பாட்டுப்போட்டி ஒன்று நடக்கிறது. ஒரு பையன் பிரபல பாடகர் ஒருவரின் குரலில் அச்சொட்டாகப் பாடுகிறான். நிகழ்ச்சியை பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பையன் பாடி முடித்ததும், நிகழ்ச்சியின் நடுவராக வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசத் தொடங்குகிறார்.
“தம்பி, பாட்டுக்காரன் என்பவன் மிமிக்ரி கலைஞன் அல்ல, நீங்க பாடிய பாட்டைப் பாடத் தான் அந்தப் பாடகரே இருக்கிறாரே? நீங்க கவனமெடுக்க வேண்டியது அந்தப் பாட்டில் தங்கியிருக்கிற ஜீவன். அதைத்தான் உங்கள் குரலில் வெளிப்படுத்தணும். அங்கேதான் நீங்க உங்க தனித்துவத்தை வளர்க்க முடியும்.”
இம்மட்டுக்கும் எஸ்.பி.பி ஒன்றும் பலகுரல் வித்தை தெரியாதவர் அல்லர். “எங்கெங்கும் கண்டேனம்மா” (உல்லாசப் பறவைகள்) பாட்டில் சுருளிராஜன் குரலை இவரும், வெண்ணிற ஆடை மூர்த்தி குரலை மலேசியா வாசுதேவனும் பிரதிபலித்தார்கள். “அப்பன் பேச்சைக் கேட்டவன் யாரு?” (சூரக்கோட்டை சிங்கக்குட்டி) பாடலில் எம்.ஆர்.ராதாத்தனமான ராதாரவியாகவும், “ஏஞ்சோடி மஞ்சக்குருவி” (விக்ரம்) பாடலில் கமல்ஹாசனாகவும், ஹிந்தி நடிகர் அம்ஜத்கானாகவும், ஜனகராஜாகவும் தாவித் தாவிக் குரல் மாறுவார்!
இப்படி எண்ணற்ற உதாரணங்கள்... இவற்றை நீட்சியாக்கி ஒரு ஆய்வே நிகழ்த்திவிட முடியும். ஆனால் அந்த ஆய்வில் தொக்கி நிற்கும் செய்தி ஒன்றேதான். எஸ்.பி.பி குரலின் பன்முகத் தன்மை என்பது அவர் தாங்கும் பாத்திரங்களின் பிரதிபலிப்புகளே, நகல்கள் அல்ல.
அதையே அவரும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். `ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தின் நாயகன் சிவகுமாரின் வெகுளித்தனமான பாத்திரத்தைக் கவனித்து அந்தப் பாத்திரம் குதூகலித்துப் பாடும்போதும் சரி ( மாமேன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்), சோகத்தில் வெம்பும்போதும் சரி ( உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி) அந்தப் பாத்திரம் பாடும் பாடல்கள் எல்லாவற்றிலுமே அந்த வெகுளித்தனத்தைக் காட்ட வேண்டியிருந்தது’ என்பார். இப்போது யோசித்துப் பாருங்கள். இவர் வெறும் இசையமைப்பாளர் ஒப்புவிக்கும் பாட்டை அப்படியே பிரதிபண்ணிப் பாடும் பாடகர் மட்டும்தானா?
எஸ்.பி.பி ஒவ்வொரு திரைப்படத்திலும், ஒவ்வொரு பாத்திரத்திலும் அதுவாகவே ஆகிப்போனவர். அது எப்படி?
`47 நாட்கள்’ திரைப்படம், திருமணம் முடித்து வெளிநாட்டில் வாழ்க்கைப்பட்ட கணவனோடு புலம் பெயரும் அந்த இளம் மனைவி, காண முடியாத அதிர்ச்சியை எல்லாம் எதிர் நோக்குகிறாள். தன் தாம்பத்ய வாழ்வின் உச்சியில் இருந்து குதிக்கவும் தெரியாமல், நடக்கவும் தெரியாமல் இருக்கும் அவளின் மன ஓசையாக ஒரு பாடல் பிறக்கிறது.
“மான் கண்ட சொர்க்கங்கள்... காலம் போகப் போக யாவும் வெட்கங்களே” என்று ஓடிக் கொண்டிருக்கிறது படம் முழுக்க. மொத்தம் 7 நிமிடம் 55 விநாடிகள் ஓடும் ஒரு மிக நீண்ட பாட்டு.
கவியரசு கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்த கூட்டணியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இந்தப் பாடல், கே.பாலசந்தரின் ‘47 நாட்கள்’ படத்தின் மூலக்கதையான எழுத்தாளர் சிவசங்கரியின் முழு நாவலையும் ஒப்புவித்துவிடும். இந்தப் பாடலில், “தாமரைப் பூவென்றான் காகிதப் பூவானான்” என்று மாதிரிக்குக் காட்டும் ஒவ்வொரு வரியிலும் அந்தக் களத்தையும், அந்த அபலையின் வலியையும் கொண்டுவருவார் எஸ்.பி.பி. அதுதான் எஸ்.பி.பி.
அவரின் குரலை நகல் எடுக்கலாம். ஆனால் குரலில் தங்கியிருக்கும் ஜீவனைப் பறிக்க முடியாது. அதுதான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற மகா கலைஞனின் தனித்்துவம்.
70களில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து... 80களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இரண்டு உயர்ந்த நட்சத்திரங்களில் இருந்து விஜயகாந்த், மோகன், கார்த்திக், பிரபு, சத்யராஜ், ராமராஜன் உள்பட, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும்போதும் அவர்களாகவே ஆகிப்போகும் பிரமையைக் கொடுத்துவிடுகிறார். அதனால்தான் “சின்ன மணிக்குயிலே” ஒலிக்கும்போதெல்லாம் மரத்தின் பின்னிருந்து எட்டிப் பாடும் விஜயகாந்த்தான் மனத்திரையில் தோன்றுவார்.
பாட்டைப் பாடிவிட்டோமே என்று கடந்து போகாமல் அது திரையில் எப்படிக் காட்சி வடிவம் பெறுகிறது என்று உன்னிப்பாகவும் கவனிப்பவர்.
‘எஸ்.பி.பி, தான் என்ன மாதிரியான சங்கதிகளைப் பாட்டில் கொண்டு வருகிறாரோ, அதைத் தன் முகபாவங்களில் அழகாகக் காட்டக் கூடியவர்’ என்று சொன்ன பிரபு ‘என்னவென்று சொல்வதம்மா’ பாடல் வழியாக உதாரணம் கற்பிக்கிறார்.
ஒருமுறை வானொலிப் பேட்டி ஒன்றில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் “பச்சமலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு” (கிழக்கு வாசல்) பாடலை ஒரு ஒலி நாடாவில் இரண்டு பக்கமும் பதிவு பண்ணிக் கேட்டதாகச் சொன்னது இந்த நேரம் நினைவு வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடும் போது ‘சிவாஜி கணேசன் ஒரு பண்பாட்டுக் குறிப்பு’ என்ற கோணத்தில் ஆய்ந்து பேசியிருப்பார். இங்கே எஸ்.பி.பி அவர்களையும் அவ்வாறானதொரு பாங்கிலேயே பார்க்க வேண்டியிருக்கிறது. பாடகராக ஐம்பது ஆண்டுகள்... அதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று குறிப்பிடத்தக்க மூன்று மொழிகளில் முன்னணிப் பாடகராக இயங்கியிருக்கிறார். இவற்றோடு மூன்று தலைமுறை நடிகர்களையும் கண்டுவிட்டார்.
இது அவரது திரைப்பயணம் என்றால் சமூக மட்டத்தில் எஸ்.பி.பி என்ற கலைஞனைத் தம் உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே தமிழ்ச் சமூகத்தில் நின்று கொண்டு பார்க்க முடிகின்றது.
“ஒன்ன நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே” என்று இளையராஜாவின் இசையில் பாடியதாகட்டும், “நான் உப்பு விக்கப் போனா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது” (பொண்ணு பாக்கப் போறேன்) என்று பாக்யராஜின் மெட்டில் சோக ராகம் இசைத்த போதாகட்டும்... ரசிகர்கள் தம் வாழ்வியலின் சோக அத்தியாயங்களோடு பொருத்தி அந்த வலிகளின் பிரதிபலிப்பாகக் கேட்டும், பாடியும் பார்த்தார்கள்.
“மண மாலையும் மஞ்சளும் சூடி புதுக் கோலத்தில் நீ வரும் போது” (வாத்தியார் வீட்டுப் பிள்ளை), “மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு” (கரகாட்டக்காரன்) கல்யாண வீடுகளிலும், கல்யாண வீடியோக்களிலும் எஸ்.பி.பியே நேரில் வந்து பாடிப் போனதாகச் செய்தி பறையும். “காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே” (செண்பகம்) இருளைக் கிழித்துக் கொண்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயண வழித்தடத்தில் எஸ்.பி.பியும் சோக ராகத்தோடு ஏறிக் கொள்வார்.
“ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி” பாடலை உலக வானொலிகள் தன்னம்பிக்கைப் பாட்டாகத் துயிலெழ வைப்பார்கள். “என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்” (பெண்மானே சங்கீதம் பாடி வா) எண்பதுகளில் காதல் வசப்பட்ட அண்ணன்மார் கோயில் வாசல் படிக்கட்டுகளில் குந்தியிருந்து மாலை நேரப் புராணம் பாடுவர்.
ஒரு படத்தின் சூழலுக்காகத் தன் உணர்ச்சியைப் பாடலில் வெளிக்கொணரும் எஸ்.பி.பியின் குரல் சாதாரணனின் வாழ்வின் அடியாழம் வரை தொட்டுச் சென்றிருக்கிறது.
“கல்யாணமாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்”
‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் நாயகன் பாடகர் மணிபாரதியின் (ரகுமான்) அறிமுகத்தோடு தொடங்கும் காட்சிப் படிமங்களில் அந்தப் பாடகரின் மீதான ரசிக அலையின் படையெடுப்பைக் காட்டும்.
அதுபோலவே ‘இதய கோவில்’ பாடகர் கெளரி சங்கர் (மோகன்). ‘உதய கீதம்’, ‘வசந்த ராகம்’ என்று தொடரும் படங்களின் பட்டியலில் மேடையேறும் பாடகன் என்றாலே அது எஸ்.பி.பி என்ற பிம்பமே பெரும்பாலும் பதியப்பட்டிருக்கும். இன்னொரு பக்கம் சாஸ்திரிய இசைப் பாடகன் என்றால் யேசுதாஸ் எனுமாற்போல.
எண்பதுகளின் திரைப்பட இசைக்களங்கள் எல்லாமே மறைமுகமாக இளையராஜாவையும், எஸ்பிபியையும் கதாநாயகர்களாக்கிவிட்டன.
இந்த யுகத்தில் இனியொரு முறை இப்பேர்ப்பட்ட பாட்டுத் தலைவனை நாமோ நம் தலைமுறையோ காணப் போவதில்லை.
“நான் பாடும் மெளனராகம் கேட்கவில்லையா”
“ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ”
“எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே”
இப்படியெல்லாம் பாடிப்போன எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்கள் இனிமேல் கேட்கும் போதெல்லாம் அவருக்கானதாகவே அர்ப்பணிக்கப்படப்போகிறதே என்ற வலி மனசின் ஓரத்தில்.
“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்”
என்றவர், நம் ஜீவனில் வாழ்கிறார்; நீக்கமற நிறைந்து நிற்கிறார். அடுத்த புத்தாண்டிலும், அடுத்தடுத்த புத்தாண்டுகளிலும்,
“ஹாய் எவ்ரி படி விஷ் யூ ஹேப்பி நியூ இயர்”
என்று வாழ்த்தோடு வரத்தானேபோகிறார்?!
2 comments:
Thanks for publishing the above on your on-line newspaper. A great and amazing tribute to SPB sir from a compatriot Eelath thamilan. Read the article with great interest and Gaana Piraba captured all aspects of the late singer's multi facets and presented them citing various genres. The writer must have an in-depth knowledge about SPB's songs to write this tribute and delighted to know that he sang not only for heroes but also for supporting actors.
Nandri,
Ravi
Thank you Ravi
Post a Comment