பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 18 - திருமலை தென்குமரி - சுந்தரதாஸ்

 .


தமிழில் பிரம்மாண்டமான முறையில் பக்தி படங்களை தயாரித்து இயக்கி வெற்றி பெற்றவர் ஏபி நாகராஜன். சிவாஜியின் நடிப்பில் இவர் உருவாக்கிய பக்தி படங்கள் வெற்றி பெற்று இன்றும் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் பட விநியோகம் சம்பந்தமாக இவருக்கும் சிவாஜியின் தம்பி வீ சி சண்முகத்துக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக குருதட்சனை படத்துக்கு பிறகு சிவாஜியை போட்டு படம் எடுப்பதை விடுத்து சிறிய நடிகர்களை நடிக்க வைத்து படங்களை தயாரித்து இயக்கினார், அவ்வாறு 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் நாகராஜன் உருவாக்கிய படம்தான் திருமலை தென்குமரி.




தொடர்மாடி குடியிருப்பில் இருக்கும் சிலரும் அக்கம்பக்கத்தில் இருக்கும் சிலரும் சேர்ந்து ஒரு பஸ் அமர்த்தி தீர்த்த யாத்திரை புறப்படுகிறார்கள். இவர்களுடைய யாத்திரை திருப்பதி, திருத்தணி ,சாமுண்டீஸ்வரி ,குருவாயூரப்பன், கன்னியாகுமரி என பல கோயில்களை உள்ளடக்குகிறது.



தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி பேசுவோர் இந்த யாத்திரையில் இணைகிறார்கள். இதன் போது அவர்களுக்கு ஒவ்வொரு வித அனுபவங்கள் ஏற்படுகின்றன. இதனை தனது அனுபவமிக்க படைப்பாற்றலால் சுவையாக படமாக்கியிருந்தார் ஏ பி நாகராஜன்.படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் டபிள்யூ ஆர் சூப்பராவ் . வண்ணபடமான இதில் அவர் கைவண்ணம் மிளிர்ந்தது .



சீர்காழி கோவிந்தராஜன், சிவக்குமார், சுருளிராஜன், மனோரமா,காந்திமதி, ரமாபிரபா டைப்பிஸ்ட் கோபு என்று பலர் படத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். இவரின் இசையில் திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, சிந்தனையில் மேடை கட்டி, கலையாத கல்வியும் போன்ற பாடல்கள் இனிமையாக அமைந்தன அவற்றை அருமையாக காட்சிப்படுத்தி இருந்தார்கள். படத்தில் வசனங்களை சற்று குறைத்திருக்கலாம். படம் 100 நாட்கள் ஓடியது.



இந்த கொவிட் 19 காலத்தில் தீர்த்த யாத்திரை செல்ல முடியாதவர்கள் இந்த படத்தை பார்த்து திருப்திப்படலாம்.

No comments: