இலங்கைச் செய்திகள்


இராணுவத்தால் வீடு நிர்மாணிப்பு

பட்டதாரிகள் விழிப்படைந்து அரசியலுக்குள் வர வேண்டும்

கருணாவிடம் வாக்குமூலம் பெற CIDயிற்கு உத்தரவு

என்னை கைது செய்வதா? அது முடியாத காரியம்

கருணா மீதான விசாரணை நடவடிக்கை; புனர்வாழ்வு பெற்ற புலிகள் கலக்கத்தில்

ஹரீன் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டும்

கருணா அம்மானுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

வனவள திணைக்களத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்

நடராஜசிவமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

கருணா மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டு தெரிவிப்பு

அரசுக்கு வைத்த பொறியில் சிக்கி சின்னாபின்னமாகிய சஜித் அணி


இராணுவத்தால் வீடு நிர்மாணிப்பு



போரால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு வட்டாரம் ஜே 27 கிராம சேவையாளர் பிரிவில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய அடிக்கல் நாட்டி வைத்தார்.
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் சமூக சேவைகளில் ஒன்றாகிய வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கு வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 512 பிரிகேடியர் படைத் தலைமையகத்தின் 51 பிரிவில் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்  நன்றி தினகரன் 








பட்டதாரிகள் விழிப்படைந்து அரசியலுக்குள் வர வேண்டும்








பட்டதாரிகள் விழிப்படைந்து அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனம் , வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவருமான ம. ஆனந்தராஜா தெரிவித்தார்.
வவுனியாவில் போட்டியிடும் சுயேட்சைக் குழு 19 இன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
அனைத்து பட்டதாரிகளினாலும் அனைத்து விடயங்களையும் செய்ய முடியும் என்று நான் சொல்ல வரவில்லை. தகுதியான பட்டதாரிகள் முன்வரவேண்டும். வன்னித் தேர்தல் தொகுதி வரலாற்றில் முதல் முறையாக பட்டதாரிகள் அணியொன்று உயர் கல்வி சமூகத்தின் அபிவிருத்தி சார்பு அரசியலில் நீண்டகால அனுபவம் மற்றும் ஆளுமை கொண்ட வேட்பாளர்களை இணைத்து இத் தேர்தலில் போட்டியிடுகின்றது.
கட்சியின் யாப்பின் பிரகாரம் அபிவிருத்தி சார்பு கொள்கை விளக்கப்பரப்புரைகள் மேற்கொண்டு மக்கள் விரும்புகின்ற அவர்களினால் எதிர்பார்க்கப்படும் துறைசார்ந்த நிரந்தர பொருளாதார கட்டமைப்புக்களை கொண்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிந்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படுகின்றது . இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் என்றார்.
வவுனியா நிருபர் - நன்றி தினகரன் 







கருணாவிடம் வாக்குமூலம் பெற CIDயிற்கு உத்தரவு








கருணாவிடம் வாக்குமூலம் பெற CIDயிற்கு உத்தரவு-CID to Record Statement From Karuna Amman
விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID யிற்கு உத்தரவு
கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் வாக்குமூலம் பெறுமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் அரசியல் கூட்டமொன்றில் பேசிய முன்னாள் எம்.பி. விநாயமூர்த்தி முரளிதரன், தாம் ஒரே இரவில் ஆனையிறவில் வைத்து 2,000 - 3,000 இராணுவ வீரர்களை கொன்றதாக தெரிவித்திருந்தார்.
இம்முறை பொதுத் தேர்தலில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில், அகில இலங்கை தமிழர் மகாசபை எனும் கட்சியில் விநாயகமூர்த்தி முரளிதரன் போட்டியிடுகின்றார்.
'சுமந்திரன் அரசியலில் நேர்சரி (அரிவரி) படிக்கின்றவர்: அவருக்கு ஆளுமை இல்லை: பட்டாசு கொழுத்திப்போட்டால் மாரடைப்பால் செத்திடுவார்' என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக வாய்க்குவந்தமாதிரி பேசுகின்ற கருணா மனிதவர்க்கத்தை அழிக்கும் கொரோனாவை விட கொடியவர் என, த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்திருந்தார்.

அண்மையில் த.தே.கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரனுக்கு எதிராக கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் காரைதீவில் ஊடகஙகளுக்கு தெரிவித்த விமர்சனத்திற்கு பதிலளித்து மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், நாவிதன்வெளியில் இடம்பெற்ற கூட்டத்தின்போது உரையாற்றிய கருணா அம்மான், தான் கொரோனவை விட பயங்கரமானவர் என கிருஷ்ணபிள்ளை தெரிவித்த கருத்து உண்மேயே என்றும், ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 - 3,000 இராணுவத்தினரை கொலை செய்ததாக கருத்து வெளியிட்டிருந்தார்.   நன்றி தினகரன் 










என்னை கைது செய்வதா? அது முடியாத காரியம்








உண்மையைத் தானே கூறினேன் - கருணா
தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும், அந்த நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாகவும் இதற்காக என்னை கைது செய்ய முடியாது என்றும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“வரலாறு தெரிந்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை புரியும் என்றும் அரசியல் விதண்டாவாதிகளுக்கு இது புரியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் நான் என்ன கூறினேன் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்.
வன்னியில் இடம்பெற்ற போரின்போது 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாக கருணா தெரிவித்ததையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என தென்பகுதியில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்கிரமரத்ன குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் கருணா அம்மான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 












கருணா மீதான விசாரணை நடவடிக்கை; புனர்வாழ்வு பெற்ற புலிகள் கலக்கத்தில்







பிற்காலத்தில் துரோகம் இழைத்திருந்தாலும் இயக்கத்தில் இருந்தவர்- கருணா
கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது புனர்வாழ்வு பெற்ற, பெறாத அல்லது ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லோருடைய மனங்களையும் கலங்கடிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவியும் முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினருமான அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களை பாதுகாக்கவே புலிகள் ஆயுதங்களை ஏந்தினார்கள் பாதுகாப்பு படைக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார்கள்.  கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று எனவும் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப் போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என்றார்.
கருணா கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு தளபதியாக இருந்தார். அவருடைய துரோகம் ஒரு இனம் அழிவதற்கு வழிகோலிவிட்டது. அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் கருணா தளபதியாக இருந்து, 3000 இராணுவத்தை கொன்றேன் என கூறியதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு இனம் தன்னை பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்தியதை பிழையாக காட்டுவதாக இருக்கும்.   நன்றி தினகரன் 













ஹரீன் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டும்







ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டுமென முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேற்படி தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தும் அதனை வெளிப்படுத்தாத அவரை மனிதப் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனைத்து இன, மத மக்களினதும் பௌத்த தேரர்களினதும் கூட கௌரவத்திற்கும் அபிமானத்திற்கும் உரியவராக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திகழ்கிறார். மேற்படி தாக்குதல் தொடர்பில் தமது தந்தையார் தெரிவித்திருந்தும் அதனை வெளிப்படுத்தாது தாம் அன்று ஆலயத்திற்குச் செல்லவில்லை என ஹரீன் பெர்னாண்டோ கூறியதும், தம்மை பாதுகாத்துக் கொண்டு கத்தோலிக்க மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற தோரணையில் அவர் கூற்றுக்களை தெரிவித்திருந்ததையும் எவ்வாறு ஏற்க முடியும்?
மேற்படி தாக்குதலில் தாய் யார்? தந்தை யார்? மகன் யார்? உறவினர் யார்? என்று கூட இனம் கண்டுகொள்ள முடியாத நிலையில் ஒரே குவியலாக அனைத்து மனித சதைகளும் காணப்பட்டதை சகலரும் அறிவர். அந்த நிலையில் அவர் மனிதப் படுகொலை குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் விஜேதாச ராஜபக்ச கேட்டுக் கொண்டார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம் -  நன்றி தினகரன் 











கருணா அம்மானுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்







தமிழ் மக்களது ஆதரவைப் பெற முயற்சிப்பதாக விமல் குற்றச்சாட்டு
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ள கருத்து வெறுக்கத்தக்கது. அவருக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது என கைத்தொழில் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் வழங்கல் முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, யுத்த காலத்தில் இராணுவத்தினரை தான் கொன்றதாக குறிப்பிட்டு பெருமைப் பட்டுக் கொள்ளும் செயற்பாடு வெறுப்புக்குரியது. இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே கருணா அம்மான் தான் யுத்த காலத்தில் 3000 ஆயிரம் இராணுவத்தினரை கொன்றதாக குறிப்பிட்டுள்ளார்.
யுத்தகால சம்பவங்களை மீள மீட்டுவது இரு தரப்பிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து தான் பாவம் இழைத்துள்ளேன் என்றே கருணா அம்மான் வருத்தப்பட வேண்டும். இவ்வாறு இராணுவத்தினரை கொன்றதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவது தவறான செயற்பாடாகும்.
இவர் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நீதிமன்றம் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தமாட்டோம். இவருக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது. கடந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்களுக்கு முக்கியதுறைகள் அரசியல்வாதிகளினால் பயன்படுத்தப்பட்டன. அதன் விளைவினை அவர்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.
தற்போது சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள். கருணா அம்மான் எத்தரப்பிற்கு ஆதரவாக அரசியல் செய்கின்றார் என்பது எமக்கு அநாவசியமான விடயம். விசாரணைகளை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.   நன்றி தினகரன் 











வனவள திணைக்களத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்






வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை மக்கள் தமது காணியை மீட்டுத்தருமாறு கோரி வனவள திணைக்களத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1980, 90 காலப் பகுதியில் இப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியா உட்பட வேறுபகுதிகளிற்கு சென்ற மக்கள் மீண்டும் வந்து காடுகளாக கிடக்கும் தமது காணிகளை துப்பரவு செய்து கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
எனினும் இக் காணிகள் தமக்குரியது என்று வனவள திணைக்களத்தால் நீண்டகாலமாக கூறப்படுவதுடன் மக்கள் மீள், குடியேறுவதிலும், வீடுகளை அமைப்பதற்கும் வனவள திணைக்களம் தடையை ஏற்படுத்தி வருகின்றது. காணிகளை துப்புரவாக்கினாலோ அல்லது கட்டுமான பணிகளை மேற்கொண்டாலோ கைது செய்வோம் எனவும் மக்களை எச்சரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிற்கும், வனத்துறையினருக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டுவருகிறது.
வனவள திணைக்களத்தினால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்ற மக்கள் தமக்கான தீர்வினை கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர். தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நிருபர் - நன்றி தினகரன் 












நடராஜசிவமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்





அமரர் எஸ்.நடராஜசிவத்தின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ளார்.
அமரர் நடராஜசிவத்தின் மகனுடன் தொலைபேசியில் நேற்று உரையாடிய போதே பிரதமர் தனது கவலையையும் அனுதாபத்தையும் பகிர்ந்துகொண்டார்.
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் நேற்று காலமானார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். நீண்டகாலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றியவராவார். இவர் திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், மேடை நடிகராவார்.'ஒதெல்லோ', 'நத்தையும் ஆமையும்'  முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.

ரூபவாஹினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.   நன்றி தினகரன் 










கருணா மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டு தெரிவிப்பு




மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல்
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மீது சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் இணைத்த குற்றச்சாட்டின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட் (Michelle Bachelet,) அலுவலகம்  டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளது.
கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் யுத்த காலத்தில் புரிந்த குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவதை கவனத்தில் கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் சிறுவர்களை யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை மற்றும் ஆட்சேர்ப்புச் செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக கருணா அம்மானை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்விடயத்தில் இலங்கையில் உள்ள அனைவரும் பொறுப்புக்கூறல் விடயத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 












அரசுக்கு வைத்த பொறியில் சிக்கி சின்னாபின்னமாகிய சஜித் அணி



எனக்கு ஒரு சட்டம்; சஜித், மனோ, செல்வத்துக்கு ஒரு சட்டமா?
அரசாங்கத்திற்கு வைத்த பொறியில் சஜித் பிரேமதாச சிக்குண்டு சின்னாபின்னமாகி உள்ளார். எனது தேர்தல் பிரசார உரையை பூதாகரமாக பெருப்பித்து அரசியலில் எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தை வீழ்த்த முனைந்த அவரது கனவுகள் சிதறிப் போய் உள்ளன என்று கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
30 நிமிடங்களுக்கு மேலாக உரையாற்றிய எனது தேர்தல் பேச்சை 30 செக்கன்களில் வேண்டுமென்றே எடிட் செய்து ஒளிபரப்பு செய்த சில ஊடகங்கள் மூலமாக அதனை அரசாங்கத்திற்கு எதிரான கருவியாக பயன்படுத்த சஜித் பிரேமதாச தரப்பினர் முயன்றனர்.இருந்தாலும் அதில் அவர்கள் தோல்வியை கண்டுள்ளனர் என்றும்  கருணா அம்மான் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் அல்லது தென்னிலங்கையில் என்னை குற்றம் சுமத்த எவருக்கும் அருகதை கிடையாது. ஏனெனில் நான் புலிகளுடன் இருந்து நேரடியாக இலங்கை இராணுவத்திற்கு எதிராக போரிட்டவன். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இப்போது அரசியல் செய்யும் பலரும் புலிகளுக்கு மறைமுகமாக தமது ஆதரவை யுத்தகாலத்தில் தெரிவித்தவர்கள்.
எனவே முதலில் அவர்களைத்தான் கைது செய்ய வேண்டும். அதிலும் சஜித் பிரேமதாசவின் தந்தையார் தலைமை வகித்த ஐக்கிய தேசியக் கட்சியே புலிகளுக்கு தேவையான அளவு ஆயுதங்களை வழங்கி அவர்களை வளர்த்து விட்டது.  அதேபோன்று அரசியல் நடத்தும் மனோ கணேசன்,  செல்வம் அடைக்கலநாதன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளுக்கு ஆதரவாக பொங்குதமிழ் நிகழ்ச்சிகளிலும, ஏனைய பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளளர்.அதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
எனவே என்னை கைது செய்ய முன்னர் அவர்களையும் கைது செய்ய வேண்டும். ஆகவே இது ஒரு அரசியல் நாடகம்.  தேர்தல் மேடைகளில் பேசியதற்காக ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் இன்று தேர்தல் மேடைகளில் பேசுகின்ற  பெரும்பாலானவர்களை கைது செய்ய வேண்டும்.
எனவே இது ஓரிரு அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக சோடிக்கப்பட்ட ஒரு வடிவமே அன்றி வேறு எதுவும் இல்லை. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட நாங்கள் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.யுத்தத்தில் இரு தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இருதரப்பிலும் பலரும் இறந்துள்ளனர். யுத்தம் மூலமாக இறந்த அனைவரும் செய்த தியாகங்களை நாங்கள் மதிக்க வேண்டும்.
எனவே இனிமேலும் இது போன்ற சில்லறைத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடாது நாட்டில் சமாதானத்தை  கொண்டுவர அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என்றும் கருணா அம்மான் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 









No comments: