பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி
சிவபெருமான் மனிதவினம் படைத்த ஞான்று
சேர்த்தளித்த நுகர்பொருள்கள் அனுப வித்துப்
பவவினையைச் சிவவாழ்வில் நீக்கி நீக்கிப்
பக்குவநிலை எய்தச்சிவ தொண்டொடு தியானம்
உவந்தியற்றி இறவாப்பே ரின்ப நிலையை
உலகத்தோர் அடைந்திடாது இனமத வெறியால்
அவப்பொழுது போக்கின்றார்! நிறபே தத்தால்
அழிவுகளைச் செய்தழிந்து மாழ்கின் றாரே!
போதுமிந்த நிறபேதம் காட்டும் தீமை
போக்கற்ற சிலரிதனைத் தூண்டத் தூண்டச்
சூதுவாது தெரியாத அப்பா வியரும்
துன்பத்தில் நிதமிதனால் துடிக்கக் கண்டோம்!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
நயம்படவே உரைத்திட்டான் தமிழன் அன்று
ஏதமில்லா இக்கூற்றைத் தேவ வாக்காய்
எவ்வினமும் ஓம்பிவந்தால் இன்பம்! இன்பம்!!
உலகமதில் வாழுகின்ற மனிதர் உள்ளே
ஓடுகின்ற இரத்தத்தின் நிறந்தான் என்ன?
நிலமதிலே கறுப்பருக்குக் கறுத்த ரத்தம்
நிறம்வெள்ளைத் தோலார்க்கு வெள்ளை யாமோ?
குலம்வேறு கோத்திரமும் வேறென் றாலும்
கொண்டதோலின் நிறம்வேறாய் இருந்திட் டாலும்
சலம்மலம்போம் உறுப்புகளோ டனைத்து றுப்பும்
சகலருக்கும் ஒரேதன்மை கொண்ட தன்றோ?
சிக்காக்கோ நகரமதில் வெள்ளையர் நாணத்
திறமைமிகு உரைசெய்தோன் நிறந்தான் என்ன?
பொய்க்காத அகிம்சைவழிப் போரில் வென்று
புகழ்பெற்ற தனிமனிதன் நிறந்தான் என்ன?
எக்காரணம் இலாதுகாலாற் கழுத்தை நெரித்து
இரக்கமின்றித் துடிக்கவைத்தோர் கறுப்பன் தன்னைத்
திக்குமுக்காட வைத்தே வன்’கொலையைச் செய்தோன்
திறம்பாடும் அவனின்தோல் நிறந்தான் என்ன?
வெள்ளையர்க்கு மூப்புஇறப் பில்லை யாமோ?
விரும்பியவர் சுவாசிக்கும் காற்றின் நிறமும்
வெள்ளைதானோ? கறுப்பருக்கு வேறு காற்றோ?
வேண்டாத நிறபேதம் காட்டுஞ் செயலால்
வெள்ளையர்கள் எவ்விதத்தில் உயர்ந்தோ ராவார்?
விஞ்ஞானம் விழித்தெழுவ தற்கு முன்னர்
வெள்ளைமனங் கொண்டவெங்கள் ஞானி யர்கள்
மெய்யறிவாற் பெற்றதெலாம் சொல்லப் போமோ?
அன்புநீரைப் பொழிந்தென்றும் இன்சொல் பேசி
அடுத்தவரின் அகத்திருக்கும் இறையை மதித்துத்
துன்பத்திலும் இன்பத்திலும் பங்கெ டுத்துச்
சொந்தங்கொண் டாடிவரும் நிலையேற் பட்டால்
வன்செயலுக் கிடமில்லை! வளரும் உறவால்
வாழ்வாங்கு வாழவழி வகுத்து நிற்கும்
மன்பதையில் நிறபேதம் மறைந்து மறையா
மகிழ்ச்சியென்றும் தோன்றிடுமே ஐயம் ஏது
தெய்வமொழி பேசிவரும் குழந்தை கட்குச்
சிந்தனையில் நிறவெறியும் மதஇன வெறியும்
மெய்யாகத் தோற்றுவதே இல்லை இல்லை
விருப்போடவர் வேற்றுமையில் ஒற்றுமை காண்பர்! பொய்வராதிப் பருவத்தினர் வளர வளரப்
புறத்திருப்போர் பிரிவினையை ஊட்டிடா திருந்தால்
வையகத்திற் புதியசமு தாயந் தேன்றி
வாழ்வாங்கு வாழவழி சமைக்கு மன்றோ?
No comments:
Post a Comment