கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 33 - “ விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ..? “ ஆண்டி மாஸ்டர் – சத்தியமூர்த்தி நினைவுகள்

   எனது வாழ்க்கைப்பயணத்தில்  ஆரம்பம் முதல் இன்று வரையில்,  பலர் தொடர்ந்து இணைந்து


வந்துள்ளனர். எனக்கும் எனது வாழ்க்கை ரயில் பயணம் போலத்தான் அமைந்தது. ஒவ்வொருவரதும் கனவுகள், எண்ணங்கள் எப்படி இருந்தபோதிலும்  விதி இடையில் புகுந்து,  “ இதோ நானும் இருக்கின்றேன்  “  என்று அலைந்துழலச் செய்துவிடும்.  பின்னர் அதற்குத்தகுந்தவாறு நாம் வளைந்தும் நெலிந்தும் குறுகியும், குனிந்தும், நிமிர்ந்தும்  ஓடவேண்டியதுதான்.  ஊர் விட்டு  ஊர் ஓடி, நாடுவிட்டு  நாடு ஓடி, வாழ்க்கையின் ஓரத்திற்கு ஓடிவந்து தரித்து நிற்கும்  காலத்தில், அன்று  யாழ். புனித யோவான் கல்லூரியில்  கற்கும்போது பூமிசாத்திரப்பாடத்தில் பார்த்த அவுஸ்திரேலியா கண்டம்  என்னை  இறுதியில் வாழும் இடமாக்கியது .  

இது எவ்வாறு நிகழ்ந்தது..? விதியன்றி வேறு என்ன..? தென்னிலங்கைக்கு வேலைவாய்ப்புடன் வந்து, வடக்கிற்கு மணியோடர் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய எமது சமூகத்தவர்கள், இனவாதிகள் அடித்து கலைத்தபோது, மீண்டும் ஊருக்கே ஓடினர்.  கலவரமும் கடந்து செல்லும் வான் மேகங்கள்தானே (Passing Clouds ) என்று  அமைதியடைந்து மீண்டும் தென்னிலங்கை  வந்தார்கள். பிறகு, மீண்டும் கலவரம் வந்ததும்.  இனி இந்த நாடே வேண்டாம் என்று வெளிநாடுகள் தேடி ஓடிவந்தார்கள்.  அகதியாக – பரதேசியாக அலைந்துழன்று,  தஞ்சமடைந்த


நாடுகளில்  வதிவிட உரிமையும் பெற்றார்கள்.  பிரஜா உரிமையும் கிடைத்தது.  அவ்வாறு வரமுடியாதவர்கள்  நீடித்த போரில் செத்து மடிந்தார்கள். வெளித்தேசங்களில் பிரஜாவுரிமை பெற்றவர்கள்,  இரட்டைக்குடியுரிமையுடன் மீண்டும் தாயகம் சென்று பொருளாதார வளம் தேடி மூலதனம் இட்டார்கள்.  நான் முன்னர் வாழ்ந்த வெள்ளவத்தையில் இப்போது  யாழ்ப்பாணக் கடையும் கோலாகலமாக  திறந்து விட்டதாகவும்  செய்திவருகிறது. யாழ்ப்பாண உற்பத்திகள் அனைத்தும் அங்கு விற்பனைக்கு  வந்துவிட்டன.  

யாழ்ப்பாணம் கறி மிளகாய்த்தூளில் சமைத்தால்தான் நாவுக்கு ருசியென்று புகலிடத்திற்கும் அது வந்துவிட்டது.  வாழ்க்கையின் ஓரத்தில் நின்று படுக்கையில் அமர்ந்து அனைத்தையும் யோசித்துப் பார்க்கின்றேன். எங்கள் ஞானகுரு பாரதியும் நினைவுகளில் வந்து சஞ்சரிக்கிறார். விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச்  சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? ‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? விதியே, தமிழச் சாதியை எவ்வகை விதித்தாய்’ என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய். பாரதியோடு  நான் முன்னர் எழுதிய கவிதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது. 

புலம் பெயர்ந் தேகிப்          புது நிலன் புகுந்து நலன் பெற முந்திய          நம்மவர் சுவடுகள் போதென மலர்ந்து          புதுவழி புலர்ந்தால் யாதும் ஊரெனும்         ஞாலமும் தெளியும்.  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த என்னை இந்த நிலைக்கு நான் வருவதற்கு யார் காரணமாக இருந்தார்கள்..? என்று சிட்னி வீட்டின் முகட்டைப்பார்த்துக்கொண்டு யோசிக்கின்றேன். வளரும் பயிரை முளையிலே கிள்ளி எறிந்துவிடாமல், அதனை போசித்து ஆரோக்கியமாக வளர்த்த பெருந்தகைகள் யார்..? யார்…? யோசிக்கின்றேன்.  தெல்லிப்பழையில் நான்கு ஆண்டிகள் இருந்தார்கள். கதிரையாண்டி, மலையாண்டி, பிச்சாண்டி, பழனியாண்டி. இவர்கள் நால்வரும் உடன்பிறந்த சகோதரர்கள். மூத்தவர் கதிரையாண்டி.  ஆசிரியராக தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பணியாற்றியவர்.  


அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் புனித பரியோவான் கல்லூரியில் என்னோடு படித்த சத்தியமூர்த்தி.  எனது பால்யகால சிநேகிதன்.  மருத்துவர் வாமதேவனின்   சகோதரன்.  இந்த வாமதேவன்தான் கலை, இலக்கிய ஆர்வலர் சட்டத்தரணி ஜெயந்தி விநோதனின் தந்தையார். வாமதேவன், வெலிசறை காசநோய் சிகிச்சை மருத்துவமனையில் சிரேஷ்ட மருத்துவராக முன்னர் பணியாற்றியவர். பரியோவான் கல்லூரிக்கு,  எனது ஆச்சி காலையிலேயே எழுந்து சமைத்து வாழையிலையில் கட்டித்தரும் சிவப்பரிசி பொங்கல் சாதத்துடன்  ரயிலில் வருவேன்.  சத்தியமூர்த்தி தெல்லிப்பழையிலிருந்து பஸ்ஸில் அல்லது தட்டி வேனில் வருவான். மதிய உணவு வேளையில் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவுப்பொட்டலத்தை பிரித்து பகிர்ந்துண்போம்.  இன்டர் சயன்ஸ் வகுப்பு நிறைவுற்றதும் அடுத்து என்ன செய்வது என நான் யோசித்துக்கொண்டிருந்தபொழுதுதான், நண்பன் சத்தியமூர்த்தி எனக்கு நல்ல யோசனை சொன்னான்.  

அதனைச்சொல்வதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு செய்தியை சொல்கின்றேன். ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி இந்த அங்கத்தை எழுதுகின்றேன். இந்தத்   தினம் மிகவும் முக்கியமானது. இந்த திகதிதான் தேசபிதா மகாத்மா காந்தி பிறந்தார். அவர் சொன்னார்:   “ வெற்றியாளர்கள் ஒருபோதும் இழப்பதில்லை. ஒன்று வெல்கிறார்கள். அல்லது  கற்கிறார்கள்.  உங்களின் நாளைய எதிர்காலம் இன்றைய செயல்களில் இருக்கிறது.  “  ஆம். காந்தியின் ஜனன தினத்தில் கதிரையாண்டி மாஸ்டரையும் நண்பன் சத்தியமூர்த்தியையும் நினைவு கூருகின்றேன்.  அவர்களும் தற்போது இல்லை. அவர்களும் காந்தி சென்ற இடத்திற்கு போய்விட்டார்கள்.  

படிப்பு முடிந்தால் அடுத்து என்ன செய்வது..?  என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதுதான்


சத்தியமூர்த்தி, தங்கள் ஊர் தெல்லிப்பழையில் யூனியன் கல்லூரி ஆரம்ப பாடசாலை தலைமை ஆசிரியராக இருக்கும் ஆண்டி மாஸ்டர் பற்றிச்சொன்னான். அவர் நண்பனின் அக்காவை மணம் முடித்தவர்.   “ அம்பி,  யோசியாதை. நான் எனது மச்சானிடம் சொல்கிறேன். நீ அங்கே வந்துவிடு  “ என்றான். சென்றேன். அங்கு ஆசிரியப்பணியும் கிடைத்தது. தங்குவதற்கு ஆண்டி மாஸ்டர் தனக்குச்சொந்தமான ஒரு வீட்டையும் தந்தார். அதற்கு வாடகை எதனையும் கேளாமல் தனது சொந்த மகனைப்போல் பார்த்துக்கொண்டவர். அத்திவாரங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை.  ஆனால், கட்டிடங்கள் அதில்தான் எழுந்து நிற்கின்றன.  

அதுபோன்று ஒவ்வொருவர் வாழ்வின் முன்னேற்றத்திலும் யாரோ ஒருவர் அத்திவாரம் போன்று மறைந்துதான் இருப்பார். அவ்வாறு எனக்கிருந்தவர்கள்தான் ஆண்டி மாஸ்டரும் நண்பன் சத்தியமூர்த்தியும். சில வருடங்களுக்கு முன்னர் சத்தியமூர்த்தி கனடாவிலிருந்து சிட்னிக்கு வந்த சமயத்தில் என்னையும் பார்க்கவந்தார். “  அந்த நாள்  ஞாபகம்… நெஞ்சிலே வந்ததே… வந்ததே… நண்பனே .” என்று பரஸ்பரம் பழைய நினைவுகளை இரைமீட்டி பேசிக்கொண்டிருந்தோம். அதுவே அவருடனான இறுதிச்சந்திப்பு. விடைபெற்றுவிட்டார். 

நான் வாழ்க்கையில் வென்றேனோ..? தோற்றேனோ  என்பது தெரியாது. ஆனால், மகாத்மா காந்தி சொன்னதுபோன்று கற்றுக்கொண்டேன்.  கற்றதையும் பெற்றதையும் இந்த சொல்லாத கதைகள் மூலம் என்னால் ஓரளவுதான் சொல்லமுடிந்தது. யோகர் சுவாமி சொல்வார்:-  “  எப்பவோ முடிந்த காரியம் “  -                      “ நாம் அறியோம்   “-   “ ஒரு பொல்லாப்பும் இல்லை “  -    “ முழுதும் உண்மை. “   அதனையும் இங்கு நினைவுபடுத்துகிறேன்.  எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்தான்.  எல்லாம் இறைவன் சித்தம்தான்.  அதனால் ஒரு பொல்லாப்பும் இல்லை.  விதி,  உலக நியதி.  அதனால் விதியும் உண்மை.  நான் இந்த சொல்லாத கதைகள் தொடரை எழுதியதும் விதியின் விளையாட்டுத்தான்.   இந்த ( 2020)  ஆண்டு பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி சிட்னியில் மறைந்த எனது நீண்ட கால நண்பர் கலைவளன் சிசு நாகேந்திரனின் இறுதி நிகழ்வுக்கு மெல்பனிலிருந்து  நண்பர் முருகபூபதி


வந்தவிடத்தில், எனது பிறந்த திகதியை நினைவு வைத்துக்கொண்டு சிட்னியில் வதியும் எனது  அருமைத்தம்பி கானா. பிரபாவுடன்  என்னை வாழ்த்துவதற்கு வந்தார்.  

அவ்வாறு வந்தவிடத்தில்தான் நான் முன்னர் எழுதிவைத்திருந்த இந்தத் தொடரின் முதல் பன்னிரண்டு அங்கங்களை ஊடகங்களில் வெளியிடுவோம் என்று முருகபூபதி எடுத்துச்சென்றார்.  பின்னர் இந்தத் தொடரை எழுதி முடிக்கவேண்டிய நிர்ப்பந்தம்  எனக்குத் தோன்றியது.  எப்படியோ எந்த விக்கினமும் இல்லாமல் 33 வாரங்கள் வாசகர்களுடன் பேசிவிட்டேன் என்ற மனநிறைவுடன் இந்த  என்றைக்கும்  நிறைவடையாத இந்த சொல்லாத கதைகளை நிறைவு செய்கின்றேன். 

இந்தத் தொடரை கணினியில் பதிவேற்றிய நண்பர் முருகபூபதிக்கும் பொருத்தமான படங்களையும்  தேர்வுசெய்து வெளியிட்ட மெல்பன் அக்கினிக்குஞ்சு ஆசிரியர் யாழ். பாஸ்கருக்கும், சிட்னி தமிழ்முரசு ஆசிரியர் குழுவைச்சேர்ந்த நண்பர் செ. பாஸ்கரனுக்கும், இதுவரையில் இந்தத் தொடரை படித்து அவ்வப்போது கருத்துக்கள் சொல்லி,  என்னை ஊக்குவித்த வாசகர் – வாசகிகளுக்கும்,  கணினியில் இந்தத் தொடரை தரவிரக்கம் செய்து காண்பித்த எனது செல்வன் திருக்குமாரனுக்கும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன். அமரர் சிசு. நாகேந்திரன் பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் மேடையேறிய எனது வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகத்தில் நடித்த கலைஞர். அவரையும் நான் மறக்கமுடியாது. அன்னாரின் இறுதி நிகழ்வுடன், எனது சொல்லாத கதைகளும் வெளியே கசிந்ததும் விதிப்பயன்தானோ..?  மிக்க நன்றி வாசகர்களே. ( நிறைவு ) 


No comments: