திய வங்கிஅலுவலக உத்தியோகத்தர் பொன்னையா இராசகுலசூரியர் 29.8.2018 அன்று இறைபதமடைந்தார். அன்னார், காலம் சென்றவர்களான பொன்னையாமனோன்மணி ஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான தம்பையா, லக்ஷ்மி அவர்களின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், செல்வநாயகம், கிருஷ்ணபிள்ளைபெரியநாயகி,  நாகேந்திரன்,  சிவசோதி ஆகியோரின் சகோதரரும், வசந்திமோகன் (Australia), ஜெயந்தி, ஆனந்தி(U K) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், திருக்குமரன்,
ரேவதி ( Australia), றமணன், கஜேந்திரன் (U K) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,  அஷ்வினி,தனேஷ், ஆரணி (Australia), உமேஷ், அஞ்சனி, அர்ச்சனாநரேஷ் (U K) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.
அன்னாரின் ஈமைக் கிரிகைகள் September மாதம் 2ம் திகதி  காலை 8.30 மணிக்கு 117 Rausch Street, Toongabbie இல் நடைபெற்று, அவரின் பூத உடல் தகனக்கிரிகைகளுக்காக   Pine Grove Cemetery, Minchinbury  க்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு:

மோகன்-0421123660
திருக்குமரன்-0408903589

ஏன் இயற்கை அழிக்கின்றீர் ! - எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


                         மரம் அழிக்கும் மானிடரே 
                             மரம்  வளர்க்க  வாருங்கள் 
image1.JPG                        மரம் அழித்து  நிற்பதனால் 
                              மரத்ததுவா உங்கள்  மனம் 
                          நிலம்  காக்கும்  மரத்தையெலாம் 
                                நிர்மூலம் ஆக்கி  நின்றால் 
                           நிச்சயமாய் இயற்கை அன்னை
                                 நிம்மதியை இழந்து  நிற்பாள்  ! 


                         வயல்  நிலங்கள் எல்லாமே 
                             மாடி  மனை  ஆகிறது 
                        வளம் விழுங்கும் அரக்கர்களாய்
                              மனிதர் பலர் மாறுகிறார்
                        தொழிற்சாலை எனும் உருவில்
                              தூசு மழை  குவிகிறது 
                        தூய  நீரை தேடிநின்று
                              துவழ்கின்றார் மக்கள் எலாம் ! 

                        எடுத்து  நிற்கும்  செயலாலே
                              இயற்கை வளம் குலைகிறது 
                       இயற்கை எனும்  அமைப்புத்தான்
                               இவ்  உலகின் அரணாகும் 
                        இயற்கை எனும் கவசத்தை
                               எடுத்துப்  பிய்த்து எறிவதனால்
                        இயற்கை அன்னை கோபமது
                                எமைத்  தாக்கி   நிற்கிறதே  !

பனி விழும் இரவு (சிறுகதை) யோகன்- கன்பெரா


Image result for american mission tamil schools in jaffna

.


                             
ரூபன் என்ற தேவரூபன் இறந்த செய்தியை பிரான்சிலிருந்து போனில் சொன்னவன் என்னோடு படித்த அருமை. ரூபனும், அருமையும், நானும் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தது சேச்சடிப் பள்ளிக்கூடத்தில். அந்த பள்ளிக்கூடம் அமெரிக்கன் மிஷன் தேவாலய வளவுக்குள் இருந்ததால் அந்தப் பெயரில் அழைக்கப் பட்டது. அதன் உண்மையான பெயர் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை. தேவாலயம் கட்டப்பட்ட அதே காலத்திலேயே அது கட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் படித்த காலத்திலேயே அது அரசாங்க பள்ளிக்கூடம் ஆகிவிட்டது. பெயர் மட்டும் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை என்று பதிவுகளிலும் பலகைகளிலும் எழுதப்பட்டு இருந்தது..

தேவாலயத்தில் அப்போது ஆலய பாதுகாவலனாக இருந்த செல்லையா ரூபனின் தகப்பன். தினமும் காலை ஐந்தரை மணி, மாலை ஆறு மணிக்கு கோயில் மணி அடிப்பது ஆராதனைகளுக்கு மற்றும் செத்த வீடு என்றால் மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏறியிருந்தது அடிக்கொரு தரம் சா மணி அடிப்பது அதை விட தேவாலயத்துக்கு உள்ளும் வெளியும் கூட்டி சுத்தமாக வைத்திருப்பது இதெல்லாம் செல்லையாதான். ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஆராதனைக்குப் பூக்கள் வைத்து அலங்கரிப்பது, குத்து விளக்குகளைத் துடைத்து மெழுகு திரி கொளுத்துவது போன்ற வேலைகளில் ரூபனும் தகப்பனுக்கு உதவி செய்து வந்தான். ரூபனோடு ஓரிருமுறை அந்த ஆலயத்துக்குள் போய்ப் பார்த்திருக்கிறேன். அதன் அமைதி ஒரு வித பயத்தைத் தந்தது. சுவர்களில் அடித்த வெள்ளைப் பூச்சு பல இடங்களில் உதிர்ந்திருந்தது. சுவர் எங்கும் சாம்பல், வெள்ளை நிறத்தில் இறந்தவர்களுக்கு நினைவுக்கு கற்கள் மாபிளில் பதிக்கப்பட்டிருந்தன.  எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வேத வசனம் இருந்தது. 

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்: புறக்கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதிவந்திருக்கும் மண்டூர் அசோக்கா - முருகபூபதி


மண்டு மரங்கள் பார்த்திருக்கிறீர்களா? அத்தகைய மரங்கள் செழித்த பிரதேசத்திற்கு காலப்போக்கில் மண்டூர் என்ற காரணப்பெயர் தோன்றியிருப்பதாக கிழக்கிலங்கை முன்னோர்கள் சொல்கிறார்கள்.
கிழக்கிலங்கையில் மட்டுநகரிலிருந்து தென்திசையில் சுமார் ஐம்பது கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இந்தக்கிராமத்தின் பெயரையும் இணைத்துக்கொண்டு ஈழத்து இலக்கிய உலகில் பிரபல்யம் பெற்றிருப்பவர்தான் அசோகாம்பிகை.
நால்வகைத்திணைகளையும் கொண்ட இந்த அழகிய கிராமத்தில் இளையதம்பி - கனகம்மா தம்பதியரின் புதல்வியாகப்பிறந்திருக்கும் அசோகாம்பிகை தனது ஆரம்பக்கல்வியை மண்டூர் அரசினர் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து,  அதன்பின்னர்  மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியையாக  கிழக்கிலங்கையில் பல பாடசாலைகளில் பணியாற்றினார்.
இறுதியாக சுவாமி விபுலானந்தர் தோற்றுவித்த கல்லடி சிவானந்தா கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இவரும் ஈழத்தில் பல எழுத்தாளர்கள் இலக்கியப்பிரவேசம் செய்த 1970 காலப்பகுதியிலேயே இலக்கியப்பிரதிகளை எழுதத்தொடங்கினார்.
அதற்கு தூண்டுகோலாகவிருந்தது இளைமைக்காலத்தில் இவரிடமிருந்து வாசிப்பு ஆர்வம். பொதுவாக தமிழ்ச்சமூகத்தில் மாணவப்பராயத்திலிருக்கும் பிள்ளைகள் கதைப்புத்தகம் படித்தால் கெட்டுப்போவார்கள் என்ற மூடநம்பிக்கை ஆழமாக வேரூண்றியிருந்தது. ஆனால், தமது பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் வளரவேண்டும் என விரும்பும் பெற்றோர்கள், தமது மாணவர்கள் சுயவிருத்தி ஆற்றலுடன் முன்னேறவேண்டும் என விரும்பும் ஆசிரியர்களைப்பெற்றவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான்.
மண்டூர் அசோக்கா அத்தகைய பாக்கியம் செய்தவர். அவருடைய முதல் கதைத்தொகுதி கொன்றைப்பூக்கள் கொழும்பில் அச்சிடப்பட்டவேளையில் அதன் முதல் பிரதியை எனக்கும் இலக்கிய நண்பர் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுக்கும் காண்பித்தவர் கலை, இலக்கிய ஆர்வலர் வேலணை வீரசிங்கம். இவர் பிரவுண்சன் கோப்பி என்ற வர்த்தக ஸ்தாபனத்தை நடத்திக்கொண்டிருந்த காலம். பல கலை இலக்கிய நிகழ்வுகளுக்கும் இலக்கிய நூல்களின் வெளியீடுகளுக்கும் அனுசரணையாக திகழ்ந்த பிரமுகர்.

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்14 சகாயவிலையில் குமுழ் முனைப்பேனாவை வழங்கிய கே.ஜீ. நிறுவனம் சிங்கள சினிமாவை வளர்த்து தேசிய பொருளாதாரத்தையும் ஊக்குவித்த சினிமாஸ் குணரத்தினம் - ரஸஞானி




எமது   ஈழத்து  இலக்கிய   நண்பர்   பல்கலைவேந்தன்  சில்லையூர் செல்வராசன்    சிறந்த   குரல்வளம்    மிக்கவர்.    அவர்   இலங்கை வானொலியில்    வர்த்தக   விளம்பரங்களை   அறிவிக்கும் பணியிலுமிருந்தவர். போல்பொய்ன்ட்   பேனைக்கு   அவர்   வழங்கிய   தமிழ்   வடிவம்            குமுழ் முனைப்பேனா.   ஒரு   காலத்தில்   எமது   தமிழ்   மொழி மாத்திரமல்ல   ஏனைய   பல   மொழிகளும்  வழக்கொழிந்துபோன பல   மொழிகளும்   கல்லிலே   பொழியப்பட்டன.
கல்வெட்டுகள்  அவற்றின்    சரித்திரத்தைச்சொல்கின்றன.
காளிதாசர்   -   வள்ளுவர்   -   கம்பர்   -    இளங்கோ   -  கபிலர்   -  அவ்வையார்   -   தொல்காப்பியர்   -   புகழேந்தி   -  ஒட்டக்கூத்தர் -சீத்தளைச்சாத்தனார்   உட்பட   பல   முன்னோர்கள்    பனையோலை ஏட்டிலே   எழுதிய    காலத்தில்   மின்சாரம்   இல்லை.
தொட்டெழுதும்   பேனை   அறிமுகமான   காலத்தில்  மன்னர் ஆட்சிக்காலம்     முடிவுக்கு   வந்து   காலனி    ஆதிக்கம் உருவாகிவிட்டது.
பிற்காலத்தில்    தொட்டெழுதும்   பேனை   தனது   ஆயுளை நிறைவுசெய்தபொழுது    மைநிறப்பிய   பவுண்டன்   பேனைகள்  -   பாக்கர்  பேனைகள்   -   பைலட்  பேனைகள்   வரவாகின.    காலப்போக்கில் குமுழ்முனைப்பேனை  பாவனைக்கு   வந்துவிட்டது.
களனி கங்கைக்கும் இந்த போல்ட் பொயின்ட் பேனைக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்கிறீர்களா? கொழும்பு - கிராண்ட்பாஸ் வீதி சந்திக்கும் ஆமர்வீதியில் ஒரு காலத்தில் கே.ஜீ. இண்டஸ்றீஸ் என்ற பெரிய நிறுவனம் அமைந்திருந்தது. இங்கிருந்து தயாரிக்கப்பட்ட குமுழ் முனைப்பேனைகளுக்கு  அப்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருந்தது.

அமரர் கி. லக்‌ஷ்மணன் நூற்றாண்டு வெளியீடு: தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் முதலான தலைப்புகளில் 73 கட்டுரைகளின் தொகுப்பு - சிப்பிக்குள் முத்து


இலங்கையின் மூத்த தமிழ் அறிஞரும் கல்வி அமைச்சின் முன்னாள் வித்தியாதிபதியுமான அமரர் கி. லக்‌ஷ்மணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "சிப்பிக்குள் முத்து" தமிழகத்தில் வெளியாகியுள்ளது.

கட்டுரைகளுக்குப் பொருத்தமான  ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்‌ஷ்மணன் அவர்கள் இலங்கை - தமிழக  தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு: சிப்பிக்குள் முத்து.

இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும்  பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின்  தொகுப்பான இந்த அரிய நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

477 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இந்நூலை கி.லக்‌ஷ்மணன் அவர்களின் புதல்வி திருமதி மங்களம் வாசன், தொகுத்துள்ளார்.
கி.லக்‌ஷ்மணன் அவர்களின் நூற்றாண்டு கடந்த மே மாதம் தொடங்கியிருக்கிறது. இதனை முன்னிட்டு இந் நூல் வெளியாகியிருக்கிறது.

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ( அமரர் ) க. சிவப்பிரகாசம், வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் திரு. டி. எம்.சுவாமிநாதன் ஆகியோர் உட்பட பலர் கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற காலத்தில் இவர்களின் தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி. லக்‌ஷ்மணன் அவர்கள்,  தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியை சரியாகவும் பிழையின்றியும் எழுதவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர்.

இவர் 1960 இல் எழுதிய இந்திய தத்துவ ஞானம் நூல் பல பதிப்புகளை கண்டுள்ளதுடன் இலங்கை தேசிய சாகித்திய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும் பெற்றது.

சிப்பிக்குள் முத்து நூலுக்கு  சி.வி. விக்னேஸ்வரன், டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.

சிப்பிக்குள் முத்து நூலின் பிரதிகளுக்கு:

(லண்டன்) திரு. கஜேந்திரன்:   +447 940 35 6863

(கனடா) திரு. எஸ்.இராமச்சந்திரன்: + 416 356 7859

(அவுஸ்திரேலியா) திருமதி மங்களம் வாசன் :  (00 61 3)  9898 44 69






-->

இலங்கைச் செய்திகள்


யாழில் பல இடங்களில் வீடு புகுந்து கொள்ளை கும்பல் அட்டகாசம்

அத்துமீறி குடியேறிய சிங்களவர்களுக்காக நீதி மன்ற உத்தரவை மீறிய மகாவலி அதிகாரசபை!!!

பல பாகங்களிலிருந்தும் திரண்ட மக்கள் உரிமைகளுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்


யாழில் பல இடங்களில் வீடு புகுந்து கொள்ளை கும்பல் அட்டகாசம்

22/08/2018 யாழ்ப்பாணம் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடுகள், தேனீர் கடை, கராஜ் ஆகிய இடங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

உலகச் செய்திகள்


இயற்கையின் கோரத் தாண்டவத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறது கேரளா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம் 

பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு தமிழ்நாடே காரணம்- கேரளா பரபரப்பு குற்றச்சாட்டு

முல்லை பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம்:கேரளாவின் குற்றச்சாட்டு தவறு - எடப்பாடி



இயற்கையின் கோரத் தாண்டவத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறது கேரளா

20/08/2018 இந்தியாவின் கேரளா மாநிலம் கடந்த 11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது.