இலங்கைச் செய்திகள்

கொழும்பு, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில்

சர்வதேச நீதி கோரி நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

20 ஐ எதிர்த்து இதுவரை 39 மனுக்கள் தாக்கல்

100 வீடுகள் கொண்ட தொடர்மாடி குடியிருப்புகள் அமைக்க திட்டம்

முகமாலையில் மீட்கப்பட்டது பெண் புலியின் எலும்புக்கூடு

தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு

பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில் த.தே. கூட்டமைப்பு 06 பேரும் விடுதலை

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ப. சத்தியலிங்கம்


கொழும்பு, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில்

கொழும்பு, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முதன்மை அதிதியாக நேற்று கலந்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படம். நிகழ்வில் கலந்துகொண்ட சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் (பாபு சர்மா), கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இந்துக் கல்லூரியின் அதிபர் டி.பீ.பரமேஸ்வரன், ஆகியோயோரையும் படத்தில் காண்க.  நன்றி தினகரன் 

 




சர்வதேச நீதி கோரி நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

'எமக்கான நீதியை நாம் பெற ஏதுவாக இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்து' வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இன்று (01) சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் காணாமல் போன தமது குழந்தைகளுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (30) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?, 'எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும், இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள், சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா?, பாடசாலை சென்ற மாணவன் எங்கே?' போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றிருந்ததுடன் போராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்   நன்றி தினகரன் 






20 ஐ எதிர்த்து இதுவரை 39 மனுக்கள் தாக்கல்

நேற்று மட்டும் 19 மனுக்கள்

20 ஆவது திருத்தத்தை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க உட்பட மேலும் இரண்டு பேரால் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்த வரைபை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் இதுவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதான பரிசீலனை செப்டெம்பர் 29 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதற்காக பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி இன்று வரை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 





100 வீடுகள் கொண்ட தொடர்மாடி குடியிருப்புகள் அமைக்க திட்டம்

அனைத்து தேர்தல் தொகுதிகளிலும்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

 நாடு முழுவதிலுமுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத் திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று தெரிவித்தார். ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளுடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை நிர்மாணிக்க எதிர்பார்த் துள்ளதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊடக நிறுவன தலைவர்களுடன் ஈநேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜாக்ஷ தெரிவித்தார்.

தற்போதுள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்

கே.அசோக்குமார் - நன்றி தினகரன் 






முகமாலையில் மீட்கப்பட்டது பெண் புலியின் எலும்புக்கூடு

அடையாள இலக்கத் தகடுகளும் சிக்கியது

முகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு முன்னாள் பெண் போராளி ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி -முகமாலை பகுதியை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் மதியம் 03 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது சோதியா படையணியை சேர்ந்த இரு பெண் போராளிகளின் இலக்க தகடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மண்டையோட்டுடன் கூடிய ஒரு தொகுதி எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் த.வி.பு ஞா 0302 மற்றும் த.வி.பு. ஞ 0188 என்ற அடையாளங்கள் பொறிக்கப்பட்ட இலக்கத்தகடுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் B+ மற்றும் O+ இரத்த வகையைச் சேர்ந்தவர்களது உடல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ் அகழ்வுப் பணிகளின் போது எதிரியிடம் அகப்பட்டால் தமது உயிரை மாய்ப்பதற்காக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்படும் சைனட் குப்பி ஒன்றும், பெண் போராளிகள் இடுப்பில் அணியும் பட்டியும், உரப்பைகள், விடுதலைப்புலிகளின் வரிச் சீருடைகள், பச்சை நிற சீருடைகள், பாதணி ஒன்று, பற்றிகள், சம்போ போத்தல்கள் போன்றவையும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, துப்பாக்கி ஒன்று, இரண்டு கைக்குண்டுகள், 08 மகசின், 03 கோல்சர் கவர் போன்றவையும் இந்த சந்தர்ப்பத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினமும் தொடர்ந்தும் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்க கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 


 



தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு

இளைய தலைமுறையினரை ஊடகங்கள் பொறுப்புடன் வழிநடத்த வேண்டும்

தினகரன் 'வடக்கின் உதயம்' வெளியீட்டு விழாவில் அமைச்சர் டக்ளஸ்

தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினை உட்பட்ட அனைத்திற்கும் தீர்வு காண்பதற்கு சிறந்த வழிமுறையாக இருக்குமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மெய்ப்பொருள் காண்பதே ஊடகங்களின் நோக்காக இருக்கின்ற அதேவேளை அவற்றை நேர்மையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்ற பணியையும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். யாழ். பல்கலைக் கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று (02) நடைபெற்ற தினகரன் நாழிதழின் ‘வடக்கின் உதயம்’ விசேட பதிப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கோடு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்திருந்த போதிலும், காலப் போக்கில் சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னரான அரசியல் சூழலும் தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்த்து கொள்வதற்கான சிறந்த வழிமுறை என்ற யதார்தத்தை புரிய வைத்ததாகவும் தெரிவித்தார்.

எனினும், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாது சில ஊடகங்கள் தவறாக மக்களை வழிநடத்தியிருந்தமையும் எமது மக்கள் எதிர்கொண்ட பல்வேறு துன்பங்களுக்கான காரணங்களில் ஒன்றாகவும் இருந்துள்ளது எனவும் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில், எதிர்காலத்திலாவது ஊடகங்கள் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த அமைச்சர், மெய்பொருள் காண்பதை இலக்காக கொண்டு ஊடகங்கள் செயற்படுவதுடன், மெய்பொருளை மக்களிடம் எடுத்துச் சென்று, மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் நேர்மையாக செயற்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன், சமூக ஊடகங்களின் தாக்கம் பாரம்பரிய ஊடகங்களின் செல்நெறியில் தளம்பல்களை ஏற்படுத்தியுள்ள இன்றைய காலகட்டத்தில், ‘தினகரன்’ போன்ற ஊடகங்கள் காலத்திற்கு தேவையான மாற்றங்களை உள்வாங்குகின்ற அதேவேளை, ஊடக விழுமியங்களைப் பாதுக்கும் வகையில் இளைய தலைமுறையினரை வழிநடத்த வேண்டும் என்பதே விருப்பமாகும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தினகரன் நிறுவனத்தினர் காலத்தின் தேவையுணர்ந்து மேற்கொள்கின்ற புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் கூறினார்.   நன்றி தினகரன் 







பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில் த.தே. கூட்டமைப்பு 06 பேரும் விடுதலை

Saturday, October 3, 2020 - 6:00am

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட 06 பேருக்கு எதிராக பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட சட்டத்தரணியும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் நேற்று இதனைத் தெரிவித்தார்.

உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனை நினைவுகூரும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட நபர்களினால் அனுஷ்டிக்கும் நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்ததாக தெரிவித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு நேற்று (02) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது எதிராளிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டத்தரணி சுமந்திரனால் பொலிஸார் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தினை தவறான வழியில் நடாத்தnமுற்படுவதாக கடுமையான குற்றசாட்டுகளை சுமத்தினார்.

யுத்தத்தில் திலீபன் இறக்கவில்லையெனவும் பொய்யான வகையிலான குற்றசாட்டுகளை பொலிஸார் முன்வைத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும் அவர்களின் நேரத்தை வீண்விரயம் செய்துள்ளதாகவும் தனது கண்டனத்தையும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி ஆகிய பொலிஸ் நிலையங்களை இணைத்து தொடரப்பட்டிருந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி வழக்கில் இருந்து அவர்களை விடுவித்தார்.

மட்டக்களப்பு சுழற்சி, பெரியபோரதீவு தினகரன், புதிய காத்தான்குடி நிருபர்கள்   நன்றி தினகரன் 






தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ப. சத்தியலிங்கம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ததை அடுத்து பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத் தலைவர்களாக செயற்பட்டு வந்த வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூடும் வரையிலும் துணைத்தலைவராக செயற்பட்டு வந்த ப. சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக செயற்படும் வகையில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வைத்திய கலாநிதியுமான ப. சத்தியலிங்கத்திடம் கேட்டபோது அவரும் அதனை உறுதிப்படுத்தினார்.

ஓமந்தை விஷேட நிருபர்  - நன்றி தினகரன் 








No comments: