வாசகர் முற்றம் – 10 வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்த பெற்றோரை ஆதர்சமாக கொண்டிருக்கும் சுபாஷினி சிகதரன் ஜெயகாந்தனிலிருந்து ஜெயமோகன் வரையில் பயணிக்கும் தேர்ந்த வாசகி முருகபூபதி


எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட வானவில் கவிதைத் தெகுப்பில் 31 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அதில் இறக்கைகள் விரியட்டும் என்ற கவிதையை எழுதியிருந்தவர் மெல்பனில் வதியும் சுபாஷினி சிகதரன்.   “ கவிதை எழுதத்தெரியாத முருகபூபதி,  இந்த நூலை தொகுப்பதற்கு முன்வந்தார்  “  என்றும் அச்சமயத்தில் என்மீது விமர்சனமும் ஒரு சிலரால் வைக்கப்பட்டபோது மௌனமாக சிரித்தேன். கவிதை நயம் நூலை கவிஞர் முருகையனுடன் இணைந்து எழுதியிருக்கும் பேராசிரியர் க. கைலாசபதியும் கவிதை எழுதிப்பழகித்தான் அந்த நூலை எழுதினாரோ தெரியவில்லை!   குறிப்பிட்ட வானவில் கவிதைத் தொகுப்பிற்கு முன்னர் உயிர்ப்பு என்ற கதைத் தொகுதியையும் எமது சங்கத்தின் சார்பில் 2005 இல் வெளியிட்டபோது,  எனது கதை அதில் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டேன். ஆனால், எவரும் அது பற்றி விமர்சிக்கவில்லை.  நடிக்கத்தெரியாத பல இயக்குநர்கள் நெறிப்படுத்திய படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. ஆனால், அவர்கள் மீது நடிக்கத் தெரியாதவர் இயக்கவந்துள்ளார் என்று எவரும் முறைப்பாடு சொல்லவில்லை. சரி… அதுபோகட்டும் ! 

 இந்த வாசகர் முற்றத்துக்கு வருகின்றேன். இங்கு நான் நினைவுபடுத்தும் கவிஞர் இ.


முருகையனின்பூர்வீகமான தென்மராட்சியில் சாவகச்சேரி சரசாலையில்  ஶ்ரீதரன் – நகுலேஸ்வரி தம்பதியரின் அருமை மகளான சுபாஷினி, 2004 ஆம் ஆண்டு  நடுப்பகுதியில் குளிர்காலத்தில் மெல்பனுக்கு வந்தவர்,  பதினாறு வருடங்கள் கடந்த பின்னரும்,   உடல் இங்கும் மனம்  தாயகத்திலுமாக  வாழ்ந்துகொண்டிருக்கும்  கலை – இலக்கிய ஆர்வலர். அண்மையில் இவர் எழுதிய  திருவண்ணாமலை தரிசனம் பற்றிய பயண இலக்கியம் படித்து வியந்தேன்.  அழகியல் நேர்த்தியுடன்  அதனை  படைத்திருந்தார்.  அதில் பொதிந்திருந்த  தீவிரமான தேர்ந்த  வாசிப்பு அனுபவமும் எனக்கு புலப்பட்டது. அதனால் நான் எழுதிவரும்  வாசகர் முற்றம் தொடருக்காக அவருடன் தொடர்புகொண்டு பேசநேர்ந்தது. சுபாஷினியை இலக்கிய நண்பரும் எழுத்தாளருமான  ‘ ஜே.கே.  ‘ ஜெயக்குமாரனின் இல்லத்தில் நடந்த சில இலக்கிய சந்திப்புகளிலும் கண்டிருக்கின்றேன். ஆனால், பேசுதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு இறுதியில் ஜே.கே. யின் கந்தசாமியும் கலக்சியும் நாவல் வெளியீட்டு அரங்கில் மீண்டும் சந்தித்தபோது,  அவரும் அந்நிகழ்வில் பேசுகிறார் என்பது தெரிந்தது. ஜே.கே.யின் அந்த நூல் அங்கதச்சுவை நிரம்பியது.  வாசிக்கும்போது புன்னகையுடன் அதன் பக்கங்களை புரட்டலாம்.  வாய்விட்டும் சிரிக்கலாம். சுபாஷினி தனது உரையின் இறுதியில்  “ இனி... என்ன... கழுவி ஊத்தப்போகிறார்கள்  “ எனச்சொல்லி முடித்தார்.  சபையினருடன் நானும் சிரித்தேன்.  இலக்கிய சந்திப்பில் அமைதியாக மௌனத்தவமியற்றும் இவரிடமிருந்தும்  இலக்கிய ரீதியாக பெற்றுக்கொள்வதற்கு நிறைய இருப்பதாக அன்றைய  இவரது உரை சாட்சியம் பகன்றது.  அதன்பிறகு நடந்த பல இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு இவரை அழைத்தாலும் வரவில்லை.  சரிதான்... இவரும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைந்துவிட்டாரோ என்று நினைத்துக்கொண்டு மறந்தும் விட்டிருந்தேன்.  

சிட்னியிலிருந்து  எழுத்தாளர்  -  நண்பர் கானா பிரபா கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி என்னை இணையவழி காணொளி ஊடாக நேர்காணல் செய்து பதிவேற்றி,  ஒரு சில நாட்களில் வந்த எதிர்பாராத தொலைபேசி அழைப்பில்தான் சுபாஷினியின் குரலை சுமார்  நான்குவருடங்களின் பின்னர் கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்தேன். அங்கும் ஜே.கே. எழுதி அண்மையில் வெளியான

சமாதானத்தின் கதைத் தொகுப்பில் வரும்  “ உஷ், இது கடவுள்களின் தேசம்  “  என்ற கதையில் வரும் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி பற்றியும்  பேசிக்கொண்டோம். அப்பொழுதுதான், சுபாஷினியும் கிருஷாந்தியும் நல்ல சிநேகிதிகள் என்ற தகவலையும் இருவரும் தினமும் ஒன்றாக பாடசாலை சென்று வந்த செய்தியையும்,  அந்தச்சம்பவத்தை கேள்விப்பட்டு  மனதளவில் சுபாஷினியும்   பாதிப்புக்குள்ளானவர் என்பதையும் அறியமுடிந்தது. சுபாஷினியிடம் ,   புகலிடத்தில் அவர் தினமும்   நனவிடை தோய்ந்துகொண்டிருக்கும்  அவரது ஊரைப்பற்றிக்கேட்டேன்.   “   சாவகச்சேரி ,  எனது தாயார் நகுலேஸ்வரியின் பூர்வீகம். இந்திய இராணுவ வருகையால் ஏற்பட்ட இடப்பெயர்வுக்கு முன் சரசாலை-கனகன்புளியடிச் சந்தியில் இருந்த மிகப் பழைமையான சுண்ணாம்புக்கல் வீடுதான் நான் பத்து வயதுவரை வளர்ந்த இடம். எண்பத்தியேழின் பின்னர் இடம்பெயர்ந்து சரசாலை தெற்கில் சில வருடங்கள் அம்மாவின் சிற்றப்பா முறையான முத்துக்குமாருத் தாத்தாவின் வீட்டிலும், பின்னர் அருகிலேயே எமது வளவில் சீமெந்துத் தடை அமுலால் அரைகுறையாகக் கட்டப்பட்ட எங்களின் புது வீட்டிலும் குடியிருந்தோம். கொழும்பில் பிறந்து வளர்ந்த அப்பா ஸ்ரீதரனின் பூர்வீகம் சண்டிருப்பாய். ஆண்டு ஐந்து வரை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், ஆண்டு ஆறிலிருந்து உயர்தரம் வரை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியிலும் பாடசாலைப் படிப்பை மேற்கொண்டேன்.  மாணவப்பருவத்தில் எத்தகைய நூல்களை படிப்பதில் ஆர்வம் காண்பித்தீர்கள்..? வாசிக்கும் நூல்களின் தன்மைகள் எமது வயது, விருப்பு, கிடைக்கும் வசதி பொறுத்து அமைகிறது. மிகச்சிறிய வயதில் அம்புலிமாமா, சிந்தாமணி பத்திரிகையின் சிறுவர் சிந்தாமணியில் தொடங்கி, சில ராணி காமிக்ஸ் சித்திரக் கதைகளும், பின் வயது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாத்தா வீட்டில் கட்டுக்கட்டாக இருந்த பழைய ஆனந்தவிகடன், குமுதம் என்பவற்றை பன்னிரண்டு பிராயத்தளவிலும் வாசிக்கத் தொடங்கினேன். இவை தாத்தாவின் மகன்களான எமது மாமா முறையானவர்கள் ஊரில்

இருந்த போது வாங்கி வாசித்தவை. இவற்றை ஒழுங்கு முறையில் தேடி எடுப்பது சிரமமாய் இருந்ததால் தொடர்கதைகளின் தொடக்கம், அடுத்த பாகம், முடிவு என வாசிக்க முடியாது விசனப்பட்டது ஞாபகம்.  தவிர வீரகேசரி, தினகரன், தினக்குரல் பத்திரிகைகளில் வரும்கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கள் வாசிப்பது வழமை. பதின்ம வயதில் எல்லோரையும் போல காதல் கனவுகள் வளர்க்கும் ரமணி சந்திரன், லக்ஷ்மி நாவல்களும், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றோரின் சில துப்பறியும் நாவல்களும் வாசித்துள்ளேன். இந்த நூல்களை அம்மாவின் தமையனார், சாவகச்சேரி நகரசபையில் தலைமை எழுதுவினைஞராக இருந்த எனது பெரிய மாமா சந்திரமௌலீசன், நகரசபை நூலகத்திலிருந்து எடுத்து வந்து கொடுத்துதவினார்.  மிகுந்த ஆர்வம் இருந்தும் வேண்டிய புத்தகங்கள் வாசிப்பதற்கோ, கிடைக்கப் பெறுவதற்கோ வசதியும் அனுமதியும் பாடசாலைப் பருவத்தில் ஏற்படவில்லை. உங்களிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை தூண்டியது யார்..? யார்..? எனது வாசிப்பு அல்லது இலக்கிய ஆர்வத்தின் தொடக்கம், மற்றும் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிக் கூறுவதானால் ஓரளவிற்கு நீண்ட வரிசை உள்ளது. இங்கு இவர்களைப் பற்றிக் குறிப்பிடுதல் அவசியம் எனக் கருதுகிறேன். வாசிப்பு ஆர்வம் எனது பரம்பரையில் உள்ளது. எனது அம்மம்மா சாந்தநாயகி, அவரின் தமக்கையார் 'பெரியாச்சி' என அழைக்கப்பட்ட இலட்சுமிப்பிள்ளை இவர்கள் மிக உன்னதமான வாசிப்பு ஆர்வம் உடையவர்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன். 

எனது பெரிய மாமா இவர்களுக்காக நூல் நிலையத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வரும் போது, முதலில் எடுத்து வாசிப்பதற்காக இருவருக்குமிடையே  எப்போதும் சண்டை மூண்டு விடுமாம். நான் சிறுமியாக இருந்த போது சந்தாப் பணம் செலுத்தி  அம்மம்மா சிவதொண்டன் மாத இதழ் வாங்கி, அதற்குள் மூழ்கி விடுதல் கண்டிருக்கிறேன். இவர் 'சின்னட்டியான் குருவிக் கதை' போன்ற சில அறக்கதைகளை நாம் மிகச்சிறிய வயதாயுள்ள காலங்களில் சொல்லியுள்ளார். படிப்பில் மிகுந்த திறமைசாலியான அம்மம்மாவை பெண் என்ற காரணத்தால் எவ்வளவு அழுதும் கேட்காமல் ஐந்து வயதிலேயே பாடசாலைப் படிப்பை நிறுத்தி விட்டனர் என அம்மா எனக்குக் கூறியுள்ளார். இவரின் வகுப்பு வாத்தியாரே வீடுவரை வந்து மன்றாடியும் அனுமதி வழங்கப்படவில்லையாம். என் அம்மா மரணப்படுக்கை வரை தின, வாரப் பத்திரிகைகள் வாங்கி, அவற்றை முழுவதுமாக வாசிக்காமல் இருந்ததில்லை. விடிந்ததும் யாராவது கடைக்குச்  சென்று பத்திரிகை வாங்கி வரப் பிந்தினால் அம்மாவிற்கு மூக்கு மேல் கோபம் வந்து விடும். 

நான் அவுஸ்திரேலியா வந்த பின்னர் அம்மா எனக்காக வெட்டிச் சேர்த்து வைத்த இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்புக்கள், கடைசியாக அவர் உயிருடன் இருந்து நான் போனபோது என்னிடம் தந்த ஒரு கட்டுத் தாள்கள் அனைத்தையும் எடுத்துவந்து  அம்மாவின் நினைவாக  இங்கு வைத்திருக்கிறேன். அப்பாவும் ஒரு ஆங்கிலப் புத்தக வாசிப்பாளி.  Readers Digest இதழ்களை  அந்த நாட்களில் மிகுந்த ஈடுபாட்டோடு வாங்கி வாசிப்பார். நாம் குழந்தைகளாக இருந்த போது கனகன்புளியடிச்சந்தியில் எமது முன் வீட்டு அருணா அக்காவிடம் (அருண்மொழி) தினமும் ஓடிச்சென்று விடுவோம். எண்பதுகளில் எமது சிற்றூரில்

இருந்தபடி, தான் ஒரு வைத்தியராக வர வேண்டுமெனக் கனவு வளர்த்து உயர்தரப் பரீட்சைக்காகக் கடினமான சூழலில் படித்துக் கொண்டிருந்த அருணா அக்காவிற்கு, இடையே எங்கள் மூவரையும் அழைத்துக் குலாவாவிட்டால் பொழுது சாயாது. அவரின் வீட்டில் இறைந்து கிடக்கும் அம்புலிமாமா புத்தகங்களை, எம்மைத் தன்னைச்சுற்றி இருக்கச் செய்து, அதிலும் கடைக்குட்டியான என்னைத்தூக்கி மேசை மேல் இருத்தி வைத்துக் கதை வாசிக்கும் கதை சொல்லி இந்த அருணா அக்கா.  எப்போதுமே முகமெல்லாம் சிரிப்புடன் எமக்காகக் காத்திருக்கும் இவர் எமது செவிலித்தாய்! அவரின் வீட்டிற்குப் போகும்பொழுதில் நெல்லிக்காய்கள் பறித்து வருவோம். அருணா அக்கா வீட்டு நெல்லிக்கனி ஆரோக்கியம் வளர்த்ததோ இல்லையோ, அவரின் கதை சொல்லல் என் ஆரம்ப ஆர்வத்திற்கு அவியாகியது. நெல்லிக்காய் தின்று முடிந்தபின் புளிப்பையெல்லாம் தாண்டி நாக்கில் நிற்கும் தித்திப்புப் போல, அருணா அக்காவின் அன்பு இவ்வளவு கால வாழ்க்கை தாண்டியும் என் நினைவில் வந்து நின்று கண் நிறைக்கின்றது. 

அவர் தற்போது ஒரு பல் வைத்திய நிபுணராக சிட்னியில் பணியாற்றுகிறார்.  அடுத்தவர் எனது தாத்தா. அம்மாவின் ஒன்றுவிட்ட சின்னம்மாவாகிய வேதநாயகியை மணம் முடித்த, மறவன்புலவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியரான முத்துக்குமார் வாத்தியார். இவரைப்பற்றிச் சொல்லி மாளாது. இவர் ஒரு சகாப்தம். ஆங்கிலம், தமிழ் இலக்கியம் என்பவற்றில் புலமை வாய்ந்தவர். நாம் எண்பத்தியேழில் இடம்பெயர்ந்து இவருடன் குடியேறிய போது திருக்குறள், நாலடியார், தேவார திருவாசகங்கள், அவற்றின் பொருள், சேர்த்து பிரித்து எழுதும் முறை, எதுகை மோனை, வாழ்வின் தத்துவங்கள் எல்லாவற்றையும் என் சிறிய மண்டைக்குள் ஏற்ற முயற்சி செய்தவர்.  மிகப்பெரிய அறிவாளி. குப்பையில் குன்றுமணியான இவரைப் புரிந்து கொண்டு பயன்படுத்த ஊரில் எவரும் இருக்கவில்லை. தாத்தா இலேசில் அணைத்துக்கொண்டு செல்லம் கொஞ்சும் இயல்பு உடையவரல்ல. சிறுவர்கள் இவருடன் ஒட்டிப்பழக மாட்டார்கள். ஆனால்,  இவருக்கும் எனக்கும் இடையான மனப்பொருத்தம் எவரும் அறியாதது. 

என் இன்றைய வாழ்நாட்களில் தினமும் நான் தாத்தாவின் நினைவுகளையும், அறிவையும் மீட்டாத நாளில்லை. இவரைப் பற்றி நான் ஒரு பதிவு எழுதியாக வேண்டும். தாத்தா சில திருக்குறள் அடிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அவரின் கையெழுத்துப்பிரதி என்னிடம் பொக்கிஷமாக உள்ளது. திருக்குறள் முழுமையும் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற அவரின் அன்றைய கனவை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. தாத்தா அடிக்கடி எனக்குக் கூறி வழிநடத்தும் இந்தத் திருக்குறள், எடுத்ததற்கெல்லாம் எப்போதும் நான் நினைவுகூரும் அடிகளாய் மனதில் பதிந்து விட்டது: ‘நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்' கொழும்பில் வசித்தபோது சில வருடங்கள் அக்காவின் நண்பரான சூரியன் எஃப் எம்மில் அந்த நேரம் வேலை பார்த்த வியாசா ஒழுங்கு செய்ததன் பிரகாரம் நாம் ஒரு நண்பர்கள் குழு அவர் வீட்டில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களிடம் கம்பராமாயணம், திருக்குறள், சைவ சித்தாந்தம் கற்றுக் கொண்டோம். அவரின் சுவையான, விரிவான சொல்லித்தரும் திறமையால், வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு, வகுப்பு முடியும் போது படிப்பித்த பாடல்கள் மனப்பாடமாகி விடும்.  பாடசாலைக் காலத்தில் தனியார் வகுப்பு வசதி அமையாத எமது பகுதியில், சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னர் ஓரிரு மாதங்கள் மட்டும் சில ஆசிரியர்களைச் சேர்த்து நானும் நண்பியும் ஒரு கல்வி நிறுவனத்தை மிகவும் பாடுபட்டு ஆரம்பித்தோம். அப்போது எனக்குத் தமிழ் சொல்லித்தந்த முரளி சேர்தான் பண்டைய இலக்கியங்களின் இனிமையை இலக்கணம் பிரித்து ஆரம்பத்தில் உணரவைத்தவர்.   

இவர்கள் அனைவருமே என் வாசிப்புத் தேடலுக்கு ஏதோவொரு வகையில் தூண்டுதலாக இருந்துள்ளனர். ஆக்க இலக்கிய பிரதிகளை எக்கால கட்டத்தில் படிக்கத் தொடங்கினீர்கள்…? நான் ஆறேழு வயதிலேயே சிறுவர்களுக்கான கற்பனைத் தொடர்கதைகளை சிறுவர் சிந்தாமணியில் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். எல்லாவிதமான படைப்புக்களையும் பத்திரிகைகளில் வாசிப்பது வழமை. தொடக்கத்தில் உங்களுக்கு பிடித்தமான எழுத்தாளர் யார்..? ஏன்…? பாடசாலைப் பருவம் முடித்து கொழும்பு வந்த பின்னர், நான் எனது இருபதுகளில் அதிகம் விரும்பி வாசித்தவை ஜெயகாந்தனின் புத்தகங்கள். முதலில் பிடித்தமான எழுத்தாளர் என நான் நினைத்தது இவரையே. நளினமான பூச்சுக்கள் சூடிய எழுத்துக்களை வாசித்த எனக்கு, சூழ்நிலைகளையும், மன உணர்வுகளையும் அதிரடியாக வெளிப்படுத்திய இவரின் உண்மை எழுத்து மிகவும் பிடித்துப் போனது காரணமாக இருக்கலாம். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இவரின் நாவல்கள் அதிகளவில் என் கண்களில் முதலில் தட்டுப்பட்டதும் ஒரு காரணம். அதே காலகட்டத்தில் வரலாற்றுப் புனைவு நாவல்களிலும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கல்கி, அகிலன், சாண்டில்யன் நாவல்கள், பாவை விளக்கு போன்ற சமூக நாவல்கள் உட்பட வாசித்துள்ளேன். கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், அம்மா – அப்பா சினிமாப் படக்கதை சொல்லி ஏற்பட்ட ஆர்வத்தினால் ஓரளவு சிறு வயதிலேயே அந்த நாவலை எடுப்பித்து வாசித்ததாய் ஞாபகம்.  தொடர்ந்து பாலகுமாரன் நாவல் அறிமுகம், வாசிப்பு ஆர்வமுள்ள எனது அக்கா வாஹினிக்கு யார் மூலமாகவோ கிடைக்கப்பெற்றதால் என்னை வந்தடைந்தது. இது எனக்கான வரம்! பாலகுமாரன் என்ற எழுத்தாளனின் எழுத்துக்களுடன் கலக்காமல் என் வாழ்க்கை பின்னர் அமைந்தில்லை. 

இதை வெளிப்டையாகவே கூறுகிறேன், நான் வாழ்க்கையில் பலதரப்பட்ட பிரச்சினைகள், மன அழுத்தங்களுக்கு உள்ளான போது என்னைத் தூக்கி நிறுத்தியது பாலகுமாரன் எழுத்துக்களே. இவர் இல்லாவிட்டால் இன்று என் நிலை வேறு. பாலகுமாரன் எனக்கு எந்தை! என் பிரான்! இவரின் நாவல்களில் நான் வாசிக்காதன அரிது. விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட இவரின் எழுத்து ஓட்டத்திற்குள்ளும், உண்மைத்தன்மைக்குள்ளும் என்னைத் தொலைத்தேனாகில், எனக்கு உலகம் மறந்து விடும். பாலகுமாரனுக்கு நிகராக எனக்கு அவுஸ்திரேலியாவில் அறிமுகமான எழுத்தாளர் போலோ கோஹல்லோ. பிரேசில் நாட்டுக்காரரான இவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நாவல்களை நான் டன்டினொங் சந்தை பழைய புத்தகக் கடையிலும், வலைத்தளத்திலும் தேடித்தேடி வாங்கி வாசித்துள்ளேன். வேறும் ஒருசில நல்ல ஆங்கிலப் படைப்பாளிகளின் படைப்புக்கள் வாசித்துள்ளேன். அமெரிக்க எழுத்தாளர் ஜோடி பிக்கொலட் குறிப்பிடத்தக்கவர். இடையிடையே சுஜாதா, அப்துல் ரகுமான், வைரமுத்து ஆகியோரையும், அசோகமித்திரன், ஜானகிராமன், இந்திரா சௌந்தரராஜன், நா. பார்த்தசாரதி போன்றோரின் ஒருசில படைப்புக்களையும் வாசித்துள்ளேன்.  

முன்பு வாசித்திருப்பினும், சமீப காலங்களில் என்னை மிகவும் கவர்ந்தவை ஜெயமோகன் எழுத்துக்கள். ஆழமும் நுட்பமும் நிறைந்த இவரது எழுத்து உள்மன உணர்வுகளைப் பாத்திரப் படைப்புக்களின் மூலம் காட்டி அதிசயிக்க வைக்கிறது. ஏறக்குறைய ஒன்றரை வருடத்திற்கு முன் வெண்முரசு வாசிக்க ஆரம்பித்தேன். இந்தத் தொடர் என்னை அறியாமலேயே என்னுள் மாற்றம் ஏற்படுத்துவதை உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக என் உணர்வில், உயிரில் கலந்தவன் பாரதி. என்னை நெகிழ்த்திக் கண்ணீர் மல்க வைப்பவன். இவன் எனக்கு, உங்களுக்கு, எல்லோருக்குமே அப்பனும், காதலனும் அல்லவா? முதலில் ஏதும் இதழ்களில் இலக்கிய பிரதிகள் எழுதிய அனுபவம் ஏதும் இருக்கிறதா..? இல்லை. அம்மாவின் சிறு உந்துதலும், எழுத்தாளர் மாவை வரோதயன் அண்ணனின் ஊக்கமும் எனது இளம் பருவத்தில் இருந்தும் நான் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 

சூழ்நிலைகளும், தவிர எனது தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணம். எனது ஒரு சிறிய கவிதை தினக்குரலில் ஒருமுறை வெளிவந்துள்ளது. மற்றையோருக்காக ஏதாவது அவ்வப்போது எழுதிக் கொடுத்துள்ளேன். இப்போது ஏதாவது தோன்றுவதை எழுதி எனது முகநூலிலேயே பதிவிடுகிறேன். இரண்டாயிரத்து இரண்டில் நான் விரும்பி எழுதி ஞானம் இதழுக்கு அனுப்பிய ஒரு கவிதை பிரசுரிக்கப்படவில்லை. ஏழு வயதளவில் ஆர்வக் கோளாறினால் நானாகவே ஒரு தொடர்கதை சிறுவர் சிந்தாமணிக்கென குழந்தைத்தனமாக எழுதத் தொடங்கியிருந்தேன். எல்லாக் கையெழுத்துப் பிரதிகளும் இன்னமும் என்னிடம் உள்ளன. எங்கு இடம்பெயர்ந்தாலும், எதனைத் தொலைத்தாலும் எனது வீட்டிலிருந்து  கவனமாக  நான் எடுத்துச்செல்வது நூல்களையும், எழுத்தின் சேமிப்புக்களையும்தான்.  “  அவுஸ்திரேலியா மெல்பனுக்கு 2004 ஆம் ஆண்டில் வந்திருக்கும் சுபாஷினி, இங்கு Monash Health இல் மருத்துவ தாதியாக பணியாற்றுகிறார்.  அத்துடன் மருத்துவ ரீதியில் Monash இன்  Community Service  பகுதியில்  பணியாற்றுகிறார். கிடைக்கும் நேரத்தில் முடிந்தவரையில் வாசிக்கிறார். மெல்பன் வாசகர் வட்ட சந்திப்புகளில் காணொளி ஊடாக இணைந்துகொள்கிறார். பொதுவாகவே  வாசிப்பு அனுபவம் குறித்து பலரும்  பல்வேறு கருத்துக்கொண்டிருப்பர்.  சுபாஷினியிடமும்  அதுபற்றிக்கேட்டேன்.  அதற்கு அவர்,    “ நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு செவ்வியில் கூறியது இது, ' ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் வாழ்க்கை வாழ்ந்த அனுபவம் தரும் '. அதுதான்.  என்றார்.  

தொடர்ந்தும் சுபாஷினி சொல்கிறார்:  “ புத்தகமே முதல் தோழமை. என்னை வளர்த்தது புத்தகங்களே. இங்கு என் பாதிப்புப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். மிகச்சிறிய அலுவலிலிருந்து, தொழிற்துறை சார்ந்த பிரச்சினைகள் வரை வாசிப்பினால் கிடைக்கும் அனுபவம் துணை நிற்கும். ஏன், இந்தக் கொரோனா காலத்தில் வாசிப்பாளர் யாருக்காவது பொழுது போக்க முடியாத அசௌகரியம் ஏற்பட்டிருக்குமா? பல சமயங்களில் நான் மனதினுள் ஏதாவது விடயம் பற்றிக் குழப்பிக்கொள்ளும் போது, அதற்கான பதில் அடுத்த ஓரிரு நாட்களில் நான் வாசிக்கும் படைப்பில் மறைமுகமாகக் காட்டப்படுவதை வியந்திருக்கிறேன். வாசிப்பின் அனுபவ நன்மையை விளக்கி மாளாது. ஒரு புத்தகத்தை அனுபவித்து, மூழ்கித் திளைத்தெழுந்து, ஒரு இனிய சோர்வு மனமெல்லாம், உடலெல்லாம் ஆட்கொள்ளுமே, இதனை எப்படிச் சொல்ல? ‘மகட்குத் தாய் , தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்கனே!’ இதற்கு நிகரானது இது. அவ்வளவுதான். எனது வேண்டுதல் எமது பெற்றோர் எல்லோரும் குழந்தைகளுக்குத் தினமும் கதை சொல்லல் வேண்டும் என்பது. இது குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு நல்லது, தவிர இயல்பாகவே வாசிப்பு ஆர்வத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தும். இது இன்றைய தலைமுறையில் அருகிவிட்டது. ஆனால்,  வெளிநாட்டவரிடம் இன்னமும் இப்பழக்கம் அதிகளவில் இருப்பதை என் வேலையிடத்து நண்பர்களிடம் காண்கின்றேன். எம்மவர் போட்டி போடுவதிலும், விரும்பாத படிப்புகளைத் திணிப்பதிலும் செலவழிக்கும் நேரத்தைக் குழந்தைகளுடன் இயல்பாகவும் இயற்கைக்குப் பொருத்தமானதாகவும் செலவழிப்பது நல்லது.  

சமூக வலைத்தலங்கள் ( முகநூல் – வாட்ஸ் அப் ) தொடர்பாக உங்கள் அவதானம் என்ன..?  அவற்றின் சாதகம் – பாதகம் பற்றி சொல்லுங்கள் என்றேன் அதற்கு அவர்,  மாற்றம் என்பது மாறாதது என்பதே உலக விதி. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒழுக்கம், அறம் என்பவற்றுடன் பாவனைக்கான சாதனங்களும் மாறியபடியேதான் இருக்கும். ஒவ்வொரு தலைமுறையின் மாற்றத்தையும், முந்தைய தலைமுறை விமர்சிப்பது காலம் காலமாக நடைபெறும் இயல்பு. இவை நன்மை, தீமை என எம்மால் கணிக்கப்பட்ட எல்லையின்படி எடுத்துக்கொள்ளப்படும். நான் அதிகம் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. எனினும் நான் முகநூலில் எழுதிய ஒரு பதிவினால் அமைந்த தொடர்பு மூலமே எனக்கு பவா செல்லத்துரையின் கதை சொல்லல் பற்றிய அறிமுகமும், அதிலிருந்து வேறு அனுபவங்கள், வேறு நல்ல படைப்புக்கள் பற்றிய தெரிதலும் ஏற்பட்டது. நான் உங்களை மீண்டும் தொடர்பு கொண்டது, முகநூலில் கானா பிரபாவினால் பதிவு செய்யப்பட்ட அவரின் உங்களுடனான கலந்துரையாடலைப் பார்த்தபின் ஏற்பட்ட மன உணர்வினால்தானே.  சமூக வலைத்தளங்கள் தொடர்புகளை மீண்டும் தேடிப் பெறுவதற்கும், படைப்பிலக்கியங்களை எளிதாகப் பெற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது. இப்போது கொரோனா கால வாட்ஸ்-அப் குழுக்களால் இவை அதிகம். 

ஆனால்,  இவையே வாழ்க்கையில் பிரச்சினைகளையும் உருவாக்கி விடுகின்றன. அதீத பேச்சு, தேவையற்ற பகிர்தல்கள் தவிர்க்கப்படலாம். பெரும்பாலான வேளைகளில் அளவுக்கு மீறிய சமூக வலைத்தளப் பதிவுகள், படங்கள், கருத்துக்கள் திகட்டி விடுகின்றன. தவிர மனிதனின், முக்கியமாக சிறுவர்களின் இயற்கையுடனான தொடர்பையும், வேலை நேர்த்தியையும், ஆரோக்கியத்தையும் இவை முடக்கி விடுகின்றன.  ஆனால் எதுவும் எமது கையில் இல்லை. எல்லாம் எப்பவோ முடிந்த காரியம். இதுதான் நியதி அல்லவா? தற்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் படைப்பு..? நான் தற்போது வெண்முரசு – நூல் பதினேழு – இமைக்கணம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இடையிடையே வேறு நாவல்களும் வாசிப்பதுண்டு. 

உதாரணமாக நீங்கள் வாங்குமாறு கூறிய கி.ரா. வின் நாவல்கள், மற்றும் வாங்குவதற்கு நினைத்திருக்கும் வண்ணதாசன், கு. அழகிரிசாமி, பாலகுமாரன் இறுதியாக எழுதிய நாவல்கள் முதலியனவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர, வலைத்தள இதழ்களான  அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, கனடா  பதிவுகள் போன்றவற்றில் இப்போதுதான் ஆர்வம் ஏற்படுகிறது. ஜே.கே, சயந்தன், நடேசன் இவர்களின் ஓரிரு படைப்புக்கள், நீங்கள் எனக்கு அனுப்பிவைக்கும் உங்கள் எழுத்துக்கள் இவை தவிர்த்து, ஈழத்து எழுத்தாளர் நாவல்கள் பலவும், எமது அன்றைய கவிஞர்களாகிய மஹாகவி  , சில்லையூர் செல்வராசன் போன்றோரின் படைப்புக்களும் நான் இனிமேல்தான் வாசிக்க வேண்டும் என்பதை குற்ற உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  No comments: