“ சொர்க்கமே
என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா…?
அட என்னாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடாகுமா…?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா…?
“
இந்தப்பாடலை கேட்டிருப்பீர்கள்.
கடந்த 28 ஆம் திகதி வடபுலத்தில்
தெல்லிப்பழையில் தமது 99 வயதில் மறைந்த எமது
கலை, இலக்கிய சமூக நேசர் மருத்துவர் தம்பிப்பிள்ளை வாமதேவன் அவர்களின்
இறுதிநிகழ்வையும் அவரது இறுதி யாத்திரையையும் அவுஸ்திரேலியாவிலிருந்து காணொளி ஊடாக
பார்த்துக்கொண்டிருந்தபோது, கண்ணீர் மல்க குறிப்பிட்ட அந்தப்பாடலைத்தான்
நினைத்துக்கொண்டேன்.
அன்பர் வாமதேவன் எனது நீண்ட கால நண்பர். எனக்கு மட்டுமல்ல,
இலங்கையில் கலை, இலக்கியம், ஊடகம் சார்ந்து இயங்கிய பலருக்கும் அவர் நல்ல
நண்பராகவே திகழ்ந்தவர்.
மருத்துவர் வாமதேவன் மறைந்தார் என்ற துயரச்செய்தியை எமக்கு
முதலில் தெரிவித்த கலை, இலக்கிய ஆர்வலர்
நவரத்தினம் இளங்கோ அவர்களும் அன்னாரின் நெருங்கிய நண்பர்தான்.
வாமதேவன் தமது
இளமைக்காலத்தில் மருத்துவம் படித்து மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று M R
C P
பட்டத்துடன் திரும்பியவர்.
அவர் நினைத்திருந்தால், இங்கிலாந்திலோ அல்லது வேறு மேலைத்தேய
நாடுகளிலோ தமது மருத்துவத்துறையில் பணிகளை மேற்கொண்டு, தமது குடும்பத்தினரையும்
அழைத்து வாழ்ந்திருக்கலாம்.
ஆனால், அவர் தமது ஊரான தெல்லிப்பழையிலிருந்து மருத்துவம்
படிக்கச்சென்றபோது, அவரது தாயார் கூறிய அறிவுரையை கேட்டு, அதன்பிரகாரம் தனது வாழ்க்கையை
அமைத்துக்கொண்டவர்.
தான் கற்கும் மருத்துவம் மக்களின் சேவைக்குத்தானேயன்றி, தனியார்
துறை மருத்துவமனைகளுக்கு அல்ல, என்ற
மனிதநேயச்சிந்தனையுடன் அரச பொது மருத்துவமனைகளிலேயே இறுதிவரையில் நலிவுற்ற மக்களுக்காக பணியாற்றினார்.
அவரது புதல்விகள் இருவர் அவுஸ்திரேலியாவில் இரண்டு மாநிலங்களில்
வசிக்கின்றனர். இறுதியாக அவர்களிடம் கடந்த
ஆண்டு வந்தவர், தனது எஞ்சியிருக்கும்
காலத்தில் ஊரோடு சென்று வாழவே விரும்புவதாக கூறி விடைபெற்றுச்சென்றார்.