புதியதோர் உலகமதை செய்திடுவோம் வாருங்கள் !

கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

ஓடிவரும் நதியெல்லாம் வேறுபெயர் கொண்டாலும்
சேருமிடம் கடலெனவே சிந்தையிலே இருத்திடுவோம் 
மாறுபடு கொள்கையினால் கூறுபடு மனிதவினம் 
சீரழிந்து சிறபழிந்து சிதறுண்டு போகிறதே 

புற்றீசல் போலவே பொல்லாத எண்ணங்கள் 
புறப்பட்டு புறப்பட்டு  புண்ணாக்கி நிற்கிறது
கற்றிடுவார் கசடுவறக் கற்காத காரணத்தால்
கண்ணியமோ காற்றிலே பறந்துவிடக் காணுகிறோம் 

புதியதோர் உலகமதை செய்திடுவோம் எனவுரைக்கும்
மதியுரைஞர் பலரிருந்து வரவவரும் மறுக்கின்றார்
தனியுடமை எனுமுணர்வு தலையெடுத்து அவர்வரவை
தடுப்பணைகள் போடுவதை தானிப்போ காணுகிறோம் 

வேண்டாத பலவற்றை விரும்பி யேர்க்கும் நிலையிருக்கு
விளங்காத விடயத்தை வெறியுடனே திணிக்கின்றார்
ஆண்டுநிற்கும் தலைமைகளோ ஆளுமையை இழக்கின்றார்
ஆண்டாண்டாய் அவலங்கள் ஆலகால மாகிறதே 

புதியதோர் உலகமதை படையென்றார் வள்ளுவனார்
புதியதோர் உலகமதை காணுவென்றார் பாரதியார்
புதியதோர் உலகமதை செய்யென்றார் புரட்சிக்கவி 
புதியதோர் உலகமதை செய்திடுவோம் புறப்படுங்கள் 

மதுவென்னும் அரக்கனை மனமிருந்து  அழித்திடுவோம்
மதமென்னும் வெறியதனை மண்ணைவிட்டே ஒழித்திடுவோம்
மனிதமெனும் மாண்புதனை மண்மீது நிறுத்திடுவோம்
புதியதோர் உலகமதை செய்திடுவோம் வாருங்கள் 

மங்கையரை தெய்வமாய் மதிக்கின்ற மனநிலையை
மாநிலத்தில் நிலைநிறுத்த மாசட்டம் இயற்றிடுவோம்
மாசுடையோர் மங்கையரை மழுங்கடிக்கும் நிலையகல
புதியதோர் உலகமதை செய்திடுவோம் வாருங்கள் 
 
படிப்பறியார்  படிப்புலகைப் பார்த்துவிட வைத்திடுவோம்
பணமறியார் மடியகல பலவழிகளில் படைத்திடுவோம் 
பறித்துண்பார் வழிமாற பலபடிகள் கண்டிடுவோம்
புதியதோர் உலகமதை செய்திடுவோம் வாருங்கள் 

கல்வியொடு மருத்துவத்தை கண்ணியமாய் ஆக்கிடுவோம்
காவலொடு நீதித்துறை கசடகற்ற முனைந்திடுவோம்
கலையூடாய் பண்பாடு கலாசாரம் வளர்த்திடுவோம்
புதியதோர் உலகமதை செய்திடுவோம் வாருங்கள் 

புதியதோர் உலகமதை செய்திடுவோ மெனுமெண்ணம்
பதியவிட  வைப்பதற்கு பக்குவத்தை வளர்த்திடுவோம் 
களைகளைந்து பயிர்காப்போம் கரிசனையாய் ஒன்றிணைவோம்
புதியதோர் உலகமதை செய்திடுவோம் வாருங்கள்  

 No comments: