உலகச் செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 16 பேர் பலி 

ஆர்மேனியா-அசர்பைஜான் மோதல்: பொதுமக்களுடன் 100 பேர் வரை பலி

ஹோட்டலை விமர்சித்தவர் சிறை செல்வதற்கு வாய்ப்பு

ஆப்கான் குண்டு வெடிப்பில் 14 பொதுமக்கள் உயிரிழப்பு

இரட்டை குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

அசர்பைஜான்–ஆர்மேனியா இடையே இரண்டாவது நாளாக உக்கிர மோதல்

மெக்சிகோ மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி

15 இல் 10 ஆண்டுகள் வரி செலுத்தாத டிரம்ப்

இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான்

ட்ரம்ப் இராணுவ வைத்தியசாலையில் அனுமதி


நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 16 பேர் பலி 

தென்மேற்கு சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் சிக்கிய பதினாறு சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதோடு மேலும் ஒருவர் உயிரிக்கு ஆபத்தான நிலையில் சிக்கிச்சை பெற்று வருகிறார்.

பொருட்களை எடுத்துச் செல்லும் பட்டை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீயினால் ஆபத்தான அளவில் காபனோரொக்சைட் வெளியானதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று சீன அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிவது தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கியுஜியாங் மாவட்ட அரசு, சமூக ஊடகமான வெய்போவில் தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற சொங்சோ நிலக்கரிச் சுரங்கம் அரச எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். எனினும் மோசமான பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாடுகள் காரணமாக சீனாவில் சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

தென்மேற்கு குயின்சு மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிலக்கரி மற்றும் எரிவாயு சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





ஆர்மேனியா-அசர்பைஜான் மோதல்: பொதுமக்களுடன் 100 பேர் வரை பலி

ஐ.நா பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டம்

சர்ச்சைக்குரிய நகோர்னோ–கரபக் பிராந்தியத்தில் ஆர்மேனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கு இடையே நீடிக்கும் உக்கிர மோதல்களில் பொதுமக்கள் உட்பட சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மலைப்பிராந்தியம் அசர்பைஜானின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டபோதும், 1994 இல் போர் முடிந்தது தொடக்கம் ஆர்மேனியர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நீடிக்கும் மோதல்களில் 84 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதோடு பொதுமக்கள் பலரும் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமது இராணுவத்தின் இழப்புப் பற்றி அசர்பைஜான் தகவல் வெளியிடாதபோதும் தமது தரப்பில் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அது உறுதி செய்துள்ளது.

நான்கு நாட்களுக்கு முன் இங்கு மோதல் வெடித்த நிலையில் அது தற்போது நகோர்னோ–கரபக் பிராந்தியத்திற்கு வெளியில் பரவியுள்ளது.

ஆர்மேனியாவின் கிழக்கு நகரான வார்டனிஸில் அசர்பைஜான் ஆளில்லா விமானம் ஒன்று பயணிகள் பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஆர்மேனிய பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.

அசர்பைஜான் மீது கடந்த திங்கட்கிழமை ஆர்மேனியா நடத்திய பீரங்கி தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அசர்பைஜான் முன்னதாக குறிப்பிட்டது. இதற்கு முந்தைய தினம் அசர்பைஜானில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பிராந்தியத்தில் இடம்பெறும் தீவிர மோதலாக இது மாறியுள்ளது.

இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா பாதுகாப்புச் சபை நேற்று அவசரமாகக் கூடியது.

அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா இரு நாடுகளும் ஏற்கனவே அதிக படைகளை குவிக்க ஆரம்பித்திருப்பதோடு சில பகுதிகளில் இராணுவச் சட்டத்தையும் பிரகடனம் செய்துள்ளன. மோதலை ஆரம்பித்ததாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.

மூலோபாயம் கொண்ட காகசஸ் பிராந்தியத்தில் வெடித்திருக்கும் இந்த மோதலில் ஏனைய நாடுகளும் நேரடியாக தலையிடும் அச்சுறுத்தல் பற்றிய கவலை அதிகரித்துள்ளது.

துருக்கி ஏற்கனவே அசர்பைஜானுக்கு ஆதரவை வெளியிட்டிருப்பதோடு, ஆர்மேனியாவில் இராணுவத் தளத்தை வைத்திருக்கும் ரஷ்யா, உடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மறுபுறம் அண்டை நாடான ஈரானும் இந்த சிக்கலில் தலையிட வாய்ப்பு உள்ளது.

இந்த பிராந்தியத்தின் ஊடாகவே எண்ணெய் மற்றும் எரி வாயு உலக சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா ஆகிய இரு நாடுகளும், ஒருங்கிணைந்த சோவித் ஒன்றியத்தின் பகுதிகளாகக் கடந்த காலங்களில் இருந்து வந்தன. 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றிய கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பின்னர் ஆர்மேனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக உருவாகின.

இதில் ஆர்மேனியாவில் கிறிஸ்துவ மதத்தினரும், எண்ணெய் வளம் மிகுந்த அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர்.

இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ–கரபக் என்ற சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் 1988ஆம் ஆண்டு முதல் மோதல் நடைபெற்று வருகிறது. 1994ஆம் ஆண்டு இந்தச் சண்டை முடிவுக்கு வந்தது.

இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.

போரின் முடிவில் அந்த நகோர்னோ–கரபக் பிராந்தியம் அசர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் பிரிவினைவாத ஆர்மேனிய இனத்தவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆர்மேனிய அரசு இவர்களைக் கட்டுப்படுத்துகிறது.      நன்றி தினகரன் 






ஹோட்டலை விமர்சித்தவர் சிறை செல்வதற்கு வாய்ப்பு

தான் தங்கி இருந்த ஹோட்டல் ஒன்று பற்றி இணையதளத்தில் பாதகமாக விமர்சித்த அமெரிக்கர் ஒருவர் தாய்லாந்தில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் உள்ள கடுமையான அவதூறு எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வொஸ்லி பார்ன்ஸ் என்ற அந்த அமெரிக்கர் மீது குறித்த ஹோட்டல் வழக்குத் தொடுத்துள்ளது. தாய்லாந்தில் பணிபுரியும் பார்ன்ஸ் பல்வேறு இணையதளங்களிலும் மோசமான விமர்சனங்களை வெளியிட்டிருப்பதோடு அந்த ஹோட்ட நவீனகால அடிமைத்தனம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமது முன்னாள் விருந்தினரின் இந்தக் கடுமையான விமர்சனத்தால் தமது ஹோட்டலின் புகழுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்தக் கடற்கரையோர ஹோட்டல் குறிப்பிட்டுள்ளது. ஹோட்டல் மீது நியாயமற்ற விமர்சனங்களை பதிவிட்டதாகவே ஹோட்டல் உரிமையாளர் வழக்குத் தொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சில நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பார்ன்ஸ், பின்னர் பிணையில் விடுதலையானார்.

எனினும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.     நன்றி தினகரன் 






ஆப்கான் குண்டு வெடிப்பில் 14 பொதுமக்கள் உயிரிழப்பு

மத்திய ஆப்கானிஸ்தானில் நேற்று இடம்பெற்ற வீதியோர குண்டு வெடிப்பு ஒன்றில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

டாய்குடி மாகாணத்தில் வாகனம் ஒன்று கண்ணிவெடியில் சிக்கி ஏழு பெண்கள், ஐந்து சிறுவர்கள் மற்றும் இரு ஆண்கள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் தாரிக் ஆரியன் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் இரு சிறுவர்கள் காயம் அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கட்டார் தலைநகர் தோஹாவில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த போதிலும் ஆயுத மோதல்கள் மற்றும் குண்டு வெடிப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அரசாங்கம் இடையிலான பேச்சுவார்த்தை செப்டெம்பர் 12 அன்று ஆரம்பமானது. ஆப்கானிஸ்தானில் நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பாதுகாப்பான மற்றும் நீண்டகால யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.    நன்றி தினகரன் 





இரட்டை குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

இந்தோனேசிய நிலச்சரிவு:

இந்தோனேசியாவின் தரகான் வட்டாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 மாத இரட்டைக் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசிய அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

கனத்த மழையும் பலத்த காற்றும் வீசியதைத் தொடர்ந்து, தரகான் வட்டாரத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் சில வீடுகள் புதையுண்டதோடு 19 வீடுகள் சேதமடைந்தன.

உயிரிழந்த 11 பேரில் ஐவர் குழந்தைகளாகும். மேலும் நால்வர் உயிரோடு மீட்கப்பட்டனர்.

இந்தோனேசியாவில் நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளமும் ஏற்படுவது வழக்கம். அங்கு சுமார் 125 மில்லியன் பேர் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பதாக அந்நாட்டின் பேரிடர் ஆணையம் மதிப்பிடுகிறது.

அந்த எண்ணிக்கை இந்தோனேசிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியாக உள்ளது.   நன்றி தினகரன் 





அசர்பைஜான்–ஆர்மேனியா இடையே இரண்டாவது நாளாக உக்கிர மோதல்

ஆர்மேனியா மற்றும் அசர்பைஜான் படைகள் இரண்டாவது நாளாக நேற்றும் உக்கிர மோதலில் ஈடுபட்டதோடு, கனரக பீரங்கிகளை பயன்படத்தியதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.

அசர்பைஜான் நாட்டுக்குள் இருக்கும் ஆனால் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் ஆர்மேனிய இனத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய நகொர்னோ–கரபக் பிராந்தியம் தொடர்பிலேயே தற்போதைய மோதல் வெடித்துள்ளது.

இந்த மோதல்களில் மேலும் 15 துருப்புகள் கொல்லப்பட்டதாகவும் கடந்த ஞாயிறன்று இழந்த சில நிலங்களை மீட்டதாகவும் ஆர்மேனியா குறிப்பிட்டுள்ளது. அங்கு அசர்பைஜான் படைகள் கடும் பீரங்கி தாக்குதல் நடத்துவதாக அது குறிப்பிட்டுள்ளது.

டெர்டர் நகரின் மீது ஆர்மேனிய படை கடும் பீரங்கி தாக்குதல் நடத்தியது என்று அசர்பைஜான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் 26 பொதுமக்கள் காயமடைந்திருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

அசர்பைஜான் வான் மற்றும் பீராங்கி தாக்குதல்களை நடத்தியதில் தமது 31 படையினர் கொல்லப்பட்டு 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக கொர்னோ–கரபக் ஆர்மேனிய பிரிவினைவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு நாடுகளும் பகுதி அளவான இராணுவக் குவிப்பு மற்றும் சில பகுதிகளில் இராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்துள்ளன.

இரண்டு முன்னாள் சோவியட் ஒன்றிய நாடுகளுக்கும் இடையே காகசஸ் மலைத் தொடரில் உள்ள இந்த பிராந்தியத்தை ஒட்டிய பிரச்சினை கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருப்பதோடு அங்கு அடிக்கடி மோதல்களும் இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஜூலையில் இடம்பெற்ற எல்லை மோதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அந்தப் பிராந்தியத்தை மீண்டும் கைப்பற்ற அழுத்தம் கொடுத்து அசர்பைஜான் தலைநகரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

காஸ்பியன் கடலில் இருந்து உலக சந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை விநியோகிக்கும் குழாய் பாதை தெற்கு காகசஸ் ஊடாகச் செல்வதால் இந்த பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றம் அந்த விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

இதில் அசர்பைஜானுக்கு ஆதரவு வெளியிட்டிருக்கும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், “ஆக்கிரமிப்பு மற்றும் கொடுமைக்கு எதிராக உலகம் நிற்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட அசர்பைஜான் துருக்கியுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது.

கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஆர்மேனியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா, உடன் போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவரவும் பேச்சுவார்த்தை மூலம் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்யா தனது இராணுவத் தளத்தையும் ஆர்மீனியாவில் வைத்துள்ளது.

இரு தரப்பையும் அமைதி காக்கும்படி சீனா வலியுறுத்தியுள்ளது. இந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த மோதலில் பிராந்திய சக்திகளும் தலையிடும் அச்சமும் தற்போது அதிகரித்துள்ளது.   நன்றி தினகரன் 





மெக்சிகோ மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி

மக்கோசிகோவில் மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பெண்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி குண்டுகள் துளைத்த உடல்கள் மீட்கப்பட்டதாக அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜலிஸ்கோ என்ற குற்றக்கும்பல் ஒன்று ஊடுருவும் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த மதுபான விடுதியில் நடனமாடும் நான்கு பெண்களே கொல்லப்பட்டிருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொலைகளுக்கான காரணம் தெரியாதபோதும் போதைக் கடத்தலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மெக்சிகோவில் அதிக வன்முறை கொண்ட மாநிலமாக குவானாஜுவாடோ அண்மைய ஆண்டுகளில் மாறியுள்ளது. எனினும் இங்குள்ள குற்ற கும்பல் தலைவன் ஒருவன் கடந்த ஓகஸ்ட் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் இங்கு வன்முறைகள் குறையும் என்று உள்ளுர் நிர்வாகம் நம்பியது.

எனினும் அந்தத் தலைவனின் இடைவெளியை நிரப்புவதில் குற்ற கும்பலுக்குள் ஏற்பட்டிருக்கும் மோதலால் வன்முறை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





15 இல் 10 ஆண்டுகள் வரி செலுத்தாத டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தியதில்லை என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தகவல் அளித்துள்ளது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அவர் வெறுமனே 750 டொலர் வரியே செலுத்தி இருப்பதாக வரி வருவாய் தரவுகளை மேற்கோள்காட்டி அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தத் தகவலை டிரம்ப் ‘போலிச் செய்தி’ என்று வர்ணித்துள்ளார். வருமானத்தை விட தமக்கு இழப்பு அதிகம் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தது, வரி விதிக்கப்படாததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் தனிப்பட்ட நிதி கணக்குகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதற்கான சட்டரீதியான தேவை இல்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனை அடுத்து அந்தப் பொறுப்பில் இருந்த அனைவரும் தங்கள் நிதி தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளனர். டிரம்ப் மட்டுமே இதுவரை அந்த வழக்கத்துக்கு மாறாகச் செயல்பட்டுள்ளார்.  நன்றி தினகரன் 





இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான்

இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எவ்வாறு ஆதரிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய பாதுகாப்பு முகவர்கள் தயாரித்த சமீபத்திய அறிக்கையில் இந்திய நேபாள எல்லையில் தீவிர நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, பீகார் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய-நேபாளத்தில் ஏராளமான மசூதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகளுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தாவத்-இ-இஸ்லாமியா என்ற அமைப்பால் நிதியளிக்கப்படுகின்றன, மேலும் இந்த மசூதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளத்தின் தாவத்-இ-இஸ்லாமியா கிளைகளால் நிதியளிக்கப்படும் இந்த நிறுவனத்தின் திட்டத்தின் செலவு ரூ1.25 கோடி என்று அறிக்கை கூறுகிறது.

"ரவுட்டாஹாட், பார்சா, கபிலவஸ்து, சன்சாரி மற்றும் பரா ஆகிய எல்லை மாவட்டங்களில் வந்துள்ள வெளிநாட்டு நிதியுதவி கொண்ட மதரஸாக்கள் மற்றும் மசூதிகள் நேபாளத்தில் தண்டனையின்றி செயல்படும் இந்திய எதிர்ப்பு சக்திகளின் நரம்பு மையங்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் தவாத்-இ-இஸ்லாமியா விருந்தினர்களை தங்க வைக்க இரண்டு மாடி விருந்தினர் மாளிகை கட்டப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த எல்லைப்புற மாவட்டங்களில் வாழுபவர்கள் நேபாளத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் அளிக்கின்றன, இது இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும். இந்தோ-நேபாள எல்லையில் இஸ்லாமிய நடவடிக்கைகள் அதிகரிக்கிறது என்று அதிகாரி கூறினார். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு லஷ்கர்-இ-தைபாவும் நேபாள எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளை குறிவைத்து உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் பைசாபாத்தில் ஒரு தளத்தை உருவாக்க முயற்சிக்கிறது.   நன்றி தினகரன் 





ட்ரம்ப் இராணுவ வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த 30ஆம் திகதி நடந்த பிரச்சார நிகழ்ச்சியின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சென்றிருந்தார். 
 
இதனால், டொனால்ட் ட்ரம்பும் (74) அவரது மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளை மாளிகையில் இருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு  நேற்று முதல் லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 
 
காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வருவதால் மேலதிக சிகிச்சைக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய இராணுவ வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,  வால்ட் ரேட் மருத்துவமனையை சென்றடைந்தார். 
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்படுள்ளார் எனவும், சில நாட்கள் அவர் வைத்தியசாலையில்  சிகிச்சை பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, வைத்தியசாலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  அனுமதிக்கப்பட்டாலும், அவரது  அதிகாரங்கள் தொடர்ந்து அவரிடமே  இருக்கும் எனவும், தனது பணிகளை அவர் தொடர்ந்து கவனிப்பார் எனவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 
 





No comments: