'போரினை விரும்பேல்' - பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்


சியக் கண்டம் போர்ப் பதற்றத்திற்கு ஆளாகியிருக்கிறது.

எப்படி கொரோனாக் காலத்தில் எல்லார் கவனமும் அதிலாக, நீதிமன்றால் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் 'நைஸாக' இலங்கையில் விடுவிக்கப்பட்டாரோ, அப்படித்தான் சீனாவும் இந்திய எல்லைப் பகுதியில் 'நைஸாக' தன் காரியம் சாதிக்கிறது. எல்லார் கவனமும் தன்னிடமிருந்து பரவிய நோயிலாக, சீனா, தன் கால்களை அகல விரிக்கத் துடிக்கிறது.

இதற்கு அடிப்படையான இந்திய, சீனா முரண்பாடு பல தசாப்த வரலாறு கொண்டது.

எனினும், உலகமே பொது எதிரியாகிய கண்ணுக்குத் தெரியாத வில்லனை அகற்றப் போராடிக் கொண்டுள்ள நிலையில் இப்பொழுது வெடித்துள்ள விரிசலானது, மனுக்குலத்தின் சாபம் எனப்படத் தக்கது.

இந்திய - சீனப் படை அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என்றும், பதற்றநிலை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்றும் அறிக்கைகள் விடப்பட்டாலும், 'ராணுவ வாகனங்களின் அசாதாரண போக்கைப் பார்க்கும்போது எங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது' என்று கலங்கி விழிக்கும் லடாக் கிராமவாசிகளின் கூற்று, உண்மையை உரத்துச் சொல்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா முரண்பாடுகள் தொடங்கியதிலிருந்து, தொடர்ச்சியான இரு பக்க நகர்வுகளையும் பார்த்தால் போரின் அடுத்த வெடிப்பு மிகவும் அருகில் என்று எண்ணத் தோன்றுகிறது.
யாரின் செயல் சரி? யார் பிழை? என்ற ஆராய்ச்சி இன்று உலக அரங்கில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

இதற்கிடையில் இலங்கை, எந்தப் பக்கத்தில் நிற்கும் என, இப்பொழுதே அரசியல் விமர்சகர்கள் ஆரூடம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலும் காட்டி வந்த இலங்கை விலாங்கு மீனுக்கு, இப்பொழுது தன் உண்மை நிலைப்பாட்டைக் காட்டும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு பலபட அரசியல் ஆய்வுகள் எதிர்வுகூறல்கள் நாலாபக்கத்திருந்தும் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கும் நிலையில், எந்தவொரு அரசியல் எழுத்தையும் ஒன்றி வாசிக்கக் கிஞ்சித்தும் முடியவில்லை. போர்குறித்த செய்தி வாசிப்பதென்பதே வலி நிறைந்த உடல் உஷ்ணம் கிளப்பும் சுமையாயிற்று. நாம் பட்ட துயர் அப்படி.

போர், அது எத்துணை நியாயமானது எனினும் அதன் வருகை கொடியது. அதனை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்கள் ஈழத் தமிழர். போரின் கொடூர கரங்கள் அனைத்தையும் கண்டு நடுங்கி, கதறி, ஏதோ அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பிய ஒரு கொஞ்சம் பேரில் நானும் ஒருவன்

வேறெதைச் சொல்ல முடியும்?
போர் கொடிது, போர் கொடிது – என்பதைத் தவிர.

இந்தியாவிலிருந்து இணையவழி வந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சஞ்சிகைகளைப் பார்க்க நெஞ்சில் நடுக்கம் நிலைகொள்கிறது. தேசப் பற்றை ஊட்டுவதாயும், சீனாவை வில்லனாய்க் காட்டுவதாயும் வரும் செய்திகள், கட்டுரைகள், கொரோனாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டன.

கண்ணுக்குத்தெரியாத உயிர்கொல்லியை விடவும் காட்டுமிராண்டித் தனமானது போர் என்பதை இன்னமும் ஊடகங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவையோ, 'துரத்தியடித்த இந்திய வீரர்கள், பயந்து ஓடிய சீன ர்கள்' ஏன்று வீர வசனம் பேசி மீசை முறுக்குகின்றன.

தாய்மண் மீதான தேசப் பற்று, எவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதுதான். எனினும், அதன் முடிவு போர் எனும்பொழுதுதான் உள்ளம் முடிவற்றுக் கலங்குகிறது.
போர்...அது, எத்துணை வெற்றி தரினும் தவிர்க்கப்பட வேண்டியதே.
போர்... எவ்வளவு புகழ் தரினும் அது நீக்கப்படவேண்டியதே.

ஏனெனில், போருக்குக் கண் இருப்பதில்லை. அது, பெருக்கெடுக்கும் வெள்ளமாய் அகப்பட்டதையெல்லாம் அள்ளிச் செல்வது, அதற்குக் குழந்தை, முதியவர், நோயாளர் என்று இரங்கிட நேரமிருப்பதில்லை.
அது ஒரு விசித்திரமான போதை. அப்போதை பிறரின் அழிவில் பெருகும் மகிழ்ச்சியில் தன் அழிவைக் காணத்தவறி விடும்.

போர், தேசத்து வளங்களைக் காப்பதாய்ச் சொல்லி அவற்றையெல்லாம்விட பெறுமதி மிக்க மானுட வளங்களைத் தாரை வார்ப்பது.

இவையெல்லாம், வெறுமனே வார்த்தை அலங்காரங்களுக்காக இங்கே சொல்லப்படுகின்றன எனக் கொள்ளலாகாது. தன் வாழ்க்கைக் காலத்தில் முக்கால் பங்கைப் போர் தின்னக் கொடுத்த ஓர் ஈழத் தமிழனின் அனுபவப் பாடங்களாகக் கொள்ளுதல் வேண்டும்.

அதுவும், ஒரே தேசத்துக்குள்ளே, தன் பிரஜைகள் மீதே தேச மாதா தொடுத்த யுத்தம். சொந்தச் சகோதரர்கள் போரில் மடிதல் கண்டு சிந்தை இரங்காத ஆட்சியர் கூட்டம். அது, ஆச்சரியமில்லை, ஏனெனில் போரிடுபவர்களுக்குச் இரக்கம் இருந்த சரித்திரமில்லை.

சுற்றுலா ஏக்கம், விளையாடும் விருப்பு எனக் குழந்தைமைக்கேயுரிய குதூகலம் அனைத்தையும் கொடிய போரால் தொலைத்த ஒருவன் வேறெதைச் சொல்ல முடியும்?
இதை விட,
கல்வி, காதல் என்று விரியும் இளமையின் பொலிவுகள் எல்லாம் துறந்து, கண்டு, கேட்டு, உண்டு, உயிர் வலித்ததெல்லாம் குருதி, அலறல், விரக்தி இவையே!
அந்தக் கொடுமை எதிரிகளுக்கும் வரக்கூடாதென எண்ணுபவன் நான். எப்படி எம் தொப்பூள் உறவுகளாகிய இந்தியச் சோதரர்க்கு அதை அனுமதிப்பது?
வேண்டாம், தவிருங்கள்.

பாரத புதல்வர்களே! தவிருங்கள்.
இயலுமானவரை, ஒவ்வொருவரும் எடுத்துச் சொல்ல முடிந்த அனைத்துத் தரப்பாரிடமும் சொல்லித் தவிருங்கள். உரக்கச் சொல்லுங்கள்.
இல்லையேல், போரின் நிழல்கூடப் படியக் கூடாதெனப் பிரார்த்தியுங்கள்.
ஏலவே, கொரோனாவின் கொடுமையில் நிலை குலைந்துள்ளது பாரதம். கட்டுப்படுத்தி விட்டோம் என்ற அரசியலார் வார்த்தைகளையும் நகைத்தபடி, வேகம் கொள்கிறது வைரஸ்.
இந்த நிலைமையில் வேண்டாமே, அதைவிடவும் கொடிய போர்.

உண்மையில், இந்தக் கொடிய கிருமியின் வரவில் பரந்த பூலோகம் மகிழ்ச்சியடைய ஒருசில காரணங்கள் இருந்தன. அறிவியலுக்குத் தாரை வார்த்த வாழ்க்கையை கொஞ்சம் அறத்துக்கு திருப்பியது அது. விரைவுணவின் மோகம் தணித்து மீண்டும் பாரம்பரிய உணவைப் பாதுகாத்தது. அரசன், வறியன் என்ற எல்லை கடப்பித்து எல்லாரும் ஒன்றே எனும் பாடம் கற்பித்தது.

இவற்றுள், மிக முக்கியமானது உலக மக்கள் அனைவரும் ஒத்தவரே எனக் கிடைத்த பாடம்தான். நாடுகளில் வல்லரசு, மெல்லரசு பேதமில்லை. நிலையாமையை உணர்த்தி, வாழ்க்கைக்காலம் சிறிது எனக் கூறி, அனைத்துச் தேசத்தவரும் ஒன்றே என்ற பாடத்தையே கொரோனா, உரத்துச் சொல்லிச் செல்கிறது. அதற்கிடையில் அதன் போதனையை மறந்து விடலாமா?

'சீனாதானே! அநியாயம் செய்கிறது. நாம் என்ன செய்யலாம்? போருக்கு வந்தால் போர்' என்று நெஞ்சு நிமிர்த்தினால், இந்தப் பாரதத்துக்கு அந்த 'பாரதத்திலிருந்து' ஒரு பாடல் சொல்ல விரும்புவேன்.
போரின் விளிம்பில் நின்று கொண்டு அதனைத் தவிர்க்கப் பாண்டவரில் மூத்தவன் தருமன் விழைகிறான். தம்பியர் கூட, தன்னைப் பார்த்து 'இவன் மானமிலாதான்' என இழித்துப் பேசும் நிலையில், 'ஏன் சமாதானத்தை விழைகிறேன்' என்பதற்குக் காரணம் சொல்கிறான் அவன்.

'வயிரம் எனும் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கின் அது வரைக்காடன்ன
செயிர்அமரில் வெகுளிபொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வேம்'

'மூங்கில் காட்டில், இரு மூங்கில் மரங்கள் உரசுவதால் தீப்பற்றும். அவ்வாறு பற்றி எரியத் தொடங்கின், அத்தீயானது பிறவற்றை எரிப்பதற்கு முன்னர், தன்னை மூளச்செய்த இரு மரங்களையுமல்லவா முதலில் நீறாக்கும்? ஆகவே, சமாதானமாய்ப் போவோம்' என்கிறான் தருமன்.

இப்பொழுது சொல்லுங்கள், தேவைதானா போர்?



நன்றி - உகரம் |இந்தவாரச் சிந்தனை (24.06.20) | பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் www.uharam.com



No comments: