திமிலை மற்றும் பாணி - தோற்கருவிகள்

அன்னாங்குடி அல்லது வென்னில் அல்லது மஞ்சா என அழைக்கப்படும் கொடிவகைச் செடியில் இருந்து முற்றிய கிளைகளை வளைத்து உருவாக்கப்பட்ட வளையங்களில் தோல் போர்த்தப்படுகிறது. பிரம்பு வளையமும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை வட்டம் என்று அழைக்கிறார்கள். ஒரு வயதுக்குக் கீழ் உள்ள கன்றுக்குட்டியின் சுத்திகரிக்கப்பட்ட தோலை வெட்டி இந்த வட்டங்களில் பச்சை அரிசியின் காய்ச்சியப் பசையினால் ஒட்டப்படுகிறது. நன்கு காய்ந்த பிறகு தோல் போர்த்திய வளையத்தில் ஆறு துளைகள் இடப்படுகின்றன. பின்பு, அவை முறுக்கப்பட்ட தோல் கயிறுகளின் உதவியுடன் பலாக்கட்டையில் செய்த உடல் பகுதியுடன் சேர்த்து இறுக்கி கட்டப்படுகின்றன (கயிற்றின் மொத்தத் தேவை 25 அடி). மேல் வட்டம் எனப்படும் கொட்டு முக வட்டத்தில் சற்றுக்கனமான தோல் போர்த்தப்படுகிறது. கீழ் வட்டம் அல்லது மூடு வட்டம் எனப்படும் இசைக்கப்படாத எதிர் முகத்திற்கு மெல்லிய தோல் போர்த்தப்படுகிறது. இசைப்பவரின் தோள்களில் திமிலையைத் தொங்கவிட ஒரு நீண்ட துணி பயன்படுத்தப்படுகிறது.


தென் ஆற்காடு மாவட்டம், திருக்கோவிலூர், கீழுர் கிராமத்தில் உள்ள வீரட்டானேசுவரர் கோவிலின் திருவுண்ணாழிகையின், தெற்கு - கிழக்கு - வடக்குப் புறச் சுவர்களில் உள்ள கல்வெட்டு( பதிப்பு : எண் 863. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. No.863. S.I.I. Vol. VII.) முதலாம் இராசராச சோழன் காலத்தில் எழுதப்பட்டது. இந்தச் சோழனிடம் அதிகாரியாக இருந்த கம்பன் மூவேந்த வேளான் என்பவர் வீரட்டானேசுவரர் கோவிலில் செய்த தானதருமங்களைக் கூறுகிறது. "கரடிகைத் தொகுதியுங் கைம்மணிப் பகுதியு முருடியல் திமிலை முழக்கமும்" என்கிற குறிப்பின் மூலம் இக்கோவிலில் திமிலை இசைக்கப்பட்தை நாம் அறிகின்றோம்.
திமிலை, செண்டை ஆகிய இசைக்கருவிகள் தற்போது கன்னியாகுமரி நாகர்கோயில் மாவட்டங்களில் மட்டுமே காணப்படும் சூழல் இருக்கும் வேளையில் அது முன்பு தமிழகமெங்கும் பரவலாக புழக்கத்தில் இருந்தமையை இக்கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகளின் மூலம் நாம் உணரலாம். தவிலும் நாதசுரமும் எந்த காலக்கட்தில் எப்படி கோவில்களில் நுழைந்தது என்பது ஆய்விற்குரியது.

நாகர்கோவில் மாவட்டம், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் திமிலை வித்வான் திரு சபரிகிரிஷ் அவர்கள் கூறுகையில் “தொன்றுதொட்டு தினப்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜர் ஆலயம், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், குமாரக்கோவில் குமாரசாமி கோவில், பரக்கை மதுசூதன பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் தின பூசையின் பொழுது திமிலை தவறாமல் இசைக்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோயில் பூசை வேளையிலும் திமிலை இசைக்கப்படுகிறது. மேலும் இக்கோவில்களின் விழாக்கள் அனைத்திலும் திமிலை, கொம்பு, மத்தளம் ஆகியவை இசைக்கப்படும்”.

தெரிந்தோ தெரியாமலோ கேரள/தமிழ் கலவை பண்பாடுக்கொண்ட நாகர்கோவில்/கன்னியாகுமரி பகுதிகள் தமிழ்நாட்டோடு இணைந்து விட்டன. இப்பகுதியில் உள்ள கோவில்கள் தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. கேரள மாநிலத்தில் உள்ள தேவசம் போர்டு கோவில் இசை பணியாளர்களுக்கு நிகழ்காலத்தில் வாழத் தேவையான அளவு சம்பளம் வழங்கப்படுகிறது. ரூபாய் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நிலைமை முற்றிலும் தலைகீழ். நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த இசைக் கலைஞர்களுக்கு மாத சம்பளம் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் தான் அளிக்கப்படுகிறது. இதை வைத்து ஒரு கிலோ அரிசி பருப்பு கூட முழுமையாக வாங்க முடியாது. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தான் இந்த கலைஞர்கள் தொடர்ந்து கோயில்களில் பணியாற்றி வருகிறார்கள். திரு சபரிகிரீஷ் அவர்கள் கூறுகையில் இந்த தலைமுறையோடு இக்கலைகள் இந்த மண்ணை விட்டு மறைந்து விடும் என்கிறார். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஒரு வேலையை எந்த ஒரு இளம் தலைமுறையினரும் கையில் எடுக்கத் தயாராக இல்லை. அரசு பொது மக்கள் என்று எவருடைய ஆதரவும் இல்லாமல் அவர்கள் இந்த இசைக்கலையை ஆதாரமாக வைத்து வாழ வழியில்லை. முன்னொரு காலத்தில் தமிழகமெங்கும் பரவலாக விளங்கிய ஒரு கலை வடிவம் இன்று கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்டங்களில் சுருங்கிவிட்டது. இங்கேயும் அது முற்றிலுமாக அழியும் நிலையில் தான் இன்றைய காலகட்டம் உள்ளது. இந்த மாவட்டங்களில் வாழும் இசைக் கலைஞர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே இக்கலைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். இல்லையென்றால் தொன்மையான இந்த இசைக் கருவிகள் அருங்காட்சியங்களுக்கு புலம் பெயர்ந்து விடும் அல்லது கோவிலிலேயே பழுதாகி எலி தின்று மண்ணோடு மண்ணாகி மக்கி போகும். மற்ற நாட்டுப்புற இசைக்கலைகளை போன்று இவர்களுக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களின் ஆதரவும் கவனிப்பும் மிகவும் தேவையானதாக இருக்கின்றது. அரசியல் ரீதியாக தமிழகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இந்த மாவட்ட மக்களின் கலை வடிவங்கள், இசைக்கருவிகள், இசைக்கலைஞர்களை போற்றிப் பாதுகாப்பது தமிழக அரசு, தமிழக மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் கடமையாகும்.
கன்னியாகுமரி. நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் பஞ்சவாத்தியம் என்கின்ற இசைமரபு உள்ளது. இதை பாணி கொட்டு என்கிறார்கள். கேரளத்தின் செண்டை பஞ்சவாத்தியதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இதில் பாணி அல்லது திமிலை, பேரி மத்தளம் (அ) வீக், சேமக்கலம், சங்கு ஆகியவை இசைக்கப்படும். இந்த கூட்டு இசைக்கருவிகள் பெரும்பாலும் ஆகம வழி கோயில்களில் மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது அதே வகையான ஓசைகளை இசைக்கருவிகளில் இருந்து எழுப்ப இக்கருவிகளை இசைப்பதாக கூறுகிறார் ஏரல் திரு மணி அவர்கள்(பாணி கொட்டு கலைஞர்). மேலும் இந்த இசைக் கருவிகள் கருவறைக்கு மிக அருகில் இசைக்கப்பட்டு தெய்வங்களை அழைக்க இசைக்கப்படுவதாக கூறுகிறார் இவர். இப்பகுதிகளில் நடைபெறும் குடமுழுக்குகளில் இந்த இசைக்கருவிகளின் இசையை நாம் கேட்கலாம். வெளியூர்களுக்கும் இவர்கள் அவ்வபொழுது சென்று இசைக்கிறார்கள். நெல்லையை சேர்ந்த திரு இசக்கி கம்பர் என்பவரும் இக்கலையை நிகழ்த்தி வருகிறார்.
திமிலை இசைக்கருவி பற்றியும் பாணி இசைக்கருவி பற்றியும் திருமுறை, திருப்புகழ், கந்த புராணம், கம்பராமாயனம் ஆகிய பழம் நூல்களில் மிகுந்து காணப்படுகிறது. திருப்புகழ் பாடல் எண்கள் 23, 77, 106, 153, 215, 276, 337, 349, 369, 534, 537, 559, 602, 616, 774, 868, 927, 995, 1059, 1163 ஆகிவற்றில் திமிலை பற்றிய குறிப்புகள் உள்ளன. இத்தனை மகத்துவம் வாய்ந்த பாரம்பரியமான இந்த இரண்டு இசைக்கருவிகளும் இன்று நம்மிடையே புழக்கத்தில் இல்லாமல் இருப்பது பெரும் துயரம் ஆகும். அண்மைக்காலங்களில் சிவ வாத்திய குழுவினர் நடத்தும் கைலாய வாத்திய குழுக்களில் கேரளத்தில் இருந்து தருவிக்கப்பட்ட திமிலையும் இசைக்கப்படுவதை நாம் காணலாம். குறைந்தபட்சம் இந்த கருவி புழக்கத்தில் இருந்து இப்போது வழக்கொழிந்து இருக்கும் கோயில்களில் மட்டுமாவது மீண்டும் இசைக்க அந்தந்த பகுதியினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ஆவண செய்ய வேண்டும் மறையும் மரபை ஓரளவாவது மீட்டு எடுக்க வேண்டும்.
பாடல்:
திருமுறை 5 – அப்பர்
ஊனி லாவி இயங்கி உலகெலாம்
தானு லாவிய தன்மைய ராகிலும்
வானு லாவிய பாணி பிறங்கவெங்
கானி லாடுவர் கச்சியே கம்பரே
திருமுறை 12 – சேக்கிழார்
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க
கந்தபுராணம் - சரவணப் படலம் - கச்சியப்பர்
சல்லரி வயிர்துடி தடாரி சச்சரி
கல்லென இரங்குறு கரடி காகளஞ்
செல்லுறழ் பேரிகை திமிலை யாதியாம்
பல்லியம் இயம்பின பாரி டங்களே.
திருப்புகழ் - அருணகிரிநாதர்
திமிலை கரடிகை பதலைச லரிதவில்
தமர முரசுகள் குடமுழ வொடுதுடி
சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர
கம்பராமாயனம் – கம்பர்
கும்பிகை திமிலை செண்டை குறடு மாப்பேரி கொட்டி
பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர்ப் பணவம் தூரி
கம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை
அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே
காணொளி:-
தமிழகம்: திமிலை
தமிழகம்: பாணி கொட்டு
https://www.youtube.com/watch?v=Pu1Lir6ny2M
https://www.youtube.com/watch?v=-D_LCN5cnIg
https://www.youtube.com/watch?v=-D_LCN5cnIg
கேரளம்:
https://www.youtube.com/watch?v=x8mqgnOF_zw
https://www.youtube.com/watch?v=wrx_o0xSN2I&t=202s
https://www.youtube.com/watch?v=wrx_o0xSN2I&t=202s
-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:-
1. திரு சபரி கிரிஷ் அவர்கள், பறக்கை அருள்மிகு மதுசூதன பெருமாள் கோவில் இசைக்கலைஞர்
2. தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்கள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள், அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
3. வெள் உவன் –திருநெல்வெலி திமிலை
No comments:
Post a Comment