காற்றில் கலந்த இசைக் கலைஞர் சத்தியமூர்த்தி - செ .பாஸ்கரன்

.

இசை வெள்ளத்தில் ஆழ்த்திய இதயம் ஒன்று தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. சிட்னியில் நான் அறிந்த நாள் முதல் நாதஸ்வரம் என்றால் அது சத்தியமூர்த்தி. புலம் பெயர்ந்த நாட்டிலும் மேடையில் நாதஸ்வர இசையை கேட்க முடியும் என்ற நம்பிக்கைக்கு உயிர் கொடுத்தவர் திரு சத்தியமூர்த்தி .

பல நாதஸ்வர இசைக் கலைஞர்களுக்கு முன்னால் உட்கார்ந்திருந்து, கண் விழித்தும் கண் துயின்றும் , பாதி நித்திரை பாதி விழிப்பு நிலையிலிருந்து நாதஸ்வர இசை கேட்டு வளர்ந்தவன் நான். அந்த இசை என்றால் ஒரு பற்று, அதை புலம்பெயர்ந்த ஆரம்ப காலத்தில் கேட்டதென்றால் சத்தியமூர்த்தி அவர்களுடைய இசைதான். திரு சத்தியமூர்த்தியும் திரு வைத்தீஸ்வரநும் இணைந்து நமக்கும் ஒரு நாதஸ்வர குழு அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார்கள் என்பதற்கு முத்தாய்ப்பு வைத்தவர்கள்.

கோவில்கள், பாடசாலைகள், திருமண விழாக்கள், மங்கல நிகழ்வுகளில் மங்கல இசை திரு சத்திய மூர்த்தி என்று பொறிக்கப் படாத நிகழ்ச்சி நிரல்களே இருக்காது. சிட்னி முருகன் கோவிலில் ஆஸ்தான வித்துவானாக நீண்டகாலம் முருகனோடும் மயில் வாகனத்தோடும் கூடவே வலம் வந்த இசைக்கலைஞன் இன்று தன் சேவைகள் போதுமென்று எண்ணி விட்டார் போலும் குழலை சாய்த்து வைத்து விட்டார்.

இசைக்கலைஞர் சத்தியமூர்த்தி பற்றி பல முகங்கள், பல பார்வைகள், பல பக்கங்கள். ஆனால் எனக்கு அறிமுகமான சத்தியமூர்த்தி நித்தி, சக்தியாக அறிமுகமானவர்கள். எங்கும் எதிலும் கணவன்-மனைவியாக சிரித்த முகத்துடன் காட்சி தருவார்கள். அன்பாக பேசுவதும் அரவணைத்து நடப்பதும் அவர் இயல்பு. காணுமிடமெல்லாம் எப்படி பாஸ்கரன் என்ற சுக விசாரிப்பு இருக்கும். கோவில்களில் நாதஸ்வரம் வாசித்து கொண்டு வருவார் காணும்போது ஒரு தலையசைப்பு, அது நாதஸ்வர கலைஞனுக்கு உரிய நலம் விசாரிப்பு. அல்லது கண்ணைச் சிமிட்டி என் அக்கறையை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று சொல்வது போல் ஒரு அறிவிப்பு. இந்தக் கலைஞனால் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று ஆச்சரியம். என்னுடன் மட்டும்தானா இவர் இப்படி அன்பாக நடக்கின்றார் அல்லது எல்லோருடனும் இப்படித்தானா என்று என்னையே கேட்டுக் கொள்வேன்.

இன்று அந்த இசைக்கலைஞன் சத்தியமூர்த்தி நம்மிடையே இல்லை. இதை நம்பித்தான் ஆகவேண்டும். நாளை நான் கோவிலுக்கு போகும்போது குங்குமமும் சந்தனமும் கலந்து வைத்த பொட்டும் , கழுத்தில் நீண்டு தொங்கும் பதக்கத்தோடு கிடக்கும் சங்கிலியும், தழையத் தழைய கட்டிய பட்டு வேட்டியும் வலது கையால் பிடித்து இடது தோளில் சாத்திய நாதஸ்வரத்துடன் கைவிரல்களில் மின்னும் தங்க மோதிரங்களுடன் கலைஞனுக்கே உரிய நிமிர்வோடு பார்வதி, பரமேஸ்வரன் போல் நித்தி பக்கத்தில் நிற்க காட்சி தரும் அந்த நாதஸ்வர இசை கலைஞரை இனி காண முடியாது.


மனம் தவிக்கும் ஒலி கேட்க்கிறது.

மாசிலாமணி அது அவர் தந்தையின் பெயர் தந்தை என்பதை விட்டுவிட்டு அந்த பெயரை மட்டும் பார்த்தாலும் அது அவருக்கு பொருத்தமான தாகவே இருந்தது. மாசி(ல்)லாமணி சத்தியமூர்த்தி.

இத்தனை வருடங்களாக இடைவெளி இல்லாது இசைத்த அந்தக் கலைஞன் ஓய்வெடுத்துக் கொண்டார். கலைஞனின் ஆத்மா சாந்தி பெறட்டும்.

தமிழ் முழக்கத்தின் கண்ணீர் அஞ்சலி.

(03.10.2020 தமிழ் முழக்கம் வானொலிக்காக செ .பாஸ்கரன்)


No comments: