எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.

எனது இலங்கைப் பயணம்  1 - செ.பாஸ்கரன்


எல்லோரும் போய் வருகின்றார்கள் பல ஆண்டுகளுக்குப்பின்பு வடக்கு நோக்கி செல்லும் பயணம் என் மனதிலும் துளிர் விட்டது. அரசியல் கட்சிகளும் அதன்பின் ஆயுதக் குழுக்களும் ஆட்சிபுரிந்த பிரதேசம் இன்று ஆமிக்காரர்கள்கையில். ஆனையிறவில் இலங்காபுரியை ஆமிக்காரர்கள் தாங்கி நிற்கும் சிலை காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருப்பதை பத்திரிகைகளில் பார்த்தபோது. ராணுவத்தின் கைக்குள்தான் இலங்கை போகப்போகின்றது என்பதற்கான தீர்க்க தரிசனம்தானோ என என் மனம் ஒரு போது எண்ணியதுண்டு அது நடவாது என்பதற்கு இன்னும் எந்த உத்தரவாதமும் யாரும் தரவில்லை. இந்த நிலையில் ஏதாவது நடப்பதற்கு முன்பு ஒருமுறை போய்விட்டு வந்து விடலாம் என்று தொடங்கிவிட்டேன் எனது பயணத்தை.

கொழும்பை அடைந்தவுடன் விமானநிலையத்தை விட்டு வெளியே போகும்போது எங்கிருந்துதான் வந்து ஒட்டிக்கொண்டதோ தெரியாது ஒருவித மருட்சி சுற்றும் முற்றும் பார்த்தபடி நடக்கிறேன். எவரும் என் அருகே வரக்காணோம். கடத்திக்கொண்டு போய்விடுவார்களோ, அதை இதைக் கேட்டு வெருட்டுவார்ககோ என்ற எண்ணம் அடிமனதில் இருந்த இடம் தெரியாது ஒதுக்கிக் கொண்டது. மாறாக துப்பாக்கியை தூக்கமுடியாது தூக்கிக் கொண்டுநிற்கும் மீசை அரும்புகின்ற வயதுடைய கிராமத்து வறுமை முகத்தில் தெரியும் இராணுவ சிப்பாய்கள் ஆங்காங்கு நிற்கிறார்கள். வெளியே சென்றதும் எம் உறவுகள் எமக்காக காத்திருந்து இரவு 12.30 ற்கு அழைத்துச் செல்கின்றார்கள.; வாகனத்தை செலுத்துபவர் பெரிய சத்தமாக தமிழ்ப்பாட்டை போட்டுக்கொண்டு விரைகின்றார். எங்கும் இராணுவத்தினர் மறிப்பதாக தெரிவில்லை தெருவோரங்களில் இடையிடையே அவர்கள் நின்றபோதும் எந்த தடுப்புமின்றி வீடுவந்து சேர்ந்தது சற்று உற்சாகத்தை தந்தது. மறு நாள் கொழும்பை சுற்றி ஒரு அலசல். கொழும்பு நகரம் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது எதையோ பிடித்துவிடும் அவசரம் இங்குபோலவே அங்கும் தெரிகிறது. சுற்றி சுற்றிச் பார்க்கிறேன் என்கண்களில் தட்டுப்படவே இல்லை, இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் போட்டிருந்ததைப்போல ஜனாதிபதியின் கட்அவுட்டுக்களை காணவில்லை களட்டி வைத்துவிட்டார்கள் போல என்று மனம் சொல்கிறது. இடையிடையே வீதியின் ஓரத்தில்; காவல் அரண்கள் இருக்கும் அதன் முன் ஒரு இராணுவத்தினன் நிறுத்துக என்ற ஆங்கில வாசகம் கொண்ட மட்டையை கையில் வைத்துக் கொண்டு நிற்பார் எதாவது ஞாபகம் வந்ததுபோல் மட்டையை நீட்டுவார் அப்படி நீட்டினால் சாரதி வாகனத்தை நிறுத்தி ஜடி யை காட்டவேண்டும் ஓகே சேர் என்ற வார்த்தையோடு விடை கிடைக்கும். எங்கும் வீதிகள் திருத்தப்படுவதும் கட்டிடங்கள் கட்டப்படுவதுமாக கொழும்பு சுறுசுறுப்பாக இருந்தது. பிச்சைகாரர்களும் பேமென்ற் வியாபாரிகளும் இல்லாததும் வீதிகளில் குப்பைகள் போடமுடியாது இருப்பதும் நகர் அழகாகத் தெரிகின்றது. ஆனால் கை வண்டியில் மூட்டை இழுக்கும் தொழிலாளிகளும், பசை வாளிககோடு போஸ்டர் ஒட்டும் சிறுவர்களும் இன்னும் மறையாத நகரமாகவே இருக்கிறது.


அழுத்மாவத்தையில் நிற்கின்றேன் பெரிய சத்தமாக முருகன் பாடலுடன் நாதஸ்வரம் மேளம் சேமக்கலம் சங்கு எல்லாம் சேர்ந்து லவுட்ஸ்பீக்கரில் ஒலித்து அந்த பிரதேசத்தையே ஆக்கிரமித்த வண்ணம் திறந்த றக் வாகனத்தில் பெண்களும் ஆண்களும் சேர்ந்திருக்க சூரன் பவனி வருகின்றார். ஒருவர் நின்று கொண்டு சூரனின் தலையை எல்லாப் பக்கமும் திருப்பிக் கொண்டு நிற்கின்றார். சில தமிழ்க் கடைகளுக்கு முன்னால் நிற்பாட்டி நிற்ப்பாட்டி பூசை போன்று ஏதோ செய்கின்றார்கள். என்ன இது என்று நண்பரிடம் கேட்கின்றேன்ரூபவ் இன்று இரவு சூரன் போர்தானே சூரனை உலாகொண்டு செல்கின்றார்கள்ரூபவ் புறக்கோட்டை வழியாக சுற்றிக்கொண்டு முகத்துவாரம் சிவன் கோயிலுக்கு போகப்போகின்றார்கள் என்ற விடை கிடைத்தது. என்னை அறியாது சிரித்துக்கொண்டேன் போர் நடந்த நாட்டில் போரால் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் ஒரு பகுதியினர் போர் ஒத்திகை பார்க்கிறார்கள் அசுரனை அழிக்கப் போகின்றார்களாம். இந்த சூரனிடம் ஆமிக்காரர்கள் எந்த ஜடி காட்டையும் கேட்டு பார்க்கவில்லை.

மறுநாள் அதிகாலை 4 மணிக்கு காரை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி விரைகின்றோம் விடியும் வேளையில் வவுனியா வந்து விட்டதில் ஒரு திருப்தி வாகன நெரிசல் அதிகம் இல்லாவிட்டாலும் யாழ் கொழும்பு பஸ் வண்டிகள் எம்மைக்கடந்து போய்க்கொண்டிருக்கிறது பெரும்பாலும் சொகுசு வண்டிகள். ஏதோ ஒரு உந்துதலால் எண்ணிக்கொண்டு போகின்றேன் சிலவற்றை தவறவிட்ட கணக்கின்படி 26 பஸ் வண்டிகள் ஒரு இரவில் கொழும்பை நோக்கி ஓடியிருக்கிறது. வவுனியா மாங்குளம் வீதி காப்பெற் வீதியாக மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் ஓரங்களில் ஏறக்குறைய 300 மீற்றருக்கு ஒரு சென்றி பொயின்ற் காணப்படுகின்றது அதில் இரண்டு இராணுவத்தினர் நிற்கின்றார்கள் மீசை அரும்பும் வயதும் கிராமத்து தோற்றமும் கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள். என்ன காவல் புரிகின்றார்களோ தெரியாது பெரும் பாலும் எல்லோரும் கையில் மொபைல் போனை வைத்துக்கொண்டு ஏதோ செய்த வண்ணமே இருக்கின்றார்கள்.காட்டு வெய்யிலில் பொழுது போவதற்கு கண்டு பிடித்திருக்கும் உத்தியோ என்று எண்ணத் தோன்றியது. ஏ9 வீதியின் இரு பக்கங்களும் பற்றைகள் ஏறக்குறைய பதினைந்து பதினைந்து மீற்ரர் அகலத்திற்கு வெட்டப்பட்டு வெளியாக்கி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீளக் குடியமர்வு செய்யப்பட்ட மக்கள் UNHCR கொடுத்த சின்னஞ் சிறு குடிலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதே போல் சின்னஞ் சிறு பெட்டிக்கடைகளும் ஏ9 வீதியோரம் காணப்படுகின்றது.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை மக்களைக் காணக்கிடைக்கவில்லை அப்படியிருக்க இந்த கடைகளில் யார் பொருட்கள் வாங்குவார்கள் என்ற எண்ணம் என் தலையை குடைய ஆரம்பித்தது. காரை நிற்பாட்டி இறங்கி உரையாடுவோம் என்ற எண்ணத்தை தெரிவித்தவுடன் காரிலிருந்த உறவுகள் MOD இல்லாம இருக்கிறீங்கள் ஆக்களோடு கதைக்க ஆமிக்காரன் விடமாட்டான் வேண்டாம் என்ற தடை வந்தது ஒருவாறு சமாதானம் செய்து ஒரு முறை இறங்கிதான் பார்ப்போமே என்று ஒரு சிறு கடையின் முன்பாக காரை நிறுத்தி விட்டு இறங்கி கடையை நோக்கி சென்றேன்.கண் மட்டும் முன்னால் இருந்த சென்றியின் மேல் இருந்தது. கடையில் சோடா ஒன்று கேட்பதற்கு என்ன பாசையை பாவிப்பதென்று ஒரு கணம் யோசிக்க வேண்டியதாக இருந்தது. இவர்கள் தமிழரா சிங்களவரா? ஆமி சென்றியின் பக்கத்திலேயே கடை இருப்பதால் என்னுள் எழுந்த சந்தேகம்தான் இது. தமிழ் முறையில் சேலை அணிந்து கொண்டு ஒரு 45 வயது மதிக்கத்தக்க மாது கல்லாப்பெட்டியில் இருக்க அருகில் இருந்த வாங்கில் சேட் அணியாது சாரம் மட்டும் உடுத்திய ஒருவர் இருக்கின்றார். மதியம் தொடங்குமுன்னரே அந்த தகரக் கொட்டகைக் கடைக்குள் வெக்கையின் அகோரம் தெரிகிறது. வாங்கிலின் பக்கத்தில் ஒருவயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிள்ளை வெறும் பாயில் கிடத்தப்பட்டிருக்கிறது. உடையின்றி கிடந்ததால் ஆண்பிள்ளை என்பது தெரிந்தது. சுதாகரித்துக்கொண்டு ஒரு சோடா தருவீங்களா? என்று கேட்டேன் என்ன சோடா ஜயா வேணும் பெண்ணே கேக்கிறார். தமிழர்கள்தான் என்று தெரிந்தாலும் அவர்களைப் பற்றிக் கேட்பதற்கு சற்று தயக்கமாக இருந்தது. மீண்டும் இராணுவத்தினரை பார்வையிடுகிறேன் அவர்கள் மொபைல் போனுடன் மல்லுக்கட்டியவண்ணமே இருக்கின்றார்கள் எங்களைப்பற்றிய கரிசனை அவர்களிடம் இல்லை. மெதுவாக கதையை தொடங்குகிறேன் அவர்களும் பதில் கூறுகின்றார்கள். மாங்குளத்தில் இதே இடமான ஏ9 வீதிக்கு அண்மையில் இருந்து நந்திக்கடல்வரை சென்று ஒரு மகனை இழந்து குடும்பத் தலைவர் ( வாங்கிலில் இருந்தவர்) காலில் ஊனப்பட்டு நடக்கமுடியாதவராகவும் ஆகி மருமகனையும் இழந்து ( படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையின் தந்தை) இன்ணொருமகன் காணாமல் போய்விட வவுனியா அகதி முகாமில் இருந்து மீள் குடிறேற்றப்பட்டிருக்கும் சோகக் கதையை கண்ணீர் மல்க கூறிமுடித்தார். ஏதோ ஒரு NGO இந்த கடையை கட்டிதந்து ஜயாயிரம் ருபாவுக்கு சாமான் போட்டுத் தந்திருக்கினம் ஏதோ இதை வச்சு காலத்த ஓட்டிறம் இதுக்குள்ளதான் இருப்பு குளிப்பு எல்லாம் காணிய அடைக்கிறதுக்கு கம்பிக் கட்டையில்ல மரம் வெட்ட எனக்கு ஆக்களுமில்ல ஆமிக்காரன் மரம் வெட்ட விடவும்மாட்டான் காசு குடுத்து வாங்கிறதுக்கு காசுக்கெங்க போறது வயல் விதைச்சா ஏதாவது முன்னேறலாம் உழுகிறதுக்கு மிசினில்ல வித தானியமில்ல என்ன செய்யிற தெண்டு தெரியேல்ல என்று கூறியபடி இரண்டு கைகளையும் விரித்து மேலே வானத்தைப்பார்து கண்ணீர் வடித்தார் அந்தப் பெரியவர். என்ன சொல்வது எப்படித் தேற்றுவது இதற்கெல்லாம் யார்காரணம்? அவரின் வாழ்வு போலவே விடையேயில்லாத கேள்விகளாக இருந்தது. ஆக்களைக் காணயில்ல எப்பிடி யாவாரம் நடக்கும் என்ற கேள்விக்கு. எங்களப்போலத்தான் கொஞ்ச சனம் இருக்கு அதுகள் ஏதேனும் வாங்குங்கள் ஆமிக்காறங்கள் அடிக்கடி ஏதாவது வாங்குவாங்கள் அவ்வளவுதான் என்று சலித்துக் கொண்டார் அந்த பெரியவர். ஆமிக்காரர்களைப்பற்றியும் புலிகளைப்பற்றியும் பல கதைகளைக் கூறி அழுதார்கள். முடிவில் மத்தளமாக வாழ்ந்து வந்திருக்கிறம் இனி எண்டாலும் ஆண்டவன் கருணை காட்டட்டும் என்றார் அந்த பெரியவர்.


இந்தக் குழந்தை என்று இழுத்தேன். என்ர பிள்ளையின்ர பிள்ளை அப்பா போய்ச் சேந்திட்டேர் மகள் இந்த பாலன விட்டுப்போட்டு கிளினொச்சியில போய் தொட்டாட்டு வேலை செய்யுது. வயுறிருக்கே சாப்பிட வேணாமே ஜயா. விரக்தியின் முனகலாக வார்த்தைகள் வெளிவந்தது.


கடையின் ஒரு பக்கத்தில் பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் படம் ஒட்டியிருந்தது. அது என்ர கடசிப்பிள்ள கடைசியா நந்திக்கடலால ஓடேக்க தவறவிட்டுட்டன் எல்லா இடமும் விசாரிச்சுப் பார்த்துப்போட்டன் ஒர இடத்திலையும் இல்லையாம். ஆனா என்ர குஞ்சன் சாகயில்ல எங்கயோ இருப்பான் வருவான் கண்ணீர் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அம்மா நான் ஒரு படமெடுக்கட்டா என்று கேட்டு அவரின் அனுமதியுடன் அந்த போட்டோவை போட்டோ எடுத்தேன். அரசியலோடு சம்பந்தமான தெரிந்த சிலரிடம் அதை கொடுத்தால் ஏதாவது பலன் கிடைக்குமா என்ற ஆதங்கத்தோடு. கடலில் விழுந்த மழைத்துளியை கண்டுபிடிக்க முடியுமா?

செளித்து வாழ்ந்த வன்னி மக்கள் கண்ணீரோடு கையேந்தி நிற்கும் காட்சிக்கு இந்த ஒரு குடும்பம் உதாரணமாகிறது.

இடத்தை விட்டு நகர்ந்து ஏ9 பாதையில் செல்லும்போது இன்னுமொரு குடிசையின் முன் நிறுத்துகின்றேன்.

தொடரும்

எனது இலங்கைப் பயணம் - 2

இடத்தை விட்டு நகர்ந்து ஏ9 பாதையில் செல்லும்போது இன்னுமொரு குடிசையின் முன் நிறுத்துகின்றேன். இதுவும் இராணுவத்தின் அருகிலேயே இருக்கிறது. குடிசை என்ற பெயரில் மரநிழலிலே பல பொருட்களை கலந்து போடப்பட்டிருக்கும் ஒரு தடுப்புத்தான். கற்கால மனிதர்களின் வாழ்நிலை ஏனோ என் மனதில் தோன்றி மறைகிறது.

அரசியல் வாதிகளின் பேச்சில் எப்போதும் வருகின்ற கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்ற சொற் தொடரும் வந்துசெல்கிறது. அந்தக் குடிமக்களின் வாழ்நிலை இப்படியா இருக்கிறது இதற்கு யார் காரணம்? விடை தெரியாத கேள்வியா விடை தெரிந்தும் சொல்லமுடியாத சொல்லக் கூடாத மறுமொழியா என்று என்எண்ணக்கரு சொல்லிச் செல்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளே பூர்த்தி செய்யப்படாத அந்தப் பிரதேசத்தில் ஏ9 பாதை மிக அழகாக வெளிநாடுகளில் போடப்பட்டுள்ளது போல் போடப்பட்டிருக்கிறது.


அது முக்கியம் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் கிடையாது ஆனால் மனிதரின் அடிப்படைத் தேவையான உணவும் உறைவிடமும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு வெளிநாடுகள் உட்பட யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லையா? அந்த விரைவு தெருவில் விரைந்து செல்லும் அரச சார்பற்ற நிறுவானங்களின் வாகனங்களும் அந்த வாகனத்தில் இருக்கும் வசதிகளும் இந்த மக்களின் பெயரால் வழக்கப்பட்டது தானே? அந்த குடிசையில் வாழும் சிறுவர்கள் கறுப்புக்கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அந்த வாகனங்கள் செல்லும் போது எந்த விகல்ப்பமும் இல்லாது வேடிக்கை பார்க்கின்றார்கள் பெரியவர்களோ அவர்கள் வந்து ஏதாவது செய்யமாட்டார்களா என்ற அங்கலாய்ப்போடு பார்க்கின்றார்கள்.


நான் முன்பு குறிப்பிடது போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் உறவுகளின் இழப்பும் உடல் உறுப்புக்களின் இழப்பும் பொருளாதார இழப்பை விட தாங்க முடியாதவையாக இருக்கிறது. எதிர்கால நம்பிக்கையை உடைத்தெறியும் சூத்திரமாக அது அமைகின்றது. மனைவி குடும்பத்தின் இளப்புக்களைப்பற்றி கூறி கண்ணீர் விடும்போது கணவன் கூறுகின்றார் இந்தப் பயித்திய காறி போனதுகள பற்றியே நினைச்சு கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறாள் இப்பிடியிருந்தா இருக்கிறதுகள ஆர் பாக்கிறது கோபத்தோடு வார்த்தைகள் வந்தாலும் அவரின் கண்களும் கலங்கி வழிகிறது. அங்குள்ளவர்களின் வாழ்க்கையில் வித்தியாசமான கதைகள் தனியாக கிடையாது என்றே படுகின்றது. ஒரு தனிக்குடும்பத்தின் கதை மாங்குளத்தில் உள்ள ஒரு சமூகத்தின் கதையாகவே படுகின்றது. புத்தர் மகனை இளந்த தாயிடம் இறப்பே இல்லாத வீட்டிலிருந்து கடுகு கொண்டுவந்தால் உனது மகனை எழுப்பித் தருகின்றேன் என்று கேட்ட கதை என் ஞாபகப் பொறியை தட்டிச் சென்றதுஅந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்ற போது தெருவெங்கும் கட்டாக் காலி மாடுகளின் ஊர்வலம் நடக்கின்றது. அவைகளின்முகங்களிலும் எசமானர்களை இளந்த கவலை தெரிகின்றதுபோல் இருக்கறது. ஒரு துடிப்பில்லாமல் மிக ஆறுதலாக எதிலும் பற்றற்றவைகள் போல் ஆடி அசைந்து செல்கின்றன.

தெரு வெங்கும் மூன்று மொழிகளிலும் இடங்களை அடையாளம் காட்டும் போட்டுக்களும் மொபைல் போண் விளம்பர தாரர்களின் கண்ணைக்கவரும் விளம்பரங்களும் அலங்கரிக்கின்றது. அதற்கு கைமேல் பலனும் கிடைத்திருக்கிறது போலவே தெரிகிறது. யார்கையில் பார்த்தாலும் மொபைல் போண் காணப்படுகிறது.


இந்த வாழ் நிலையிலும் வெள்ளை உடையுடன் பள்ளி செல்லும் மாணவிகளைப் பார்த்த போது மனம் ப+ரிப்படைந்தது. என் சின்னவயது ஞாபகங்கள் என்னைக் கவர்ந்த அந்த வெள்ளையுடை சில நிமிட நேரம் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்க வைத்தது. கனகராயன் குளம் மாவித்தியாலயம் இது எங்கள் பாடசாலை என்ற வாசகத்தோடு புதிய கட்டிடத்தில் கம்பீரமாக தோற்றமளிக்கிறது. எதிர்கால கனவுகளோடு அந்தப்பாடசாலையை நோக்கிச் செல்லும் அந்தப்பிள்ளைகளின் படிப்பிற்கு அரசியல் வாதிகளின் சுயநலத்தால் எந்தத் தீங்கும் வந்துவிடக்கூடாது சூழலை எதிர்த்துப் போராடும் அந்த மாணவ பிள்ளைகளின் கனவு நிறைவேற வேண்டும் என்று மனம் பிராத்திக்கின்றது.
இப்போது தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு தலமான முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தை அடைகின்றோம். நம்பிக்கை உண்டோ இல்லையோ இந்துவோ முஸ்லிமோ பௌத்தர்களோ சாரதிகள் இந்த இடத்தில் ஒரு கணமேனும் தரித்து செல்வது வழமைதானே. நாமும் தரிக்கின்றோம் கணபதியை தரிசிக்கின்றோம். போரால் கஸ்டப்பட்ட அடையாளம் எதுவும் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருக்கின்றார். வர்ணங்கள் பூசப்பட்ட கோயில் புதுப் பொலிபோலிவோடு தெரிகிறது.


மலசலகூடம் செல்கின்றேன் இரண்டு ருபாய்கள் எடுத்துவிட்டு அனுமதிக்கப்படுகிறது. உள்ளே செல்ல முடியாத துர்நாற்றம் தண்ணீர் பாச்சுவதற்கு குளாய்கள் ஏதாவது இருக்கறதா என்று பார்க்கிறேன் அப்படி எதுவுமே தென்படவில்லை போகவேண்டிய தேவையிருந்ததனால் மூக்கைப் பொத்திக்கொண்டு கடனை முடித்துவிட்டு வரும்போது பணம் பெறுபவரிடம் கேட்கிறேன் ஏன்தம்பி காசு வாங்குகின்றீர்கள் தானே கொஞ்சம் தண்ணி ஊhத்தலாம்தானே ஊத்தக்கூட வேண்டாம் ஒரு குளாயை பொருத்திவிடலாம்தானே என்று கேட்கிறேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு என்னய்யா ரெண்டு ருபாயில என்னத்த செய்யிறது என்கிறார். ஏத்தனை ரெண்டு ருபாய்கள் எண்டு கேட்கவேண்டும் போலிருந்தாலும் ஒரு வரட்டுச் சிரிப்போடு கேட்காமலே நகர்கின்றேன். சற்றுத்தள்ளி உதவி அரசாங்க அதிகாரி என்ற அறிவித்தலோடு ஒரு ஜீப் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. அதனருகே நான்கைந்து பேர் ஈரக்கைகளை கைக் குட்டையால் துடைத்தவண்ணம் வாய்விட்டு பெரிதாக சிரித்துக்கொண்டு நிற்கிறார்கள் நிட்சயமாக ஒரு உதவி அரசாங்க அதிபர் அதில் இருப்பார் என்று மனம் எடைபோடுகின்றது. அவரே அதே மலசல கூடத்தை பாவித்துவிட்டு எந்தவிதமான அருவருப்போ அதை நெறிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ இல்லாது சந்தோசமாக இருக்கின்றார் உனக்கேன் கோபம் வருகின்றது என்று என் உள்மனம் இடித்துகூறுகின்றது. மக்களின் பரிதாப நிலையை நொந்து கொண்டு நகர்கின்றேன். கோவிலின் முன்பக்கமாக கடலைக்கடைகள் நிரையாக இருக்கின்றது அதில் கடலைவாங்கிக் கொள்கின்றேன்.
மிகமகிழ்ச்சியாக பேச்சும் சிரிப்புமாக அவர்கள் உரையாடி வியாபாரம் செய்கின்றார்கள். நான் இரண்டு கச்சானை உடைத்து வாயில் போட்டபடி அந்த இளைஞனிடம் கேட்கிறேன் என்ன தம்பி இந்த ஊர் கச்சான் நல்ல பெரிய கச்சானாக இருக்கும் நீர் சரியான சின்னக் கச்சான் வைச்சிருக்கிறீர்? உடனே பதில் வருகிறது என்னய்யா நாடே அழிஞ்சுபோய்கிடக்கு கச்சான் இந்த ஊரில எங்க வருகுது எல்லாம் கொழும்பில இருந்துதான் வருகுது. நாட்டு நிலை புரியாது கேட்ட கேள்விக்காக நாக்கைக் கடித்துக்கொள்கிறேன். கோவிலின் தெற்குப்பக்கமாக நகர்கின்றேன் ஒரு பெரிய நவீனமாக கட்டப்பட்ட சாப்பாட்டுக் கடை தெரிகிறது. ஊள்ளே போகின்றேன் பளிங்கு தரையாக உள்ளது ரொயிலட்ட பாவிக்கலாமா என்று கேட்கிறேன் சிங்களம் கலந்த தமிழில் பாவிக்கலாம் என்கிறார் பாவித்தால் இங்கு சாப்பிட வேண்டுமா என்று கேட்கிறேன் இல்லையாரும் பாவிக்கலாம் என்கின்றார்.

உள்ளே நுளைகின்றேன் இந்த நாட்டில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள் நறுமணப் புட்டிகள் வைக்கப்பட்டு நறு மணம் வீசுகின்றது. கோவிலின் இரண்டு பக்கங்களிலும் உள்ள கழிவறைகளிலே எவ்வளவு வித்தியாசம் ஏன் எம்மவர்கள் இப்படி சுத்தமாக வைத்திருக்க மறுக்கிறார்கள் சிந்தித்தபடியே தேனீரும் பணிசும் சாப்பிடுகின்றேன். எங்கோ சொல்லக் கேட்ட ஞாபகம் வருகிறது முறிகண்டியில் மகிந்த கோட்டல் கட்டியிருக்கிறார் என்பது. மனேஜர் என்ற ஜசி யோடு நின்ற இளைஞரிடம் கேட்கிறேன் இதின்ர முதலாளி முதலாளி யாரு? ஆவர் கூறுகிறார் கொழும்பில உள்ள பத்திரண கொம்பனி முதலாளி என்று தொடர்து நான் கேட்டேன் மகிந்த ராஜபக்சவின்ர எண்டு சொல்லினமே என்கிறேன். அவர் கூறுகின்றார் தனக்குஅப்;பிடித் தெரியாது. நான் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்கும்போது அவர் கூறுகின்றார் தங்குவதற்கு அறை இருக்கிறது 3500 ருபாய்கள் மாத்தயா என்று. தேவைப்பட்டால் வருகிறேன் என்று கூறி விடைபெறுகின்றேன்.

கிளிநொச்சியை அடைகின்றோம் கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் அனாதை இல்லம் போன்றவற்றை பார்ப்பதற்கும் விவசாய திணைக்களம் இரணைமடு பகுதி போன்றவற்றிற்கு செல்வதற்குமான சில ஆயத்தங்களை அங்குள்ள ஒரு நண்பருடன் (அவரை அவரின் பாதுகாப்பு கருதி அடையாளப் படுத்தவில்லை) இரண்டொரு நாளில் வருவதாக ஒழுங்கு படுத்திவிட்டு யாழ் நோக்கி விரைகின்றோம் பொழுது படு;கின்ற நேரமாக இருக்கின்றது. பரந்தன் இரசானத் தொழிற்சாலை ஆனைஇறவு உப்பளம் என்பவற்றை கண்கள் தேடுகின்றது

எதுவுமே அற்ற வெளியாக இருக்கிறது.இராணுவ வீரர்கள் இலங்கையை தூக்கிப் பிடித்தவண்ணம் ஆனையிறவு வரவேற்கிறது.

( கிளிநொச்சி முல்லைத்தீவு அவல நிலைகள் நான் பிரயாணித்த ஒழுங்கில் தொடர்ந்து வரும் வாசகர்களே)

எனது இலங்கைப் பயணம் - 3


யாழ் நோக்கி பிரயாணிக்கும் பிரயாணிகள் தாண்டிக்குளத்தில் சோதனையிடப்படுகின்றார்கள். நாங்கள் தாண்டிக்குளத்தில் காரை நிறுத்தியபோது பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள் இராணுவத்தினர். உடுப்புக்கள் என்றதும். ஓகே யண்ட மாத்தயா என்றார்கள். அந்த இடத்தில் மட்டும் ஏ9 வீதியால் போக விடாது பைபாஸ் போன்று முகாமின் பின்புறமாக இருக்கும் மண் றோட்டால் வந்து மீண்டும் ஓ9 வீதியில் ஏறவேண்டும்.ஏறக்குறைய ஒரு 500 மீற்றர் தூரம் இருக்கும் என நினைக்கிறேன்
ஆனையிறவு ஸ்ரொப் என்ற தடைகேற்றால் மூடப்பட்டுள்ளது. காரை நிறுத்திய சாரதி இறங்கிச் சென்று காரியாலயத்தில் லைசென்சை காட்டிவிட்டு வருகின்றார் தடை கேற் திறக்கப்பட்டு செல்ல அனுமதிக்கப் படுகிறது. இப்போது பொழுது போய்விட்டதால் இராணுவ வீரர்கள் இலங்கையை தூக்கிப் பிடித்தவண்ணம் இருக்கும் காட்சியை சரியாக பார்க்க முடியவில்லை.


யாழ் செல்லும் வரை குண்டும் குழியுமான பாதையாகவே இருக்கிறது. பளை தென்னந் தோப்பு தாண்டி சாவகச்சேரி தாண்டுகின்றபோது கடையில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்த சீர்காளியின் பாடலான தணிகை மலை படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் பெரிய சத்தமாக ஒலிக்கிறது. மனம் மிகவும் பூரிப்படைகிறது. என்மனதில் அந்தக் காலநினைவுகள் தட்டிச்செல்கிறது. கொடிகாமம் வீடுகள் பழுதடைந்தும் ஆட்கள் மிகக் குறைவாகவும் இருப்பது போல் தோன்றியது. கோப்பாய் கைதடிப்பாலம் மிக அழகான பாலமாக மாறியிருக்கிறது. அந்த கடலேரியும் தூரத் தெரியும் நாவற்குழி இராணுவ முகாமும் சரியாக தெரியவில்லை.கோப்பாய் சந்தியைதாண்டி உரும்பிராயை அடைந்தபோது காருக்குள் ஆரவாரமாக இருக்கின்றது பல ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சொந்த மண்ணுக்கு வந்துவிட்ட மகிழ்வில் என்மனைவியும் மற்றவர்களும் ஒவ்வொரு வீடுகளையும் பார்த்து அந்தக்கால நினைவுகளையும் அதில் வாழ்ந்த ஒவ்வொருவரைப்பற்றியும் உரையாடுகின்றார்கள் அவர்கள் பேச்சிலிருந்து அங்கு வாழ்ந்த எங்கள் வயதினர் அதற்கும் இளவயதினர் எல்லோருமே வெளிநாடுகளில்தான் வாழ்கின்றார்கள் என்பது புரிகிறது. பேச்சினிடையே அவர்களின் சம்பாசனை இப்படி என்காதில் விழுகிறது “ அப்ப இப்ப ஆர் இருக்கினம் இந்தவீட்டில? மறுமொழி இப்ப பலாலியில இருந்து இடம்பெயர்ந்த ஆக்கள் இருக்கினம், நாம் துவங்கிவைத்த போரினால் நாம் கண்டது புலப்பெயர்வும் உள்நாட்டில் இடப்பெயர்வும் அடர்ந்து செளித்திருந்த பூமியை ஆட்கள் இல்லாத பூமியாக மாற்றியதும்தான் என்ற வேதனை நிறைந்த உண்மை மனதில் நுளைந்துகொள்கிறது. நம்மில் யாராவது வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து இங்கு வாழ்வோமா என்ற நினைவு வந்தபோது அதன் விடையை நினைத்து துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டது.


இராமர் பதின்நான்கு ஆண்டுகள்தான் அஞ்ஞானவாசம் புரிந்தார் எங்கள் உறவுகள் கிளிநொச்சி வவுனியா கொழும்பென்று மாறிமாறி இருபத்தைந்து வருடங்கள் ஓடி மீண்டும் வந்து பிறந்த வீட்டில் வாழும் திருப்தி முகத்தில் தெரிய எங்களை வரவேற்கிறார்கள். உரும்பிராயில் கோயில்கள் திருத்திஅமைக்கப்பட்டு கோபுரத்தில் இருக்கும் சிற்பங்கள் போதாதென்று இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வந்து சிற்பங்கள் பொம்மைகள் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். யாரோ லண்டனில் இருக்கும் புண்ணியவான் பணத்தை இறைப்பதாக கேள்விப்படுகின்றேன். இவர்களுக்கு

யாரும் வன்னியில் உள்ள பாடசாலைக் கட்டடங்களைக் காட்டினால் நல்லதென்று எண்ணினேன்.இப்போது இந்த தளத்தில் உள்ள படங்களைப்பார்த்தாவது யாரும் முன்வரவேண்டும் அவைகளை புனருத்தாரணம் செய்து கல்விக்கூடங்களை மேம்படுத்த வேண்டும் “வரப்புயர” என்று மன்னனைப்பார்த்து ஒளவையார் வாழ்தியது போல் கல்விக் கூடங்கள் உயரவேண்டும் அது உயர்ந்தால் மாணவர் வாழ்வுயரும் தமிழர்வாழ்வுயரும் என்று என் மனதில் எண்ணக்கரு வந்து செல்கிறது. யாராவது கவனிப்பார்களா?

உரும்பிராய் கோவில்களுக்கு அண்மையில் கல்யாண மண்டபங்கள் கட்டப் படுகின்றது. மிக நன்றாக வடிவமைக்கின்றார்கள். வெளிநாடுகளில் இருக்கும் மண்டபங்களுக்கு எந்தவகையிலும் குறைந்ததாக இவை இருக்கமாட்டாது என்றே எண்ணுகின்றேன். இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் நடந்த வெளிநாட்டுத் திருமணங்கள் இனி இங்கே நடப்பதற்கான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. உரும்பிராய் வேள்வி ஒருகாலத்தில் மிகப்பிரபல்யம். காட்டுவைரவர் கோவில் வேள்வி யென்றால் குடாநாட்டின் பலபாகங்களிலிருந்தும் மக்கள் வருவதும் வேள்விக்கிடாய் வாங்குவதும் வருடமொருமுறை தவறாது நடக்கும் ஒன்று. அதில் யார் வீட்டுக் கிடாய் மிகப் பெரிதென்று போட்டிவேறு வெற்றி கொண்டவருக்கு பெருமையாக இருக்கும். அங்குள்ள ஒரு உறவோடு உரையாடும் போது அவர் பெருமையாக குறிப்பிட்டது சிரிப்பாக உள்ளது. “தம்பி மற்ற ஆடுகள் என்ன ஆடுகள் தம்பி உரும்பிராய்ஆட்டுக்கறி சாப்பிட்டா சாப்பிட்ட கைமணக்கும்”. அவர் கூறிய விதம் சிரிப்பாக இருந்தாலும் அவர் கூறியது முற்றிலும் உண்மை என்பதை சாப்பிட்ட பின்பு புரிந்துகொண்டேன்.

மறுநாள் புங்குடுதீவும் நயினாதீவும் செல்வதற்கான ஏற்பாடு பண்ணைப்பால றோட்டால் காரில் போக முடியாது என்பதால் பவளகாந்தன் என்பவருடைய வானில் செல்கின்றோம். தமிழ்ப்பிரதேசமே அவருக்கு அத்துபடி. யாழ் நகரத்தினூடாக வண்டி விரைகிறது. புதிய பஸ்நிலையம் மிக அழகாகக் காட்சி தருகிறது. பூபாலசிங்கம் புத்தக சாலையும் அதையொட்டி நிரையாக இருக்கும் கடைகளும் கலகலப்பாக இருக்கிறது. நான் முன்பு ரசித்த ஒரு விடயத்தை உற்று நோக்குகின்றேன்.அது இன்றும் அப்படியேதான் நடக்கிறது. அதாவது பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள ஒவ்வொரு கடைகளில் இருந்தும் ஒவ்வொரு பாட்டு ஒலித்துக்கொண்டிருக்கும் குறுக்காக நடந்து சென்றால் ஒரு பாட்டின் முதலடியும் அடுத்தபாட்டின் இரண்டாவது அடியும் கலந்து ஏதோ புதுப்பாட்டு கேட்பது போல் தோன்றும். ஒருவருக்கொருவர் போட்டியாக சத்தத்தை கூட்டி வைப்பார்கள்.இன்றும் அது மாறாமல் அப்படியே உள்ளது. தமிழன் மாறமாட்டான் என்பதற்கு இது ஒரு அடையாளமோ என்று எண்ணத் தோன்றியது. பஸ்நிலையத்தில் முன்பு மணிக்குரல் விளம்பர சேவை ஒலித்துக்கொண்டிருக்கும் சண்ணின் குரல் மிக கம்பீரமாக இருக்கும் இப்போதும் ஒரு விளம்பர சேவை நடக்கின்றது அது அந்த அளவிற்கு இல்லாததுபோல் எனக்குத் தோன்றியது. சில பொருட்கள் வாங்கவேண்டும் என்று சாரதியிடம் கூறினோம் என்ன என்றார் தண்ணிப்போத்தில் ரிசுப்பைக்கற் மாஜறீன் என்று சொன்னதும் அது உதில குழழன ஊவைல யில வாங்கலாம் என்று அந்த கடையின் முன் நிறுத்துகின்றார். நான் கொழும்பில் பார்த்த அதேகடை எம்மவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிச் செல்லும் சுப்ப மாக்கெற். இது இங்கும் வந்துவிட்டதா என்ற எண்ணம் ஏற்ப்பட்டது. சிங்கள முதலாளியின் கடை கொழும்பில் இருந்து புறப்பட்டால் எல்லா இடங்களிலும் இருக்கிறது இப்போது யாழ்ப்பாணத்தையும் ஆக்கிரமிக்கின்றது. யாழ்ப்பாண வியாபாரிகள் விழித்துக்கொண்டு மாறாவிட்டால் அவர்கள் வியாபாரத்தின் நிலை என்ன ஆகும் என்பதை என் மனம் கணித்துக்கொண்டது. இந்தக் கடைக்குள் ஒஸ்ரேலியாவில் வாங்கும் அத்தனை பொருட்களும் அதே பிறாண்ட் அங்குள்ளது. எதுவும் இங்கிருந்து காவத்தேவையில்லை. டொலரில் பார்க்கும்போது இங்கு வாங்குவதைவிட அங்கு வாங்கிக் கொடுக்கலாம்போல் இருந்தது. இங்கிருந்து காவிச் செல்லவும் தேவையில்லை செலவும் குறைவாக இருக்கும்.


இப்போது பண்ணைப்பாலத்தால் செல்கின்றோம். மண்டைதீவு சந்தியை நெருங்கும் போது உயரமான காவலரணில் இராணுவம் காவல் புரிகின்றது. முன்பு நகரங்கள் தொடங்கும் போது இந்த நகரம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்ற வரவேற்பு பலகைகள் காணப்படும் இப்போது இராணுவம் வரவேற்கின்றது கடற்படை வரவேற்கின்றது என்ற வரவேற்பு பலகைகளே தென்படுகின்றது. காலத்தின் மாற்றம்தான் இவைகள் போல்தெரிகிறது. நகரசபையும் பட்டினசபையும் வரவேற்கக்கூட வக்கற்று இருக்கின்றதா என்ற எண்ணம் தோன்றி மறைகிறது.

பங்களாவடி சந்தியில் கடைகள் முன்பு போல் இல்லாவிட்டாலும் குறைவாக இருக்கின்றது. நாரந்தனை ஊடாக ஊர்காவற்துறை செல்லும் பாதை முதல்நாள்தான் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவால் போக்கு வரத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. சந்தி எங்கும் நீலவர்ண கொடிகளும் தேவானந்தாவின் படங்களுமே காணப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் ஆட்கள் இல்லாது வேலிகள் இல்லாது பார்ப்பதற்கு கஸ்டமாக இருந்தது. வீடுகள் தூர்ந்து கிடப்பதை காணுகின்றபோது இனி எக்காலத்திலும் இங்கு மனிதர்கள் வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை என்றே எனது மனதில் தோன்றியது. முன்நாள் பாராழுமன்ற உறுப்பினர் கா.பொ.இரத்தினம் அவர்களின் வீடும் அதே கோலத்திலேதான் கிடக்கின்றது. ஆனால் அது முழுதாக இருக்கின்றது.
புங்குடுதீவு பாலத்தை தாண்டுகின்றபோது மீண்டும் கடற்படை வரவேற்கிறது. கையசைத்து சிரிக்கின்றார்கள். வேலிகள் இல்லாத இளவுவிழுந்த வீடுகள் போல் தோற்றமளிக்கின்றது வீடுகள். பெரும்பாலன வீடுகள் அடையாளமே தெரியாமல் உருக்குலைந்து போய்விட்டது. பிரசித்தமான கண்ணகை அம்மன் ஆலயத்தை அண்மித்தபோது கண்ணகைபுரம் வரவேற்கின்றது என்ற சிற்ப வேலைப்பாடு கொண்ட வளைவைக்காண்கிறேன். அப்பாடா இங்காவது முதன் முறையாக ஒரு கிராமம் வரவேற்பது மகிழ்வைத் தருகின்றது.


கோவிலில் மணிமண்டப கட்டுமான பணி இடம் பெறுகின்றது. கோவில் அர்ச்சகரோடு உரையாடியபோது ஆட்கள் நாலு மூன்று பேர்தான் வருவார்கள் கொழும்பில் உள்ள முதலாளி ஒருவர் இதைக்கட்டுகின்றார். திருவிழாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து வருவார்கள் முன்பு சமாதான காலத்தில் நிறையப்பேர் வந்தார்கள் என்று கூறினார். வெளிநாடுகளில் இருந்து வருடம் ஒருமுறை வாடக்காற்றின் போது பறந்து வரும் கூளக்கடா பறவைகள் போன்று இந்த ஊர்மனிதர்களும் வருடம் ஒருமுறை சித்திரை மாத திருவிழாவிற்கு பறந்து வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அந்த அர்சகர் அவர் மாத்திரமல்ல அந்தக் கிராமமும் கூடத்தான். மனிதர்கள் இல்லாத அந்தக்கிராமம் எப்படி இனி இனப்பெருக்கமடையும் மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்ற கேள்விகளோடு நகர்கின்றேன்.
நாயமார் கோயில் முருகன் கோயில் ஆலடிச்சந்தி பிள்ளையார் கோவிலென்று எல்லா கோயில்களுமே திருத்தப்படுகின்றது அல்லது கோபுரம் கட்டப் படுகின்றது. யாராவது தொழிற்சாலைகள் கட்ட முயற்சி எடுத்தால். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொண்டுவந்தால் மட்டுமே மனிதர்கள் குடியேறுவார்கள் இல்லாதுவிட்டால் அழகிய கோயில்களில் ஆண்டவனைக்கூட பார்க்க ஆளின்றி அடைந்து கிடப்பார் என்பதே கசப்பான உண்மை.
ஒரு சில வீடுகளைத்தவிர அனைத்து வீடுகளுமே அழிந்து கிடக்கிறது. தேடுவாரற்று ஆடு மாடுகள் திரிகின்றன. இடையிடையே இராணுவம் தெரு நீளத்திற்கும் நிற்கின்றார்கள். அவர்களிடம் வழி கேட்டால் சுத்த தமிழில் வழிகாட்டுகிறார்கள். ஒரு காலத்தில் இவர்கள் இங்கு தமிழர்களாக மாறுவார்களா அல்லது இந்த ஊரே சிங்கள கிராமமாக மாறப்போகின்றதா என்பது வெளிநாட்டில் வசிக்கும்
இவ்ஊர் பெருமக்களையே சாரும். இது இந்த ஊருக்கு மட்டுமல்ல தமிழ்ப்பிரதேசங்கள் அனைத்திற்குமே பொருந்துகின்றது.

பிரபல எழுத்தாளரும் போர்ப்பறை நாவல் ஆசிரியரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் மு.தலையசிங்கத்தின் நினைவாக நூல்நிலையமும் தங்குமிட வசதியும் சர்வமத சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது


சந்தோசமாக இருந்தது. பாரதியைப்போன்று வாழ்ந்தவரை முதலாளி வர்க்கத்தால் துன்புறுத்தப்பட்ட அந்த எழுத்தாளன் இறந்தபின்பு வாழ்கின்றான் என்பதாவது பெருமைக்குரியது.

தொடர்ந்து நயினாதீவு செல்வதற்கு குறிகாட்டுவான் செல்கின்றேன். பிரச்சினைக்குரிய இடமாக வெளிநாட்டு வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் பேசப்பட்ட அந்த இடம் சிங்களவர்கள் கைப்பற்றி விட்டார்கள் என்று கூறப்பட்ட அந்த இடத்தை பார்க்கிறேன். பெரிய கார்ப்பார்க் வசதியோடு நிறைய பஸ்வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அடுத்தவாரம் இதைப்பற்றியும் நாகதீப வில் என்ன நடக்கின்றது என்பதையும் தொடர்கின்றேன் வாசகர்களே.


எனது இலங்கைப் பயணம் -4

;.குறிகாட்டுவானில் கடற்படையினர் வாகன போக்குவரத்து ஒழுங்குகளையும் கார்ப்பார்க்  ஒழுங்குகளையும் பார்க்கின்றார்கள். 25 இல் இருந்து 30 கடைகள் வரை காணப்படுகின்றது. இதில் 20 கடைகள்வரை தகரத்தால் கட்டப்பட்டிருக்கும் கடைகள் பெரும்பாலான அல்லது அனைத்துக்கடைகளுமே சிங்களவர்களினால் நடாத்தப்படுகின்றன. இனிப்பு வகைகள் புளுக்கொடியல் தொதல் போன்றவைதான் அதிகமாக காணப்படுகின்றது. இன்னும் 7 கடைகள்வரை நிரந்தரக் கட்டிடங்களால் ஆன கடைகள். இதிலும் இரண்டு கடைகள் தமிழர்களின் கடைகளாகவும் மற்றயவை சிங்களவர்களாலும் நடாத்தப்படுகின்றது. இதில் ஒரு கடை புங்குடுதீவில் பிரபல வியாபாரியாக இருந்த மணியம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் திருநாவுக்கரசு அவர்களுடையது. நான் 83 க்கு முன்பிருந்த நிலையை பார்க்கிறேன். திருநாவுக்கரசு அவர்களின் ஒரு கடையும் இரண்டு மூன்று கடலைக்கடைகளுமே இருந்த இடம் இன்று இப்படி இருக்கிறது.இதுபற்றி கேட்டபோது 6 கடைகள்வரை நிரந்தமாக உள்ளது திருநாவுக்கரசருக்கு சொந்தமானது. ஒரு கடையை அவர்கள் நடாத்துகின்றார்கள். ஏனைய கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நடத்துவதற்கு ஆட்கள் இல்லை சிங்களவர்கள் வாடகைக்கெடுத்து நடாத்துகின்றார்கள். தகரத்தால் போட்டுள்ள கடைகளும் நகரசபையால் கட்டப்பட்டு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிந்தேன். கொழும்பு யாழ்ப்பாணம் பிரயாணம் ஆரம்பித்த பின்பு வகை தொகையின்றி சிங்கள உல்லாசப்பிரயாணிகள் வந்ததாகவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய சும்மா கிடந்த இடங்களில் எல்லாம் குட்டிக் குட்டி கடைகள் முளைத்ததாகவும் இதை தடுக்கும் நடவடிக்கையாகவே நகரசபை கடைகள் போட்டு வாடகைக்கு விட்டுவிட்டு மற்றைய அனைத்துக்கடைகளைம் அகற்றிவிட்டதாகவும் அந்தப் பெரியவர் கூறினார். அதே நேரம் முன்பு உல்லாசப் பிரயாணிகள் நிறைய வந்தார்கள் இப்போது நன்றாகக் குறைந்து விட்டது அதனால் வியாபாரமும் நன்றாகப் படுத்து விட்டது இனி கோயில் திருவிழாவுக்கும் புத்தகோயில் விசேஷ தினத்துக்கும்தான் ஆட்களை எதிர் பார்க்கலாம் என்று சற்று ஆதங்கத்தோடு கூறினார். கடை போட்டுள்ளவர்கள் பலர் குடும்பமாகவே தங்கியுள்ளதை பார்க்கக் கூடியதாக இருந்தது. சிறுவர்களும் இளைஞர்களும் தெருவிலேயே கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அனைவருமே தமிழ் சிங்களம் எல்லாம் கலந்த பாசையை பேசிக் கொண்டிருப்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.படகுத்துறையில் இரண்டு மூன்று கடற்படையினர் சில பொலிசார் என்று நிறுத்தப்பட்டுள்ளார்கள். படகோட்டிகளில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாகவே காணப்பட்டார்கள். அனேகமான படகுகளில் தமிழ் சிங்கள மொழிகளில் பெயர் போடப்பட்டிருந்தது. பெரும்பாலான பெயர்கள் நாகபூசணி அம்மன் நாமங்கள் கொண்டவையாகவும் சில படகுகளில் சிங்கள பெயர்களும் தெரிந்தது. வழமைபோல் அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றுவதும். அட்டவனை நேரத்திற்கு படகுகளை எடுக்காமல் ஆட்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதுவும் ஒரு அலட்சிய மனோபாவத்தில் மக்களை நடத்துவதும் படகோட்டிகள் மேல் சற்று கோபத்தை உண்டு பண்ணுகின்றது. நேரக்காப்பாளருக்கும் பிரயாணிகளுக்கும் நேர அட்டவனைப் பிரகாரம் படகு எடுக்காத காரணத்தால் கதைக்கப்பட்டு வாக்குவாதமாக மாறியபோது கடற்படையினர் தலையிட்டார்கள் இரண்டு படகுகள் போயிருக்க வேண்டிய நேரம் தவறிவிட்டதை அவர்களும் சுட்டிக்காட்டி படகை எடுக்கும் படி கேட்டபோது வாக்குவாதம் கடற்படை அதிகாரிக்கும் நேரக்காப்பாளருக்கும் இடையில் ஏற்பட்டுவிட்டது. ஆனால் கடற்படையினர் அவரை எச்சரித்து நாளைய கூட்டத்தில் விளக்கம் சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டு படகோட்டியிடம் படகை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள படகோட்டி படகை எடுத்தார் 11.10 மணிக்கு துறைமுகம் வந்த நாங்கள் 11.30 மணி 12 மணிக்கு செல்லவேண்டிய படகுகள் செல்லாது 12.10 இற்கே சென்றதால் 12 மணி பூசை நேரம் தவறிவிட்டது கவலையாக இருந்தது. படகில் செல்லும்போது உள்ளுர்வாசி ஒருவரிம் பேச்சுக் கொடுக்கும்போது. கடற்படையினர் இருக்கிறார்களே நேரக்கட்டுப்பாட்டை ஏன் கவனிப்பதில்லை என்று கேட்டேன். அவர் சிரித்தவண்ணம் கூறினார் நீங்களும் பாத்தீங்கள்தானே நேவிக்காறனோட எப்பிடிச் சத்தம்போட்டான் அந்தப் பொடியன். அவங்கள் இப்ப அடிக்கக் கிடிக்கமாட்டாங்கள் நல்ல பேரெடுக்கவேணுமெண்டு பெரியவங்கட ஓடர். தைச்சலமா கை வைச்சாங்களெண்டா எங்கட பேப்பர்காரங்கள் கிளிச்சுப்போடுவாங்கள் அதுவும் ஒருபயம் அதுதான் அப்பிடி. எங்கட ஓட்டிமாரும் சரியான மோசம் காசாச பிடிச்சு நிறயப்பேர போடவேணுமெண்டு காத்துக்கொண்டிருப்பாங்கள். உங்களுக்குப் பறுவாயில்ல நீங்க எப்பயும் ஒருக்கால் கோயிலுக்கு வந்து போறனீங்கள் நாங்கள் நித்தம் பயணம் செய்யவேணும் பள்ளிக்கு வாற வாத்திமார் ஆஸ்பத்திரி சனங்கள் எல்லாருக்கும் இதுதான். எங்கட பொடியள் எண்டு நாங்க நினைகிறம் ஆனால் அவங்கள் தாங்கள் நினைச்சதுதான் செய்வாங்கள். கொஞ்ச நாளைக்கு முன்னால சனம் வந்து கொட்டு கொட்டென்று கொட்டினதில இவங்கடபாடு கொண்டாட்டம்தான் அதுதான் இவ்வளவு படகுகள் கிடக்கு. இப்ப கிடந்து காயினம் முந்தி எங்கள கணக்கில எடுக்கவும் மாட்டினம் மாத்தயா எண்ட நோனா எண்ட எண்டு நிப்பினம். நாங்கள்தான் ஒழுங்கா பிரயாணிக்கிறனாங்கள் எண்டு அப்ப விளங்கயில்ல. நாளைக்கு படகுச் சங்கத்தின்ர கூட்டத்தில அவருக்கு ரிக்கற் கிளிச்சாலும் கிளிப்பாங்கள்” கூறி முடிக்கின்றார் அந்த உள்ளுர்வாசி. யதார்த்தாமான அவர் பேச்சு நடைமுறை என்ன என்பதை படம்பிடித்துக் காட்டியதுபோலிருந்ததுநாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்றபோது என் கண்ணில் முதலில் தட்டுப்பட்டது  ராஜகோபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைகள் தான். நான் முன்பு குறிப்பிட்டதுபோல் எல்லாக் கோயில்களிலும் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை இங்கும் உறுதிசெய்ய முடிந்தது. நிறைய மக்கள் பூசைக்கு வந்திருந்தார்கள். அங்கு நிறைய மக்கள் இருக்கின்றார்கள் என்பதில் ஒரு திருப்தியும் இருந்தது. இடப்பெயர்வு அந்த ஊரில் குறைவாகத்தான் நடந்திருக்கின்றது. நாகபூசணி அம்மன் அற்புதமான அழகோடு காட்சி தந்தாள். கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு அன்னதான மடம் சென்றோம். அந்தக்காலத்திலிருந்தே வருகின்ற அடியார்களுக்கெல்லாம் அன்னதானம் வழங்குவது அந்தக்கோயிலின் வழமை அது இன்றும் மாறாமல் நடைபெறுகின்றது. 


அங்கிருந்து புத்தகோயிலை நோக்கி நடந்தோம் முன்பு இருந்த கடைகளை விட வீதியின் இரு மருங்கும் தட்டிக்கடைகள் போடப்பட்டுள்ளது. புத்தகோவில் தாண்டியும் அந்தக்கடைகள் காணப்படுகின்றது. பெரும்பாலும் சிங்களவர்களே அந்தக்கடைகளை நடாத்துகின்றார்கள். புத்த கோயில் அழகாக பராமரிக்கப்பட்டுள்ளது. இங்கு வருகின்ற சிங்களவர்கள் அம்மன் கோவிலுக்கும் வந்து வணங்குகின்றார்கள். தமிழர்கள் புத்தகோவிலுக்கு சென்று வணங்குகின்றார்கள். அதையும் பார்த்துக்கொண்டு திரும்புகின்றபோது இருட்டுவதற்கு முன் போகவேண்டும் என்ற அவசரம் இருந்தது.அந்த அவசரத்தோடு வீடு திரும்பினேன்.

மறுநாள் தெல்லிப்பழை வசாவிழான் கீரிமலை போன்ற பிரதேசங்களுக்கு சென்றேன்.செல்லும் போது ஊரெளுவினூடாக சென்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த தியாகி திலீபனின் வீட்டை பார்வையிட்டேன். அழகிய அந்த வீடு இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமாக காணப்பட்டது.  வேலிகள் எதுவுமற்று திறந்த வெளியாக பற்றைகள் வளர்ந்து காணப்பட்டது. அதைப் பார்த்தபோது அந்த வீட்டின் முன்னால் நின்று திலீபனுடன் உரையாடிய அந்த நாள் ஞாபகங்கள் மனதில் வந்து வலியைத்தந்தது.தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவில் சென்றபோது எந்தவிதமான இராணுவ சோதனைகளும் இருக்கவில்லை.
கோவிலில் கோபுர கட்டுமான பணி இடம் பெற்றுக் கொண்டிருந்தது.திருத்த வேலைகளும் நடைபெறுகின்றது. ஒரு கட்டடத்தில் அனாதைப் பிள்ளைகள் பராமரிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த சேவைக்கு உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் பணம் கிடைப்பதை நான் அறிந்துள்ளேன். அத்தோடு கிளிநொச்சியில் உள்ளவர்களோடு பார்க்கும் போது இங்கு எவ்வளவோ செய்யப்படுகின்றது என்பதால் அங்கு செல்லாமலே வந்து விட்டேன்.

அதைத் தாண்டி மாவிட்டபுரம் நோக்கி செல்கின்றபோது இராணுவ சோதனைநிலை காணப்பட்டது. நாங்கள் இறக்கப்பட்டு அடையாளங்கள் பார்க்கப்பட்ட பின்பு ஜம்பது மீற்ரர் நடந்து செல்லச் சொன்னார்கள். சென்ற பின்பு வாகனம் கொண்டுவரப்பட்டது மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலை நோக்கி பயணித்தோம். போகின்ற பாதைகளில் பெரிய கல் வீடுகள் கூரையில்லாத வீடுகளாகவும் வீடுகளுக்குள் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்தும் தெரிந்தன. எத்தனை அழகு நிறைந்த கிராமம் எப்படிக் கிடக்கின்றது. மனிதர்களற்ற இடுகாடுகள் போல் தோற்றம் பெற்றிருந்தது. அங்கும் தெருவோரங்களில் இரும்பும் கையுமாக இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். எத்தனை தேரோடிய கந்தசாமி கோவில் சோபையிழந்து காணப்பட்டது. பழைய தேர்களில் முடமான தேரொன்று தகரக் கொட்டகையில் முடக்கிவைக்கப்பட்டிருந்தது. சென்ற வருடம் ஓடியதாக ஒரு தேரைக்காட்டினார்கள் சப்பரத்தைவிட சற்றுப் பெருத்தது அவ்வளவுதான். கோவிலின் உட்புறம் அழகிய சிற்பக்கலைகள் அலங்கோலக் காட்சியாக இருக்கின்றது. முனிவர்கள் தவமிருந்த இடம் என்று கேள்விப்பட்டதுண்டு. அந்த முனிவர்கள் இன்னும் தவக்கோலத்தில் உருக்குலையாமல் இருப்பதை பார்த்ததும் மனம் லயிக்கத்தான் செய்தது. அழகிய மரநிழல்களில் அவர்கள் அமர்ந்திருப்பது அந்தப் பகுதிக்கே ஒரு அழகைக் கொடுத்தது போல் இருந்தது.மாவிட்ட புரத்திற்கும் காங்கேசன் துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் நிலம் அகழப்பட்டு சல்லிக்கற்கள் அள்ளிச் செல்லப்படுவதை கேள்விப்பட்டேன். அந்தப் பகுதியையும் பார்க்கவேண்டுமென முயற்ச்சித்தபோது அதன் பலன் நான் கண்ட காட்சிகள்.மனிதரே உட்செல்லாத அந்தப் பிதேசத்திற்குள் இராட்சத கல்வெட்டும் இயந்திரங்கள் புல்டோசர்கள் என்பன தாராளமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சி தருவதாக இருந்தது. சல்லிக்கற்கள் குவியல் குவியல்களாக குவித்துவைக்கப்பட்டிருந்தது. இன்னும் சற்று உட்செல்ல நிலம் அகளப்பட்டு பாதாளம்போல் காட்சி தருகிறது. சற்றுத்தொலைவில் கடல் தெரிகிறது. 


இவற்றை யார் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு அரசாங்கத்திற்கு வேண்டியவர்கள் இராணுவ உதவியுடன் நிலத்தை அகழ்ந்து தென்னிலங்கை கொண்டு சென்றார்கள் என்று அறிய முடிந்தது. இப்போது பாராளுமன்றத்தில் கதைக்கப்பட்டு இந்த செயல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிந்தேன். அகழப்பட்ட அந்த பிரதேசத்தில் வெகுவிரைவில் கடல் வந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது. அப்படிக் கடல் வந்தால் அந்த பிரதேசமே பாழாகிவிடும். ஒரு நாட்டில் கனிமங்கள் தோண்டப் படுவதும் உபயோகிப்பதும் நடைபெறும் ஒன்றுதான். ஆனால் அதைச் செய்யும்போது அந்தப்பள்ளங்கள் நிரப்பப்படவேண்டியதும் கடலோ வெள்ளமோ தாக்காமல் பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமையல்லவா. இதை உரியவர்கள் கேட்கவேண்டியதும் செய்யவேண்டியவர்கள் செய்வதும் உடன் நடக்கவேண்டும். இதற்கு எந்தச் சாக்குப் போக்கும் சொல்லக்கூடாது. இது நடைபெறுமா என்ற கேள்வி எழுகிறது.


 இந்தக் கேள்விகளோடு கீரிமலை நோக்கி நகர்கின்றோம் வழியில் புத்தர் சிலை சினிமா படப்பிடிப்பாளர்கள் என்று பலவிடயங்களைப் பார்கின்றேன் அடுத்தவாரம் அவை பற்றி பார்ப்போம் வாசகர்க

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

எனது இலங்கைப் பயணம் -5

கீரிமலை நோக்கி புறப்பட்டு செல்லும்போது யாருமற்ற பிரதேசமாக காணப்படுகின்றது. சந்தியை அண்மித்த பாதையின் ஒரு பக்கத்தில் சிறிய தெருவோர பிள்ளையார் தென்படுகின்றார் குங்கும பொட்டுவைத்து பட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வித்தியாசமான பிள்ளையாரைக் காணக்கூடியதாக இருந்தது. யார் இவரைக்கவனிப்பார்கள் என்று கேட்பதற்கு ஆட்கள் எவருமே தென்படாததால் விடையில்லாது தொடர்ந்தேன்.
 ஒரு நாறு மீற்றருக்கு அப்பால் பாதையின் மறுகரையில் ஒரு அரசமரம் அந்த அரசமரத்தின் கீழ் ஒரு புத்தர் பீடமொன்றில் அமர்ந்திருக்கின்றார்.

அதன் முன்பாக வாகனங்கள் நிறுத்தக் கூடியதாக சிறிய மணற் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எந்தக்கபடமும் இல்லாது புத்தர் கருணையோடு காணப்படுகின்றார். உள்மனதில் யாருமற்ற பிரதேசத்தில் தன்னை கொண்டுவந்து வைத்துள்ளவர்களை திட்டியிருப்பாரோ என்று என்மனம் எண்ணியது. கோயில் இல்லா ஊரில் குடியிக்காதே என்று அறிந்துள்ளேன். குடிகள் இல்லா ஊரில் கோயில் வைக்காதே என்று யாரும் சொன்னதாக ஞாபகம் இல்லை அப்படிச் சொல்லியிருந்தால் சிலவேளை வைப்பதற்கு முன்பு யோசித்திருப்பார்கள்.
வாகனம் கோவிலுக்கு அண்மையில் போகும்போது சனக்கூட்டம் தென்பட்டது நாங்களும் அந்த இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கினோம் கீரிமலை கேணிக்கு அண்மையில் வேலைப்பாடுகளுடன் அமைந்த ஒரு அழகிய மண்டபம் இருக்கிறது இது எப்போ கட்டப்பட்டது என்று எனக்குத் தெரியாது. அந்த மண்டபத்தில் இருந்து தமிழ்ப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்க ஒரு அழகிய பெண் பரதம் ஆடிக்கொண்டிருக்கின்றார். படப்பிடிப்பு என்று புரிந்துகொள்கின்றேன்.
அண்மையில் நின்ற அவர்களின் வாகன ஓட்டியிடம் கதைத்ததில் செல்வம் என்ற படம் எடுக்கின்றார்கள் என்றும் சிங்கள நெறியாளர் என்றும் அறிகின்றேன். சிங்கள நெறியாளர் ஏன் தமிழ்ப்படம் எடுக்கவேண்டும் நடிகை சிங்கள பெண்ணா அல்லது தமிழ்ப்பெண்ணா இப்படியான எண்ணங்கள் என் மனதில் எழுந்தது. ஒரு இளைஞன் கதாநாயகனாக இருக்கலாம் என்று நினைத்தேன் மிக இயல்பாக பரதநாட்டியத்தை செய்கின்றான் ஆனால் பெண்ணுக்கு திரும்பத் திரும்ப நெறியாளர் ஆடிக்காண்பிக்கின்றார். அடப்பாவி சிங்கள நெறியாளர் மிக நன்றாக ஆடுகின்றானே என்று நான் கற்றுக்கொள்ளாத பரதநாட்டியம் பற்றி நினைக்கின்றேன். கதாநாயகனாக நான் நினைக்கும் அந்த இளைஞனை எங்கோ பார்த்த ஞாபகமாக இருக்கின்றதே என்று நினை;கின்றேன் ஆனால் அவனுக்கு ஏறக்குறைய 25 அல்லது 26 வயதுதான் இருக்கலாம் ஆகவே பார்த்திருக்கவே முடியாது என்று நினைக்கின்றேன். உதவி ஒளிப்பதிவாளர் வாகனத்தை நோக்கி வருகின்றார் அவரோடு உரையாடுகின்றேன். அவர் மட்டக்களப்பை சேர்தவரென்றும் இந்தியாவில் பாலுமகேந்திராவிற்கு உதவியாளராக இருந்ததாகவும். இந்தியாவில் இருந்துதான் இந்தக் கமறாக்கள் வாடகைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் இங்கு இப்படியான கமறாக்கள் இல்லை என்றும் கூறுகின்றார். நாயகி சிங்கள திரையுலகில் முன்னணி நடிகை எனவும் திரைக்கதை சமாதானத்தைப் பற்றிய கதை என்றும் கதாநாயகன் புலிகள் அமைப்பின் ஆஸ்தான பாடகர் சாந்தனின் மகன் எனவும் கூறுகின்றார். இப்போது எனக்கு பொறிதட்டியது ஆம் சாந்தன் எனக்கு நன்கு பழக்கமானவர் அவரின் மகன் தந்தையைப் போன்றே தோற்றமளிக்கின்றார். இளமையில் சாந்தன் இருந்ததுபோலவே இருக்கிறார்.
நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும் போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைவரும் வருகின்றார்கள். நான் நெறியாளரிடம் உரையாடுகின்றேன் அப்போதுதான் தெரிகின்றது இவர் முன்னைநாள் சிங்கள நடிகர் சன்ஜய லீலாரட்ன. இவரே இத்திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகின்றார். ஜயனாத் குனவர்தன ஒளிப்பதிவு இயக்குனராக மாறுபட்ட வடிவில் ஒளிப்பதிவு செய்கின்றார். இத்திரைப்படத்தில் மாலினி பொன்சேகா, ஜோ அபேவிக்ரம, லக்ஷ்மன் மெண்டிஸ், ஜயனி சேனாநாயக்க, சந்திக நானயக்கார, சன்ஜய லீலாரட்ன, சாந்தலிங்கம் கோகுலராஜ், நடராஜசிவம் ஆகியோர் நடிக்கின்றார்கள் என அறிந்தேன்.  டோகோமோ திரைப்பட நிறுவனத்திற்காக "செல்வம்" திரைப்படத்தை மொஹமட் முபாரக் அவர்கள் தயாரிக்கின்றார்.சமாதானத்தைப் பற்றிய கதையே இந்தக்கதை பயங்கரவாதத்தை முறியடித்த பின்பு தமிழ்மக்களோடு சேர்ந்து வாழவேண்டும் என்பதையும் நாட்டுமக்களில் வித்தியாசம் காட்டப்படக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டார். நீங்கள் ஒரு கலைஞன் என்றவகையில் நீங்கள் நினைப்பது நல்லது ஆனால் பயங்கரவாதத்தை முறியடித்தது என்று குறிப்பிட்டீர்கள் இது ஆரம்பித்தது ஒரு விடுதலைவேண்டியல்லவா என்றேன். தவறுதான் இந்தப்போரை முடித்தது என்று கூறலாம் என்றார். இராணுவத்தினுடைய தியாகங்கள் மறைக்கப்படுகின்றது அவர்களுடைய தியாகங்களை இதில் தெளிவாக காட்ட முற்படுகின்றேன் என்றார். பெரும்பான்மை இனத்தவர் என்ற வகையில் அவர் பார்வை அப்படி இருந்தாலும் ஒரு நல்ல கலைஞன் என்றவகையில் அவர் சிந்திக்க தவறுகின்றாரா என்றகேள்வி என்னுள் எழுந்தது. விடைபெற்றுக்கொண்டு சாந்தன் கோகுலராஜிடம் நெருங்கினேன். சிரித்தபடி உரையாடினார் இயக்கத்தில் இருந்து பின் சிறைவைக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளதாகவும். இப்போது இத்திரைப்படத்தில் நடிப்பதாகவும் கூறினார். இயக்கத்தில் கலைக்குழுவோடு பணியாற்றிய இவருக்கு நிறைய திறமை உள்ளதாகவும் அதை சிறையில் வெளிக்காட்டியதாகவும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட புலி உறுப்பினர் பாத்திரத்திற்கு பாத்திரப்பொருத்தம் கருதி அவரையே தெரிவு செய்ததாகவும் நெறியாளரே விளக்கினார். சாந்தனைப்பற்றி கேட்டு அறிந்து கொண்டு விடைபெற்றுக்கொண்டு கேணியை நோக்கி சென்றேன்.
கேணி ஆண்களும் பெண்களும் நிறைந்த குளமாக இருந்தது. தண்ணீர் முன்பு போலல்லாது அசுத்தமாக உள்ளது போல் தோன்றியது. அதற்கு காரணம் இப்போது அங்கு செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் அதிகமானவர்கள் வந்து குளிக்கின்றார்கள் சிங்கள உல்லாசப்பயணிகளும் நிறையவே வருகின்றார்கள் அதுவாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். குளிக்கும் எண்ணமும் அத்தோடு கைவிடப்பட்டது.
கோவிலை நோக்கி சென்றபோது கண்ணில் பட்டது ஓர் அறிவித்தல் பலகை அது பொலிசாரினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவித்தல் நகுலேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது சிங்களத்திலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. தமிழில் எழுத்துப்பிழை இருந்தபோதும் அது திருத்தப்படாமலே இருக்கின்றது. யாருடைய தப்பென்று கூறுவது. பொலிஸ் என்ற காரணத்தால் மன்னிக்கப்ட்டுள்ளதா என்ற எண்ணம் எனக்குள் பரவ நகர்ந்தேன்.


