மரண அறிவித்தல்


திருமதி.கௌரி அல்லமதேவன்


மலர்வு 25.10.1962                   உதிர்வு 27.09.2023

இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலிய மெல்பேண் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.கௌரி அல்லமதேவன் நேற்று புதன்கிழமை 27.09.2023 அன்று சிவகதி எய்திவிட்டார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான திரு.செல்லையா துரைரத்தினம், திருமதி.யோகேஸ்வரி துரைரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான பண்டிதர் சிவஸ்ரீ.இ.நவரத்தினக்குருக்கள், சரஸ்வதியம்மா நவரத்தினக்குருக்கள் ஆகியோரின் அன்பு மருமகளும், அல்லமதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும், சங்கீர்த்தனா (மெல்பேண்) இன் அன்புத் தாயாரும், நீலன் (மெல்பேண்) இன் பாசமிகு மாமியாரும், காலஞ் சென்ற ஸ்ரீதரன், வத்சலா அருமைநாயகம் (உரும்பிராய் .இலங்கை) சசிகலா இராஜநாயகம் (மெல்பேண்), ரமணீதரன் (மெல்பேண்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும், அருமைநாயகம் (உரும்பிராய்), இராஜநாயகம் (மெல்பேண்), உமாஸ்ரீ (மெல்பேண்), சரோஜினிதேவி\ பாலசுப்பிரமணியம் (மெல்பேண்) சிவஸ்ரீ.ந.பிரபுதேவக்குருக்கள் (உரும்பிராய்), பத்மாதேவி கதிரவேலுக்குருக்கள் (உரும்பிராய்), சந்திராதேவி வதனதீசன் (தெகிவளை-கொழும்பு), இந்திராதேவி (நெதர்லாந்த்), இராமதேவன் (கனடா), வசவதேவன் (கனடா), மகாதேவன் ( ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும், ஜெனோஷன் (உரும்பிராய்), காலஞ் சென்ற ஜெரீஷன், ஷம்கி, ஜூட், ஜெய்ஷன், மதுரா, ரம்யா, கிரிதரன், கோகுலபாலன், பத்மசொரூபன், பத்மதாசன், பத்மஸ்ரீ, காலஞ் சென்ற பதமசீலன், பத்மகமலன், கமலப்பிரியா, லோகிதப்பிரபு, திவாஷ்கர், தீபிகா, விவாஷ்கர், இனியவன், கனியவன், எழிலினி, ஆரணன், கணன், அக்‌ஷயா, ராகவி, பைரவி, சகிஷ்ணா, ஹரிஷ்ணா, சஹானா, ஆகியோரின் அன்பு சித்தி / மாமியும், ஜொஷ், டனீஷியா, ஷிரேயா, மேக்னா, அமரன் ஆகியோரின் சின்னஅம்மம்மாவும், யுகேஸ், ஹாஷினி ஆகியோரின் ஆசைஅம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :- கணவர் மற்றும் பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சகோதரன் - ரமணன் - + 61 403 430 112

மருமகன் - நீலன் + 61 404 645 472

பெறாமகள் - ஷம்கி +61 415 119 677

பெறாமகன் - ஜெய்ஷன் +61 401 741 244

நான் பார்த்து ரசித்த யாழ் மத்திய கல்லூரி சிட்னிகக் கிளையினர் வழங்கிய இசை அமுதம் 2023 - செ .பாஸ்கரன்

.

யாழ் மத்திய கல்லூரி சிட்னிகக் கிளையினர் வழங்கிய இசை அமுதம் 2023 சென்ற வெள்ளிக்கிழமை செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பென்றித்தில் அமைந்திருந்த John Sutherland performing arts centre ரில் மாலை ஏழு மணிக்கு ஆரம்பமானது. மத்திய கல்லூரி குறிப்பிட்ட நேரத்தில் தங்களுடைய நிகழ்ச்சியை ஆரம்பிப்பது வழமையாகும், அந்த விதத்திலே இம்முறையும் இசை அமுதம் 2023 நிகழ்வு மாலை 7 மணிக்கு சிட்னியில் பிரபல அறிவிப்பாளரும், பல வானொலிகளில் அறிவிப்பாளராகவும் இருக்கும் திரு மகேஸ்வரன் பிரபாகரன் அவர்களுடைய கம்பீரமான குரலோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. 
 இம்முறை நிகழ்ச்சியிலே பாடுவதற்கு 
தென்னிந்திய பின்னணி பாடகர்களான வி எம் மகாலிங்கம், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சரிகமப மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்த பாடகி ஸ்ரீநித, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களுடைய மனதைக் கவர்ந்த பாடகி பிரியா ஜேர்சன் இவர்களோடு எல்லோருக்குமே பிடித்த இசை குழுவினரும், பலமுறை சிட்னிக்கு வருகை தந்த இசை குழுவினருமான மணியன் band இசைக்குழுவினர் இந்த நிகழ்ச்சிக்கு இசையை வழங்கி இருந்தார்கள். நிறைந்த மக்களோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. 


ஸ்ரீகாந்த் ஹரிஹரன் அவர்களுடைய அம்மா என்றழைக்காத என்ற பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானத. அதனை தொடர்ந்து பாடகர்களும் பாடகிகளும் மாறி மாறி பாடல்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக வி எம் மகாலிங்கம் அவர்கள் மக்களோடு நன்றாக கதைத்து, பேசி, சிரித்து மக்களை தன் வசப்படுத்திக் கொண்டது மக்கள் அவருக்கு வழங்கிய கரகோஷங்களில் இருந்து பார்க்கக் கூடியதாக இருந்தத. உச்ச ஸ்தானியில் கணீர் என்ற குரலில் அவர் பாடிய பாடல்கள் மக்களை நன்றாக கவர்ந்திருந்தத. அதேபோல் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ என்ற பாடல் எங்கள் காதுகளில் ரீங்காரித்துக் கொண்டிருக்கின்ற அந்தப் பாடலை பிரியா ஜேர்சன் பாடி மக்களிடமிருந்து கரகோஷங்களை பெற்றுக் கொண்டார். அதேபோல் ஸ்ரீநிதியின் கண்ணீரென்கிற குரலிலே பல பாடல்கள் வந்து மக்கள் கரகோஷங்களை அள்ளிச் சென்றத. எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பாடல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தத. ஆரம்பத்தில் அறிவிப்பாளர் அவர்களோடு சிறிய உரையாடல்களை மேற்கொண்டு அவர்களுடைய தற்போதைய நிலைமை பற்றியும் அவர்கள் பாடக் கொண்டிருக்கின்ற திரைப்படங்கள் பற்றியும் சில வினாக்களை கேட்டு தெளிவுபடுத்தி கொண்டிருந்தார். பின்பு எப்படி நேரம் போனது என்று தெரியாமல் இடைவேளை அறிவிக்கப்பட்டத. இடைவேளையின் போது உணவு வழங்கப்பட்டது . இலவசமாக கொத்து ரொட்டி எல்லோருக்குமே வழங்கப்பட்டது . 

செல்வி மாயா குமரதேவனின் பரதநாட்டிய அரங்கேற்றம். கண்ணோட்டம் - உஷா ஜவாகர்

 


27 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமை 6 மணிக்கு Parramatta  Riverside தியேட்டர், சிட்னி ஆஸ்திரேலியாவில் செல்வி மாயாவின் அரங்கேற்றம் நடைபெற்றது.

மாயா ஆரம்ப காலத்தில் தனது தாயும் நாட்டிய ஆசிரியையுமான திருமதி அபிராமி குமரதேவனிடமும் பின்னர் ஆருதி குமணனிடமும் நாட்டியம் பயின்றார்.

அரங்கேற்றத்திற்கு நட்டுவாங்கம் செய்தவர் மாயாவின் நடன ஆசிரியர் ஆருதி குமணன், வாய்ப்பாட்டு அகிலன் சிவானந்தன், மிருதங்கம் ஜெனகன் சுதந்திரராஜ், வயலின் கிரந்தி கிரன் முடிகொண்டா, புல்லாங்குழல் வெங்கடேஷ் ஸ்ரீதரன்.

பின்னணி இசையும், பாடகர் அகிலனின் பாடல்களும் பார்ப்போரை இருந்த இடம் விட்டு அசையாது கட்டிப்போட்டன. செல்வி பிரதாயினி ரவிச்சந்திரன் திறமையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செல்வன் ஆயன் குமரதேவனும், செல்வன் மயிலன் குமரதேவனும் நல்லதொரு வரவேற்புரையை நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கினார்கள்.
மண்டபம் நிறைந்திருந்த அந்த வேளையில் அரங்கேற்றம்

ஆரம்பித்தது.
பிள்ளையார் சுலோகத்துடன் மாயா நடனமாட ஆரம்பித்தார். நல்ல அபிநயத்துடன் மிகவும் திறமையாக மாயா ஆடினார்.
 
அகிலாண்டேஸ்வரித் தாயே என்ற வர்ணத்தை மாயா ஆடி முடித்த போது அரங்கு எங்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. அவர் அந்த நடனத்தை ஆடி முடித்த போது அந்த அகிலாண்டேஸ்வரியே அரங்கில் அமர்ந்திருந்த மாதிரி ஒரு பிரமை பார்ப்போர் மத்தியில் உருவானது.

இடைவேளைக்குப் பின்னர் பூங்குயில் கூவும் என்று ஆரம்பிக்கும் பதத்திற்கும், இடது பாதம் தூக்கி என்று ஆரம்பிக்கும் கீர்த்தனைக்கும், பின்னர் விஷமக்காரக் கண்ணன் என்று ஆரம்பிக்கும் பதத்துக்கும் மாயா நடனம் ஆடினார்.

முருகன் மீது அளவற்ற காதல் கொண்டவளாகவும் பின்னர் சிவனாகவும் தோன்றி மாயா மிகவும் அற்புதமாக நடனம் ஆடினார். விஷமக்காரக் கண்ணன் என்ற பாடலுக்கு ஆடும் போது அவரது கண்களில் குறும்பு கொப்பளித்தது. அந்த கண்ணனாகவே மாறி  பார்ப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்.


அடிக்கடி
மாறும் வேகமான தாளத்திற்கு இலாவகமாக  ஆடும் திறமை எல்லாவற்றையும் தன்னில் கொண்டுள்ளார் மாயா. இறுதியில் தில்லானா மற்றும் லிங்காஷ்டகத்துடன் மாயாவின் அரங்கேற்றம் சுபமாக நிறைவேறியது.






பார்வையாளர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்!

நல்லதொரு அரங்கேற்றத்தைக் கண்டு களித்த பூரிப்புடன் எல்லோரும் வீடு திரும்பினார்கள்.

புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்குத் தமிழ் கலைகளை மறவாது பழக்கி அந்தக் கலைகளை தொடர்ந்து எடுத்து செல்லும் இளம் தலைமுறைப் பெற்றோர் ஆசிரியர்கள் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்.

திறமை மிகுந்த ஒரு நாட்டிய தாரகையாக மாயா எதிர்காலத்தில் நடன உலகில் ஜொலிப்பார் என்பது திண்ணம்.

அஞ்சலிக்குறிப்பு தன்னார்வத் தொண்டர் அப்புத்துரை சதானந்தவேல் விடைபெற்றார் முருகபூபதி ( தலைவர் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் - அவுஸ்திரேலியா )


வடபுலத்தில் சுழிபுரம் நகரை பிறப்பிடமாகவும், பின்னாளில் அவுஸ்திரேலியா – மெல்பனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்பர் அப்புத்துரை சதானந்தவேல் அவர்கள் அண்மையில் மறைந்தார்.

கருணை உள்ளம் கொண்ட  அன்பர்களின் ஆதரவுடன் நாம் கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயக்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில் அவர் அங்கம் வகிக்கத்தொடங்கிய நாள் முதலாக  எம்மால் நன்கறியப்பட்டவர்.  எமது அன்பிற்கும் அபிமானத்திற்குமுரியவராகத்  திகழ்ந்தவர்.

அவருடைய மனிதநேயப்பண்புகளும்   எமக்கு முன்னுதாரணமாகத்


திகழ்ந்திருப்பவை.

இலங்கையில் நீடித்த போரினால் பாதிப்புற்ற ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வித் தேவைக்கு உதவும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட எமது கல்வி நிதியத்தின் செயற்பாடுகளை நன்கறிந்து, உதவ முன்வந்த பெருந்தகை அவர். 

போர் முடிவுக்கு வந்ததையடுத்து எமது கல்வி நிதியம் வடக்கு – கிழக்கு – மலையகம் மற்றும்  தென்னிலங்கையில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெற்றுவரும் மாணவர்களின் ஒன்றுகூடல்களை நடத்தி வந்திருக்கின்றோம்.

அத்தகைய ஒன்றுகூடல்களுக்காகவும் அன்பர் அப்புத்துரை சதானந்தவேல்  அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

எமது கல்வி நிதியத்தின் பரிபாலன சபையிலும் அவர் அங்கம் வகித்தவர்.  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில்   யாழ். மாவட்ட மாணவர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் நடந்தவேளையிலும் அவர் கலந்துகொண்டு உரையாற்றியிருப்பவர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனப்பான்மைகொண்டிருந்த அவரிடம் கலை, இலக்கிய ஆர்வமும் குடிகொண்டிருந்தது.

அதனாலும் அவர் எமது நெஞ்சத்திற்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தார்.

சில இலக்கிய சந்திப்புகளுக்கும் நூல் வெளியீட்டு அரங்குகளுக்கும் வருகை தந்து எழுத்தாளர்களை வாசகர்களை ஊக்குவித்தவர்.

மெல்பன் கேசி தமிழ் மன்றம் வாராந்த விடுமுறை தினத்தில் மெய்நிகரில் நடத்திவந்த  கலை, இலக்கிய, கல்வி சார்ந்த கலந்துரையாடல்களில் அவர் காப்பகத்திலிருந்தவாறே இணைந்துகொண்டு கருத்துக்களும் தெரிவித்து வந்தார்.

அன்னாரின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது கல்வி நிதியத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன்,  அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.

படித்தோம் சொல்கின்றோம் : “அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல குரலிலும் தெரியவேண்டும் “ பி. எச். அப்துல் ஹமீதின் வாழ்வியல் அனுபவத்தை பேசும் வானலைகளில் ஒரு வழிப்போக்கன் முருகபூபதி


மகாத்மா காந்தியின் சத்திய சோதனை இன்றளவும் பேசப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.  அதில் உண்மையும் நேர்மையும் சத்தியமும் நினைவாற்றலும் இழையோடியிருந்தது.

அரைநூற்றாண்டுக்கும் மேலாக வானொலி – தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும்,  நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் , தொகுப்பாளராகவும் பணியாற்றிவந்திருக்கும் பி. எச். அப்துல் ஹமீத்,  தன்னை ஒரு சிறந்த எழுத்தாளனாகவும் நிரூபித்திருக்கிறார்.

எனினும்,  அவரிடம் இயல்பாகவே குடியிருக்கும் தன்னடக்கம், தானும் ஒரு எழுத்தாளன்தான் எனச்சொல்வதற்கு தடுக்கிறது.

 “ கடந்து வந்த பாதையை மறப்போமேயானால், செல்லும் பாதையும்


இருட்டாகவே இருக்கும்.  “ என்று நான் எனது பதிவுகளில் அவ்வப்போது சொல்லி வந்திருக்கின்றேன்.

கடந்துவந்த பாதையை மறக்காமல் இருப்பதற்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம்.

அந்தப்பாதையில் ஒரு வழிப்போக்கனாகவே நடமாடியிருக்கும்  அப்துல் ஹமீத்,  காய்தல் உவத்தல் இன்றி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து,  பொது சன ஊடகத்தில் எதிர்நோக்கப்பட்ட சவால்களையெல்லாம் சமாளித்து முன்னோக்கி வந்திருக்கிறார் என்பதற்கு  இந்த நூல் சான்று பகர்கிறது.

பொதுவெளியில்   “ பேரும் புகழும்  “  பெற்றிருந்தாலும் தன்னடக்கத்தையே  மூலதனமாகக் கொண்டிருப்பவர்  பி. எச். அப்துல் ஹமீத்.  அதனால்தான் இன்றும் வானலைகளிலும் சில விமானங்களிலும்,  மேடைகளிலும் ,  தொலைக்காட்சிகளிலும் இணைய ஊடகங்களிலும், காணொளிகளிலும்  தனது மதுரமான குரலுடன்  வலம்வந்துகொண்டிருக்கும் அவரால், தன்னை ஒரு வழிப்போக்கனாக்கிக்கொண்டு, தன்னைப்பற்றியும் தனது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பங்கேற்றவர்கள் பற்றியும், தனது வாழ்வின் முக்கிய தருணங்களையும்,  எதிர்பாராத திருப்பங்களையும்  தொகுத்து பதிவுசெய்யமுடிந்திருக்கிறது.

இலங்கைத் தலைநகருக்குள் வரும்  ஒரு புறநகர் பிரதேசத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து ,  இளமையில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்து, வேதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி நிமிர்ந்து நிற்கும் ஒரு ஆளுமையின் வாழ்வியலை இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கின்றோம்.

கருவில் சுமந்து பெற்ற அன்னைக்கும்,  நெஞ்சில் சுமந்து வாழும் அன்னைக்கும் ( மனைவிக்கும் ) இந்த நூலை சமர்ப்பணம் ( படையல் ) செய்துள்ளார்.  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.  அப்துல் ஹமீதை பொருத்தமட்டில், அவரது தாயும் தாரமும் அவ்வாறு  இருந்திருக்கிறார்கள் என்பதை  இந்த நூலை வாசிக்கும்போது புரிந்துகொள்கின்றோம்.

விசும்பு வெளியினூடே ஒலி ஊடகத்திற்கு வித்திட்ட முதல்வர் என போற்றப்படும் GUGLIELMO MARCONI ( 1874 – 1937 ) அவர்களையும் நினைவுகூர்ந்து,  தான் கடந்து வந்த பாதையையும் அதில் சந்தித்தவர்களையும்  முடிந்தவரையில் சான்றாதாரங்களுடன் பதிவுசெய்துள்ளார் அப்துல்ஹமீத்.

மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், பேர்த் தியாகி தீலீபனின் 36ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்



ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன்காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான்.

 

உடனயாக தீர்வு காணப்படவேண்டிய ஐந்து


கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம்எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் மாண்புடன் வழங்கும் ஆடல் வேள்வி 2023



  உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞரான ஊர்மிளா சத்தியநாராயணன், செப்டம்பர் 30, 2023 அன்று சிட்னியில் தனது ரசிகாக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை கவனமாகத் தொகுத்துள்ளார். தவறவிடக்கூடாத நிகழ்வு!

நடன மாணவர், ஆசிரியர் மற்றும் கலா இரசிகர்கள் இன்புறக்கூடிய நல்லதொரு பரதநாட்டிய நிகழ்ச்சி.  தமிழ்நாட்டிலிருந்து வருகைதரும் துறைசார் வல்லுநர்கள்.  இளையோர்மத்தியில் கன்னித்தமிழ் வளர்க்கும் பணிகளுக்கான நிதிதிரட்டும் நிகழ்வும் கூட.   உங்கள் வருகையால் விழா சிறக்கட்டும், *கண்டிப்பா_வாங்க!*    

பூக்காரி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 கலைஞர் மு கருணாநிதி குடும்பத்தின் உதய சூரியனாக கணிக்கப் பட்டவர் அவரின் மூத்த மகன் மு க முத்து. திரையுலகில் இவரை நட்சத்திர நடிகராகி பார்க்க ஆசைப் பட்ட கருணாநிதி சொந்த பட நிறுவனத்தை தொடங்கி , எம் ஜி ஆரினால் படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்து பிள்ளையோ பிள்ளை படத்தை தயாரித்தார். படமும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து முத்துவின் நடிப்பில் இரண்டாவது படம் உருவானது. இதுவும் கருணாநிதியின் சொந்த பட நிறுவனமான அஞ்சுகம் பிக்சர்ஸ் மூலம் தயாரானது. ஆனால் பூக்காரி என்ற இந்தப் படத்தின் ஆரம்ப பூஜையில் கலந்து கொண்டு எம் ஜி ஆர்


படப்பிடிப்பை ஆராம்பித்து வைக்கவில்லை. காரணம் தி மு கவிலிருந்து அவர் விலக்கப் பட்டு அண்ணா தி மு க என்ற கட்சியை உருவாக்கியிருந்தார். இதனால் எம் ஜி ஆரின் பாணியில் நடித்துக் கொண்டிருந்த முத்துவின் பூக்காரி சலசலப்புக்கு மத்தியில் விரைவில் தயாராகி திரைக்கு வந்தது.


கிராமத்தில் ஒழுங்காக விவசாயம் பார்த்து வந்த ஒர் அப்பாவி

பட்டணத்துக்கு சென்றால் விரைவில் பணக்காரன் ஆகி விடலாம் என்ற நப்பாசையில் இருந்த வீட்டை விற்று குடும்பத்துடன் பட்டணத்தில் குடியேறி, அங்கும் இருந்ததை எல்லாம் இழந்து நிர்கதி ஆகிறான். அவனின் குடும்பம் மீண்டெழ பூக்காரி ஒருத்தியும் , அவளின் அண்ணனும் உதவுகிறார்கள். ஆனாலும் பலவித இன்னல்கள் விவசாயின் குடும்பத்தை வாட்டி வதைக்கிறது. விவசாயின் மகன் எவ்வாறு குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறான் என்பதே படத்தின் கதை.

படத்தில் கதாநாயகியாக , பூக்காரியாக நடித்தவர் மஞ்சுளா. எம் ஜி ஆர் பிக்சர்சில் ஒப்பந்த நடிகையாக இருந்த இவரை எப்படியோ அதிலிருந்து மீட்டு , முத்துவுக்கு ஜோடியாக்கி விட்டார்கள். அழகு பதுமையாக வந்து கொஞ்சும் தமிழ் பேசி நடித்து ரசிகர்களை கவர்ந்தார் மஞ்சுளா. படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா. இவர்கள் இருவருக்கும் இடையே ஊடாடுபவர் முத்து. முதல் படத்தை விட இரண்டாவது படத்தில் அவர் நடிப்பு சற்று முன்னேற்றம் கண்டிருந்தது.

படத்தில் இவர்களுடன் எஸ் வி சுப்பையா, ஸ்ரீரஞ்சனி இருவரும் நடித்திருந்தனர். படம் முழுதும் உணர்ச்சிப் பிழம்பாக இருவரும் காட்சியளித்தனர். கிராமத்து அப்பாவி மனிதராக நடிப்பது சுப்பையாவுக்கு கைவந்த கலை. ஆனால் தொட்டதற்கு எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணுவது டூ மச் . ஸ்ரீ ரஞ்சனி நிறைவாக செய்கிறார். அநேகமாக இதுவே அவரின் கடைசி படமாக இருந்திருக்க கூடும். இவர்களுடன் வி கே ராமசாமி, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தாமரை, ஜெயக்குமாரி, ஓ ஏ கே தேவர், புத்தூர் நடராஜன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

அவுஸ்திரேலியக் கலை இலக்கியச் சங்கம் நிகழ்த்திய எழுத்தாளர் விழா சிட்னி 2023 நிகழ்வில் மலையகம் 200

 அவுஸ்திரேலியக் கலை இலக்கியச் சங்கம் நிகழ்த்திய எழுத்தாளர் விழா சிட்னி 2023 நிகழ்வில் மலையகம் 200 என்ற அரங்கு அமைந்திருந்தது.


இந்த அரங்குக்காக மல்லியப்புசந்தி திலகர் மற்றும் மீராபாரதி வ.க.செ ஆகியோர் வழங்கியிருந்த கருத்துரைகளைக் கேட்க


https://www.youtube.com/watch?v=FPkGvouBiXY

இலங்கைச் செய்திகள்

 ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பு

நிதி நெருக்கடி கொண்ட நடுத்தர வருமான நாடுகளுக்கு உதவ முறையான திட்டம் அவசியம்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு USAID தொடர் ஆதரவு வழங்கும்

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டத்திற்கு உலக வங்கி முழுமையான ஆதரவு

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தென் கொரியாவின் ஆதரவு

பருத்தித்துறையில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்



ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பு

September 22, 2023 9:57 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நியூயோர்க்கில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உலகச் செய்திகள்

 பைடனை சந்தித்தார் உக்ரைன் ஜனாதிபதி

 ‘இந்தியாவை சீண்டுவது நோக்கமல்ல’ கனடா பிரதமட் ட்ரூடோ தெரிவிப்பு

இந்தியா – கனடா பதற்றம்; வீசா சேவையை இரத்து செய்த இந்தியா அரசு

சீக்கிய தலைவரின் கொலை: இந்திய அரசு மீது கனேடிய பிரதமர் நேரடிக் குற்றச்சாட்டு 

USA ஜனாதிபதி தேர்தலில் விவேக் ராமசாமி போட்டி


பைடனை சந்தித்தார் உக்ரைன் ஜனாதிபதி

September 23, 2023 10:13 am 

அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தனியாகவும், பின்னர் அதிகாரிகளுடனும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜோ பைடனுடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது என்று ஸெலன்ஸ்கி கூறினார்.

கட்டுரை - இப்படியும் நடக்கிறது - September 23, 2023


எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் தேர்தலுக்காகப் பணம் ஒதுக்கப்பட்டால் மக்களுக்குத் தேவையான பெற்றோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியாது என்று வஜிர தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ‘ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முற்படுமானால் நாட்டில் நிர்வாகக் கட்டமைப்பு முழுமையாக சீர்குலையும்.
சர்வதேச மட்டத்தில் எந்தவொரு சட்டபூர்வமான நகர்வுகளிலும் ஈடுபட முடியாமல்போகும்.’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
வஜிர சொல்ல வருவது, அடுத்த ஆண்டு தேர்தலுக்காகஅதாவது கட்டாயம் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தலுக்காக – எதிர்வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமானால், எரிபொருள் வாங்க பணம் இல்லாமல்போய்விடும் என்கிறார்.

சண்டி மகா யாகம் - 22 அக்டோபர் 2023 ஞாயிறு - நவராத்திரி அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்குகிறது

 .

22 அக்டோபர் 2023 ஞாயிறு  


கட்டுரை - இப்படியும் நடக்கிறது - September 21, 2023

  


தியாகி திலீபனின் ஊர்தி மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி நேற்றும் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுவாமி சங்கரானந்தா என்ற பெயரில் முகநூலில் எழுதப்பட்டிருந்த பதிவு ஒன்றை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.
யார் இந்த ‘சுவாமி’ என்பதை அறிய முயன்றபோது அப்படியொருவர் முன்னர் திருகோணமலையில் வாழ்ந்தாரெனவும் இப்போது அவர் புலம்பெயர்ந்து
வெளிநாடொன்றில் வாழ்கிறார் என்றும் நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

புரட்டாசி சனி

 


வ.ஐ.ச. ஜெயபாலன் படைப்புகள்: ஓர் உரையாடல்


 இலக்கியவெளி  நடத்தும்


இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 31

வ.ஐ.ச. ஜெயபாலன் படைப்புகள்:  ஓர் உரையாடல்

 

நாள்:         சனிக்கிழமை 30-09-2023       

நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

ஒருங்கிணைப்பு: பேராசிரியர் என். சண்முகலிங்கன்

                      

உரையாளர்கள்:

பேராசிரியர் க.பஞ்சாங்கம்

 

எழுத்தாளர் இந்திரன்

 

கலாநிதி சு.குணேஸ்வரன்

 

எழுத்தாளர் சின்னராஜா விமலன்

 

திறனாய்வாளர் சி.ரமேஷ்

 

 ·      பண்டிதர்  செ.திருநாவுக்கரசு ஆவணப்பட முன்னோட்டம்

  

 மேலதிக விபரங்களுக்கு:  - அகில் - 001416-822-6316

 www.ilakkiyaveli.com

கட்டுரை - இப்படியும் நடக்கிறது - September 20, 2023



கடந்த ஆண்டு இந்தக் காலப்பகுதியில் திலீபனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயல்பாடுகள் பேசுபொருளாகியிருந்தன.
திலீபனின் நினைவிடத்துக்கு தாமே சொந்தக்காரர்கள் என்பதுபோல முன்னணியினர் நடந்து கொண்டதால் அங்கே அமைதியின்மை தோன்றியிருந்தது.
ஆனால், இவ்வாண்டு திலீபனின் நினை விடத்தில் அவரது நினைவுகூரல்கள் ஆரம்பமான போது அங்கே முன்னணியினர் வழமையைப்போல காணப்படவில்லை.
இதனால் திலீபன் நினைவஞ்சலி ஆரம்ப நிகழ்வுகள் சுமுகமாக நடந்தேறின.
பல ஆண்டுகளாக முன்னணியினர் திலீபனின் நினைவு தினத்தையொட்டி பொத்துவில் முதல் நல்லூர் வரையான ஊர்திப் பவனியை நடத்தி வருகின்றனர்.
அது பல வருடங்களாக நடந்துவருகின்றது.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக இவ்வருடம் மாத்திரம் திருகோணமலையில் ஓர் எல்லைக் கிராமமான சர்தாபுர என்னுமிடத்தில் மிகச்சிறிய கூட்டம்
ஒன்று அதனை மறித்து தாக்குதல் நடத்தியிருக்கின்றது.
அதுவும் பொலிஸார் முன்னிலையில் நடந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

சினிமா - ஒரு வழியாக ஜான் வரப்போறார்.. ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

 September 23, 2023

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.

இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இதையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நன்றி ஈழநாடு