கத்தியும் ரத்தமும் கையெடுக்கா மனிதர்
சத்தியமாய் உருக்கொண்ட உத்தம மனிதர்
சொத்தாக சுதந்திரத்தை உளங்கொண்ட மனிதர்
இத்தரையில் வரமாக வந்தமைந்தார் காந்தி
தேசபிதா எனவழைக்கும் சீர்மையுடை மனிதர்
காசுழைக்கும் தொழிலதனை கண்டிடா மனிதர்
மாசுடைய மனமதனை வாழ்வேற்கா மனிதர்
மாநிலத்தில் காந்தியாய் வந்தாரே சிறக்க
எளியவுடை இன்புடனே ஏற்றிட்ட மனிதர்
ஏழைகளை கையணைத்து வாழ்ந்திட்ட மனிதர்
பழிகண்டு துணிவோடு களைத்திட்ட மனிதர்
அடியுதையை அகிம்சையால் அடக்கிட்ட மனிதர்
அடிமையெனும் பேயதனை அழித்திட்ட மனிதர்
கொடுமையெனும் ஆட்சியினை குலைத்திட்ட மனிதர்
குவலயத்தில் குணக்குன்றாய் காந்தியென வந்தார்
பதவிகளை மனமேற்றா பார்வாழ்ந்த மனிதர்
புனிதமுடை நூலனைத்தும் உளங்கொண்ட மனிதர்
தனிமனித சுயலாபம் தேடாத மனிதர்
தரணிதனில் காந்தியாய் தலைநிமிர நின்றார்
தீண்டாமை அரக்கனை தீயிட்ட மனிதர்
தீமைதரும் மதுவதனை வெறுத்திட்ட மனிதர்
சான்றாண்மை வாழ்வில் காத்திட்ட மனிதர்
சன்மார்க்கம் தளைக்கவே காந்தியாய் வந்தார்
உழைப்பதனை உன்னதமாய் உணர்ந்திட்ட மனிதர்
உப்பதனை முதலாக்கி உளமிணைத்த மனிதர்
நீதியினை புறந்தள்ளா நினைத்திட்ட மனிதர்
நெஞ்சமெலாம் மகாத்மாவாய் நிறைந்திட்டார் காந்திஜீ
No comments:
Post a Comment