 கடையொன்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அர்ச்சனைப்பொருட்ககைளை குடும்பத்தினர் வாங்கிக் கொள்ள உள்ளே சென்றோம். இங்கும் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வழமைபோல் தகவல்களை பரிமாறிக்கொண்டேன் அமைச்சர் தேவானந்தா அள்ளிக் கொடுத்துள்ளார் என்றார்கள். அத்தோடு வெளிநாட்டுக் காசும் சேர்ந்து பழைய அழகை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகின்றார்கள். செய்யவேண்டியதுதான். இந்த அவசரம் ஏன் நகர அமைப்பிலும் மக்கள் முன்னேற்றத்திலும் காட்டப்படுவதில்லை என்ற கேள்வி தலையைக் குடைந்து கொண்டிருக்க நடந்தேன். இந்தக் கோவிலில் நிறைய பக்தர்கள் நின்றார்கள். நகுலேஸ்வரரை பார்த்துவிட்டு செல்வச் சன்னதியை நோக்கிப் புறப்பட்டோம். போகின்ற பாதையில் காளிகோவில் ஒன்று இருந்ததாகவும் அது இப்போது காடுபோன்று கிடப்பதாகவும் சாரதி கூறினார் அதையும் பார்த்தேன் கோவிலின் உள்ளும் புறமும் விருட்சங்கள் வளர்ந்து மறைத்திருந்தது

.அந்த காடுபோன்ற பிரதேசத்துக்குள்கும் உயரமான சென்றி பொயிற்ரில் ஆமி காவல் இருப்பதை பார்க்க கூடியதாக இருந்தது. வரவு செலவுத்திட்டத்தில் யுத்தம் இல்லாதபோதும் ஏன் இந்த தொகை ஒதுக்குகின்றார்கள் என்ற கேள்விக்கு இப்போ விடை கிடைத்ததுபோல் இருந்தது. அந்த அடர்ந்த பகுதிக்குள்ளால் வட பகுதியில் இருந்த மிகப்பெரிய தொழிற்சாலையான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை. காட்டின் நடுவே கட்டப்பட்டிருப்பதுபோல் காட்சியளித்தது. 

மனதில் ஜீ ஜீ பொன்னம்பலம் அவர்களிக் ஞாபகம் வந்து சென்றது. வடபகுதிக்கு அரசியல் தலைமைகளால் கிடைத்த ஒரு சில தொழிற்சாலைகள் கூட இன்று தொழிற்படாமல் போனதிற்கு காரணமான நிகழ்வுகள் நினைவுத்திரைகளாக மனதில் ஓடி மறைகிறது.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

எனது இலங்கைப் பயணம் -6

கீரிமலையில் இருந்து புறப்பட்டுப் பார்த்துக்கொண்டு செல்வச் சன்னிதியை அடைந்தோம் அந்தணர் இல்லாத கோவில் என்பது பலருக்கும் தெரியும். அங்கு அந்தணர் இல்லாதவர் வாய் கட்டிக்கொண்டு பூசை செய்கின்றார். அங்குசென்றபோதுதான் பலர் உதவிகேட்டு வந்தார்கள். இடம் பெயர்ந்து வந்துள்ளதாக கூறினார்கள் முடிந்த உதவிகளை செய்துவிட்டு நின்ற போது கோவிலுடன் தொடர்புள்ள ஒருவருடன் உரையாடினேன் ஆமி பெரியவன் இந்த கோவிலில் மிகவும் நம்பிக்கை கொண்டவன் என்றும் அடிக்கடி வந்து கோவிலுக்கு உள்ளே வந்து கும்பிட்டு செல்வான் என்றும் கூறினார்.
தவிலுக்கு பதிலாக இந்த கோவிலில் பறை அடிக்கப்படுகின்றது. பறை அடிப்பவரின் பறையின் நாதம் மாறியிருக்கிறது அவர்கள் தோற்றம் வறுமை என்பன மாறாமலே உள்ளது போல் தெரிகின்றது.

வருகின்ற பக்தர்களுக்கு இரண்டு மடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. எனக்கு வயிற்றுக் கோளாறு காரணமாக அந்த அன்னதானம் அருந்த முடியாது போய்விட்டது சற்று வருத்தமாக இருந்தாலும் வந்து பார்த்ததிருப்தியோடு திரும்பினேன்.

தொடர்ந்து வல்லிபுரக் கோவிலுக்கு சென்றேன். கோவிலும் தேர் முட்டியும் வெண் மணலும் திருச்செந்தூரை ஞாபகத்தில் கொண்டு வந்தது. என்ன கடல்தான் இல்லாத குறை.
 இவையெல்லாம் இந்தக்கிராமங்களையும் அங்குள்ள மக்களையும் வீடுகளின் கோலங்களையும் பார்க்கும் முயற்சியாகவே இடம் பெற்றது. எந்தப்பகுதியிலும் ஆமிக்காரர்கள் இருக்கின்றார்கள். மக்களும் அது இயல்பு வாழ்க்கைபோல் பழகிக் கொண்டார்கள். வீதிகள் திருத்தப்படாமலேயே கிடக்கின்றது.அத்தோடு அன்றய பொழுதும் சாய்ந்து விட்டது. நாமும் கூட்டை நோக்கி செல்லும் பறவைகள் போன்று வீட்டை நோக்கி சென்றோம். யாழ்ப்பாணத்தில் இரவு பன்னிரெண்டு ஒரு மணிவரையும் திரிந்தேன். உணவகங்களில் உணவருந்திவிட்டு வந்தேன். குறிப்பாக ஸ்ரீதர் தியேட்டருக்கு அருகே உள்ள கொசி உணவகத்தை குறிப்பிடலாம். நல்ல உணவு நிறைய பேர் வந்து போகின்றார்கள் இரவு நீண்ட நேரம் திறந்திருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் யாழ்நகரப் பகுதியில் அடுத்தடுத்து சில கொலைகள் நடந்ததை அறியக்கூடியதாக இருக்கின்றது மாநகரசபை எலெக்சன் வருவதன் காரணமாக இருக்கலாம் என்று என் மனம் எண்ணிக்கொள்கிறது. பதவிக்காக எவரும் எதையும் செய்வார்கள் என்பதை நான் முன்பும் குறிப்பிட்டது சரி என்பது போல் தெரிகிறது.

யாழ்நகரை சுற்றிப்பார்த்தேன் நல்லூர்க்கந்தன் ஆலயம் முன்பை விட வீதிகள் பெருப்பிக்கப்பட்டு கடைவீதி கலகலக்க காட்சியளிக்கின்றது. யாழ் நகரத்தின் மறக்கமுடியாத பூபாலசிங்கம் புத்தகசாலை யாழ் பஸ்நிலையம் ஆஸ்பத்திரி எல்லாமே பழைய நினைவுகளோடு பின்னிப் பிணைந்த நிகழ்வுகளை மீட்டித்தந்தது. காலத்தின் சுழற்சியில் நாங்கள் நின்று கதைத்த இடங்களில் இப்போது வேறு இளைஞர்கள் நின்று கதைத்துக்கொண்டு நிற்கிறார்கள். சின்ன மாற்றம் மட்டும் தெரிகிறது கையில் மொபையில் போண் போக்குவரத்திற்கு மோட்டார் சைக்கிள். மற்றப்படி எல்லாமே அதே காட்சி போலவே தெரிகிறது. இளம் பெண் பிள்ளைகள் ஸ்கூட்டி என்று அழைக்கின்ற மோட்டார் சைக்கிள்களில் டபிள்ஸ் போகின்றார்கள். மனது ஒரு முறை பழைய நினைவுகளில் சென்று வந்தது.
மறு நாள் எமது பயணம் மன்னாரை நோக்கியதாகும் கிளிநொச்சியிலிருந்து  மன்னார் செல்லும் பாதை இன்னும் புணரமைக்கப் படாமையால் வவுனியாவால் செல்ல வேண்டிய நிலையே உள்ளது.


 மீண்டும் ஆனையிறவும் அதன் அண்டிய பகுதிகளில் மொட்டைப் பனைமரங்களும் நெஞ்சை உறுத்தும் காட்கிகளாக இருந்தாலும் புதிய வடலிகள் பனைகளுக்கு கீழ் பசுமையாக எழுந்து வருவது எத்தனை இடர் வந்தாலும் நம்முயற்சியால் மீண்டும் உயருவோம் என்று பறைசாற்றுவது போல் தெரிகின்றது.


ஆனையிறவில் ஒரு பக்கம் இலங்கையை கையில் தாங்கிய வண்ணம் ஆமிக்காரர்கள் நிற்பதுவும் அதன் மறுபக்கம் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட புலிகளின் ராங்கர் ஒன்றும் காணப்படுகின்றது.


சிங்கள பயணிகள் சிலர் அதற்கு மலர் வைத்து வணங்கிச் செல்வதை காணக்கூடியதாக இருந்தது. ஏன் புலிகளின் ராங்கரை வணங்குகிறார்கள் என்ற கேள்விக்கு நண்பர் கூறினார் வேகமாக பெரும் தாக்குதல் தொடுத்த அந்த ராங்கரின் உள்ளே மனித வெடிகுண்டாக பாய்ந்து ஒரு இராணுவத்தினன் மரணித்து தன் சகாக்களை காப்பாற்றியதாகவும் அதனால் அவன் நினைவுத் தூபியாக அது உள்ளதென்றும் கூறப்படுகிறது. விரும்பியவர்கள் இறங்கி பார்க்கலாம் இறங்காமலும் செல்லலாம் அது பிரயாணிகளின் விருப்பம். கண்கள் உப்பளத்தை தேடியபோதும் உப்பளத்தின் சுவடே தெரியாமல் உப்புக்காற்று வீசும் கடல் மட்டுமே பரந்து கிடப்பதை காணக்கூடியதாக இருந்தது.


கிளிநொச்சியை அடைந்தபோது எல்லோரது கவனத்தையும் கவர்வது நிமிர்ந்து நின்று கிளிநொச்சி மக்களுக்கு தண்ணீர் வழங்கிய தண்ணித் தாங்கி புலிகளால் தகர்க்கப்பட்டு ராட்சத உருவத்துடன் வீழ்ந்து கிடக்கும் காட்சியாகும். இதைப் பார்த்தபோது எனக்கு யாழ் வீரசிங்கம் மண்டபம் எண்பத்தி நான்காம் ஆண்டு புலிகளால் தகர்க்கப்பட்டது ஞாபகத்தில் வந்தது.


அங்கிருந்து அநாதை சிறுவர்களை பராமரிக்கும் இல்லத்திற்கு சென்றோம் தாயை இழந்த குழந்தைகள் தந்தையை இழந்த குழந்தைகள் தாய்தந்தையர இருவரையுமே இழந்த குழந்தைகள் என்று ஏறக்குறைய 200 பிள்ளைகள் வரை பராமரிக்கப்படும் கிளிநொச்சி சிறுவர் இல்லம் மற்றும் ஸ்ரீ பரமானந்த மகளிர் இல்லம் என்று அழைக்கப்படும் மகாதேவ ஆச்சிரமம் என்பவற்றை அடைந்தோம்.இவை கிளிநொச்சி நகரை அண்டிய ஜெயந்திநகரில் அமைந்திருக்கின்றது. ஆண் குழந்தைகளுக்கு வேறாகவும் பெண் குழந்தைகளுக்கு வேறாகவும் ஆச்சிரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் பல அமைப்புக்கள் உதவி புரிகின்றது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பிள்ளைகள் பகலில் படிப்பதற்கு அண்மையில் உள்ள அரச பாடசாலைக்கு சென்று விடுகின்றார்கள். சுகயீனமான ஒரு சில பிள்ளைகள் மாத்திரம் இருப்பார்கள். பிள்ளைகளில் அரைவாசிப்பேர் வரையில் கட்டில்களில் படுக்கின்றார்கள் ஏனையவர்கள் பாயில் படுக்கின்றார்கள்.

வசதிக் குறைவுகள் நிறையவே இருக்கின்றது. படுப்பதும் படிப்பதும் ஒரே இடத்திலேயே நடை பெறுகின்றது. பெண்கள் முகாமில் கட்டிட குறைபாடும் உள்ளது. படிப்பதற்கான மண்டபம் ஒன்று போட்டால் நல்லது என்றார் என்னை அழைத்துச் சென்றவர். ஆண்பிள்ளைகள் படுக்கும் பாய்கள் போர்வைகள் என்பவை மாற்றப்பட வேண்டிய தேவையிருந்தது.


அவைகளை மாற்றுவதற்கான சிறு உதவியை செய்து விட்டு ஒஸ்ரேலியாவில் உள்ள உறவுகள் மூலம் முடிந்த உதவிகளை செய்யலாம் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து விடை பெற்றேன். எங்குசென்றாலும் தேவைகள் அதிகம் உள்ளது. அதை நிறைவேற்றுவதற்கான வழிவகைகள் கண்டுபிடிக்கபடாமல் இருக்கின்றது. மிக வேதனையாக இருந்தது.அங்கிருந்து கோணாவில் என்ற இடத்திற்கு அண்மையில் உள்ள ஊத்துப்புலம் தமிழ்ப்பாடசாலைக்கு சென்றேன். யாராலும் கண்டுகொள்ளப்படாத பிரதேசமாக உள்ள ஒரு கிராமம். கண்ணி வெடிகள் றோட்டுக்கரையிலேயே இன்னும் அகற்றப்படாமல் எச்சரிக்கைப் பலகை போடப்பட்டிருக்கிறது.
சாதாரண வாகனங்களில் செல்ல முடியாத பாதைகள் குண்டும் குளியுமாக கிடக்கிறது. பல மைல் தூரம் நடந்து செல்லவேண்டியிருந்தது. இடையில் திரும்பி விடுவோமா என்று கூட எண்ணினேன் என்னை அழைத்துச் சென்ற அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரின் சளைக்காத ஊக்கத்தால் தொடர்ந்து அங்கு செல்லத்தான் வேண்டும் என்று தொடர்ந்து செனந்தப் பாடசாலையை அடைந்தபோது கண்ணி வெடிப் பிரதேசத்தின் மத்தியிலே பள்ளிச் சிறுவர்கள் படித்துக்கொண்டிருக்கும் அந்த பாடசாலையைக்கண்டேன். ஆச்சரியமான விடயங்கள் அங்கே இருந்தது.
 அதை அடுத்தவாரம் பார்ப்போம்

 
எனது இலங்கைப் பயணம் -பகுதி 7

பாடசாலை சென்று காரை நிறுத்திவிட்டு அதிபரின் அறையை கோக்கி சென்றோம். அங்கே உப அதிபருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது. இரண்டு இராணவத்தினர் பாடசாலைக்குள் வந்தார்கள் எமது வாகனத்தின் சாரதியை அழைத்து கதைத்தார்கள் பின் உதவி அதிபர் சென்று உரையாடிவிட்டு வந்தார் எங்களைப்பற்றிய விபரங்கள் கேட்டார்களாம் அதன் பின் எம்மோடு எதுவும் கதைக்காமலே சென்று விட்டார்கள். 300 பிள்ளைகள் படிக்கின்றார்கள் என்று அறிந்தேன். கீழ் வகுப்பொன்றில் வெள்ளை உடைகள் அணிந்த குழந்தைகள் தரையில் அமர்ந்திருந்தார்கள் அவர்களின் அருகே புத்தகப்பைகள் இருக்கின்றது நிலத்தில் கொப்பியை வைத்து எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். ஆசிரியை எழுந்து நின்றார் உப அதிபர் அவரை அறிமுகம் செய்துவைத்தார். நான் வணக்கம் கூறிவிட்டு நீங்கள் அமருங்கள் என்று கூறிவிட்டு வெளியேறும்போதும் அவர் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார் அருடைய சிரிப்பு ஏதோசொல்வது போல் இருந்தது. நான் உப அதிபரை பார்த்தேன் அவர் கூறினார் ஆசிரியர் இருப்பதற்கு கதிரையில்லை அதுதான் நிற்கிறார் என்றார் அதிர்ந்து விட்டேன். ஆசிரியருக்கு கதிரை இல்லையா என்றேன்? ஆறு வகுப்பு ஆசிரியர்கள் நின்றுதான் படிப்பிக்கின்றார்கள் என்றார். குழந்தைகள் இருப்பதற்கு கதிரை மேசையில்லை ஆசிரியர் அமர்வதற்கு கதிரையில்லை சப்பாத்தில்லை மாற்றுச் சீருடையில்லை எழுதுவதற்கு கரும்பலகையில்லை. ஒன்றுமே இல்லையா ? இருக்கிறது எல்லாம் பற்றாக் குறையாக இருக்கிறது. சமாளிக்க வேண்டும். எப்படிச் சமாளிப்பதென்றுதான் தெரியவில்லை. கல்வி அதிகாரிகள் தான் என்ன செய்ய முடியும்? அதிபர்தான் என்ன செய்யமுடியும். இன்று அதிபர் இதுவிடயமாக கதைப்பதற்குதான் சென்றுள்ளதாக கூறுகின்றார் உப அதிபர். இத்தனை சோகத்தின் மத்தியிலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆர்வம் மட்டும் தாராளமாக இருக்கிறது. படிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. தொடர்ந்து பல வகுப்புக்களுக்கு செல்லுகின்றோம் பல வகுப்புகளில் மாணவர்கள் நிலத்தில்தான் இருக்கின்றார்கள். இருப்பதற்காவது ஒரு இடம் இருக்கின்றதே என்ற நிம்மதி என்று கூறுகின்றார் ஒரு ஆசிரியை அவரும் நின்று கொண்டுதான் பாடம் சொல்லிக் கொடுக்கின்றார்.

சுற்றிப்பார்க்கிறேன் வேலி இல்லாத பாடசாலை வளவு எல்லை போன்று இடையிடையே கம்பிக் கட்டைகள் நடப்பட்டிருக்கிறது அதன் வெளிப்பக்கமாக கண்ணி வெடி அபாயம் என்ற சிவப்பு நிற அட்டைகள் குத்தப்பட்டுள்ளது. அபாயத்தின் மத்தியில் அமைதியாக அந்தக்குழந்தைகள் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
அவசரமான உதவிஎன்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறேன். ஒரு இரண்டு நிமிசம் தாருங்கள் என்று கூறிவிட்டு உப அதிபரும் நான்கு ஆசிரியர்களும் உரையாடிவிட்டு வருகின்றார்கள். நீங்கள் உதவுவதாக இருந்தால் ஆசிரியர்களுக்கான கதிரைகளும் நான்கு வகுப்பில் பிள்ளைகள் கதிரை மேசை இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கான கதிரை மேசைகளும் உடனடித் தேவையாக உள்ளது என்கின்றார். அரசாங்கம் ஏன் தரவில்லை என்று கேட்டேன் எங்கும் ஒரே பதில்தான் எல்லா இடமுமே அழிந்து போனவைதான். கிடைக்கும் பணத்தில் எல்லாப் பாடசாலைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக செய்கின்றார்கள் இவைகள் எப்போது எமக்கு கிடைக்குமோ தெரியாது என்கின்றார். நம்பிக்கையோடு இருக்கின்றோம் நம்பிக்கை மட்டும்தான் என்று கூறிவிட்டு சிரிக்கின்றார். பின்பு வேறு தேவைகளைப் பற்றி கேட்டபோது சோலாப்பவர் லைற் இருந்தால் மாலை நேரத்தில் பெரிய வகுப்பு பிள்ளைகளை படிப்பிக்கலாம் என்கிறார் ஒரு ஆசிரியர். யார் இரவில் படிப்பிப்பார்கள் என்ற கேள்வியை கேட்டுவிட்டேன். உப அதிபர் கூறுகின்றார் ஆசிரியர்கள் குறைவு அந்த சேர் யாழ்ப்பாணத்தில இருந்து வந்து படிப்பிக்கிறேர் இங்க இருந்து தான் படிப்பிக்கிறேர். மேலதிக கிளாஸ் வைத்தால் பிள்ளைகளை ஓரளவு முன்னேற்றலாம் அதுக்கு வெளிச்சம் வேணும் சரியான விலை உங்களால செய்ய முடிஞ்சால் உதவியாக இருக்கும் தயக்கம் தெரிய கூறுகின்றார். அந்த ஆசிரியரை கைகூப்பி வணங்கினேன் சேவையின் முழு உருவமாக அந்த ஆசிரியர் எனக்குத் தோன்றினார். போக்கு வரத்து இல்லாத கண்ணிவெடிகள் நிறைந்த பகுதியில் ஒரு யாழ்ப்பாண ஆசிரியன் மனமுவந்து தங்கியிருந்து கற்பிக்கின்றார் என்றால் அது சேவை இல்லாமல் வேறு என்ன சொல்லமுடியும். என்னை அழைத்துச் சென்ற அந்தக் கிராமத்து மக்கள் ஆவலோடு பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களில் ஒருவரை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி சென்று நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேசை கதிரைகள் வாங்கி லொறியில் ஏற்றிஅனுப்பி வைக்கிறேன். மனம் சற்று லேசாகின்றது. அந்தக் குழந்தைகளின் ஆனந்தம் கண்ணில் தெரிய மனம் நிறைகிறது. அவர்கள் கேட்ட மற்றைய தேவைகளையும் நிட்சயமாக ஓரிரு வாரங்களுக்குள் செய்து தருகின்றேன் என்று உப அதிபருக்கு தொலைபேசியில் அழைத்து உறுதிகூறுகின்றேன். அந்தக் கிராமத்து மனிதர் நன்றியோடு கூறுகின்றார் ஜயா எங்கட வயல் விளைஞ்சுதெண்டால் நாங்கள் கொஞ்சம் மூச்சுவிடுவம் அது வரைக்கும்தான் என்று வயல் மேல் வைத்த நம்பிக்யையோடு பேசுகின்றார்.

கொழும்பு போக முன்பாவது இவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுக்வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவுஸ்ரேலிய நண்பர்கள் சிலருடன் தொடர்பு கொள்கின்றேன் அவர்களும் உதவ முன்வந்தார்கள் 550 டொலர்கள் பெறுமதியான அந்த சோலர் லைற்ரை ஒருவர் ஏற்றுக்கொண்டு வாங்கிக் கொடுக்க உதவினார்;. வேறு சில நண்பர்கள் செய்த உதவி முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்டது அங்கு சென்ற பகுதி எழுதும் போது அவற்றை குறிப்பிடுவேன்.
அதனைத்தொடர்ந்து கிளிநொச்சில் சிலரை சந்தித்துவிட்டு வவுனியா ஊடாக மடுவை நோக்கி சென்றேன். அடுத்தவாரம் வவுனியாவில் சந்தித்த சில விடயங்களையும் மடுமாதா ஆலயத்தைப் பற்றியும் தருகின்றேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

எனது இலங்கைப் பயணம் - பகுதி 8

மடுவிற்கு செல்வதற்கு வவுனியாவில் இருந்து நல்ல வீதி இருப்பதால் நாங்கள் வவுனியாவால் செல்கின்றோம். வவுனியாவின் நகரப் பகுதியில் கம்பீரமாக பண்டார வன்னியனின் சிலையுள்ளது அதையும் எமது கமராவில் அடக்கிக் கொள்கிறேன். மடுவீதியின் ஒருபகுதி மிக நன்றாக போடப்பட்டிருக்கிறது. செல்லுகின்ற பாதைகளில் உடைந்த கட்டிடங்களும் கூரையில்லா வீடுகளும் தற்போது குடியேறியவர்களின் சின்னஞ்சிறு கொட்டகைகளும்தான் தெரிகிறது.

இந்த வீதியிலும் மற்றைய இடங்களைப் போலவே பாதையோரமாக இராணுவம் நிற்கிறது. அந்த வீதியில் பெரிய பெரிய பிளாஸ்டிக் பீப்பாக்களில் தண்ணீர் வைக்கப்பட்டு குடிதண்ணீர் என்று எழுதப்பட்டிருந்தது. தண்ணீர் குடிப்பதற்கு கப்பும் வைக்கப்பட்டிருந்தது. கடைகள் அதிகம் காணப்படவில்லை அதனால்தான் இப்படி வைத்துள்ளார்களோ என்று நினைத்துக்கொண்டேன்.


இருமருங்கும் வயல்கள் விதைக்கப்பட்டு பச்சைப் பசேல் என்று காணபட்டது மனதை குளிரச் செய்தது.
வவுனியாவில் இருந்து செல்லும் வீதியும் மதவாச்சியில் இருந்து மடு செல்லும் வீதியும் சந்திக்கும் இடத்தில் வீதிதிருத்த வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வீதி மிக அகலமான வீதியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

போகின்ற பாதையில் கட்டுக்குளத்தை இறங்கிப் பார்க்கின்றோம். கிளிநொச்சி மன்னார் பிரதேசத்திற்கான விஸ்தீரணமான அந்தக் குளத்தைப் பார்க்கும்போது அதன் மறுகரையை பார்க்கமுடியாத அளவுக்கு நீண்டு பரந்து கிடக்கின்றது. நமது பிரதேசங்களுக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாது விவசாயத்திற்கு நீர்ப்பாச்சும் அந்தக் குளங்களைப் பார்க்கின்றபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. அங்கிருந்து புறப்பட்டு மடுவை அடையும்போது மிகப்பெரிய வீதி வளைவு கட்டப்பட்டு மடு புனித நகரம் வரவேற்கிறது என்று எழுதப்பட்டிருக்கிறது.

அதில் இரானுவ தடை நிலையம் உள்ளது சாரதி இறங்கி பதிந்து கொள்கின்றார். இரண்டு இரானுவத்தினர் வானத்தின் உள்ளே பார்க்கின்றார்கள். தலையை அசைத்துவிட்டு செல்ல நாங்கள் செல்கின்றோம்.அந்த இடத்திலிருந்து வீதியின் இருமருங்கும் பூக்கன்றுகள் பூத்துக் குலுங்குகின்றது. வெள்ளை நீல வர்ணங்களால் தெரு விளக்குக் கம்பங்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதை பார்கின்றபோது இந்தியாவில் அன்னை வேளாங்கன்னி கோவிலின் அழகு இங்கும் தெரிந்தது.மாதா கோவிலில் பெரிதாக ஆட்கள் இல்லை அது பூசை நேரமும் இல்லாத காரணமாக இருக்கலாம். நின்ற சிலருடன் பேச்சுக் கொடுக்கிறேன். இந்தப்பகுதியில் முன்பும் ஆட்கள் இல்லையென்றும் பெரிய பண்டி விரிச்சானில்தான் ஆட்கள் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் வந்து குடியேறி விட்டோம் எல்லோருமே வந்துவிட்டார்கள் என்று கூறினார்கள். நேரமின்மையால் அங்கு செல்லமுடியவில்லை.


அங்கிருந்து திருக்கேதீஸ்வரம் சென்றோம் “பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல் செத்தார் எலும்பணியும் திருக் கேதீஸ்வரப் பெருமான் ஆலயம் கம்பீரமாக தோற்றம் அளித்தது. மான்களும் மயில்களும் சந்தேமாசமாக உலாவித்திரிந்தது. கோவிலும் தீர்த்தங்குளமும் அந்த வெண்மணல் வீதிகளும் உண்மையிலேயே நாங்கள் பலவற்றையும் இளந்து விட்டு இங்கு வாழ்க்கை நடத்துவதான எண்ணம் மனதில் எழுந்தது. பாலாவிக் கரைவரை வீதிகள் போடப்பட்டு இரண்டு மண்டபங்கள் புதிதாக கட்டப்பட்டு வர்ணம் பூசிக்கொண்டிருந்தார்கள். பாலாவி தண்ணீர் வற்றி கொஞ்சமாக காணப்பட்டது. பக்தர்கள் தீர்த்தமாடிக்கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்து புறப்பட்டு மன்னார் சென்று கடைகளை பார்த்துக்கொண்டு சென்றோம் கலகலப்பாக இருந்தது. நேரமும் இருட்டிவிட்டகாரணத்தால் வவுனியா நோக்கி பயணத்தை மேற்கொண்டோம். ஏங்கும் அழிவுகளின் அடையாளங்கள் நிறைந்தே காணப்பட்டது. இந்த இரவிலும் பலர் சைக்கிள் களில் அந்த வீதியில் சென்று கொண்டிருந்தார்கள் அதைப் பார்த்தபோது சற்று ஆச்சரியமாகவும் இருந்தது.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
எனது இலங்கைப் பயணம் - பகுதி 9


இப்போது நாங்கள் முல்லைத்தீவை நோக்கி செல்கின்றோம். இயல்பாகவே மனதில் ஒரு நெருடல் சேர்ந்து கொள்கிறது. முல்லைத்தீவை நன்கு தெரிந்த வாகன ஓட்டி, அவருடன் இன்னொரு உதவியாளர், மற்றும் நாங்கள். முதலிலேயே வற்றாப்பழை அம்மன் கோவிலுக்கு செல்வதாகத்தான் எவர் கேட்டாலும் சொல்வதென திட்டமிட்டுக்கொண்டு செல்கின்றோம். முல்லைத்தீவு வீதியில் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு,  நாங்கள் செல்லுமிடம் பற்றி கேட்டுக்கொண்டு பதிந்துவிட்டு செல்ல அனுமதிக்கின்றார்கள். மீண்டும் ஒரு தடை முகாம் வருகின்றது அதில்நிறுத்தி எங்கள் பயணம் பற்றி கேட்டுவிட்டு தொடர்ந்து பிரதான சாலையில் செல்ல முடியாது ஜனாதிதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச இன்று இந்த வீதியில் முல்லைத்தீவு செல்லுகின்றார் ஆகவே உள் பாதையால் சென்று மீண்டும் பிரதான வீதியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று இராணுவத்தினர் கேட்கின்றார்கள்.
முல்லைத்தீவு நன்றாக தெரிந்த சாரதி சரி என்று கூறிவிட்டு ஒரு 7 கிலோமீற்ரர் சுற்றி போகவேண்டும் என்று கூறிவிட்டு வண்டியை துரிதப்படுத்துகின்றார். உள்பாதையால் செல்லும் போது அவர்கள் இப்படி அனுப்பியதும் ஒரு வகையில் நல்லதென்றே கருதினோம் காரணம் பல குடும்பங்களை சந்தித்து கதைத்து பல கதைகளையும் கேட்கக் கூடியதாக இருந்தது. வானொலி பத்திரிகைகளில் வந்த விடயங்களைவிட அந்த மனிதர்களோடு பேசியதில் பல விடயங்களுக்கு தெளிவு கிடைத்தது. வீடுகள் கட்டிக்கொண்டும் வளவுகள் துப்பரவாக்கிக்கொண்டும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். பார்த்த பெரும்பாலானவர்களிடம் நம்பிக்கை இருந்தது. அத்தனை சோகத்திலும் வன்னி மண்ணுக்கே உரிய புன்னகை அவர்கள் முகத்தில் தெரிய அவர்கள் பேசிய விதம். அவர்கள் எவரை நம்பாவிட்டாலும் அந்த மண்ணை நம்புகின்றார்கள் என்பது தெரிந்தது.
மீண்டும் சுற்றி வந்து முல்லைத்தீவு றோட்டில் ஏறுவதற்கு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டோம். காரணம் சொல்லாமலே புரிந்தது. 20 பதுக்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. ஆமி பொலிஸ் என்று காவல் போடப்பட்டிருந்தது. அங்கே நாமல் நின்று விட்டு அப்போதுதான் புறப்பட ஆயத்தமாகின்றார். ஒரு மணிநேரம் தாமதித்து மீண்டும் நாம் செல்ல அனுமதிக்கப்பட்டோம்.


கடைசியில் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தை வந்தடைந்து அம்மன் சன்னிதியில் வணங்கிவிட்டு நந்திக்கடலை நோக்கி நடந்தேன். மே 2009 தில் குருதிக்கடலாக கிடந்த அந்தக்கடல் ஒன்றும் அறியாததுபோல் அமைதியாக கிடந்தது. அத்தனை மரணஓலங்களையும் வெளியில் தெரியாமல் தனக்குள் விழுங்கிக் கொண்ட அந்தக் கடல் ஆளரவமற்று இராணுவ காவலுமின்றி வற்றிக்கிடக்கிறது. இதைக்கடக்க முனைந்த எத்தனை மனிதர்கள் உயிர் பறிக்கப்பட்டு அதில் விழுந்து கிடந்திருப்பார்கள் என்ற சிந்தனை பொறிதட்ட அந்தக் கரைகளில் சிவப்புக் குருதிக்கறை படிந்திருக்கிறதா என்று அந்த மணலைக் கிளறிப் பார்கின்றேன். 30 வருடப் போரின் முடிவு இங்குதான் நிகழ்ந்தது என்பதை எண்ணிப் பார்த்தபோது 25 வருடங்களுக்கு முன்பு நானும் நாங்களும் நடந்து திரிந்த அந்த நினைவுகள் மின்னி மறைகிறது. "தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ" என்ற பாரதியின் வரிகளின் நினைவுகளோடு கண்கள் பனித்தன. எந்த மக்களுக்காக நாம் குரல் கொடுத்தோமோ எந்தமக்களுக்காக இலங்கை வரைபடத்தில் புதிய கோடு போட்டோமோ அவை எதுவும் நிறைவேறாது துயரத்தை மட்டும் சுமந்து நிற்கும் அந்த மக்களிடம் விதி என்கிறார்கள் சிலர் நாங்கள் விதைத்தது என்று என்மனம் கூச்சல் போடுகிறது. அந்த இடத்தை விட்டு நகர்கின்றேன்.


நாங்கள் சந்திக்க வந்த அந்த கிராமத்து மக்கள் வருகின்றார்கள். அதில் சில முக்கிமானவர்களோடு எந்த வகையில் உதவி செய்யவேண்டும் எந்த விதமான உதவிகள் செய்ய வேண்டும் என்று உரையாடுகின்றோம். அதன்பின் அந்தகிராமத்தில் மீளக் குடியேற்றப்பட்ட மக்கள் பலரை சந்திக்கின்றோம். எங்குமே சோகம் ஒவ்வொரு வீட்டிலும் துயரக்கதைகள் தூங்கிக் கொண்டிருக்கிறது. துரத்த வளிதெரியாது தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். காலில்லாதவர்கள், கையில்தாவர்கள், தாயை இழந்தவர்கள், தந்தையை இழந்தவர்கள், புருசனை பிள்ளையை பறிகொடுத்தவர்கள் பார்கின்ற இடமெல்லாம் பரிதாபத்திற்குரியவர்களாகவே இருக்கின்றார்கள். நான் எத்தனையோ இளப்புக்களின் போது உதவிக்குப் போயிருந்தவன், வன்னிக் குடியேற்றம் மட்டக்களப்பு சூறாவெளி உதவிக் குழு போன்ற வற்றில் 80பதுகளில் செயலாற்றியிருந்தவன் ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு பிரதேசத்து மக்கள் இப்படி ஒரு இழப்பில் துடித்ததை அன்றுதான் பார்க்கக் கூடியதாக இருந்தது. பார்க்குமிடமெல்லாம் 18, 19, 20 வயதுப் பெண்கள் கணவனை இழந்தவர்களாக குழந்தைகளைக் கையில் வைத்துக்கொண்டு கதறுகின்ற காட்சி நெஞ்சைவிட்டு அகல மறுக்கிறது. ஒருவரிடமும் கேட்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை பார்த்தவுடனேயே தெரிந்து விடுகிறது.

 "என்ன தொழில் செய்யப் போகின்றீர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்" என்று கேட்டவுடன் இரண்டு கண்களாலும் கண்ணீர் பொல பொல என்று கொட்டுகின்றது." நாங்கள் என்ன செய்வதெண்டு எங்களுக்கே தெரியாது" என்று அழுதவண்ணம் வானத்தைப் பார்க்கின்றார்கள்.
அவர்களுடைய சோகக் கதையை யாரிடமும் சொல்ல முடியாது. முகாமில் இருந்து வந்து மீளக் குடியேற்றப்பட்டவர்களுக்கு அரசாங்கம் அரிசி, சீனி பருப்பு என்பன கொடுப்பதாகவும் நிலம் உள்ளவர்களுக்கு ஒரு சிறிய வீடு கட்டுவதற்கு ஒரு வெளிநாடு ( இந்தியா என்று குறிப்பிட்டார்கள் அதன் உண்மை விபரம் அறிய முடியவில்லை) உதவி செய்கின்றது. முதலில் அத்திவாரம் போடுவதற்கு காசும் பொருட்களும் கொடுத்துள்ளார்கள். அது போட்டு முடிந்தவுடன் அதைப் பார்த்து விட்டு சுவர் வைப்பதற்கான உதவி வழங்கியுள்ளார்கள். அதுவும் முடிந்தவுடன் கூரைக்கான உதவி வழங்குகின்றார்கள். அனேகமான வீடுகள் இந்த இரண்டாம் கட்டம் தாண்டி மூன்றாம் கட்டத்தில் உள்ளதை பார்க்கக் கூடியதாக இருந்தது. முகாமில் இருக்காமல் உறவுகளோடு இருந்து, பின் இங்கு வந்தவர்களுக்கு இந்த வீட்டு உதவி கிடைக்கவில்லை என்பது வேதனைக் குரியதாக இருந்தது. "அது பற்றி எம் பிக்களிடம் அல்லது மந்திரிமாரிடம் பேசினீர்களா" என்று கேட்டதற்கு  "இங்க எவனய்யா எங்கட பிரச்சினய பாக்க வாறாங்கள், நீங்கள்தான் முதலில வந்திருக்கிற தமிழாக்கள்" என்று விரக்தியோடு கூறினார்கள்." இன்று ஜனாதிபதியின் மகன் வந்தாரே நீங்கள் பார்க்கவில்லையா" என்று கேட்டேன். சிலர் கூறினார்கள் "போனாங்கள், நாங்கள் முக்கியமாக் கேட்டது புதுக்குடியிருப்பில இருக்கிற பயிச்செய்கைக்கான காணியள திருப்பி தரவேண்டுமெண்டு, அதுக்கு அவரும் உடனடியா, அதிகாரியளுக்கு உத்தரவு போட்டேர் , உடன காணியள குடுக்கவேணும் எண்டு, பிறகு எங்களட்ட சொன்னேர், நாளைக்கு எயாபோர்ஸ் இருக்கிற இடத்தை தவிர மற்ற இடங்களுக்கு நீங்கள் போகலாம் எண்டும், விவசாயத்த துவங்கலாம் எண்டும் " இப்படி கூறி முடித்தார்கள். ( புதுக் குடியிருப்பு செல்லும் வளியில் புலிகள் வைத்திருந்த ஓடுபாதையும் தளமும் இப்போது திருத்தப்பட்டு மிகப்பெரிய வான் படை நிலையமாக கட்டப்பட்டுள்ளது)
அரசியல் வாதிகளின் தந்திரமும் மக்களை ஏமாற்றும் தன்மையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. பல அழுத்தங்களால் ஏற்கெனவே மக்களிடம் கையளிக்க இருந்த காணிகளை நாமல் ராஜபக்ச வந்து ஏதோ தான் சொல்லித்தான் நடப்பது போல் ஒரு காட்சியை அரங்கேற்றி விட்டு சென்றிருக்கின்றார். மக்களும் நம்புகின்றார்கள். நம்புவதோ இல்லையோ என்பதற்கு மேலாக நம் காணிகள் நம் கைக்கு வந்தால் சரி என்று நினைக்கின்றார்கள்.   ( இந்தியாவில் நேருவும் அதன்பின் இந்திரா காந்தி ஆகியோரின் தேர்தல் தொகுதியாக இருந்தது அமேதி தொகுதியாகும் அது மிகவும் படிப்பறிவு இல்லாத மக்கள் கூடிய இடமென்று புள்ளி விபரம் காட்டும். ஒரு பிரதமருடைய தொகுதி ஏன் இப்படி உள்ளது என்று கேட்டால் படிப்பறிவுள்ளவர்களாக மாற்றி விட்டால் சிந்திக்க தொடங்கி விடுவார்கள் வாக்குச் சீட்டைப் பெறுவது கடினம் அதுதான் ரகசியம் ) எமது மக்களையும் காப்பாற்ற வேண்டுமானால் கல்வியறிவை எம்மவர்கள் மேம்படுத்தவேண்டும்.


அதன் பின் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களோடு பேசி ஒரு முடிவெடுக்கின்றோம். அந்த மக்கள் கேட்டார்கள் ,"தொழில் வேண்டும் காணியைத்தான் நம்பியிருக்கிறோம் அதை உழுது விதைக்க வேண்டும், அறுவடை செய்வதற்கு முன்பு போல் ஆண்கள் இல்லை. இருப்பவர்களும் பெரும்பாலும் ஊனமுற்றவர்கள் ஆகவே இந்தக் கிராமத்துக்கு ஒரு உளவு யந்திரமும் ஒரு சூடடிக்கும் இயந்திரமும் தந்தால் இந்த கிராம மக்கள் அனைவரும் பாவிப்போம்" என்றார்கள். லண்டனில் இருந்து வந்த நண்பர் அவை இரண்டையும் தானும் தன்னுடைய நண்பர்களும் செய்து தருவதாக உறுதியளிக்கின்றார். இன்னும் சிலர் "தையல் மெசின் இருந்தால் தாங்கள் தைத்து பிழைப்பை நடத்த முடியும்" என்றார்கள். சிலர் "கச்சான் தோட்டத்திற்கு தண்ணீர் இறைப்பதற்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வாங்கித் தந்தால் தங்கள் சீவியத்தை ஓரளவு சமாளிக்லாம்" என்றார்கள். உடனடியாக நான் அங்கிருந்து ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை தொடர்புகொண்டு அந்த மக்களின் வேண்டுகோளை அவர்கள் மூலமாகவே முன்வைத்தேன். உடனடியாகவே சில நேயர்கள் தையல் இயந்திரங்களையும் தண்ணீர் இறைக்கும் யந்திரத்தையும் தாங்கள் கொடுப்பதாக கூறினார்கள் அவற்றை மறு நாள் நாங்கள் வாங்கி சமூகப்பெரியவர்களுக்கு முன்பாக அந்த மக்களுக்கு கொடுத்து அவர்கள்  பெற்றுக்கொண்டதற்கான கடிதங்களும் பெற்றுக்கொண்டோம். அதற்கான பணத்தை நான் அவுஸ்ரேலியா வந்தவுடன் அந்த நல்ல மனம் படைத்தவர்கள் தந்தார்கள், இன்னும் சிலர் தருவதாக கூறியுள்ளார்கள். இதற்காக அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கு நன்றியை தெரிவிக்கின்றேன். இந்த வானொலி இன்னும் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது மட்டுமல்ல இன்னும் பல இடங்களுக்கு பல வகையில் உதவிக்கொண்டிருக்கின்றது என்பதை நன்றியோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இன்றைய தினம் இருட்டி விட்டது. நாங்கள் அன்றிரவு அங்கேயே தங்குவதென முடிவெடுத்தோம். கட்டிடங்கள் எதுவுமே இல்லாது அழிக்கப்பட்ட இடம் அம்மன் கோவில் மடத்தில் தங்குவதற்கு முடிவுசெய்தோம் ஊர் மக்கள் மிகவும் அன்பாக இருந்தார்கள். ஆமியால் எந்த பிரச்சினையும் வராது தாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று எமக்குத் தென்பையும் தந்தார்கள். நீண்ட இரவாக அந்த இரவு அங்கே கழிந்தது.மறுநாள் அம்மன் கோவிலிலே அபிசேகம் செய்து வழிபட்டோம் வந்திருந்த கிராம மக்களுக்கு மீண்டும் நண்பர் உடைகளாகவும் பணமாகவும் பல உதவிகளைச் செய்தார். பெரும்பாலான கிராமமக்கள் கூடியிருந்தார்கள். போரின் போது நடந்தவைகள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி கூறினார்கள். இராணுவத்தின் செல்தாக்குதல்களாலும் துப்பாக்கி சூட்டினாலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்ததாகவும்; தங்களை வெளியேறி இராணுவத்திடம் சரணடையவிடாது புலிகள் தடுத்ததாகவும். தடுத்ததையும் மீறி இரவோடு இரவாக களவாக நந்திக்கடலைத் தாண்டி இராணுவத்திடம் செல்லும்போது புலிகளின் துப்பாக்கிச் சூட்டினால் இறந்தவர்கள் பலர் என்றும் கண்ணீரோடு கூறினார்கள். உறவுகளையும் உடைமைகளையும் போருக்கு தானம் செய்தவர்கள் இன்று வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு உடனடித்தேவை வாழ்வாதாரம் மாத்திரேமே. இதை யார் செய்வார்கள் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பலர் இவர்களை வைத்து அரசியல் செய்கின்றார்களே தவிர அவர்கள் வாழ்வைப்பற்றி சிந்திக்கின்றார்கள் இல்லை என்பது கசப்பான உண்மை.
அந்த மக்களுக்கு உதவி புரிந்துகொண்டிருந்தபோது இரண்டு பேர் வந்தார்கள் எங்களுக்குத் தெரியாமல் எங்களைப் போட்டோ எடுத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.. ஆலயத்தின் குருக்களிடம் எம்மைப்பற்றி கேட்டிருக்கின்றார்கள். எந்த அமைப்பு, ஏன் உதவி செய்கின்றார்கள் என்பது போன்ற பல கேள்விகள் ஆனால் எம்மிடம் எதுவும் பேசவில்லை சென்று விட்டார்கள். அவர்கள் இராணுவத்தின் உளவுப் பிரிவினராக இயங்கும் தமிழர்கள் என்றும், முன்பு புலி உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. சில நிமிட நேரத்தின் பின் இராணுவவாகனம் வந்து நின்றது. அதில் இருந்த பெரிய அதிகாரி உள்ளே வர மற்றவர்கள் வெளியில் காத்திருந்தார்கள். நாங்கள் தொடர்ந்தும் நாங்கள் செய்ததை செய்து கொண்டேயிருந்தோம் அவர் நேரே குருக்களிடம் சென்று உரையாடிவிட்டு சென்று விட்டார். எம்மைப்பற்றி கேட்டதாகவும் எங்கிருந்து வந்தவர்கள் என்றும் ஏதாவது அமைப்புக்ளோடு சம்பந்தப் பட்டவர்களா என்றும் கேட்டதாக அறிந்தோம். மதியம் போல் முல்லைத்தீவு பட்டினத்தையும் பொக்கணையையும் பார்ப்பதற்காக புறப்பட்டோம்.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
எனது இலங்கைப் பயணம் - பகுதி 10
முல்லைத்தீவு நகருக்கு செல்லும்போது முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் கண்ணில் பட்டது. கட்டிட அழிவுகள் திருத்தப்பட்டு செயலாற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு அண்மையில் இராணுவ முகாம்கள் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களில் காணப்படுகிறது. வீடுகள் கடைகள் என்பன உடைந்து சிதைந்து காணப்படும்போது இந்த இராணுவ முகாம்கள் குவாட்டஸ் என்பன புதிய பொலிவோடு காட்சி தருகின்றன. அதை அடுத்து பெரிய காணியில் விளையாட்டுத் திடல்; காணப்படுகின்றது அதில் இராணுவத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

முல்லைத்தீவு நகரம் இழவுநிகழ்ந்த வீட்டைப்போல் காட்கியளிக்கின்றது. கடைகள் அவசர அவசரமாக கட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது.


அழிந்த ஒரு பிரதேசம் மீளக்கட்டி எழுப்பப் படும்போது மேற்கொள்ளப் படுகின்ற வடிகால் அமைப்போ நகர அமைப்போ அல்லது வர்த்தக வடிவமைப்போ எதுவுமின்றி தாங்களாகவே மீளக்கட்டிய ஒரு சுவரும் கூரையும் கொண்ட கடைத் தொகுதிகளைத்தான் காணமுடிகிறது. அரசும் அரச இயந்திரமும் அரசியல் வாதிகளும் தூங்கிக் கொண்டிருக்கின்றார்களா? என்மனம் கேள்வியொன்றினை முன்வைத்தது. போரால் முற்றாக சிதைந்த யேர்மன் நாடு ஜப்பான் என்பவை கிராமங்களில் கூட திட்டமிட்ட கிராம அமைப்பை செய்துகொண்டது. ஆனால் மீளக் கட்டப்படும் எம் பிரதேசங்களில் மட்டும் பெட்டிபோன்ற ஒரு கட்டிடம் மட்டும்தான் கட்டப்படுகின்றது. தெருக்கள் குண்டும் குளியும் சேறும் சகதியுமாகவே காட்சிப் பொருளாய் கிடக்கிறது.

மீனவர்கள் வாழும் பிதேசத்திற்கு சென்றபோது வள்ளங்கள் கரைக்கு இழுத்துவிடப்பட்டுக் கிடந்தன. தொழில் முடித்து வந்த தொழிலாளிகளில் சிலர் மரங்களுக்கு கீழிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். கடற்கரையோரமாக முள்ளுக்கம்பிகள் சுருளாகப் போடப்பட்டு 300 மீற்றர் இடைவெளியில் இராணுவம் காவல் புரிந்தது. சற்றுத்தள்ளி ஒரு தெருவளைவும் புதிய கட்டிடமும் தென்பட அங்கே சென்றேன். சாரம் அணிந்த சில இளைஞர்கள் வெறும் மேலுடன் படுத்திருந்தார்கள். சுனாமியால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக அவை கட்டப்பட்டிருப்பதாக கூறினார்கள். "யேசுவே என்று மீன்பிடிப்பதில் எந்தத் தடையும் இப்போது இல்லை" என்றான் ஒருவன். "வீடுகள் எல்லாம் உடைந்து கிடக்கிறதே எப்படி சமாளிக்கின்றீர்கள்" என்று கேட்டேன். "எங்களுக்கு சில வள்ளங்களும் வலையளையும் உதவி அமைப்புக்கள் தந்திருக்கினம். எங்களுக்கு என்னம் கொஞ்சம் வள்ளங்களும் வலையளும் கிடைச்சாலே போதும் நாங்க எங்கட தேவையெல்லாத்தையும் பாத்துக்கொள்ளுவம். உவங்கள் போட்டுத்தாற இந்த கொட்டிலுக்குள்ள படுக்கேலுமே இப்பபாருங்க நாங்க இங்கதான் வந்து படுத்திருக்கிறம் ஆனால் பொடி பெட்டையள் படுக்கேலுமே? நாங்க கடலாச்சியட்ட போறத்த மறிக்காம விட்டாங்களெண்டா வீடென்னய்யா மாடியே கட்டிப்போடுவம். ஆனா எத்தின நாளைக்கு இப்படி விடுவாங்களெண்டு யோசினயாயும் இருக்கு". இப்படி அதில் படுத்திருந்த ஒரு நடுத்தர வயதினர் கூறுகின்றார்.அவரை தடுப்பது போல் ஒருவன் " இனி ஒண்டும் நடக்காது பேசாம கிட, பட்ட கஸ்டத்த விட இனி ஒரு கஸ்டமிருக்கா வாறதுக்கு” வேகமாக கூறுகின்றான். அது விரக்தியா நம்பிக்கையா என்று அடையாளம் காண முடியாமல் இருக்கிறது.

நான் தொடர்கின்றேன் " ஆமிக்காறங்கள் இப்படி நிக்கிறாங்கள் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் தாறதில்லையா? " " எங்களுக்கோ? அவங்களால ஒரு பிரச்சினையும் இல்ல " இது அதே இளைஞன். "மீனக் கீன தூக்கிப்போட்டு காசுதராம விடுறதில்லையோ?" என்ற கேள்விக்கு. இன்னுமொரு இளைஞன் " ஒரு மீன் தொடமாட்டங்கள்." அழுத்தமாக கூறுகின்றான். நானும் அவர்களை கிளறுவதற்காக மீண்டும் கேட்கிறேன் "சரி இப்ப நல்லாத்தான் இருக்கிறாங்கள் தற்செயலா ஏதாவது பிரச்சின வந்து அவங்களுக்கு கோவம் வந்தா?" இன்னொருவன் "அண்ண இவ்வளவு காலமும் நாங்க பட்டதவிட கடுமையாவே நடக்கப் போகுது ". விரக்தி அவன் வார்த்தையிலும் முகத்திலும் தெரிகிறது. தலைகளுக்கு கீழ் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு மேலே பார்த்த வண்ணம் கிடந்தபடி கூறுகின்றான் " நானும் போயிருக்க வேண்டிய ஆள்த்தான் தப்பி வந்து இதில கிடக்கிறன். என்ர தம்பி புலியோடபோயிற்ரான் ஏப்பிரல் மாதக்கடசியில அவர் போயிற்ரேரெண்டு தகவல் வந்தது அழுது முடிக்கிறதுக்கிடையில என்னைக் கூப்பிடுறாங்கள் நான் ஒளிச்சிட்டன் வீட்ட வந்தவங்கள் அண்ணன கொண்டு போயிற்ராங்கள் அவருக்கு ஒரு கைக்குழந்த என்னை அனுப்பினா அண்ணன விடலாமெண்டு அண்ணியட்ட சொல்லிப்போட்டு போயிற்ரினம். எனக்கு தகவல் கிடைக்குது வீட்டபோனா கத்திக் குளறிக்கொண்டு அண்ணி கிடக்கிறா.நான் என்னம் கலியாணம் கட்டயில்ல சரி நான் போய் அண்ணன எடுப்பம் எண்டு முடிவெடுக்கிறம் என்ர 17 வரிச வாழ்கையில நான் அண்டைக்குத்தான் பயந்தனான் 12 வயசில இருந்து இந்த கடல்ல நான் தொழிலுக்கு போறனான் ஒருநாளும் பயந்ததில்ல. அடுத்த நாள் காலையில தகவல் வருகுது அண்ணன் போயிற்ரேரெண்டு கொண்டு போய் ஒருகிழமைகூட ஆகயில்ல என்னவெல்லாமோ நடக்குது அண்ணியும் செத்தமாதிரித்தான். வீட்டில வேற பெரியாக்களும் கிடையாது எல்லாரும் சுனாமியில போயிற்ரினம் அந்தா அந்த நாலாவது சுவரில போட்டிருக்கிற பேர் எங்கட குடும்பத்தின்ர பேர்தான். (சுனாமியால் இறந்தவர்களின் பெயர்கள் அந்த மண்டபத்தின் தூண்களில் பதிக்கப்பட்டுள்ளது ) அண்ணை செத்து ஒரு கிழம போயிருக்கும் போர் மும்முரமா நடக்குது. என்னை வந்து பிடிச்சுக்கொண்டு போனாங்கள். ஆமிய தடுக்க போறதுக்கெண்டு துவக்கு தாறாங்கள் நான் வாங்கயில்ல என்ர குடும்பக் கதையெல்லாம் சொன்னன் அவங்கள் கேக்கயில்ல. நான் சத்தியம் பண்ணி சொல்லிப்போட்டன் என்னக் கொண்டாலும் சரி நான் துவக்குத் தூக்கமாட்டன் எண்டு. துவக்குத் தூக்கினாலும் சாகத்தான் போறன் தூக்காட்டியும் சாகத்தான் போறன் செய்யிறத செய்யட்டும் எண்டு நினைச்சுப் போட்டன். ஒரு கிழமையா தாங்கள் இடம்பெயரும் இடமெல்லாம் என்னையும் கொண்டு போச்சினம் ஒவ்வொருநாளும் கேப்பினம் துவக்க எடுக்கச் சொல்லி நானும் மாட்டன் எண்டுவன். கடசியா நாங்க இருந்த இடத்த சுத்தி வளைச்சு அடிக்கேக்க அவங்கள் எங்கள விட்டுட்டு ஓடீற்ராங்கள் நாங்க ஆமியட்ட சரணடைஞ்சம் எக்கச் சக்கமான ஆக்கள் ஆமியின்ர அடியில செத்து விழுந்தினம் நான் தப்புவன் எண்டு நினைக்கேல்ல ஒரு கொஞ்சப்பேர் தப்பிஓடி ஆமியட்ட சரணடைஞ்சிட்டம். வவுனியாவில வைச்சிருந்துபோட்டு பிறகு விட்டாங்கள் ". ஒரு நீண்ட பெருமூச்சு விடுகின்றார். உயிர் தப்பி விட்டது உழைக்கவேண்டும் என்ற ஓர்மம் இருக்கிறது. திருமணம் புரியாமலேயே குடும்ப பாரம் சுமக்கும் இளைஞன். அவன் வார்த்தைகளில் நம்பிக்கையும் நம்பிக்கையீனமும் தெரிகிறது. இது நான் சந்தித்த இளைஞன் இப்படி எத்தனை இளைஞர் யுவதிகள் முல்லைத்தீவெங்கும் இருக்கிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே.

சுனாமியால் இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வெள்ளம் அள்ளிக் கொண்டு சென்ற அந்த இடத்திலேயே அந்த மண்டபம் அமைந்திருக்கிறது.நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் குடும்பம் குடும்பமாக அங்குள்ள தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு மாபிள் போடப்பட்டு பளிங்கு மாளிகையாக காட்சியளிக்கும் அந்தக் கட்டிடம் வேறு எதற்குமே பயன் படுத்த முடியாதபடி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தைக் கொட்டி இதை செய்தவர்கள் ஏதாவது தேவைக்கும் பாவிக்க கூடியதாகவும் கட்டியிருக்கலாமே என்ற எண்ணம் என்மனதைக் குடைந்து கொண்டிருந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பொக்கணையை நோக்கிச்சென்றோம்.
பாலம் தொடங்கும் இடத்தில் ஆமியின் காவலரண் இருக்கிறது. வாகனத்தை நிறுத்தி அங்கு செல்ல வேண்டும் என்று கேட்டேன். போகமுடியாது என்று விட்டு ஏன் போக வேண்டும் என்று கேட்டார்கள். கடைசி யுத்தம் நடந்த இடம் அதைப் பார்க்கவேண்டும் என்றேன். அதற்குள் யாரையும் செல்ல அனுமதிக்க முடியாது என்றார்கள். பாலம் உடைந்து கிடக்கிறது அதைப்படம் எடுத்துக் கொண்டேன்.
நந்திக்கடலின் மறுபக்க கரையோரம் செல்ல அனுமதி தந்தார்கள் பல்லாயிரக் கணக்கானவர்களை பிணங்களாக தாங்கிக் கொண்ட அந்தக் கடல் அமைதியாக எதுவும் தெரியாதது போல் கிடந்தது.முல்லைத்தீவை விட்டுப்புறப்பட்டு பின் திருகோணமலைக்கு செல்லுகின்றேன்.

முதலில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு செல்கின்றோம். கம்பீரமாக காட்சி தருகிறது கோணேஸ்வரர் ஆலயம். கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந்தானே என்று பாடல்பெற்ற தலமல்லவா.
புதிதாக உயரத்தில் திருத்தவேலைகள் இடம் பெறுகின்றது. செல்லும் பாதையெங்கும் தெருவோரக்கடைகள் நிறைந்து காணப்படுகின்றன. கூடுதலாக சிங்கள் மக்கள் வாங்கும் உணவுப்பண்டங்கள்தான் அந்த கடைகளில் விற்கப்படுகின்றது. கடைகளும் அரைவாசிக்கு மேற்பட்டவைகள் சிங்களவர்களால் நடாத்தப்படுகின்றன. ஆலயத்திற்கு முன்பாக பானை வைத்துப் பொங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்களும் சிங்கள மக்களாகவே இருந்தார்கள். எங்கள் மக்கள் எங்கே என்று மனது கேட்கத் தொடங்கியது.

கோவிலின் அண்மையில் இருக்கும் இராவணன் வெட்டு அன்று போலவே இருக்கிறது. மலை பிளந்திருப்பதைப் பார்க்கும்போது அழகாகவும் இருக்கின்றது ஆச்சரியமாகவும் இருக்கின்றது. அவற்றைப்பார்த்துக்கொண்டு கன்னியா சென்றோம்.

கன்னியா வென்னீர் ஊற்று கிணறுகள் பெரிதாக கவனிக்கப்படாமல் கிடக்கிறது. அதிகமாக அங்கும் சிங்கள சுற்றுலா பயணிகள்தான் வந்து போகின்றார்கள். அறிவித்தல்களை மூன்று மொழியிலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஏதோ இந்த இடத்திற்கு வந்தபோது மனது வரண்டு விட்டதுபோல் தோன்றியது. கலகலப்பில்லாமல் காய்ந்து கிடப்பது போன்ற எண்ணமே ஏற்பட்டது.

கன்னியாவில் உள்ள தமிழர்களோடு உரையாடலாம் என்று பார்த்தால் அந்தப்பிரதேசமே ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்தது. வீதி என்ற பெயரில் மண் பாதைகள் அதுவும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. ஓரிடத்தில் ஒரு சிறிய கடையைக்கண்டு அந்தக்கடையில் இருந்தவருடன் உரையாடினேன்.

எங்கே மக்களைக்காணமுடியாமல் இருக்கின்றதே என்று கேட்டேன். "அவங்கெல்லாம் இடம்பெயர்ந்து போயிட்டாங்க. கன பேர் இந்தியாவில முகாம்வளிய இருக்காங்க வெளிநாட்டுக்கும் போயிருக்கிறாங்கள். சொட்டுச் சொட்டாதான் ஆக்கள் இருக்காங்கள்". என்று கூறி முடித்தார். பெரிய பிரதேசமே ஆட்களின்றி கிடக்கிறது. அத்தோடு இன்னொரு கதையையும் அவர் கூறினார். "மூண்டு மாசத்துக்குள்ள அவங்கவங்கள் வந்து காணியில குடியேறவேணும் குடியேறாதவங்களின்ர காணியள வேறாக்களுக்கு பிரிச்சுக் குடுக்கப்போறமெண்டு பொலிசு அறிவிச்சிருக்கு அதால ஆக்கள் பெரும் பாலும் வந்திருவாங்கள்" என்றார் அவர். ஆனால் இந்தக்காணிகள் ஆருக்கு பிரிச்சுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு விடைகாணமுடியாமல் மனம்ஏங்கியது. அந்தக் கடையில் நின்ற இன்னுமொருவர் கூறினார் தான் நிலாவெளியைச் சேர்ந்தவரென்றும் நிலாவெளியில் தமிழரும் முஸ்லீம்களும் சகோரமாய்த்தான் இருக்கிறம் எங்களுக்குள்ள ஒரு பிரச்சினையும் இல்லை என்றார் அத்தோடு நிலாவெளி நிறைய முன்னேறி விட்டது என்றார். ( கப்பல் துறை அமைச்சர் ஒரு முஸ்லிம்). நிலாவெளி சென்றபோது அவர் சொன்னது உண்மையாகவே பட்டது.

எனது பயணம் 2010 நவம்பர் மாதம் முதல் 2010 டிசெம்பர் மாதம் வரையில் இடம் பெற்றது. அதன் பின்பு பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை வாசகர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்தக் கட்டுரையின் 10 வது பாகம் இதுவாகும்


எனது இலங்கைப் பயணம் - பகுதி 11 

நிலாவெளி சென்றபோது வீதிகள் மிக நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளது தெரிந்தது. வீட்டுத்திட்டத்தில் பல வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அவை அமைக்கப்பட்டிருந்த முறை ஒரு திட்டமிட்ட குடியேற்ற அமைப்பாக காணப்படுகின்றது. தண்ணீர் வசதிக்காக கூரைமேல் வைக்கப்பட்டுள்ள நவீன தண்ணீர்தாங்கிகள் சோலா பவர் மின்சாரம். நெடுக்கும் குறுக்குமான வீதி இணைப்புக்கள் என்று வடிவமைக்கப் பட்டுள்ளதை பார்த்தபோது மீண்டும் முல்லைத்தீவில் அவசர அவசரமாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் நிலமை வேதனையாக இருந்தது. எங்கும் பச்சைப் பசேலென காணப்படுகின்றது. குறிப்பாக கமத்தொழில் நிலையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குட்டையான பப்பாசி மரங்கள் காய்த்திருக்கும் அழகு மகிழ்வை தருகிறது. இது போன்ற பழவகைகளை எல்லா இடங்களுக்கும் அறிமுகப்படுத்தினால் விவசாயம் பார்க்கும் மக்களின் வாழ்வாதாரம் மேம்மட வாய்ப்புள்ளது. 

நிலாவெளி தமிழ் மகாவித்தியாலயம் இயங்கிக் கொண்டிருந்தது மாணவர்கள் தொகையை அறியமுடியவில்லை. நிலாவெளியில் மகாவலிகங்கை கடலோடு சங்கமிக்கும் ஆற்றுப் படுகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலம் எல்லோரையும் கவர்ந்து நிற்கிறது.அந்தப்பாலத்தால் பாடசாலை சிறுமிகள் இருவர் விளையாடிக் கொண்டு செல்லும் போது அந்த நாள் ஞாபங்கள் நெஞ்சை வருடிச் சென்றது.
கப்பல் துறைமுகத்தின் அழகை வர்ணிக்கத் தேவையில்லை இயற்கையாக அமைந்த அழகு மனதை கவர்ந்திழுக்கின்றது. திருமலையிலேயே பெயர் பெற்ற நிலாவெளி கடற்கரையும் அதிலிருந்து 10 நிமிடங்கள் தோணியில் பிரயாணித்தால் வருகின்ற புறாமலை குளிக்கும் கடற்கரையும் அற்புதமாக இருக்கின்றது. எனது திருமலை நண்பர் பலமுறை அழைத்தும் போகக் கிடைக்காத அந்த புறாமலை கடற்கரைக்கு இந்த பயணத்தின் போது செல்லக் கூடியதாக இருந்தது. அந்த தண்ணீரையும் அதில் குளிக்கும் போது இருந்த சுகத்தையும் எந்தக் கடற்கரையிலும் நான் பெற்றிருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். Golden Beach  சும் Gova beach  சும் கோவளம் 
Beach

சும் இந்த புறாமலைக் கடலுக்கு அண்மையிலும் வரமுடியாது என்பதை எனது மனம் எண்ணிக்கொண்டது.


 நாம் பிறந்த நாட்டில் இப்படி அற்புதமான எத்தனை விடயங்கள் இருந்தும் அதை நெறிப்படுத்த முடியாத அரசும் அரசியல் வாதிகளும் இருந்து கொண்டுடிருப்பதை எண்ணிப்பார்க்க வேதனையாக இருந்தது.
திருகோணமலை பயணம் முடிந்து பின் சிகிரியா ஒவியத்தையும் கோல்டன் ரெம்பிளையும் பார்த்துவிட்டு ஹபரணையில் காட்டுக்குள் சுதந்திரமாக உலாவித்திரியும் காட்டு யானைகளை சென்று பார்த்தோம். கூட்டம் கூட்டமாக யானைகள் உலாவித்திரிந்ததை பார்க்கும் போது அந்த விலங்குகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட மனிதர்களுக்கு இங்கே கிடைக்கவில்லையே என்று மனம் எண்ணிக்கொண்டது.


கொழும்பு வந்த நாம் மீண்டும் யாழ் சென்று சிலநாட்கள் யாழ்நகரில் நின்றுவிட்டு திரும்பும் போது அந்த மண்ணை விட்டு போகின்றோமே என்ற ஆதங்கமும் அத்தோடு மீண்டும் இந்த மண்ணில் நடக்கும் சந்தர்ப்பம் ஏற்படுமா என்ற விடையில்லாத கேள்வி மனதில் எழ கொழும்பை நோக்கி புறப்படுகின்றோம். கவலையும் சந்தோசமும் ஒருங்கு சேரந்து மனதை வருடிச் செல்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் பங்கிற்கு செய்ய முடிந்த சில வேலைகளால் ஏற்பட்ட ஆத்ம திருப்தியும் சேர்ந்து கொள்ள என் பயணம் நிறைவுறுகின்றது. 

    
இந்தக் கட்டுரையின் 11 வதுபாகமும் இறுதிப்பாகமும்  இதுவாகும் இதன் முன்னைய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு இடப்பக்கத்தில் உள்ள மேலும் சில பக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் எனது இலங்கைப் பயணம் என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள். 1 comment:

  1. பாஸ்கரனின் பயணக்கட்டுரை திடீரென முடிந்து விட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது. மற்றைய இடங்களின் பதிவும் வரும் என எதிர்பார்த்தேன். தமிழ்ப்பிரதேசங்களோடு முடித்து விட்டதற்கான காரணம் என்ன? சிறப்பான ஒரு பதிவு. சிலர் ஒரு பக்கத்தை குறை சொல்லியதாக நினைப்பார்கள் இன்னும் சிலர் மற்றப்பக்கத்தை குறைசொல்லியதாக நினைப்பார்கள். அது நீங்கள் சரியாக பார்த்துள்ளீர்கள் என்பதற்கான அத்தாட்சி. நிறைய எழுதவேண்டும்போல் உள்ளது ஆனால் தமிழில் தட்டதெரியாதுள்ளது.
    Reply