அபிதா ஈர உடைகளை வெளியே கொடியில் காயப்போட்டுவிட்டு திரும்பி வந்து உடைமாற்றும்போது, அவளது கைத்தொலைபேசி மீண்டும் ஒலித்தது. கூந்தல் ஈரத்தை துடைத்துக்கொண்டு வந்து கைத்தொலைபேசியையும் நேரத்தையும் பார்த்தாள். லண்டன் அழைப்பு. பகல் பதினொன்றரை. இந்த நேரத்தில் லண்டன் விடிந்திருக்கும். ஜீவிகாவின் பெரியப்பாவாக அல்லது அவரது மகள் தர்ஷினியாக இருக்கவேண்டும். தனது இலக்கத்தை அவர் பதிந்து சேகரத்தில் வைத்திருப்பவர். சில சமயங்களில் அந்தபோனிலிருந்தும் எடுப்பாள். ஆனால், இது புதிய இலக்கத்திலிருந்து வருகிறது. அநேகமாக அவளாகத்தான் இருக்கும். கொஞ்சநேரம் விட்டுப்பிடிப்போம். கூந்தலை துவட்டிவிட்டு, துவாயினால் இறுக முடிந்தாள். நிலைக்கண்ணாடி முன்னால் வந்து நின்று பார்த்துக்கொண்டாள். எனது அழகை நானே ரசிப்பதற்கும் நேரம் இல்லாமல் எவ்வளவு காலத்தை கடத்திவிட்டேன். இனி இந்த அழகு யாருக்குத் தேவை. தனது பிம்பத்தை பார்த்து
சிரித்துக்கொண்டாள். அதனுடன் பேசவேண்டும் போலிருந்தது. வீட்டில்தான் எவரும் இல்லையே பேசிப்பார்ப்போம். “ அபிதா… இனி என்னடி செய்யப்போகிறாய்..? “ “ வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில் “ “ லண்டன்காரி எடுத்துக்கொண்டிருக்கிறாள். ஏன் எடுக்கிறாள்…? எதற்கு எடுக்கிறாள்… சொல்…. “ “ என்னிடம் ஏன் கேட்கிறாய்…. அவளிடமே கேட்கவேண்டியதுதானே…? “ “ நான் அழகாக இருக்கிறேனா..? அந்த ரி,வி. ஷோவுக்கு போய் வந்தது முதல் எனது அழகு பற்றியும் யோசனை வந்துவிட்டது “ “ இப்போதுதான் வீட்டில் எவரும் இல்லையே, விதம் விதமாக உடுத்து மேக்கப்போட்டு அழகு பார்க்கவேண்டியதுதானே…. “ “ அதனைப்பார்த்து ரசிப்பதற்கும் எவரும் இல்லையே…? “ “ ஏன் எவரையும் தேடிப்போகிறாய்…? உனது அழகை நீயே ரசிக்கலாம்தானே..? “ “ அப்படி பழக்கமில்லை. எனது அழகை அவர்மட்டும்தான் ரசித்தார். எனது அழகை அவருக்கும் மகளுக்கும்தான் காண்பித்தேன். இனி காண்பிக்க எவரும் இல்லை. “ “ அடியேய் அபிதா… நீ இனி உன்னை நேசி. உன்னைக் காதலி. உன் மீது அன்பு செலுத்து. உனக்கு நீதான் துணை. இடைக்கிடை வந்து என் முன்னால் நின்று பேசிக்கொண்டிரு. அதிலும் ஒரு வகையான சுகம் இருக்கும். “ “ தனக்குத்தானே பேசிக்கொண்டால், விசர், பைத்தியம் என்றல்லவா சொல்வார்கள் “ “ யார் சொல்வது…? இந்த உலகத்தில் முக்கால்வாசிப்பேர் பைத்தியங்கள்தான். எல்லோரும் தத்தம் மனதிற்குள் பேசிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
ஆனால், வெளியே கேட்காது. கேட்டால்தான் அவ்வாறு கணிப்பார்கள். நீ எத்தனை நாட்கள் உன் மனதிற்குள் குமுறிக் குமுறிப்பேசிக்கொண்டிருந்திருப்பாய்…. நீ இப்போது பேசுவது வெளியில் கேட்டால்தானே அப்படிச்சொல்வார்கள். நீ உனது பிம்பத்திற்கு முன்னால் நின்றுதானே பேசிக்கொள்கிறாய். “ “எனக்குள் ஒரு மாற்றம் நிகழுகிறது. ஏதோ நடப்பது புரிகிறது. எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது. எனது கோபத்தை யாரிடமாவது காண்பிக்கவேண்டும் போலத் தோன்றுகிறது. “ “ அதெல்லாம் வயதால், பருவத்தால் வரும் கோளாறு. உனக்கு சொல்லித்தருவதற்கு எவரும் இல்லை.
பெண்களின் உடலும் உள்ளமும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது உனக்குத் தெரியாதா…? கற்பகம் ரீச்சரிடம் கேட்டுப்பார் சொல்லுவா.. “ “ இயற்கையைப்பார்.. ஏன் அதனை பெண்களுடன் ஒப்பிடுகிறார்கள் தெரியுமா…? அதுவும் பெண்களைப்போல் மாறிக்கொண்டே இருப்பதனால்தான். “ அபிதா பேசப்பேச அந்த நிலைக்கண்ணாடி பிம்பமும் பேசியது. மீண்டும் சமையலறை மேசையிலிருந்த அவளது கைத்தொலைபேசி சிணுங்கியது. கண்ணாடியை வலது கையால் தொட்டு வாயருகில் வைத்து முத்தமிட்டுக்கொண்டு மேசைக்கு வந்தாள். தன்னைத்தானே முத்தமிட்டுக்கொண்டதுபோன்ற உணர்வு வெளிப்பட்டது. எடுத்துப்பேசினாள். மறுமுனையில் அவள் எதிர்பார்த்தவாறே லண்டன் தர்ஷினி. “ சொல்லுங்க… “ “ எத்தனை முறை எடுத்திட்டேன். எங்கே போய்த் தொலைந்தாய்…? “ தர்ஷினி அவ்வாறு சொன்னதும் அபிதாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “ எங்கே போய்த் தொலைவது என்று இடம் தேடிக்கொண்டிருந்தேன். இன்னமும் கிடைக்கவில்லை. “ என்றாள் அபிதா. நிச்சயமாக தர்ஷினிக்கு கோபம் வரட்டும் என்ற எண்ணத்துடன்தான் அபிதா அவ்வாறு சொன்னாள்.
“ என்ன… உன்ர வாய் நீளுது நிகும்பலைச்சாப்பாட்டினால் கொழுப்பு வைத்துவிட்டதோ…? “ என்று தர்ஷினி சொன்னதும் அபிதா வெகுண்டாள். “ உங்களுக்கு லண்டன் சாப்பாட்டினால் உடலில் கொலஸ்ரோல் கூடுமென்றால், எனக்கு இங்கே நிகும்பலையூர் சாப்பாட்டினால் கொழுப்பு கூடலாம்தானே மெடம் “ அபிதா தன்னை மெடம் என அழைத்ததும் தர்ஷினியும் ஆத்திரமடைந்தாள். “ ஒரு வேலைக்காரி பேசுவது போலவா பேசுகிறாய். கழுவித்துடைக்க வந்த உன்னை ஜீவிகா வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருக்கவேண்டும். இடியட். ஸ்டுபிட் “ “ என்னம்மா சொல்றீங்க… நான் இங்கே கழுவித்துடைக்கத்தான் வந்தேன். இல்லை என்று சொல்லவில்லை. எப்போதும் சொல்வேன். அது என்ர தொழில். ஆனால், நீங்களும் உங்கட புருஷனும் லண்டன் ரெஸ்ரூரன்ட்டுகளில் கழுவித்துடைக்கவில்லையா…? பாத்திரம் தேய்க்கவில்லையா… ? அவ்வாறு துடைத்தாலும் வெளியே சொல்வீங்களா..? அங்கே மயானத்தில் குழி வெட்டுனவுங்களும் இங்கே வந்து கிரவுண்ட் எஞ்சினியர் என்று சொல்லி கலியாணம் செய்துகொண்டு போயிருக்கிறாங்க தெரியுமா..? “ அபிதாவின் முகம் சிவந்தது.
கூந்தலில் செருகியிருந்த துவாய் கழன்று விழுந்தது. “ என்னடி சொல்றாய்… இப்படியெல்லாம் பேசுவதற்கு யார்… அந்த தேவடியாளா உனக்கு சொல்லிக்கொடுத்தாள். “ “ பிளீஸ் மெடம்… நீங்கள் அநாவசியமாக வார்த்தைகளை கொட்டவேண்டாம். ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும். அளந்து பேசுங்க.. இதுவரையில் நான் உங்களை பார்த்ததே இல்லை. நீங்கள் எனக்கு சம்பளம் தரவும் இல்லை. ஜீவிகா அம்மா… என்னை வேலைக்கு அழைத்தாங்க. வந்தேன். சொல்லும் வேலைகளை செய்தேன். அதுக்குத்தான் சம்பளம் தந்தாங்க. என்னைப்பற்றி உங்கட அப்பாவிடம் கேளுங்க சொல்லுவார். உங்கட இந்த வீட்டை நான் எப்படி பார்க்கிறேன். கூட்டித்துடைத்து பராமரிக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். என்னைப்பற்றி தெரியாமல் பேசவேண்டாம் “ அபிதாவுக்கு தொண்டை அடைத்தது. ஏன் இவர்களிடமெல்லாம் கேவலப்படுகிறேன். இந்த லண்டன்காரிக்கும் எனக்கும் என்ன உறவு. வேலைக்காரியென்றால் எப்படியும் பேசிவிடலாமா..?
இவள் யார் மீதான கோபத்தை என்னிடம் காண்பிக்கிறாள். இராத்திரி புருஷனுடன் பிரச்சினைப்பட்டிருப்பாளோ…? அல்லது ஏதும் கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்து, போன் எடுத்து என்னைத் திட்டுகிறாளோ…? அபிதாவுக்கு பலவாறும் யோசனை ஓடியது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோன்று இந்த லண்டன் பூதம் ஏன் இப்படி எகிறிப்பாய்கிறது….? இரவு ஏதும் பேய் – ஆவி படம் பார்த்துவிட்டு தூங்கியிருப்பாளோ.. ..? அல்லது ஹிஸ் ரீரியா கேஸோ..? “ ஏய்… அபிதா… உன்னைப்பற்றித் தெரியும்.
நீ முன்பு புலிதானே…?! உன்ர புருஷன் சரணடைஞ்சு காணாமல்போனவன் தானே…!? எனக்கு எல்லாம் தெரியும். பொத்திக்கொண்டு இரு. “ இவ்வாறு தர்ஷினி சொன்னதுதான் தாமதம், மேசையிலிருந்த கரண்டியை அவளுக்கு கேட்கும்வகையில் தூக்கி எறிந்த அபிதா, “ ஓம்… ஓம்… நான் ஒரு புலியின்ட பொண்டாட்டிதான். அதுக்கு இப்ப என்ன… ? நீங்கள் எல்லாம் புலி… புலி.. என்று சொல்லித்தானே லண்டனுக்கும் வெளிநாடுகளுக்கும் போனீங்கள். அவுங்களாவது கொள்கைக்காக போராடிச் செத்தாங்கள். நீங்கள் எங்கட பிரச்சினையை சொல்லி சொல்லித்தானே அங்கே தஞ்சம் கோரினீங்கள்.
எல்லாம் முடிந்தபிறகு இரட்டைக்குடியுரிமையுடன் வாரீங்கள். உங்கட காணி, வீடுகளைப்பார்க்கவும் , ஊர் சுத்தவும் வாரீங்க… விட்டிட்டு ஓடியது நீங்களா..? நாங்களா… மீண்டும் உங்களுக்கு சொல்லுறன். வார்த்தைகளை அளந்து பேசுங்க… “ “ ஓகோகோ… அளந்து பேசவேணுமா… எங்கே அவள் ஜீவிகா… கூப்பிடு எப்படி அளந்து பேசுவது என்று அவளுக்கும் சேர்த்து சொல்லித்தருகிறேன். “ “ அவுங்க வீட்டில் இல்லை. “ “ எங்கே காதலனுடன் ஆடப்போய்விட்டாளா..? “ “ அவவின்ட போனுக்கு எடுத்துக்கேட்கவேண்டியதுதானே.. “ அபிதா, கைத்தொலைபேசியை அணைத்து அடித்து மேசையில் வீசினாள்.
நல்லவேளை அது ஒரு பாத்திரத்தின் அருகில் சென்று நின்றது. தரையில் கிடந்த துவாயை உதறி எடுத்து, குளியலறை தண்ணீர் தொட்டிக்கருகிலிருந்த வாளியில் போட்டுவிட்டு திரும்பினாள். மீண்டும் உள்ளே வந்து நிலைக்கண்ணாடி முன்னால் நின்று, “ அவளுக்கு நல்லாக் கொடுத்தேன் “ என்று கத்தினாள். எனக்கு என்ன நேர்ந்தது. எனக்கும் அவளைப்போல் ஹிஸ் ரீரியா வந்துவிட்டதா..? இவ்வளவு நேரமும் பேசியது நானா.. அல்லது எனது உள்ளத்தில் இதுவரை காலமும் உறங்கிக்கிடந்த மிருகமா..? எனக்குள் இப்படியெல்லாம் எவ்வாறு மாற்றங்கள் நேர்ந்தன..? ஒவ்வொருவரையும் மாற்றுவதற்கு சூழலும் மனிதர்களும்தான் பிரதான காரணமா..? பயந்து பயந்து தயங்கித்தயங்கி இந்த ஊருக்கு வந்த என்னை யார் மாற்றினார்கள். எனக்குள் நிகழ்ந்த ரஸவாதத்தின் ஊற்றுக்கண் எது..? அபிதாவுக்கு பசி வயிற்றை கிள்ளியது.
சாப்பிடுவதற்கு முன்னர், தனது அறைக்கு விரைந்தாள். மடிக்கணனியை எடுத்து, இயங்கவைத்துவிட்டு, ஒரு கணம் யோசித்தாள். சில நிமிடங்களுக்கு முன்னர் நடந்தவற்றை வேகமாக தட்டித் தட்டி எழுதி பதிவுசெய்தாள். நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று பேசியவற்றை நினைவுக்கு அழைத்துவந்து எழுதினாள். ரெளத்ரமும் சிரிப்பும் இணைந்து வந்தது. இரவு ஜீவிகா வீடு திரும்பியதும், அவளுக்கு மேசையில் இரவுச்சாப்பாட்டை எடுத்துவைத்துவிட்டு, பகல் பொழுதில் லண்டன் தர்ஷினியுடன் வாதிட்டதை ஒன்றுவிடாமல் சொன்னாள். ஜீவிகாவை, தேவடியாள் என விளித்ததை மாத்திரம் சொல்லாமல் தவிர்த்தாள். “ வெல்டன் அபிதா… எப்படி உங்களால் அப்படியெல்லாம் பேசமுடிந்தது. சாப்பாட்டில் கை வைத்துவிட்டேன். இல்லையேல் உங்களுக்கு கைகுலுக்கியிருப்பேன். “ என்றாள் ஜீவிகா. உங்கள் இருவரதும் ஆணவத்திற்கிடையில் நான் சிக்கியிருப்பதும் எனது விதிப்பயன்தான். மனதிற்குள்தான் அபிதாவால் பேசமுடிந்தது. “ என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா. அவுங்க என்ர தன்மானத்துடன் விளையாடிப்பார்த்தாங்க.
நான் வேலைக்காரிதான். ஆனால், எனக்கு வேலையும் இருப்பிடமும் தந்து கூலியும் தருவது நீங்கள். அவுங்க இல்லை. அவுங்களை எனது வாழ்நாளில் பார்த்ததும் இல்லை. அப்படி இருக்கும்போது, என்னை கேவலப்படுத்திப்பேசினால், நான் என்னதான் செய்யமுடியும். அவுங்க கோல் எடுத்தவுடன், நான் எடுத்துப்பேசவில்லை என்பதுதான் அவுங்கட குறை. நானென்ன மொபைலை கழுத்திலே மாட்டிக்கொண்டா அலையிறன். குளிக்கப்போயிருந்தேன். அதுக்காக அப்படியெல்லாம் பேசுவதா…. நீங்க சாப்பிடுங்க. சாப்பிடும்போது பேசக்கூடாது. புரைக்கேறும். எதனையும் மிச்சம் வைக்கவேண்டாம். இரண்டு நாளாக சரியா சாப்பிட்டிருக்கமாட்டீங்க… நீங்களும் சீலன் தம்பியும் எங்கே கடையில்தான் வாங்கிச்சாப்பிட்டிருப்பீங்க. “ ஜீவிகா ஆமோதிப்பது போல் தலையாட்டினாள். “ நான் வீட்டில் இல்லாத நேரத்தில் பெரிய பூகம்பம்தான் வெடித்திருக்கு இல்லையா..? “ “ நல்லவேளை… நீங்கள் மட்டுமில்லை. கற்பகம் ரீச்சர், மஞ்சு, சுபா… எவருமே இல்லை.
தன்னந்தனியே இரண்டு நாட்களாக இரவில் சரியான தூக்கமும் இல்லாமல் தவித்தேன். கதவு, யன்னல் எல்லாம் சரியாக சாத்தி மூடினேனா… என்று இரண்டு மூன்று தடவை படுக்கையிலிருந்து எழுந்து வந்து பார்த்தேன். எலி ஓடிய சிறிய சத்தம் கேட்டாலும் திடுக்கிட்டு எழுந்தேன். “ “ சொரி அபிதா.. இனிமேல் அப்படி நடக்காது. இனி நடக்கப்போவதை பார்ப்போம். நிச்சயமாக அவள் தர்ஷினி பெரியப்பாவிடம் சொல்லுவா… ஆனால், அவர் அதனை நம்பமாட்டார். இன்றைக்கோ, நாளைக்கோ அவர் கோல் எடுப்பார். எடுத்தால் நான் சொல்வேன். உங்களைப்பேசுவதற்கு அவளுக்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லை. நடந்ததை உங்கட சிநேகிதி தமயந்தியிடமும் சொல்லிவிடாதீங்க. பிறகு எங்கட குடும்பத்தை மதிக்கமாட்டாங்க. “ எனச்சொல்லிக்கொண்டு எழுந்த ஜீவிகா சிங்கில் உணவுத்தட்டத்தையும் கையையும் கழுவிக்கொண்டு, ஏப்பம் விட்டாள். அபிதா, கைதுடைக்கும் துண்டை எடுத்து நீட்டினாள். ( தொடரும் )
No comments:
Post a Comment