வித்தகத் தமிழ் வேள்வி விளைத்த புதுத் தலைமுறை பரமபுத்திரன்

     


ளையோர் மத்தியில் தமிழை விதைக்க பலபேர் உலகில் முயல்தல் அறிவோம். அதியுயர் நிலையில் உள்ளவர் பலர் ஆங்கிலத்தில் எழுதி தமிழ் என்று வாசிப்பது எங்கள் காதுகள் செய்த பாவத்தின்  சம்பளம் எனலாம்.    காலத்திற்கேற்ப கருத்துகள் செறிந்து ஞாலத்தில் நல்ல தமிழ்  தலைமுறை செழிப்புடன் எழுந்து வனப்புடன் நிலைக்க விதையிடல் மட்டும் போதுமன்று அதனை வளர்த்து விடுதல் அதனிலும் முக்கியம். ஆதலால் புதிய தலைமுறையை இணைத்து, திகடசக்கர வித்தகத் தமிழ்  வேள்வி என்னும் நிகழ்வினை இணைய மூலம்  நாடாத்தியுள்ளது. இங்கு விவாத அரங்கு எனும் நிகழ்வை உருவாக்கி நிகழ்வில்  வாதி அல்லது பிரதிவாதி ஐந்து நிமிடங்களுக்குள் தனது அறிவுசார்ந்த வாத மற்றும் பேசு  திறமையை வெளிக்காட்டலாம். இந்த முயற்சி திகட சக்கர குழுவினர்க்கு மட்டுமல்ல அதில் பங்கு பற்றிய போட்டியாளர்களுக்கும் நற்பலன் தந்துள்ளது என்று கூறலாம். வெற்றி தோல்வி என்ற தலைப்பை நீக்கிவிட்டு அவதானித்தால்  புதிய போட்டியாளர்கள், புதிய தலைப்புகள், புதிய களம் என்று அமைத்து, தேவையற்ற பேச்சுக்களைத்  தவிர்த்து, அவை எல்லாவற்றையும் வென்று, வித்தகத் தமிழ்  என்று பெயர் வைத்துக்கொண்டு புதிய இளைய தமிழர் தளத்தை உலக மட்டத்தில்  வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் பாராட்டலாம்.   



இந்த விவாத அரங்குகளில் மொத்தமாக இலங்கை, இந்தியா, மலேசியா, அவுத்திரேலியா என நான்கு அணிகள் பங்குபற்றி இருந்தன. ஒவ்வொரு அணியிலும் மூன்று போட்டியாளர்கள் மொத்தம் பன்னிருவர் பங்குபற்றினர்.   அதில்  இலங்கை அணியின் சார்பாக  சுகுமாரன் சுஜன், சனாதனி குகறாஜன், இரவிச்சந்திரன் கிருசாந்தன் ஆகியோரும்,   இந்திய அணியின் சார்பாக நா. அருண், நாகமுத்து பாண்டியன், அ. டேனியல்வில்சன் ஆகியோரும்,  மலேசிய அணியின் சார்பாக  அகிலன் திலிப்குமார், கோபிகாஸ்ரீ நண்பழகன், சுகுமார் தேவேந்திரன் ஆகியோரும்,    மற்றும் அவுத்திரேலியா அணியின் சார்பாக மாதுமை கோணேசுவரன், குமரகுருபரன் ஜனார்த்தனன் பருணிதன் இரங்கநாதன் ஆகியோரும் விவாதத்தில் களமிறங்கினர். இப்போட்டியினை ஒழுங்கமைத்த திகட  சக்கர போட்டியாளர்களுக்கு வழங்கிய பரிசுகள் பங்குபற்றிய போட்டியில்  வெற்றி  பெற்ற அணி, சிறப்புப் பேச்சாளர் என்பவற்றுடன் மக்களின் பாராட்டுக்களும் ஆகும். ஆனால் போட்டியாளர்கள் சளைக்காது போட்டிகளில் பங்குபற்றினார்கள். வெல்லவேண்டும் என்று போட்டியிட்டார்கள் ஆனால் தோல்வி பற்றிக்  கவலை கொண்டதாகத்  தெரியவில்லை. அது மட்டுமல்ல, போட்டிகள் யாவும் முடிந்த பின்பு போட்டியாளர்கள் ஒன்றுகூடலில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் தாம் கண்டு மகிழ்ந்த சிறப்புகளையும்   கூறினார்கள்.      அவர்களின் கூற்றுகள்  இளையவர்கள் எவ்வளவு அறிவியல் முதிர்ச்சி பெற்றவர்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. காரணம் தங்கள் விவாதத் திறமைகளை காட்ட விருப்பம் கொண்ட போதும் மற்றவர்களின் திறமைகளை மதிக்கவும் தவறவில்லை. கைதட்டலை  எதிர்பார்க்கவில்லை நல்ல கருத்துகளை சொல்வதில் ஆர்வம் காட்டினர். 

அதேவேளை இந்திய விவாத அணி இறுதி நாள் ஒன்று கூடலில்  பங்குபெறவில்லை. ஒருவேளை இதற்கு காரணம் அவர்கள் தோற்றமை என்று இருந்தால் அவர்கள் ஏனைய ஒன்பது போட்டியாளர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளவேண்டியது  அதிகம் உண்டு என்று மட்டும் சொல்ல முடியும். நாம் தோற்றாலும் பரவாயில்லை வென்றவர்களை பாராட்டுவோம் என்ற மனநிலை அவர்களுக்கு வரவில்லை. இந்த வகையில் மலேசிய அணியினர் உண்மையில் வணக்கத்துக்குரியவர்கள். இனிப்  போட்டிகள் தொடர்பாகப் பார்ப்போம்.      





முதலில் தலைப்புகள். விவாதத் தலைப்புகள் தமிழை மட்டும் முக்கியமாக கொள்ளாது உலக ஒழுங்குடன் தமிழர்களை இணைக்கவும் முயற்சித்துள்ளது என்று கூறலாம். பேச்சாளர்களும் தனித்து தமிழினை மையமாகக் கொண்டு விவாதிக்காது வெவ்வேறு மொழிகளின் செய்திகளையும் இணைத்துக் கூறினார்கள். அதுமட்டுமல்ல சிறப்பான தலைப்புகளுடன், இளம்  பேச்சாளர்களும் பங்கு பெற்றமையால் இளைய தலைமுறையும் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தது என்று சொல்லமுடியும். சுற்று ஒன்றில் இன்றைய குழந்தைகளுக்கு புதிய ஆத்திசூடியை விட பழைய ஆத்திசூடியே உகந்தது/ இல்லை மற்றும் பக்தி இலக்கியத்தால் பெரிதும் பெருமை கொள்வது தமிழைவிட சமயமே /இல்லை எனவும்,  சுற்று இரண்டில் முற்று முழுதான சனநாயகம் சமூக முன்னேற்றத்துக்கு தடையாகும்/இல்லை, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் மூன்றாம் உலக நாடுகளுக்கு நன்மையே/இல்லை எனவும், சுற்று மூன்றில் தமிழினம் சார்வினுக்கெல்லாம் தகத்தக மாறித் தன்னை தகவமைக்கிறது/இல்லை. மற்றும் தமிழர்கள் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது மெய்யியலை விட அறிவியலிலேயே /அல்ல எனவும் விவாதம் புரிந்தார்கள்.   இறுதிப்  போட்டி மனித வாழ்வியலில் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கான உணர்வு ரீதியான இடம் வழங்கப்பட்டுள்ளது/ இல்லை என்பதாக அமைந்திருந்தது.   அனைத்துப் போட்டியாளர்களும் ஒருவருக் கொருவர் எதிராக  இறுதிப் போட்டிவரை கருத்துக்களை முன்வைத்து விவாதித்தமை சிறப்பு என்று கூறலாம். வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் தொடர்ந்து தங்களை நிலைநிறுத்தப்  போட்டியிட்டமை பாராட்டக்கூடியது. “தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உண்டு”  என்கிறார் லெனின். இருப்பினும்  இன்றைய  காலம் மாறுபட்டது. எதையும் நன்று என்று சொல்வதை மட்டுமே ஏற்கும் எண்ணம் எல்லோரிடமும் வலுப்பட்டு விட்டது. எம்மிடம் காணப்படும் குறை என்னவென்று கண்டு திருத்துவதை பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. எனவே நாமும் நன்று என்று நிறைவு செய்தலே நன்று என நினைக்கின்றேன். எல்லாப் போட்டிகளுக்கும்  மூன்று நடுவர்கள் இணைந்து தீர்ப்பு வழங்கினர். ஆனால் இறுதிப்போட்டியில் ஒரு நடுவர் மட்டுமே நடுநிலை வகுத்தார்.  இறுதிப்போட்டியில் அவுத்திரேலியா அணியும் இலங்கை அணியும் பங்குபற்றி அவுத்திரேலிய அணி வெற்றி பெற்றது.  போட்டிகள் யாவற்றையும்  இணையதளத்தில் காணமுடியும்.   



 

No comments: