மங்காத்தா
வந்தான் வென்றான்
எங்கேயும் எப்போதும்
மங்காத்தா
ஒரு கொள்ளைக்கும்பல், பிளான் பண்ணி வங்கியிலிருந்து தங்ககட்டிகளை கொள்ளையடிக்கிறது.
கும்பலில் ஒருத்தன் மற்ற உறுப்பினர்களுக்கு நாமம்போட்டு தங்ககட்டிகளுடன் எஸ்ஸாகிறான். ஏமாற்றப்பட்டவர்கள் அந்த டுபாக்கூரிடமிருந்து மீண்டும் தங்ககட்டிகளை எப்படி கைகப்பற்றுகிறார்கள் என்பதே கதை.
கிரிக்கெட் சூதாட்டத்திற்காக கொண்டு செல்லப்படும் ஐநூறு கோடி
பணத்தை கடத்த முயற்சிக்கும் கும்பல், அதில் கடைசியாக வந்து சேர்ந்து கொ(ல்)ள்ளும் விநாயக்காக அஜித். அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி. அர்ஜுன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்பிரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷின் மகளான த்ரிஷாவும், அஜித்தும் லவ்வர்ஸ். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜுன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன் களமிறங்கிறார்.
ஜெயப்பிரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகிறான். சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி அஜித்தும், த்ரிஷா மூலம் ஜெயப்பிரகாஷை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்பிரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது. திருட ப்ளான் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜுன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்பிரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது... திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா, போலீஸிற்கா... அல்லது அம்போவா என்பது விறுவிறுக்க வைக்கும் இறுதிக்காட்சி.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று பலரும் சொன்னதாலோ
என்னவோ வெங்கட் பிரபு இவ்வளவு சிக்கலான கதையை எடுத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார். அஜித், ஜெயப்பிரகாஷ், த்ரிஷா, அர்ஜுன் என நாலு பேருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாக சொல்ல வேண்டிய கட்டாயம். அப்படி எல்லோரையும் சொல்லி முடிக்கவே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் எத்தனை புது கேரக்டர் வரபோகுதோ என்று பயப்படும் அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் ஒரு கேரக்டர் வந்துகொண்டே இருக்கிறது. அது செட்டில் ஆனவுடன் ஆரம்பிக்கிறது மங்காத்தா ஆட்டம். அதன் பிறகு செம விறுவிறுப்புதான்.. திரைக்கதைக்கு அதிகம் மெனக்கட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.
தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை கடைப்பிடிப்பது அவசியம். கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித். தனது முக்கியமான 50வது படத்தில் பிற நடிகர்களுக்கு முக்கிய தோற்றங்கள் கொடுத்து, கதைக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருக்கும் அஜித்தின் பெருந்தன்மை பாராட்டுதலுக்குரியது. அதிலும் தனக்குண்டான மாஸ் ஓபனிங், ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ் கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு நிச்சயம் அதிகரிக்கும்.
அர்ஜுன் இப்போதும் தான் ஒரு ஆக்ஷன் கிங் என்று நிரூபித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரில் வழக்கம்போல் பிரேம்ஜி, நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில் காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய ரிலீஃபாக இவர் இருக்கிறார். வழக்கம் போல் ஜெயப்பிரகாஷ் தன்னுடைய பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் அருமையாக நடித்துள்ளார். எந்த பாத்திரத்திற்கும் பொருந்த கூடிய ஒரு நடிகர் நாசர் போல். த்ரிஷா நடிப்பதற்கு வழங்கப்பட்ட நேரம் கொஞ்சம் என்றாலும் அழகாக சொந்தக்குரலில் பேசி மனதில் அழகாய் நிலைத்திருக்கிறார். கூடவே அஞ்சலி அமைதியான முகம் ப்ளஸ் அமைதியான அழகு, ஆனால் காட்சிகளில் அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனாலும் தோன்றும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
மகாகவி பாரதியாரின் பேரனான நிரஞ்சன் பாரதி எழுதிய 'கண்ணாடி நீ... கண்ஜாடை நான்...' பாடலுக்கு வைபவ்-அஞ்சலி ஜோடியும், அர்ஜுன்-ஆன்ட்ரியா ஜோடியும் ஆடிப் பாடுகிறார்கள். அழகாய் கண்ணில் நிறைகிறார்கள். பார் நடத்துனரின் தோழியாக வரும் லட்சுமிராய் 'விளையாடு மங்காத்தா' பாடலுக்கு ஆட மட்டுமே பயன்பட்டிருக்கிறார். படத்தினை முக்கியமாக தூக்கிநிறுத்திய விஷயம் அஜித்-அர்ஜுன் கூட்டணி. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அத்தனையும் அப்லாசுகளை அள்ளிக்கொண்டது. அதுவும் அஜித் 'வாயா ஆக்ஷன் கிங்கு' என்கிறதும் பதிலுக்கு 'வாயா தல' என்கிறதும் அப்ளாஸ். தமிழ் சினிமாவில் இப்படியான ஆரோக்கியமான நிகழ்வுகள் நடக்குறது வரவேற்கத்தக்கது.
படத்தில் பஞ்ச் சீன்கள் என்றவுடன் ஒரு பஞ்ச் டயலாக் ஞாபகத்திற்கு வருகிறது, ஆனால் இது வழக்கமான தமிழ் சினிமா பஞ்ச் டயலாக் போல் இல்லை, லைட்டாக, இயல்பாக அஜித் பேசும் "எவ்ளோ நாளுக்குதான் நான் நல்லவனாக நடிக்கிறது" என்ற டயலாக்கிற்கு அதிர்கிறது தியேட்டர். படத்தில் அஜித் பைக் ஓட்டும் சீனில் யாரும் சீட்டில் உட்காரவில்லை. அஜித் தண்ணியடித்துக்கொண்டு கூட்டாளிகளை கொல்வதற்கு செஸ் போர்டில் ப்ளான் பண்ணும் காட்சி வெங்கட் பிரபுவின் ஸ்பெஷல் பஞ்ச்.
படத்தில் குறையென்று பார்த்தால்........ அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் அதை ஞாபகம் வைக்க ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. அடுத்து காமெடி என்ற பெயரில் அந்த நான்கு பேர் குறிப்பாக பிரேம் அஜித்துடன் அடிக்கும் லூட்டி டயலாக்குகள் நிறைய நேரம் மொக்கையாகவே உள்ளது.
இவ்வளவு தூரம் கதைக்கு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கும் கொஞ்சம் பார்த்திருக்கலாம். எவ்வளவு ப்ளாப் கொடுத்தாலும், அஜித் படத்திற்கு எப்படி இவ்வளவு ஓப்பனிங் கிடைக்கிறது? அதுவும் மன்றங்களை கலைத்து அறிவிப்பு கொடுத்தவருக்கு? அரசியல் ஆசை காட்டாதவருக்கு தமிழக மக்களுக்கு ஒரு நடிகரை பிடிக்க வேண்டுமென்றால், சினிமாவில் நன்றாக நடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நிஜ வாழ்வில், ஒரு நல்லவராக மனதில் பதிய வேண்டும்.
திறமையை காட்டுபவரை விட, நல்லவராக காட்டுபவரையே, உயரத்தில் வைப்பார்கள். எந்த திட்டமிடலும் இல்லாமல், அஜித்திற்கு அது அதுவாகவே நடக்கிறது. இசை யுவன்சங்கர் ராஜா. வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி பற்றி சொல்லவே வேண்டாம். நான்காம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது இந்த கூட்டணி. 'அம்பானி பரம்பர' பாட்டுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது ரீரிக்கார்டிங்கில் தூள் கிளப்பி இருக்கிறார் யுவன். குறிப்பாக எதிரிகள் மீது தீப்பிடித்து எரியும்போது அஜித் மேலிருந்து ஜம்ப் செய்யும் காட்சியில் வரும் வயலின் எக்ஸ்ட்ரார்டினரி.
கேமிரா மேன் சக்தி சரவணன் படத்தின் கதைக்கேற்ற டோனில் நன்றாக செய்திருக்கிறார். படத்தின் முக்கியபலம் எடிட்டிங் அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள் பிரவீன் மற்று ஸ்ரீகாந்த் இருவரும். மும்பை தாராவி பகுதியா இல்லை செட்டா என்று கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் ஆர்ட் டைரக்டரை பாராட்டுவதா வேண்டாமா என்று தெரியவில்லை. பலவீனம் என்று பார்த்தால், பாடல்கள் நன்றாக இருந்தாலும் மெலடி பாடல்கள் படத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. 'பின்லேடா' பாடலில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் ஹெவியாக இருக்கிறது.
நன்றி விடுப்பு
வந்தான் வென்றான்
தனக்கென பயணத்தை தீர்மானித்து விட்டுச் செல்லும் ஒருவனுக்கு ஏற்படும் தடைகளும், அதை வெல்வதும்தான் கதை.
குத்துச்சண்டை வீரர் சிவாவாக வரும் ஜீவா, அஞ்சனாவாக வரும் டாப்ஸியை ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்.
டாப்ஸி ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு உதவி செய்து அவரை
காப்பாற்றுகிறார். காதலிப்பதாகவும் கூறுகிறார். அதற்கு டாப்ஸியோ, என் அப்பா சொன்னால் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறார். அவரை சந்திக்க சென்றால், மும்பை தாதாக்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில் தவறுதலாக டாப்ஸியின் தந்தை கொல்லப்படுகிறார். என் தந்தையை கொன்றவனை சிறையில் தள்ளினால், உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என டாப்ஸி, ஜீவாவை உசுப்பேற்றுகிறார். இதற்கு மும்பையிலுள்ள தாதாவான ரமணாவாக வரும் நந்தாவை சந்தித்து உதவி கோருகிறார்.
காதல் கதையை சொல்லி, அந்த தாதாவை சிறையில் தள்ள உதவுங்கள் என்கிறார் ஜீவா. 'யார் அந்த தாதா?' என்று நந்தா கேட்கும் போது, அது வேறு யாருமல்ல நீதான் என்று அதிர்ச்சி தருகிறார். இதன்பிறகு ஜீவா தனது தம்பி என்று நந்தாவிற்கு தெரிய வருகிறது. அப்பா வேறு வேறு என்றாலும், இருவருக்கும் தாய் ஒன்று என்பதால் அவருக்கு தனது தம்பி யார் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். தம்பியின் காதலுக்காக நந்தா சிறைக்கு சென்றாரா அண்ணனின் உயிருக்காக ஜீவா காதலை துறந்தாரா டாப்ஸி தனது தந்தையின் மரணத்திற்கு நீதி தேடினாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் மீதிக்கதை பதில் சொல்கிறது.
ஒரு பரபரப்பான நாவலுக்கான நல்ல ஸ்டோரி லைன்தான் இது. ஆனாலும் படத்தின் முதல் பிரச்சினை திரைக்கதைதான். அடுத்தடுத்த காட்சிகளை நம்மால் எளிதாக யூகிக்க முடிகிறது. காதல்தான் இங்கே மையப் பாத்திரம். அதற்காகத்தான் இந்தப் போராட்டம் என்பதாக கதை நகர்கிறது. அப்படியிருக்கும்போது, அந்த காதல் ஜோடி சேரவேண்டுமே என்ற பதைபதைப்பு ஆடியன்ஸிற்கு வரவேண்டும். அதற்கு அந்தக் காதல்காட்சிகள் வலுவானதாக இருக்க வேண்டும்.
ஜீவா வழக்கம்போல் கொடுத்த வேலையை நன்றாகச் செய்திருக்கிறார். காதலில் ஆரம்பித்து ஆக்ஷன் வரை ஓகே. ஆனாலும் அவரை பாக்ஸர் என்று சொல்வது இன்னொரு வேடிக்கை. 'ரௌத்திர'த்திற்கு பிறகு ஜீவாவிற்கு இது மீண்டும் ஒரு சறுக்கலாக இருக்கும்.
மும்பையிலுள்ள பெரிய தாதாவாக வருகிறார் நந்தா. அந்த கேரக்டருக்கு உரிய முகம் இவரிடம் இல்லையா? அல்லது உடம்பு இல்லையா என சந்தேகம் வரும் அளவிற்கு இருக்கிறது இவருடைய கேரக்டர். படத்தில் ஒழுங்கான கதையோ அட்லீஸ்ட் சுவாரஸ்யமான திரைக்கதையோ இல்லாமையால் சும்மா வீணடிக்கப்பட்டு விட்டார். படத்தில் பாடல்களையும் சந்தானத்தின் நகைச்சுவையையும் தவிர சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. 'நிழல்கள்' ரவி, மனோபாலா, ரஹ்மான் என்று நல்ல நடிகர்களுக்கு சிறுபாத்திரங்களை மட்டும் வழங்கி படத்தில் அவர்களும் இருந்தார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
நந்தாவும், ஜீவாவும் மோதும் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிண்ணனி இசை தமனை கவனிக்க வைக்கிறது. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட 'காஞ்சனமாலா' பாடல் காட்சி எடுக்கப்பட்டவிதம் அழகாக ரசிக்ககூடியதாக இருக்கிறது. முதல் பாடலான 'ஏஞ்ஜோ' பாடலில் இசையமைப்பாளர் தமன் டரம்ஸ் வாத்தியத்துடன் வருகிறார். இவரது திரையுலக பயணத்தின் முக்கிய மைல்கல் அல்பமாக இது இருந்துவிட்டது.
'காஞ்சன மாலா...', 'அஞ்சனா...', 'திறந்தேன் திறந்தேன்...' என மூன்று
பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ரகமாக பாடல்கள் வெளிவந்து பலரை கொள்ளையடித்திருந்தது. எனவே படமும் எப்பிடியும் நல்லாயிருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தாலும் அதை அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டார் இயக்குநர். படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில் சந்தானம் டிரையிலர் பாத்திட்டு படம் நல்லாயிருக்குமென்று நினைச்சிருப்பியே. ஆனா அப்பிடி இல்லை என்று வேறு ஒரு விஷயத்திற்கு சொல்வது இந்தப்படத்திற்கு 100% பொருந்திவிட்டது. தாதாக்கள் கோட்டையான மும்பையை பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, தனது கேமரா கண்களால் நேர்த்தியாக சிறை பிடித்திருக்கிறது. பட்டுக் கோட்டை பிரபாகரின் வசனங்கள் சில இடத்தில் அட! சொல்ல வைக்கிறது. ஜீவா, டாப்ஸி இடையேயான காதல் வசனங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். வள வளவென்று முதல் பாதியில் நகரும் திரைக்கதை, கடைசி 30 நிமிடத்தில் வேகம் எடுக்கிறது. படத்தின் கடைசி நேர ட்விஸ்ட் தமிழ் சினிமாவிற்கு புதுசு. அதுதான் படத்தின் பலம். ஆனால் அது மட்டுமே காப்பாற்றும் என்று இயக்குநர் நம்பியது பெரும் தவறு.
நன்றி விடுப்பு
எங்கேயும் எப்போதும்
சற்றும் சிந்திக்காத அவசரம் மனிதனின் வாழ்வையே மாற்றிவிடுகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்.
ஒரு நொடி அவசரம்தான் விபத்திற்கு மூலகாரணமாகிறது. அதை தவிர்த்து விட்டால் விபத்து என்ற அரக்கனிடமிருந்து பல உயிர்கள் நிம்மதியுடன் வாழும்.
அது வாழ்க்கையாக இருந்தாலும் சரி, பயணமாக இருந்தாலும் சரி. இந்த
கருத்தை இரு பேருந்துகளின் விபத்து மூலம் நம் முகத்தில் அறைய வைக்கிறார் அறிமுக இயக்குநர் சரவணன். இதனூடே மெல்லினக் காதலையும், வல்லினக் காதலையும், இடையினக் காட்சிகளையும் நேர்த்தியாய் கொடுத்து தமிழ் போல் அழகாக்கியிருக்கிறார். சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது, திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது. இந்த இரண்டும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு பயணிக்கும் ஜெய், அஞ்சலி, சர்வானந்த். சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் அனன்யா. இவர்கள் யார்? இவர்களுக்குள் என்ன தொடர்பு? இந்த விபத்தால் இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தும் தலைகீழ் மாற்றங்கள் என்ன? என்பதுதான் 'எங்கேயும் எப்போதும்' படத்தின் திரைக்கதை.
விபத்து நிகழ்வதில் இருந்தே தொடங்குகிறது படம். விபத்தான பேருந்துகளில் பயணித்த கதாபாத்திரங்களின் கடந்த கால வாழ்கையை பின்நோக்கிச் சென்று விவரிக்கிறார் இயக்குநர். அந்த பயணத்தில் திக் திக் என்று நெஞ்சைப் பிடித்தபடி நாமும் பயணமாகிறோம். அந்த விபத்தில் நாமும் சிக்கிக் கொண்டது போல உணர வைத்து விடுகிறார் இயக்குநர். படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் இனி வேகமாக வாகனம் ஓட்டக் கூடாது என உணரவைத்து விடுகிறது படம். இப்படி ஒரு நல்ல காதல் ஜோடிகளைப் பார்த்து நாட்கள் பலவாகிவிட்டது. கதிரேசன் (ஜெய்) மணிமேகலை (அஞ்சலி) என்ற பெயர் தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து இருக்கும். தியேட்டரில் இருப்பவர்களை இதழோரம் புன்னகை வழிய ரசித்து ரசித்து பார்க்க வைத்த அருமையான காதல்.
நெகட்டிவ் கேரக்டர்களே படத்தில் இல்லை என்பது தமிழ் சினிமாவில் புதுசு மற்றும் ஆறுதல்.ஜெய் தனக்கு கொடுத்த பாத்திரத்தை மிக கச்சிதமாக செய்து இருக்கின்றார்.. அந்த இன்னோசென்ட் அவருக்கு நன்றாகவே வருகின்றது.. வெல்டன் ஜெய் சான்சே இல்லை. அஞ்சலிக்கு இந்த படம் ஒரு மைல்கல். 'கற்றது தமிழுக்கு' பிறகு 'அங்காடித் தெரு'. இப்போது 'எங்கேயும் எப்போதும்' என்று காலரை ச்சே சாரி ஜீன்சை இழுத்து விட்டு சொல்லிக்கொள்ளலாம். யப்பா என்ன நடிப்பு? என்ன நடிப்பு?? கடைசிவரை என்னோடு குப்பை கொட்டுவாயா? என்று கேட்டு விட்டு அப்படின்னா ஐ லவ்யூ என்று அலட்சியமாக சொல்லும் இடத்தில் அஞ்சலி சான்சே இல்லை.. அதே போல ஜெய்யை தானே கட்டிபிடிக்கும் இடத்தில் ஒரு சின்ன கியூட்நெஸ் அதில் இருப்பதை மறுக்க முடியாது.
ஆண் அடங்கி பெண் பொங்கும் கேரக்டர்.. ஜெய்-அஞ்சலிக்கு நன்றாகவே ஒர்க்அவுட் ஆகின்றது... ஜெய் வீட்டில் அஞ்சலி தன் பிரண்ட்ஸோடு சீட்டு ஆடும் போது, அஞ்சலி ஜெய் கையை எடுத்து தனது தோள் மேல் போட்டுக்கொள்ள, விளையாட்டின் போது அஞ்சலி முன் பின்னாக சாய்ந்து இயல்பாக ஆட, ஜெய்யின் கை அஞ்சலியின் மார்பகங்களில் படுவதையும், அதனால் ஜெய் கூச்சத்தில் தவிப்பதையும் விஷுவலாக காட்டாமல் ஜெய்யின் முக ரியாக்ஷனில் காட்டி இருப்பது செம க்யூட். அனன்யாவின் அநியாய அப்பாவித்தனமும், ஓவர் முன் ஜாக்கிரதையும் சர்வானந்த்துக்கு எரிச்சலை கொடுத்தாலும் ஆடியன்ஸூக்கு புன்னகையையே தருகின்றன...அனன்யா சென்னை வந்து ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி அக்கா வீட்டுக்கு போவதை மட்டும் போர் அடிக்காமல் 48 நிமிடம் சுவாரஸ்யமான சம்பவங்களுடன் சொன்னதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.
அதிலும் இருவரும் நடந்து போகும்போது அனன்யா தன் ஒரு கையை
மட்டும் முதுகுப்பக்கம் மடக்கி போவது செம.. (கை அவர் மேல் பட்டுடக்கூடாதாம்..)மெல்ல மெல்ல அவர் மேல் காதல் கொள்வது அழகு... இவர்களது காதல் கதை நாம் பக்கத்தில் இருந்து பார்ப்பது போலவே பிரமதமாய் செட் ஆகி விடுகிறது. மொத்தத்தில் சர்வானந்த், அனன்யா இருவரும் கதாபாத்திரத்தின் இயல்பு மாறாமல் நன்றாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமில்லாமல், பஸ்ஸில் வரும் ஒரு கல்லூரி மாணவன், மாணவிக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு, பயணம் முடிவதற்கு காதலாய் மாறி நம்பர் மாற்றிக் கொள்ளும் காட்சி, புது மனைவியை பிரிய முடியாமல் பஸ் ஏற்ற வரும் கணவன், குட்டிப் பெண், சமையல்கார பயணி, ஜெய்யின் ஊர்க்கார பெரியவர். வெளிநாட்டில் ஐந்து வருடமாய் இருந்துவிட்டு முதல் முறையாய் தனக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக ஊர் திரும்பும் ஒரு பாசக்கார அப்பா, அவரது ரிங்டோன். அனன்யாவின் அக்கா, நடுவில் ஏறும் முஸ்லிம் பெண்மணி என்று மேலும் பல குட்டிக் சிறுகதைகளை மிக இயல்பாக கேரக்டர்களாய் உலவ விட்டிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் டயலாக்குகள் அற்புதம் முக்கியமாக அனன்யா தன் அக்காவிடம் ஒரு நிமிடம் பெண் பார்க்க வந்து காபி கொடுத்து விட்டு பிடித்து இருக்கின்றது என்று சொல்லி திருமணம் செய்து கொண்டு இருக்கின்றாய்..ஆனால் நான் ஒரு நாள் அவனோடு பயணித்து இருக்கின்றேன் என்று சொல்வதும்... அஞ்சலி கோபம் வந்தால் உடனே கோபப்பட்டு விடு அதை விட்டு விட்டு ஏதாவது ஒரு நாளில் உனக்கா நான் எவ்வளவு விட்டு கொடுத்து இருக்கின்றேன் என்று சொல்லாதே என்று சொல்லும் உரையாடல்கள் வாழ்வியல் நிதர்சனங்கள். படத்தில் இருக்கும் பெரிய லாஜிக் மிஸ்டேக் சென்னைக்கு நேர்முகதேர்வுக்கு வரும் அனன்யாவிடம் ஏன் செல்போன் இல்லை.
படத்தின் டாப் மோஸ்ட் ஹீரோ கேமராமேன் வேல்ராஜ்தான் என்றால் அது மிகை இல்லை என்று சொல்லலாம்.. சென்னை மற்றும் திருச்சியின் லைவ்லிநைஸ் திரையில் அப்படியே கொண்டு வந்து இருக்கின்றார்கள்..சின்ன சின்ன கியூட் ஷாட்டுகள் படத்தில் அதிகம் மிக முக்கியமாக பேருந்துகள் கிளம்பும் முன் அவைகள் எவ்விதமாக ஒரு நீண்ட நெடிய பயணத்துக்கு தயராகின்றன என்று சின்ன சின்ன ஷாட்டுகளில் விளக்கும் காட்சிகள் கவிதை அதே போல ஒரு விபத்து ஏற்பட்டதும், அது யார் யாருக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் யார் யார் அதை ரொம்ப சர்வசாதாரணமாக அணுகுவார்கள் என்று காட்சிப்படுத்திய இடங்களும் அருமை. சத்யா இசையில் 'கோவிந்தா ' பாடல் அருமை. எடிட்டிங்.. ஆன்டனி..வெல்டன் முக்கியமாக 'கோவிந்தா' சாங் கட்டிங் மற்றும் சாலைகாட்சிகள் மற்றும் விபத்து காட்சிகயில் தனது கத்திரியால் ஷார்ப் பண்ணி இருக்கின்றார்.
ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த சரவணன், குருவிற்கு ஏற்ற சிஷ்யன் என்பதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ்பேக் என்றாலும் அதை தனது திறமையான திரைக்கதையால் நேர்த்தியாக கதை சொல்லி இருக்கிறார். இத்தனை சம்பவங்களையும் தன் அழகான வசனத்தால் கோர்த்து மாலையாக்கி தந்திருக்கிறார். இவரை நம்பி படம் எடுத்த தயாரிப்பளார் ஏ.ஆர்.முருகதாஸிற்கு எங்கேயும் எப்போதும் நன்றி சொல்லலாம்.
நன்றி விடுப்பு