தமிழ் சினிமா - பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் எப்போதும் ஹீரோக்களின் ராஜ்ஜியம் தான் இருக்கும். ஆனால், அதை கடந்து தற்போது ஹீரோயின்களின் கை தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் ஜோதிகாவின் நடிப்பில் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள படம் பொன்மகள் வந்தாள். பல தடைகளை கண்ட இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? பார்ப்போம்.
கதைக்களம்
ஊட்டியில் தொடர்ச்சியாக 5 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதோடு 2 இளைஞர்களும் கொலை செய்யப்படுகின்றனர்.
இவை அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் செய்தது ஜோதி என்ற சைக்கோ பெண் தான் என கூறி போலிஸாரே அவரை கொல்கின்றனர்.
நீண்ட நாட்கள் கழித்து ஜோதி தவறு செய்யவில்லை என்று பாக்யராஜ் இந்த வழக்கை மீண்டும் எடுக்க, பாக்யராஜ் மகள் ஜோதிகா இந்த கேஸை எடுத்து நடத்துகிறார்.
ஜோதிக்கும் ஜோதிக்காவிற்கும் என்ன தொடர்பு, அவர் ஏன் இந்த கேஸை எடுக்க வேண்டும், எடுத்த வழக்கை வெற்றிகரமாக முடித்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பொன்மகள் வந்தாள் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள பெரிய தமிழ் படம் என்பதால், ரசிகர்களிடம் இப்படத்தை பார்க்க பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதன்படியே பலரும் நேற்று இரவே இப்படத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் எதிர்ப்பார்ப்பு போலவே ஜோதிகா இப்படத்தில் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார்.
வென்பா என்ற கதாபாத்திரத்தில் வக்கீலாகவே வாழ்ந்துள்ளார். அதும் பார்த்திபனை எதிர்த்து அவர் வாதாடும் காட்சிகள் எல்லாம் தியேட்டராக இருந்தால் விசில் பறந்திருக்கும்.
படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்ல, யார் இந்த ஜோதி, யார் இந்த கொலைகளை எல்லாம் செய்தது என்ற காட்சிகள் சுவாரஸ்யமாக செல்ல, அதற்கான விடைகள் மெல்ல இரண்டாம் பாதியில் வரவர, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் அதிர வைக்கின்றது.
எதிர்த்து வாதாடும் பார்த்திபம், நீதிபதியாக வரும் பிரதாப் என அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர்.
இதையெல்லாம் விட எடுத்துக்கொண்ட கதைக்களம், இன்றைய சமூக சூழ்நிலையில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை பெட்ரிக் மிக அழுத்தமாக கூறியுள்ளார்.
இதற்கு பக்கபலமாக ராம்ஜி ஒளிப்பதிவு ஊட்டியை நம்மை உணர வைக்கின்றார், அதோடு அந்த நீதிமன்ற காட்சிகளை எடுத்த விதம் சூப்பர், கோவிந்த் வசந்த் இசை கதையின் உயிரோட்டத்திற்கு உதவுகின்றது.
ரூபனின் எடிட்டிங் படத்தை கண கச்சிதமாக கொடுத்துள்ளது.
க்ளாப்ஸ்
படத்தின் நடித்த நடிகர், நடிகைகள்.
ஜோதிகாவின் டாப் 5 பெர்ப்பாமன்ஸில் ஒன்றாக இதை சொல்லலாம்.
படத்தில் எடுத்துக்கொண்ட களம், நம் சமூகத்தில் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றது.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி நீதிமன்ற காட்சிகள் ஒரு சில இடங்களில் நீளமாக செல்வது போன்ற உணர்வு.
மொத்தத்தில் எடுத்த வழக்கில் ஜோதிகாவின் அமோக வெற்றியே இந்த பொன்மகள் வந்தாள்.

நன்றி    CineUlagam 


No comments: