இலங்கை சேனையூர் அனாமிகா களரி பண்பாட்டு மையம், தமிழ்நாடு
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை , சென்னை
டிஸ்கவரி புக்பெலஸ் ஆகியன இணைந்து டிசம்பர் 06 முதல் நடத்திய தொடர் காணொளி அரங்கு !
08-12
-2020 அரங்கில் முருகபூபதி சமர்ப்பித்த உரை
பேராசிரியர்
க. கைலாசபதி இலக்கியத் துறை, இதழியல் துறை
மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய
பங்கு அளப்பரியது. கைலாசபதி அவர்கள் மறைந்து முப்பத்தி எட்டு வருடங்கள்
ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது வாழ்வையும் பணிகளைப் பற்றியும் தொடர்ச்சியாக உலகில் எங்காவது ஒரு
திசையிலிருந்து யாராவது ஒருவர் அல்லது
ஏதேனும் ஒரு அமைப்பு பல தளங்களில் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடுகின்றன. கருத்தரங்குகள் நடத்துகின்றன.
அந்த ரீதியில் எமது
நண்பர் பேராசிரியர் பாலசுகுமார் கைலாஸ்
அவர்களுக்காக அவரது நினைக்காலத்தில் இந்த
தொடர்கருத்தரங்கை ஒருங்கிணைத்துள்ளார்.
இதிலும் பாருங்கள்….
கைலாஸின் ஆத்மாதான் இதனையும் ஆக்கபூர்வமான வடிவத்தில் ஒழுங்கமைக்க
தூண்டியிருக்கிறது என்ற நம்பிக்கையுடன் நானும் இதில் கலந்துகொள்கின்றேன்.
கைலாஸ் சிறந்த கல்விமான்,
இலக்கிய சமூக அரசியல் ஆய்வாளர். இலக்கிய
திறனாய்விலும் ஒப்பியல் இலக்கிய விமர்சனத்துறையிலும் சிறந்த ஆளுமை என்பதில் எமக்கிடையே கருத்து பேதம் இருக்காது. அந்த பண்புகளுக்கெல்லாம் அப்பால், அவர்
மிகச்சிறந்த நிருவாகி.
அவரிடமிருந்த குறிப்பிட்ட
நிருவாகப்பண்பு, தனக்குப்பின்னரும் வரும்
தலைமுறையிடத்தில் கடத்துகின்ற, அல்லது பாய்ச்சுகின்ற இயல்பு இருக்கிறது பாருங்கள்,
அதுதான் நாம் அவரிடம் கற்றுக்கொண்ட முன்மாதிரி.
அவரைக்கொண்டுபோய் எங்கோ ஒரு முன்பின் தெரியாத தேசத்தில் விட்டிருந்தாலும், அவர் தனது நிருவாகப்பண்பினை
வெளிப்படுத்திக்கொண்டே இருந்திருப்பார்.
அவரது அந்தப்பண்பில் தன்முனைப்பு இருக்காது, மற்றவர்களை இனம்கண்டு, உற்சாகப்படுத்தும், ஊக்குவிக்கும், ஆலோசனை சொல்லும் இயல்புகளே மேலோங்கியிருக்கும்.
இந்தப்பின்னணிகளிலிருந்துதான்
இலங்கை தமிழ் இதழியல் துறையில் கைலாசபதியின் வகிபாகத்தை பற்றி இந்த அரங்கில்
பேசுவதற்கு முன்வந்துள்ளேன்.