The Tragic Tale Of The Great Auk

வார இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் பிள்ளைகளுக்கான சில வகுப்புகள் நிமித்தம், வலுக்கட்டாயமான நூலக வருகை,வழமையாய்ப் போனது. அவ்வாறொரு ஞாயிறு, பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டவெனச் சில நூல்களைத்  தேடியலைகின்ற பொழுது,
 கண்ணில் தென்பட்டது ' The Tragic Tale Of The Great Auk'. ஜன் தோர்ண்ஹில் எனும் ஒரு கனடிய எழுத்தாளரின் சிறுவர்களுக்கான படைப்பு அது.

சில கணப்பொழுதேயான நுனிப்புல் மேய்ச்சலின் பின், குழந்தைகளுக்கான அன்றைய இரவின் செவியுணவாக அந்த நூலைத் தேர்ந்தெடுத்தேன்.

பத்தோடு பதினொன்றாக ஒரு சிறுவர் கதை என்ற மனப்புலம் எனக்குள்; திடீர் திருப்பங்களும் தேவதைகளும் பட்டாம்பூச்சிகளும் சிறகடிக்கும் உலகிற்கான திறவுகோல் கொண்டு, அப்பா புதியவோர் உலகினுள் கூட்டிச் செல்லும் கனவுகள் பிள்ளைகளுக்குள்; ஆளுக்கொரு பக்கம் அமர்ந்துகொண்டார்கள்.\
அற்புதமான கம்பீரமான கிறேற் ஆவ்க் பறவைகள்
இன்றைக்கு நானூறு  ஆண்டுகளுக்கு முன், வட அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவின் குளிர்மிகுந்த கடல்களில்  நிறைந்திருந்தன.

இன்றோ எம்முடன் இவை இல்லை

ஏன்? இவற்றுக்கு என்னவாயிற்று?

இதன் பேரழிவின் மிக முக்கியமான சூத்திரதாரி மனிதனே; எனினும்
இந்தப் பறவைகளின் உடலமைப்பும் பழக்க வழக்கங்களும்  இவற்றிற்கு ஆபத்தினை அதிகரித்துத் தந்தது. தப்பியோடும் மானின் கொம்பு கொடியினிற் சிக்கி அதன் உயிருக்கு உலை வைத்தாற் போல என வையுங்கள்; 
அல்லது
தலைமுறை தலைமுறையாக இப்பறவையின் மரபணுச் சங்கேதப் பரிமாற்றங்களில்,ஒரு காலத்தில் மனிதன் என்று ஒரு உயிரினம், தமது இரை விழுங்கியாக வரும் என்ற தரிசனம்  ஊடுகடத்தப்படாததால் அழிவு நிகழ்ந்ததா?

பறப்பறியாத இந்தப் பறவைகள், வருடத்தில் பத்துமாதம் கடலிலேயே கழிப்பவை;கடுங்குளிரைத் தாங்க அதீதமான கொழுப்புப் படிமானம் கொண்ட உடல், நீர் உட்புகவிடாத் தன்மை கொண்ட சிறகுகள்;மீன் வேட்டையாடப்  பலம்மிக்க பெரிய அலகு; அதியற்புதமான நீச்சற் திறன்;
இருபது ஆண்டுகள் வரையான நீடித்த ஆயுள்; எனக் கடலில் வாழத் தகுதியான அனைத்தும் இவற்றிடம் இருந்தது....

ஆனால்... கடலிலே பலம் கொண்ட இவை தரைக்கு வந்தாலோ கதை வேறு!
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே" கண்ணதாசன் சொன்னது காதினில் வந்துபோனது. உன்னதமான கடற்பறவையாக 'கிறேற் ஆவ்க்' கூர்ப்படைகிற பொழுது, தரைவாழ்விற்குத் தேவையான சில லட்சணங்கள் தாரை வார்க்கப்படுகின்றன.கடல் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் சிறகுகள் சிறிதாகி துடுப்பாகின;
கால்கள் வாலுக்கருகே நகர்ந்து சுக்கான் ஆகின. ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெறலாம் என்பது எல்லாவுயிர்க்கும் பொதுவான மறை தானே!  
ஆக, துடுப்புகள் போன்ற சிறகினையும் சுக்கான் போன்ற கால்களையும் கொண்டு தரையினில் இவற்றால் தள்ளாடித் தள்ளாடித் தான் நடக்கமுடியும்.
இதனால் தான் இதற்கு  " தள்ளாடி"  (Wobble) என்ற காரணப் பெயரும் வந்தது

அவ்வாறாயின், இவை, தரையை ஒரேயடியாகத் தவிர்த்து, தண்ணீரிலேயே நிலைத்திருக்கலாமே?

தவிர்க்கமுடியாத படி இவை தரைக்கு வந்துதான் ஆக வேண்டும், தம் இனம் பெருகவேண்டுமெனில்;
கரடு முரடான, செங்குத்தான குன்றுகள் மேல், இவை தட்டுத் தடுமாறி ஏறிச் சென்று வெறும்கட்டாந்தரையில் இடும் ஒற்றை முட்டை மட்டுமே இவற்றின்   அடுத்த சந்ததிக்கும் இருப்பை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம்.
தான் இட்ட முட்டையை, ஏன் தன்னையே காப்பாற்றிக் கொள்ள  எந்த உறுப்பும் தராது வஞ்சித்த இயற்கையை நோகவும் அறியாத,  வெள்ளந்தியான இந்தப் பறவைகளின் இருப்பிற்கு இது வரையில்  எதிரிகளாய் இருந்த  பனிக் கரடிகளாலோ, ஓநாய்களாலோ, கற்கால மனிதர்களாலோ பேரிழப்பு ஏதும் நேரவில்லை.
எளிதில் அடையமுடியாத இடங்கள், செங்குத்தான குன்றுகள், அதிவேக நீரோட்டங்களைக் கொண்ட பாறைத் தீவுகள் எனத் தேர்ந்தெடுத்த இடங்களில் அடைகாப்பு வலயங்களை அமைத்து அவை  தம்மைத் தக்கவைத்துக் கொண்டன. 

பனியுகத்தின் போது, ஐரோப்பாவின் மத்தியதரைக் கடல் வரை பரந்திருந்த 'கிறேற் ஆவ்க்' இன் வாழிடப் பரப்பு,   பனி உருகி வடக்கு நோக்கிப் பின்வாங்கத் தொடங்கிய பின்னாக, மிகச் சுருங்கிப் போனாலும் கூட குளிர்மிக்க வடகடல் பரப்பை தம் வாழிடமாக்கி தம்மைத் தக்கவைத்துக் கொண்டன.

இவ்வாறாக,தங்கள் இயலாமையையும் இயற்கையையும் வென்று இருப்பை நிலைநாட்டிய இந்தப் பறவைகளுக்கு எமனாக மனிதன் வந்தான், 'வைக்கிங்குகள்' எனப்படும் கடலோடிகளின் வடிவில். ஸ்கன்டிநேவியக் கடற்பரப்பு முழுதும் செறிந்திருந்த 'கிறேற் ஆவ்க்' ஐ வழித்துத் துடைத்துத் தின்றொழித்தனர் இந்த 'வைக்கிங்குகள்'.

பின்பு ஐரோப்பியர்கள் வந்தார்கள். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா வர எடுக்கும் இரண்டு மாதக் கடல் பயணத்தில், பல்லை உடைக்கும் பாணும், உப்பிட்ட இறைச்சியும் மட்டுமே உணவாகக் கொண்டு நாக்குச் செத்துப் போனவனுக்கு அத்லாந்திக்கின் மறு கோடியில், கால் வைக்க முடியாத அளவுக்கு இப்பறவைகளால் நிறைந்த தீவுகளைக் கண்டு கரை காணாத மகிழ்ச்சி.   ஆசை தீர தின்று தீர்த்தார்கள்; உப்புக் கண்டமிட்டு தம்முடன் கொண்டு சென்றார்கள்; இவற்றின் முட்டைகளோ மிகப் பிரபலமாகிவிட்டன.இறக்கைகளைப் பிடுங்கி தலையணையும் மெத்தையும் செய்து  சலனமின்றி உறங்கினார்கள்; இப்பறவைகளைப் பெரிய பானையில் போட்டுக் கொதிக்கவைத்து அதன் கொழுப்பை எடுத்து விளக்கெரித்தார்கள்; விறகு தீர்ந்துவிட்டால் கவலையற்று,  அந்தப் பறவைகளையே விறகாக்கி அடுப்பெரித்தார்கள்.1800களில் அத்லாந்திக்கின்  கரையிலும் இவை இல்லாதொழிக்கப்பட்டன.


கிறேற் ஆவ்க்கின் இறுதிப் புகலிடமாக இருந்தது ஐஸ்லாந்து மட்டுமே.   ஆனாலும் அழிவின் விளிம்பில் இருந்த இந்தப் பறவைகள் சற்றே ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும் அவகாசம் தர நினைக்காத  மனிதன் , இவற்றின் இறுதி இருப்பிடம் குறித்த தேடலில் மீண்டும் மும்முரமானான், இம்முறை  அவனது தேடல்,  அதன் இறைச்சிக்காகவோ, இறகுகளுக்காகவோ, முட்டைக்காகவோ அல்ல. அரும்பொருள் சேகரிப்போர்க்கு அரிய விலையில் விற்பதற்காகவே.  "உலகின் இறுதி கிறேற் ஆவ்க் இதோ!  என் கையில்" என்று பஞ்சடைத்து பதனம் செய்த உடலைக் காட்சிப் படுத்தத் தேடித் திரிந்தவர்களுள் 'அதிர்ஸ்டசாலிகள்' இருவரின் கைகளில், ஐஸ்லாந்தில், கிறேற் ஆவ்க்கின் இறுதி இணை  அகப்பட்டது. அந்த இணையின் குரல் வளை நெரிக்கப்படும்போதே,  இந்த உலகில் வலம் வந்த அதியுன்னதமான பறவையின் இருப்புக்கும் ஒரு முடிவுரை கறை படிந்த கரங்களால் எழுதி முடிக்கப்படுகிறது.

கதையை நான் வாசித்து நிமிர்கிறேன். என் கண்ணோரம் தளும்பிய துளிகளின் விகசிப்பினூடே என் பிள்ளைகளின் ஒளிபொருந்திய விழிகளைப் பார்க்கிறேன்.அவற்றில் துயரின் நிழல் படர்ந்திருப்பதாய் உணர்ந்தேன். என் மனவெளி ஆழங்களில் , எனக்குப் பரிச்சயமான என் ஆட்காட்டிக் குருவியின்  ஓலமிடும் மொழியில் அந்த   'கிறேற் ஆவ்க்'  பறவை என்னுடன் ஏதோ பரிமாற முனைவதாய் உணர்ந்து அலைக்கழிந்தேன்.
" ஏன் அந்தப் பறவையின் இருப்பைத் தொலைத்தார்கள்?" என்ற என் பெரியவனின் கேள்விக்கு விடையாக, ஒட்டுமொத்த மனிதசமூகத்துக்குமாய் தலைகுனிந்து மௌனித்தேன். என்றோ ஒருநாள்     எதேச்சையாகத் தோட்டத்தில் கண்ணுற்ற பூச்சி ஒன்றை, என் மரபணுக்களில் சங்கேத பாஷையாய் பொதிந்திருக்கும்  எதேச்சாதிகாரம் உந்தித் தள்ளவும், நசுக்க நீண்ட கரங்களைத்,      தடுத்த என் சின்னவனின் தளிர்விரல்கள் தாங்கியெடுத்து அதனைக்   காற்றில் தவழவிட்ட கணங்கள் கண்முன் நிழலாட.......
ஆஹா! இந்தக் குழந்தைகளின் கைகளில்,  நேற்றைய உலகம் இருந்திருக்கக் கூடாதா? எனும் நினைவோடியது.

பல்லுயிர்களுக்கும் பொதுவான  இப்பூமியை தனக்கே உரித்தான உடைமை என  நினைக்கும் நமது ஆதிக்க மனோபாவத்திலிருந்தே, அடக்கியொடுக்கும் பேரினவாத அரசுகளின் சிந்தனாவீச்சும் ஊற்றெடுக்கிறது என்பதை உணர்வோம்
இந்தப் பூமி நாம் நம் முன்னோரிடம் இருந்து பெற்ற முதுசம் அல்ல; மாறாக நம் பிள்ளைகளிடமிருந்து பெற்ற இரவல் என நினைத்து;
இந்தப் பூமியை அதன் சகல உயிர்களோடும் வளங்களோடும் பேணிப் பாதுகாத்து அவர்களிடம் திருப்பித்தருவதற்கு எம்மால் இயலுமானவரை முயற்சிப்போம்.


 சு.வி சொன்னது போல 'வாய்க்காலோரப் புல்லுக்கும் வாழும் முறைமை 'காக்கவும் , எல்லாவற்றிற்குமான வாழ்வுரிமையை மதிக்கவும்  பழகுவோம் வாருங்கள்.

No comments: