நானும் எவ்ளோ நாள் தான் கிளாஸ் ஹீரோவாவே நடிக்கின்றது என விஜய் சேதுபதி எடுத்த மாஸ் களம் தான் இந்த றெக்க. கில்லி விஜய் ஸ்டைலில் ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் ஹிட் அடிக்க, ரத்னம் சிவா இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் லட்சுமி மேனன், ஹிட் பாடல்களை கொடுக்கும் டி.இமான் என பல ப்ளஸ் பாயிண்டுகள் படத்தில் இருக்க விஜய் சேதுபதி உயர பறந்தாரா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அதே அதிரடி கதைக்களம் தான் இந்த றெக்க, படத்தின் ஆரம்பத்திலேயே வில்லன்களான ஹரிஷ் உத்தமனிற்கும், கபீர் சிங்கும் இடையே ஒரு பகையோடு கதை தொடங்குகின்றது.
ஷாஜஹான் படத்தில் வரும் விஜய்யை போல் தன்னிடம் பிரச்சனை என்று வரும் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி வருகிறார், அதற்கேற்றார் போல் வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன் கல்யாணம் செய்ய வேண்டிய பெண்ணை கடத்திவர இவருக்கும் ஹரிஷ் உத்தமனிற்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது, ஒரு கட்டத்தில் ஹரிஷ் உத்தமனிடம் ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்ள அதிலிருந்து, மீள முடியாமல் அவர் செய்ய சொல்லும் வேலையை செய்ய சம்மதிக்கின்றார்.
பின்பு அவர் சொன்ன வேலையை விஜய் சேதுபதி செய்து முடித்தாரா ,எதற்காக அவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார். லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் எப்படி பழக்கம் ஏற்படுகிறது, ஹரிஷ் உத்தமன் எதற்காக விஜய் சேதுபதியிடம் அந்த வேலையை கொடுத்தார் என்பதுதான் மீதிக் கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய் சேதுபதி நம்ம பக்கத்து வீட்டு பையனாகவே நடித்து சலித்து போய் இந்த ஆக்ஷன் கதையை கையில் எடுத்திருக்கிறார் போல படம் முழுவதும் சண்டை காட்சிகள் தாக்கமே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக லட்சுமி மேனன் வீட்டிற்கு சென்று அவரை தூக்கி கொண்டு வரும் காட்சிகளும் சற்று சினிமா தனமாக இருக்கிறதே என்று யோசிக்க வைத்தாலும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.
லட்சுமி மேனன் வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் வில்லனிருக்கும் ஹீரோவிற்கும் பிரச்னையை உண்டாக்கும் கதாபாத்திரமாகத்தான் வருகிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் ஜெனிலியாவை போல வெகுளித்தனமாக நடிக்க முயற்சித்திருக்கிறார்.
விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் கே.எஸ். ரவிக்குமார், காமெடியன் சதிஷ், வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன், கபீர் சிங் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர், கிஷோரை நாம் இதுவரை ஒரு மாஸான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த கிஷோர் இந்த படத்தில் ஒரு அப்பாவியாகவே ரசிக்கும் படி நடித்திருக்கிறார்.
இயக்குனர் ரத்தின சிவாவின் இரண்டாவது படம் இது, ஆனால் இதுதான் முதலில் ரிலீஸ் ஆகியுள்ளது. வழக்கமான விஜய் சேதுபதியை இந்த படத்தில் சற்று வேறுப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குனர் ரத்தின சிவா
இமானின் இசையமமைப்பு பாடல்கள் அந்த அளவுக்கு சொல்லும் படி இல்லையென்றாலும் பின்னணி இசையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக சண்டை கட்சிகளின் பின்னணி இசையை நன்றாக செய்துள்ளார், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் பிரவின். கே. எல் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.
விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பும், சண்டை காட்சிகளில் வரும் பன்ச் டயலாக்குகளும் கை தட்டல்களை அள்ளுகிறது.
க்ளாப்ஸ்
சண்டை காட்சிகளில் வரும் இமானின் பின்னணி இசை
பல்ப்ஸ்
லாஜிக் அத்துமீறல், தெலுங்கு படங்களை மிஞ்சும் அளவிற்கு சண்டை காட்சிகள், இரண்டாம் பத்தி சற்று பொறுமையாக தொடங்குவது, லட்சுமி மேனனின் மேக்கப்
மொத்தத்தில் இந்த றெக்க வழக்கமாக பார்த்து கொண்டிருந்த விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு சற்று வேறுபடியாக ரசிக்க வைக்கும்.