அகழ்வு - (கன்பரா யோகன்)


இலக்கியவாதிகள் செய்வது ஒரு வகையில் அகழ்வாராய்ச்சிதான் என்று ஒரு நன்கு அறியப்பட்ட ஒரு சொல்லாடல் இருக்கிறது.
மண்ணைக் கிண்டி தடயங்களைத்தேடி ஒரு வரலாற்றின், சமூகத்தின் அடையாளங்களை தொல்லியலாளர்கள் தேடியெடுப்பது போல இலக்கியவாதிகள் மன ஆழத்தில்  புதைந்து போயுள்ள நினைவுகளைக் கிண்டி எடுத்து  மனிதர்களை, நிகழ்வுகளை, இடங்களை மீண்டும் படைப்புகளில்  கொண்டுவந்து விடுகிறார்கள்.  அதனால்தான்  பல எழுத்தாளர்களுக்கு துல்லியமான நினைவாற்றல் படைப்புகளுக்கு பக்க பலமாயுள்ளது.

அண்மையில் பள்ளிக்கால நண்பர்கள்  குழுவொன்று  WhatsApp தொடர்புகளை ஏற்படுத்தியதில் எனக்கும் பழைய நினைவுகளை கிளறி எடுக்கும் வேலைக்கு நிறைய தேவையிருந்தது. கடந்த கொரோன காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பொழுதுகளில் இதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருந்தன.
மனதின் ஆழத்தில் பல நினைவுகள் இருந்தாலும்  நீர்க்குமிழிகள் போன்று அவற்றுள் ஒரு சில மட்டுமே அவ்வப்போது மேலெழுந்து பெரிதாகி வருகின்றன. இன்னும் பல நினைவுகள் ஆழத்திலேயே அமிழ்ந்து போய் விட்டன

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மெல்பேணிலுள்ள  பத்திரிகையாளரும், எழுத்தாளருமான தெய்வீகனுடன்  நான் வாழ்ந்த நவாலிக் கிராமத்தைப்பற்றியும் அவர்  வாழ்ந்த  மானிப்பாய்க் கிராமத்தை பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தபோதும் இதே அகழ்வு வேலையை செய்திருந்தோம்.


அதுக்கான காரணம் அவர் எழுதியிருந்த ஒரு சிறு கதை.  அவரது அமீலா என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள சில கதைகளின் பின்னணியில் அவர் வாழ்ந்த மானிப்பாய் வருகிறது, நண்பர்கள், நண்பர்களின் வீடுகள் என்று பல இடங்களுக்கும் பேச்சுத்  தாவியது.  அடுத்தடுத்த ஊர்களான நவாலியும்,  மானிப்பாயும் சந்திக்கும்  எல்லையில் புளிய மரங்கள் பெருமளவு நிற்கும் ஓரிடமுண்டு.  முன்பு அங்கே பகலில் சந்தை  ஒன்று நடந்து வந்ததால் அவ்விடத்திற்கு புளியடிச் சந்தை என்ற பெயரே நிலைத்து விட்டது.
எங்கள் இளமைக்காலத்திலேயே அந்த சந்தை  மூடப்பட்டு விட்டது என்றாலும்  இடிபட்டுப் போயிருந்த அதன் சீமெந்து திண்ணையும் சரிந்து போன கூரையும் அப்போதும் எஞ்சியிருந்தன.
அதன் அருகில்தான் பிரபல டியூஷன்  மாஸ்ட்டரான மரியதாஸ் மாஸ்டரின் வீடும், டியுட்டரியும் இருந்தன.  அவ்விடமெல்லாம் அப்போது சைக்கிளில்  திரிந்திருந்தேன் என்றாலும் சந்தைக்கு இடப்பக்கமாக உள்ள குளம் தாண்டி லோட்டன் வீதிக்கு செல்லும் ஒழுங்கை குறுகிய  மண் ஒழுங்கையால்   வெகு சில தடவையே சென்றிருப்பேன்.

ஒழுங்கையில் மழை   காலத்தில் சேற்றுப்  புதையல் சைக்கிளை நிறுத்திவிடும். வெள்ளத்தில் விழாமல் தப்பினால் அன்று அதிஷ்டம்தான்.
இந்தப் பின்னணியிலேயே கதையை அப்பகுதியில் நிகழ்ந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு தெய்வீகன் நகர்த்தியிருக்கிறார். ஆனால்  நாங்கள் இருவரும் அங்கு வாழ்ந்த காலம் வேறு வேறானவை.




எனது நினைவில் அதே ஒழுங்கை, லோட்டன் ரோட்டில் ஏறும் வளைந்த திருப்பத்தில் ஒரு பக்கம் வீடொன்றின் வேலி,  மறுபக்கம் வெறுங்காணி.
அக்காணியில்  தரை தெரியாது மூடிப் படர்ந்து  வேலியெங்கும் றோஸ் கலரில் குலைபோல் பூக்கள் கொண்ட ஒரு கொடி குப்பையாய் வளர்ந்திருக்கும்.  அதன் பெயர் என்னவென்றே அப்போது தெரியவில்லை. இப்போதும் தான்.
 திராட்சையின் கொடிகள் போலவும், குலையில் மாதுளையின் முத்துக்கள் பொலிந்தாற்  போல பூக்களின் தோற்றம்.
உண்மையில் அது தேடுவாரற்ற பூ. வாசம் ஏதுமில்லை.  படர்ந்து பிடித்தால் அழிப்பது கஷ்டம்தான். அவ்விடத்தை நினைவுக்கு கொண்டு வருவதில் அந்தப் பெயர் தெரியாத கொடியொன்றே எனக்கு உதவியாக இருந்தது.
தெய்வீகன் காலத்தில்  குப்பையாய் வளரும் அந்த கொடிகள் எதுவும் இருக்கவில்லை.   எல்லாம் வெட்டபட்டு போய் விட்டன.

இப்படி நினைவுகளைக்  கிளறிக் கிளறி பல, வருடங்களுக்கு முன்னே போய் விட்டோம். தலை சூடாகி  வந்தது. மண்ணை ஆழத்துக்கு கிண்டிக்கொண்டு போனாலும் உள்ளே வெப்பம் இருப்பதைப்போல.! 

நாங்கள்  இருபத்தைந்து வருடத்திற்கு முன்னே போய் விட்டோம் என்று  தெய்வீகன் நினைவு படுத்தினார். உண்மையில்  நான் நாற்பது  வருடத்திற்கு முன்னே போயிருந்தேன்.

ஞாபகங்கள்  தீ மூட்டும்  என்று ஒரு  சினிமாப்  பாடலில் வருவது நினைவுக்கு வந்தது. அந்த அனலின் இதமான கதகதப்பில்தான் எழுத்தாளர்களுக்கு பல படைப்புக்கள் முகிழ்த்து  வருகின்றன போலும்

அமீலா  சிறுகதைத் தொகுப்பற்றி இன்னொரு முறை விரிவாக எழுதலாம்.


No comments: