அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 34 – தேவதுந்துமி/உருமி – சரவண பிரபு ராமமூர்த்தி


தேவதுந்துமி/உருமி – தோற்கருவி தேவதுந்துமி, உருமி மற்றும் பழங்குடியினர் உருமி ஆகியவை உருமி என்கிற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டாலும் இசைக்கப்படும் முறையிலும், அமைப்பிலும் தோலிலும் வேறுபாடுகள் உடையவை.  தேவதுந்துமி - தேவதுந்துமி இசைக்கருவி ராஜகம்பள நாயக்கர் சமூக மக்கள் பயன்படுத்துவது. உருமி போன்ற பொது அமைப்பை உடையது. உருண்டை வடிவமான தோற்றமும் நடுவில் குறுகியும் ஓரங்களில் பருத்தும் இருக்கும். உடல் பகுதி வேங்கை மரத்தில் செய்யப்படுகிறது. குறுகிய பகுதியில் இரண்டு சிறிய ஓட்டைகள் இருக்கும். காற்று சுழற்சிக்கு அமைக்கப்படும் இது இக்கருவியின் ஒலியை சீராக்குகிறது. உடுக்கையை பெரிதுபடுத்தி நினைத்துப் பாருங்கள் அந்த வடிவம் தான் தேவதுந்துமியினுடையது. இந்த உடுக்கை வடிவமான பலகையில் இரண்டு பக்கமும் தோல் வார்க்கப்படும். முகத்தின் அளவு 9 இன்ச். மூன்று மாத  வெள்ளாட்டு தோலை நன்கு காயவைத்து,

வட்டமாக  கத்தரித்து  வேங்கை மரப்பலகையில்  கட்டப்படும். கட்டும்போது முறையாக நிதானமாக கட்டவேண்டும். கொஞ்சம் இழுத்து கட்டினால், தோல்பகுதி சிதிலடைந்துவிடும். இடப்பக்கத் தோலில் வளைந்த நொச்சி குச்சியை அழுத்தி இழுத்து உராய்ந்து ஓசை எழுப்புவர். வலப்பக்கத் தோலில் வளைந்த விராலி அல்லது புரசன் குச்சியைப் பயன்படுத்தி அடித்து ஒலி எழுப்புவர். தேவதுந்துமி இசை ஒலி வருவதற்கு கருவியில் இருக்கும் தோலில் உண்ணங்குடி/கிளுவை கொடியின் பாலை சேகரித்து விளக்கெண்ணெயுடன் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். தேவதுந்துமியின் ஒங்கார ஒலிக்கு இந்த உண்ணங்குடி பால் தான் மிக முக்கியம். எப்பேர்ப்பட்ட பனி, மழை காலங்களில் கூட இந்த உண்ணங்குடி பால் கருவியின் தோலில் தேய்த்தால் ஒலி அதிர்வு பல மைல் கேட்கும்.  உருமி : பம்பை இசைக்கருவியை விட நீளமானது உருமி. வேங்கை, மா அல்லது பலா மரத்தில் செய்யப்படும். வேங்கை மரம் எல்லாம் இப்பொழுது கிடைப்பதில்லை என்கிறார்கள் கலைஞர்கள். உடல்பகுதி நடுவில் சற்று குறுகி இருக்கும். இதற்கும் ஆட்டுக்குட்டியின் தோல் தான். உருமும் பகுதி மைக்கு அறுமுக களிம்பு(நாட்டு மருந்து), கண்மை அல்லது வண்டி மை பயன்படும். 

வைக்கோலை எரித்து விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் கலக்க வண்டி மை தயார். தேவதுந்துமியை விட இதன் முகங்கள் சிறியதாக இருக்கும்(7 இன்ச்).   பழங்குடி உருமி: ஆதியன்(பூம்பூம் மாட்டுக்காரர்) பயன்படுத்


தும் உருமி இடை சுருங்காமல் உருளை வடிவத்தில் தான் இருக்கின்றது. இதன் முக அளவு சுமார் 5 இன்ச். சில ஆதியன்களிடம் மிகப்பழைமையான(100 ஆண்டுகள்) மர உருமிகள் உள்ளன. ஆதியன்கள் பயன்படுத்தும் உருமி தான் உருமிகளில் மிகச் சிறியது. ஆதியன்களின் உருமி மாட்டுக் குடலின் சவ்வு பகுதியை கொண்டு மூட்டப்படுகிறது. இவர்கள் உருமியில் தடவும் மை மிக வித்தியாசமானது. ஆட்டின் முதுகெலும்பில் இருந்து எடுக்கப்படும் ஒரு கொழுப்பை மூங்கில் குடுவையில் அடைத்து வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் உருமியில் தடவிக் கொள்கிறார்கள்.  இந்த மை துர்நாற்றம் மிகுந்தது. (சொன்னவர் புதுவை அடுத்த திருசிற்றம்பலம் ஆதியன்). சாட்டையடி நாயக்கர்கள்(சோளகா) பயன்படுத்தும் உருமியும் உண்டு. யாசக சமூதாயமாக விளங்கும் இவர்கள் வசதி குறைவினால் தகரத்தில் கூட உருமி கட்டிகொள்கிறார்கள்.   காடர், புலையர், முதுவர், சொளகர், மலசர் ஆகிய பழங்குடிகள் தங்களது மற்ற அடையாள இசைக்கருவிகளுடன் உருமியையும் இசைத்து நடனம் ஆடுகிறார்கள். இவர்கள் பயன்படுத்தும் உருமி சமதள மக்களின் உருமியை விட சற்று சிறியதாக இருக்கின்றது மரத்தால் செய்யப்படுவது. முதுவர் பழங்குடிகள் உருமியை உறும்பசி என்று அழைக்கிறார்கள். சொளகர் மொழியில் உறும்புக்கட்டை என்று வழங்குகின்றது.   ஏலகிரி, ஜவ்வாது மலைகளில் வாழும் மலையாளி பழங்குடிகளின் விழாக்களில் உருமி இசைக்கிறார்கள். இது உருளை வடிவில் உள்ளது. பொங்கல் மற்றும் இவர்களின் நாச்சியம்மன் போன்ற தெய்வங்களின் கோவில்களில் சேர்வையாட்டம் எனப்படும்

நடனம் ஆடுகிறார்கள். கையில் கம்பு வைத்து ஆடப்படும். உருமி, புல்லாங்குழல், தப்பு, தமுக்கு ஆகியவை இவ்வாட்டத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள். இவர்களின் தப்பும் உருமியும் ரொம்பவும் நகர தாக்கத்தால் முற்றாக நெகிழிக்கு மாறி இருக்கின்றது. நெகிழியில் செய்த உருமியை நான் இவர்களிடம் தான் பார்த்தேன்.   சாட்டையடி நாயக்கர்(சோளகா) சமூகத்தில் பெண்கள் தான் உருமி இசைக்கிறார்கள். ஆண்கள் சாட்டையடித்து வித்தை காட்டும் பொழுது பெண்கள் உருமி இசைக்கிறார்கள். இவர்கள் பேசும் பழங்குடி மொழியில் பெண்களை இழிவாக பேச சொற்களே இல்லை என்கிறார் வரலாற்று ஆய்வாளர் அ க பெருமாள் அவர்கள். செம்மொழிகளில் 40-50 சொற்கள் சுலபமாக பெண்களை இழிவுப்படுத்த இருக்கும் சூழலில் ஓரு பழங்குடி மொழியில் அவ்வாறான சொற்களே இல்லாமை பெரும் வியப்பு. பூம்பூம் மாடு அல்லது பெருமாள் மாடு என்று அழைக்கப்படும் மாட்டை அலங்கரித்து உருமி இசைத்து வீடு வீடாக சென்று யாசகம் பெறுகிறார்கள் ஆதியன் பழங்குடிகள். இவர்கள் கொடுகொட்டி, நாயனம், மத்தளம் ஆகியவற்றையும் இசைப்பார்கள். இவர்கள் உருமியை சொத்தாக மதித்து தங்கள் சந்ததியினருக்கு அளிக்கிறார்கள். இம்மரபினால் இவர்களிடம் மிகப் பழைய உருமிகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் சீர் செய்துகொள்கிறார்கள். இலங்கை மலையக பகுதிகளில் உருமி இசைக்கப்படுகிறது. தமிழர்கள் குடியேறிய மலேசிய நாட்டிலும் உருமி மிக்க செல்வாக்குடன் திகழ்கிறது. இந்நாட்டில் நிறைய உருமி இசைக்கும் குழுக்கள் உள்ளன. பத்துமலை முருகனின் தைப்பூச விழாவில் கண்க்கூடாக காணலாம்.  வட தமிழகத்தில் உருமி அவ்வளவு

பிரபலம் இல்லை. தென் தமிழகத்தில் தான் உருமி நாட்டார் தெய்வங்களின் கோவில்களிலும் விழாக்களிலும் இசைக்கப்படுகிறது. பாளையங்கோட்டை தசரா விழாவில் உருமியும் கட்டைக்குழலும் விண்ணதிர முழங்கும். தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் உருமி, ஒற்றை முரசு, பெரிய மேளம், கட்டைக்குழல் ஆகியவை சேர்ந்த இசை வடிவம் கோவில் கொடை விழாக்களில் இசைக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் புகழ் பெற்ற நையாண்டி மேளக் குழுவிலும் உருமி கண்டிப்பாக இடம்பெறும்.    கொங்கு நாட்டில்  குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில்  கோவில் திருவிழாக்களில்  கம்பத்தாட்டம் நிகழ்வில்  பறையுடன் சேர்த்து உருமி  இசைக்கப்படுகிறது.   பெருஞ்சலங்கை ஆட்டத்திற்கு  மேற்சொன்ன மாவட்டங்களில் சில இடங்களில் உறுமியும், பறையும் நாதஸ்வரமும் இசைக்கப்படுகிறது.  மேலும் ஆதி திராவிடர் இன மக்கள் தங்கள் திருமணத்தின் பொழுதும் உருமி இசைக்கிறார்கள். கொங்கு நாட்டின் வள்ளி கும்மி நிகழ்வில் உருமி இசைக்கும் வழக்கம் சில இடங்களில் உள்ளது. வள்ளி கும்மி என்பது கொங்கு வேளாளர்களின் பாரம்பரிய  நடன வடிவம். சேலம் வட்டாரங்களில் உருமியை பறை, நாயனத்துடன் சேர்த்து கோவில் விழாக்கள் மற்றும் இறப்பு வீடுகளில் இசைக்கும் வழக்கமும் உள்ளது.  ”அமரர் துந்துபியும் ஆர்த்த”, ”வான துந்துபி ஆர்ப்பும்” , “அந்தரத்து

துந்துபி நாதம்” என்பது சேக்கிழார் வாக்கு. இந்த “அமரர் துந்துபி” தான் தற்கால் தேவதுந்துமி இசைக்கருவி என்பது ஆய்வாளர்கள் கருத்து. தமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் ராஜ கம்பள நாயக்கர் மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு இசைக் கருவியாக இருக்கின்றது தேவதுந்துமி. இக்கருவியை வானத்து தேவர்களே தங்களுக்கு அளித்ததாக கருதுகிறார்கள் இவர்கள். ஆகவே இதை தேவதுந்துமி என்று அழைக்கிறார்கள். ராஜ கம்பள நாயக்கர்களுக்கு குடிசமூகமாக விளங்குபவர்கள் மாலாவாடு/மாலா/மாலொடு இன மக்கள். இவர்களும் தெலுங்கு பேசுபவர்கள் தான். இவர்கள் தான் ராஜ கம்பள நாயக்கர்களுக்கு தேவதுந்துமி இசைப்பவர்கள். மாலாவாடுக்களே அவர்களுக்குத் தேவையான தேவதுந்துமி இசைக்கருவியை செய்து கொள்கிறார்கள். இவர்கள் வளர்க்கும் ஆட்டை வெட்டி அதன் தோலிலேயே தேவதுந்துமி இசைக்கருவி செய்யப்படுகிறது. தோலை வெளியில் இருந்து வாங்குவதில்லை. வெளியிலிருந்து வாங்கினால் புனிதம் கெட்டுவிடும் என்று நம்புகிறார்கள். இவர்கள் சமூகத்தில் வாழ்வியல் சடங்குகளில் இக் கருவி முக்கிய பங்கு வகிக்கின்றது. கோவில் விழாக்கள், திருமண நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், இறப்பு, என்று எல்லா நிகழ்வுகளிலும் முதன்மை இசைக் கருவியாய் இவ்வினத்தினரால் இசைக்கப்படுகிறது. இவர்களின் மாலாக்கோவில், ஆல்கொண்டமால் கோவில்களில் நாம் பல நடுகற்களை காணலாம். இதில் தேவதுந்துமி இசைப்பவர், சீங்குழல் இசைப்பவர் ஆகியோரையும் இவர்கள் புனிதமாக கருதும் எருதையும் நாம் காணலாம். படத்தில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள மாலாக்கோவில் நடுகல்லை நாம் காணலாம். 

ராஜகம்பள நாயக்கர்களின் முக்கிய கலைவடிவங்கள் தேவராட்டம் மற்றும் சேவையாட்டம். இவ்விரு நிகழ்வுகளும் தேவதுந்துமியின் இசையுடன் தொடங்குகின்றது. தேவராட்டத்தில் பாடல்கள் கிடையாது. தேவதுந்துமி இசைக்கேற்ப நிகழ்வின் அடவுகள் அமைகின்றது. தேவதுந்துமி இசையின் ஓட்டத்திலேயே தேவராட்டத்தின் போக்கும் அமைகிறது. கோவில், சமூக மற்றும் இல்ல விழாக்கள் போன்றவற்றில் தேவராட்டம் ஆடப்படும். இனசார்பு கலையாக இருந்த இதை எல்லோரும் கற்கும் கலையாக மாற்றிய பெருமை திரு நெல்லை மணிகண்டன் அவர்களின் பெரியப்பா மற்றும் தந்தையைச் சேரும். திரு நெல்லை மணிகண்டன் அவர்கள் தான் தற்காலத்தில் இக்கலையை அனைவருக்கும் பயிற்றுவித்து வருபவர்.  சேவையாட்டம் கோயில் சார்ந்த சூழலிலேயே விழா நாட்களில் ஆடப்படுகிறது. ராஜகம்பள நாயக்கர்களின் சில உட்பிரிவுகள் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகிறார்கள். தேவராட்டம் போல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களே இதில் பங்கு கொள்கிறார்கள்.  நேர்கோட்டில் நின்று இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. ஆட்டத்தை ஆடுவோர் வண்ணமயமான நீண்ட அங்கி தலைப்பாகை ஆகியவற்றை அணிந்து கையில் சேமக்கலம், சேவைப்பலகை எனப்படும் தப்பட்டை ஆகியவற்றை இசைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். இதில் கோமாளி ஒருவரும் இருப்பார் கோமாளி தான் குழுவை முன்னின்று கட்டுப்படுத்துபவர். இவர்தான் இக்குழுவின் தலைவராக இருப்பார். இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் தேவதுந்துமி இசைக்கப்படும் பிறகு கோமாளி பாட ஆரம்பித்தவுடன் நிறுத்தப்படும். பாடல்கள் திருமாலை போற்றுவதாகவும் ராமாயண கதையாகவும் உள்ளது. ராஜகம்பளத்து நாயக்கர் திருமணம், வழிபாடு, சடங்குகளில் தேவதுந்துமியை தரையில் வைத்து அதற்கு வெற்றிலை பாக்கு பூ எல்லாம் வைத்து வணங்குகிறார்கள். கோவில்களிலும் இவ்வழக்கம் உள்ளது. ஆகவே ராஜகம்பளத்து நாயக்கர்களின் வாழ்வோடு ஒன்றிய ஒரு இசைக்கருவி ஆகவே இந்த தேவதுந்துமி உள்ளது.  சலங்கை

மாடு மறித்தல், சலகெருது மறித்தல் ஆகியவையும் இவர்களின் கலை வடிவங்கள். பொள்ளாச்சியில்/உடுமலை பகுதியில் பல்வேறு கிராமங்களில் உள்ள ராஜகம்பள நாயக்கர் சமூக மக்கள், உருமி முழக்க மார்கழி மாத இரவு நேரங்களில் சலங்கை மாடு மறித்தலில் ஈடுபடுகின்றனர் . இதில் காளை மாட்டுக்கு முன்பு நீள கம்பு வைத்தபடி உருமி சத்ததுக்கு ஏற்ப கிராம மக்கள் நடனமாட, அதற்கு தகுந்தாற்போல் காளை மாடு அசைந்து செல்வது என்பது வழக்கம். உடுமலையை அடுத்த குறிச்சிக்கோட்டை, குறிஞ்சேரி, கொங்கல்நகரம், லிங்கம்மாவூர், அம்மாபட்டி, பெரியகோட்டை, வெனசப்பட்டி, ராஜாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்கழி மாதம் முழுவதும் சலங்கை மாடு ஆட்டம் நடத்தப்படும்.    இனசார்புடைய கருவியாக இருக்கும் தேவதுந்துமி ஒருவாறு அழியாமல் வாழும் ஆனால் உருமியும், பழங்குடி உருமியும் அழிவின் விளிம்பில் இருப்பவை. இதை பாதுக்காக்கும் கடமை தமிழர் ஒவ்வொருவருக்கும் உண்டு.  பாடல்: கும்பிகை திமிலை செண்டை குளடுமாம் தார் முரசும் சங்கம் பாண்டில் போர்பணவம் துரி கம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை அம்பலி கனுவை ஊமை சகடையோ டார்த்த வன்றே  - கம்பராமாயணம்- 8445  கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும்  பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி  வரிச் சுரும்பு அலைய

வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்  அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த  - திருமுறை 12.0663 , சேக்கிழார்  தீந்த தோதக தந்தன திந்திமி      ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு           சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச்  – திருப்புகழ், அருணகிரிநாதர்  தந்த னந்தன தந்த னந்தன      திந்தி மிந்திமி திந்தி மிந்திமி           சங்கு வெண்கல கொம்பு துந்துமி ...... பலபேரி  – திருப்புகழ், அருணகிரிநாதர் காணொளி: தேவதுந்துமி: https://www.youtube.com/watch?v=L2UhGWSwyEo https://www.youtube.com/watch?v=v7BjMPSkdNQ https://www.youtube.com/watch?v=ECjk9jwYTUE https://www.youtube.com/watch?v=JJQqJesahu8 தேவராட்டம்: https://www.youtube.com/watch?v=7JjUerO-yCE https://www.youtube.com/watch?v=Jy6f-LvAuU8 https://www.youtube.com/watch?v=UqVcZoKDGg8 நையாண்டி உருமி: https://www.youtube.com/watch?v=2juAsPRXV8U கோவில்களில் உருமி: https://www.youtube.com/watch?v=CN6Mxdl7BR8 https://www.youtube.com/watch?v=l2Jq7GByFF4 https://www.youtube.com/watch?v=ds39Lb9MISA சலகெருது https://www.youtube.com/watch?

v=myfYnkiU8FE கும்மி https://www.youtube.com/watch?v=zw8PSbeBNcA சேலம்: https://www.youtube.com/watch?v=7C-hup9nleM ஆதியன்: https://www.youtube.com/watch?v=3jvr8CSzXpg&feature=youtu.be மலசர்: https://www.youtube.com/watch?v=ZZK3byLfylM https://www.youtube.com/watch?v=CY14gW1cDs8 -சரவண பிரபு ராமமூர்த்தி நன்றி: 1. திரு பால்ராஜ் அவர்கள், நையாண்டி மேள இசைக்கலைஞர் மற்றும் இசைக்கருவி தயாரிப்பாளர், சென்னை 2. திரு நெல்லை மணிகண்டன் அவர்கள், தேவராட்ட ஆசிரியர், சமின் கோடாங்கிபட்டி 3. பல்லடம் திரு பொன்னுசாமி அவர்கள், வரலாற்று ஆய்வாளர், பல்லடம் No comments: